Wednesday 24th of April 2024 06:55:08 PM GMT

LANGUAGE - TAMIL
-
மேற்குலகின் சீன எதிர்ப்பு வாதத்தை தென்னிலங்கையின் அபிவிருத்தி பொருளாதாரவாதம் முறியடித்துவிடுமா?

மேற்குலகின் சீன எதிர்ப்பு வாதத்தை தென்னிலங்கையின் அபிவிருத்தி பொருளாதாரவாதம் முறியடித்துவிடுமா?


ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆட்சிக்கு வருகை தந்து ஒரு வருடத்தை கடந்து பயணிக்கிறது. இக்காலப்பகுதியின் இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான உறவினில் அதிகமான முரண்பாட்டை உள்நாட்டில் எதிர்கொண்டதுடன் பிராந்தியம் மற்றும் சர்வதேச நாடுகளின் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகிறது. உள்நாட்டில் கோவிட்-19 தொற்றின் தாக்கமும், மீளமுடியாத பொருளாதார நெருக்கடியும், பிராந்திய சர்வதேச நாடுகளின் எதிர்ப்புவாதமும் இலங்கையின் தற்போதைய ஆட்சியை மீளமுடியாத இக்கட்டுக்குள் தள்ளியுள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு பொதுஜன முன்னணி அரசாங்கம் மீண்டும் கையிலெடுத்துள்ள விடயம் இலங்கையின் வெளியுறவுக்கொள்கையாகும். இலங்கை ஒரு தீவு என்ற அடிப்படையிலும், இந்து சமுத்திரத்தின் மத்தியில் உள்ள நாடென்ற அடிப்படையிலும், இந்தியாவின் அயல்நாடு என்ற அடிப்படையிலும் இலங்கையின் உயிர் வாழ்வு அதன் வெளியுறவுக்கொள்கையில் தங்கியுள்ளது என்பதனை அங்கீகரித்து செயற்பட ஆரம்பித்துள்ளது. கடன் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி போன்றவற்றை மீட்டெடுப்பதோடு இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வையும் கையாள வேண்டிய பொறுப்பான்மை இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை கையாளும் அணியொன்று தென் இலங்கை ஆட்சியாளரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய அணியில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொட மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் அடையாளப்படுத்தப்பட்டள்ளனர். இக்கட்டுரையும் இக்குழுவினரின் அண்மைக்கால நகர்வுகளும் புலம்பெயர் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளையும் விளங்கிக்கொள்ளும் நோக்கோடு வெளிப்படுத்தப்படுகிறது.

முதலாவது, இலங்கையில் நீண்டு நிலைத்திருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வினை சர்வதேச நாடுகளின் தலையீட்டின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியுமென புலம்பெயர் அமைப்புக்கள் அறிக்கை ஒன்றினை (25.08.2021) வெளியிட்டுள்ளனர். அவ் அறிக்கையின் சாரம்சத்தில் இலங்கை அரசாங்கம் இதுவரை காலமும் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதென்றும், இலங்கை தமிழருக்கு எதிராக வன்முறைகளை தொடர்கிறதென்றும், வன்முறை காரணமாகவே தாம் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் தமது தாயகத்துக்கு திரும்புவதற்கான உரிமையை வலியுறுத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டதோடு இலங்கையில் பல்லின சமூகத்தின் நீடித்த அமைதியையும் சகவாழ்வையும் கொண்டுவருவதற்கான எந்தவொரு உரையாடலையும் அரசியல் தீர்வு வடிவமைப்பதிலும் பங்குதாரராக தாம் இருப்பதாக அப்புலம்பெயர் அமைப்புக்கள் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுள்ளன. இதன்பிரகாரம் இந்தியா அரசின் மிகப்பெரிய ஆதரவுடன் அமெரிக்க அரசின் அனுசரணையுடன் தமிழர் தரப்புக்கும் இலங்கை அரசாங்கத்திற்குமான பேச்சுவார்த்தை பற்றிய சமீபத்திய உரையாடல்களை தாம் மேற்கொண்டு வருவதாகவும் ஐரோப்பா, பிரித்தானிய, அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா ஆகிய தேசங்களில் உள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இத்தகைய ஈடுபாட்டை தீவிரமாக ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் வேண்டுமென இவ் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இரண்டாவது, இலங்கை அரசாங்கத்தின் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பதவியேற்றதும் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இந்தியா. ரஷ்யா, ஜப்பான் மற்றும் சீனா தூதுவர்களுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு வலுவான நட்புறவை பலப்படுத்தும் விதத்தில் உரையாடலை ஆரம்பித்துள்ளார். அவரது சந்திப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்கள் ஒவ்வொரு நாட்டு தூதுவர்களுடனும் உரையாடும் போதும் நன்றி தெரிவிப்பதும், இராஜதந்திர உறவின் காலப்பகுதியை நினைவுபடுத்துவதும், பொருளாதாரம் வர்த்தகம் சந்தை மற்றும் நெருக்கடிமிக்க காலப்பகுதியில் உள்நாட்டில் மற்றும் சர்வதேசத்தில் வழங்கிய ஒத்துழைப்பை நினைவு கோருவதும் பிரதான நடவடிக்கையாக காணப்படுகிறது. இதனை அவதானிக்கும் போது இலங்கையின் வெளியுறவுக்கொள்கையின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்துவது மட்டுமன்றி சமகாலத்தில் இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை படம்பிடித்து காட்ட முயலுகிறது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் உத்திமிக்க இராஜதந்திர உரையாடலை வெளிவிவகார அமைச்சர் மேற்கொண்டுள்ளதுடன், இலங்கைக்கு ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான நெருக்கடிளை காட்சிப்படுத்துவதனூடாக எதிர்கால நெருக்கடியை உலக நாடுகளின் ஒத்துழைப்போடு கையாள்வதற்கு திட்டமிடுவது தெரிகிறது. அதிலும் மேற்கு நாடுகளோடு அவற்றின் அமைப்புக்களோடு உரையாடும் அனைத்து சந்தர்ப்பத்திலும் பொருளாதார நெருக்கடியை வெளிப்படுத்துவதுடன் கோவிட்-19 இற்கு எதிரான இலங்கை போராட்டத்திற்கு உலக நாடுகளின் ஆதரவை நினைவுகொள்வதில் நன்றி கூறுவதில் பாராட்டுவதில் அதிக கரிசனை கொண்டுள்ளார்.

மூன்றாவது, நிதியமைச்சராக பதவியேற்ற பிற்பாடு பொருளாதார விடயங்களில் அதிக கவனம் கொள்ளும் பசில் ராஜபக்ஷ நோர்வே, துருக்கி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்த போது ஒருமித்த வெளியுறவுக்கொள்கைக்கு மத்தியில் இலங்கையுடன் ஒத்துழைத்து செயற்படுவது வரவேற்கத்தக்கதென தெரிவித்துள்ளார். அச்சந்திப்பு இருதரப்பு உறவுகளையும் பொருளாதார மேம்பாடு பற்றியும் கலந்துரையாடப்பட்டதோடு, அந்நாடுகளின் தூதுவர்களிடமிருந்து அபிவிருத்திக்கான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். அம்மூன்று நாட்டு தூதுதுவர்களும் பசில் ராஜபக்ஷவின் கோரிக்கையை ஏற்றதோடு அபிவிருத்தி சார்ந்த ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக நோர்வே தூதுவர் ஹில்ட்பேர்க் ஹன்சென், துருக்கிய தூதுவர் டெமன்ட் செகஸியோக்லு மற்றும் இத்தாலிய தூதுவர் றிட்டா ஜியுலியான் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்திய, அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியத்தைக் கையாளும் பசில் ராஜபக்ஷ இலங்கையின் பொருளாதார ரீதியிலான ஒத்துழைப்பினை நோக்கிய உலகை வளைத்து கொள்வதில் அதிக கரிசனை கொள்கிறார்.

நான்காவது, இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொட இந்தியாவை நோக்கிய வழிவரைபடத்தை உருவாக்கி கொண்டது போல் சர்வதேச நாணய நிதியத்தை இலங்கையின் கடன்படு நிலையையும் டொலர் நெருக்கடியையும் சரிசெய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். ஏற்கனவே மிலிந்த மொறகொடவால் ஆரம்பிக்கப்பட்ட பார்த் பைன்டர் அமைப்பு பிரித்தானியாவுடனான உரையாடலை தொடர்ந்து செயற்படுத்தி வருகின்றது. அதன் தொடர்ச்சியாகவே சர்வதேச நாணய நிதியத்துடனான உரையாடலை பசில்-மொறகொட அணி முதன்மைப்படுத்தி வருகிறது. இதுவும் பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கான நகர்வாகவே காட்டுகிறது.

மேற்குறித்த நகர்வுகள் ஒவ்வொன்றும் இலங்கையின் உள்நாட்டு பரப்பில் பொதுஜன முன்னணி அரசாங்கம் அண்மைக்காலத்தில் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகளை சரிசெய்வதாகவே காணப்படுகின்றது. வெளிப்படையாக பார்த்தால் இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையின் நெருக்கடி பாரிய பிரச்சினையாக வளர்ந்திருக்கிறது என்பதனை காட்டுவதோடு அதனை சரிசெய்வதற்கான உத்தியாக அமைகின்றது. ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து இலங்கை நீண்டு நிலைத்திருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய எத்தகைய உரையாடலையும் தென்னிலங்கை ஆட்சிப்பரப்பில் இயங்கும் இராஜதந்திரிகள் அல்லது அரசியல் தலைவர்கள் தூதுவர்களோடோ அல்லது நாடுகளின் தலைமைகளோடோ உரையாடியதை காணமுடியவில்லை. அவ்வாறே இந்தியா உட்பட நாடுகளின் தூதுவர்களும் வெளிவிவகாரத்தில் பங்கெடுக்கும் இராஜதந்திரிகளும் இனப்பிரச்சினையை ஒரு விடயமாக முன்வைத்து உரையாடவில்லை. புலம்பெயர் அமைப்புக்கள் மட்டுமே அதுபற்றிய கரிசனையை சர்வதேச நாடுகள் மத்தியில் எழுப்பி வருகின்றனர். அதில்கூட எச்சரிக்கையற்ற அந்தந்த நாடுகளின் நலன்களுக்கேற்ப இசைவு பெறுகின்ற நகர்வுகளை முன்னெடுக்க முயற்சிக்கின்றனவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இலங்கை அரசாங்கத்தின் வர்த்தகரீதியிலான சந்தை அடிப்படையிலான முதலீட்டு வாய்ப்புகளுக்கான ஒத்துழைப்புக்கள் உலக நாடுகளுக்கு பூரணமாக கிடைக்குமாயின் இலங்கை இனப்பிரச்சினை என்பதை அத்தேசங்கள் ஒருவிடயமாக கருத்தில் கொள்ளுகின்ற நிலை காணமால் போகுமென்பது மேற்குறித்த உரையாடல்கள் மூலம் தெரிய வருகிறது. அவர்களது பிரதான நோக்கம் இலங்கையிலிருக்கும் சீனாவின் வாய்ப்புக்களுக்கு நிகராக தமது நாடுகளிற்கான வாய்ப்புக்களும் இலங்கை ஆட்சியாளர்களால் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பதாகும். எனவே புலம்பெயர் அமைப்புக்கள் எவ்வளவு தென்னிலங்கை அரச இயந்திரம் மேற்கையும் இந்தியாவையும் திருப்திப்படுத்த செயற்படுவது போல் செயற்படுகிறார்கள் என்பது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமாகும். எல்லா சந்தர்ப்பங்களிலும் அந்ததந்த தேசிய அரசுகளின் தேசிய நலன் முதன்மையானது. அத்தகைய தேசிய நலனில் சீனா பின்பற்றிவரும் பொருளாதார உத்தி என்கின்ற நிழலுக்கள் உலக நாடுகள் பயணிக்க திட்டமிடுகின்றன. எவ்வாறு பெரும் மோதலின்றி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினார்களோ அத்தகைய உத்திக்கு பின்னால் சீனாவின் பொருளாதார அதிகாரம் அமெரிக்கர்களை கவனம் கொள்ள வைத்ததோ அதே பாணியில் இலங்கை விடயத்தை மேற்கு நாடுகளும், மேற்கு நாடுகளை இலங்கை ஆட்சியாளர்களும் கையாளத் தொடங்கியுள்ளனர்.

எனவே புலம்பெயர் அமைப்புக்ளின் நகர்வும் தென்னிலங்கை அரசியல் தலைமைகளின் உத்திகளும் ஒரே இடத்தில் சந்திப்பதற்கான வாய்ப்பினை சர்வதேச நாடுகளே உருவாக்க வேண்டும். அதற்கான கரிசனையை சர்வதேச நாடுகள் மத்தியில் உருவாக்குவதில் புலம்பெயர் அமைப்புக்கள் கவனம் கொள்ளுதல் வேண்டும். கொழும்பும், சர்வதேசமும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் தத்தமது நலன்களுக்குள் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் முனைப்பை நோக்கி நகர்வதில் மட்டுமே இலங்கை இனப்பிரச்சினைக்குரிய தீர்வு சாத்தியமாவதற்கான வாய்ப்பு தென்படும். இல்லையேல் இலங்கை தனது நலன்களுக்குள் உலகத்தை கையாளும். இலங்கைத் தமிழரது நிலை கடந்த காலத்தைப் போன்று வெற்று காகிததமாகவே உடன்பாடுகள் அமைய வாய்ப்பு ஏற்படும். சர்வதேசமும் தென் இலங்கையும் தனது நலனை அடைந்து கொள்ளும்.

- அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE