Thursday 8th of December 2022 06:27:21 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 70 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 70 (வரலாற்றுத் தொடர்)


வன்முறைகளால் வழிநடத்தப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்! - நா.யோகேந்திரநாதன்!

'துப்பாக்கிகள் கைமாறும்போதே ஒடுக்கப்படும் வர்க்கங்கள் புரட்சிகரப் பலாத்காரத்தினால் அத்துப்பாக்கிகளைப் பறித்தெடுத்து ஒடுக்கப்படும் மக்களிடமும் அவர்களின் நேச சக்திகளிடமும் ஒப்படைக்கும்போதே அவர்கள் தம்மை விடுதலை செய்து கொள்வார்கள். வேறு எந்த மார்க்கமும் இல்லை. இந்த உண்மையை மறைப்பதற்கும் குழப்பம் செய்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்பவுமே முதலாளிகளும் ஏனைய பிற்போக்கு சக்திகளும் பாராளுமன்றம் என்ற ஏமாற்று வித்தையைக் கண்டு பிடித்தன. பாராளுமன்றம் வெறுமனேயே உரையாற்றும் இடமேயொழிய அங்கு வேறொன்றுமில்லை. அது மூலதனத்தின் வெளிப்படையான சர்வாதிகாரத்தை மறைக்கக் கட்டப்பட்ட ஒரு திரையாகும். அது மக்களை மடையர்களாக்குவதற்கும் பிளவுபடுத்துவதற்கும் பாராளுமன்றம் மூலம் விடுதலை பெறமுடியும் என்ற மாயையைப் பரப்புவதன் மூலம் அவர்களின் வர்க்க உணர்வுகளை மழுங்கடிப்பதற்கும் ஆயுதப் படையினரிடமே உண்மையான அதிகாரம் இருக்கிறதென்பதை மக்களிடமிருந்து திசை திருப்பவும் முயற்சிக்கிறது. ஆயுதப் போராட்டத்திற்குப் பதிலாக வெறும் வார்த்தைகளிலான போராட்டத்தை முன் வைக்கிறது'.

இது இலங்கையின் சீன சார்புக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் இலங்கையின் முக்கிய தொழிற்சங்கவாதிகளில் ஒருவருமான நா.சண்முகதாசன் அவர்களால் அவரால் எழுதப்பட்ட 'அரசு பற்றிய மாக்ஸியக் கோட்பாடு' என்ற நூலில் தெரிவிக்கப்பட்ட கருத்தாகும்.

அதிகார வர்க்கங்கள் எப்போதுமே ஆயுதப் படைகளைப் பயன்படுத்தித் தங்கள் ஆயுத வன்முறைகள் மூலம் தங்கள் மக்கள் மீதான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன என்பதையும் அவற்றை மறைக்கும் ஒரு திரையாகவும் மக்களுக்கு அதிகாரம் உண்டு என்ற ஒரு போலித் தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் ஒரு மாயையாகவுமே நாடாளுமன்றம் பயன்படுத்தப்படுகிறது என்ற விடயத்தை அவர் தெளிவாக விளக்கியுள்ளார்.

தமிழ் மக்கள் அரசியல் வரலாற்றில் இலங்கை சுதந்திரம் பெறும் காலத்தின் முன்பு முதலில் சேர்.பொன்.இராமநாதன், சேர்.பொன்.அருணாசலம் காலத்தில் மேல் மாகாணத்தில் தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதித்துவம் கோரப்பட்டது. பின்பு ஜீ.ஜீ.பொன்னம்பலத்தால் 50 இற்கு 50 கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எதுவுமே கிடைக்கவில்லை.

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு ஜீ.ஜீ.பொன்னம்பலத்தாலும் இடதுசாரித் தலைவர்களாலும் சம அந்தஸ்துக் கோரிக்கை இலங்கை நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டது. அதன்பின்பு எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தால் சமஷ்டிக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதையடுத்து அமிர்தலிங்கத்தால் தனிநாட்டுக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இத் தமிழ் தலைவர்களோ, இடதுசாரிகளோ ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற மேதைகள். விடயங்களைத் தர்க்கபூர்வமாக முன்வைத்து எதிர்த்தரப்பினரை மடக்கும் வகையில் உரையாற்றுவதில் வல்லவர்கள். இவர்களின் நாடாளுமன்ற உரைகள் வரலாற்றுப் புகழ் மிக்கவை.

ஆனால் இப்படியான ஒப்பற்ற நாடாளுமன்ற உரைகள் மூலமோ விவாதங்கள் மூலமோ முன் வைக்கப்பட்ட எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேறவில்லை. மாறாக உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டதே வரலாறாகியது. 1956ல் தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் தமிழ் மக்களின் மொழியுரிமை பறிக்கப்பட்டமை, 1972ம் ஆண்டின் அரசியலமைப்பு மூலம் சிங்களமும் பௌத்தமும் அரசாங்க மொழியாகவும் மதமாகவும் அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்டமை, 1978 அரசியலமைப்பு மூலம் சிங்களத்துக்கும் பௌத்தத்துக்குமான முதலிடம் 2/3 பெரும்பான்மையுடனும் சர்வஜனவாக் கெடுப்புடனும் மட்டுமே மாற்றப்பட முடியுமென உறுதி செய்யப்பட்டமை எனத் தொடர்ந்து தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வந்தன. அதை நாடாளுமன்றத்தாலோ அல்லது நாடாளுமன்றத்தில் கற்றறிந்த மேதைகள் ஆற்றிய உரைகளோலோ நியாயங்களை வலியுறுத்தும் தர்க்கபூர்வமான விவாதங்களினாலோ தடுத்து நிறுத்தமுடியவில்லை.

எனவே நாடாளுமன்றமோ நாடாளுமன்றப் பிரதிநிதித்துவமோ, அல்லது நாடாளுமன்ற விவாதங்களோ ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளைப் பெறும் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட முடியாதது என்பது தெரிவாகிறது.

ஆனால் அதிகார பீடங்கள் தங்கள் ஒடுக்குமுறைகளை நியாயப்படுத்த நாடாளுமன்றத்தையும் நாடாளுமன்றப் பெரும்பான்மையையும் அவற்றால் உருவாக்கப்படும் சட்டங்களையும் மேடையேற்றி அலங்காரமான ஜனநாயக நாடகம் நடத்தத் தயங்குவதில்லை. அவர்கள் இனவாதம், மதவாதம், வன்முறை என்பன மூலம் தேசியம், ஐக்கியம், நல்லிணக்கம் போன்ற சொற்பதங்கள் மூலமும் தமக்கென நாடாளுமன்றப் பெரும்பான்மையை உருவாக்கிக் கொள்வார்கள்.

1981ம் ஆண்டு இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின்போது, அதன் அதிகாரத்தைப் பெற அத்தேர்தலை வெற்றி கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அரச அதிகாரம், அரச படைகளினதும், அனுசரணை பெற்ற காடையர்களதும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. யாழ்ப்பாண நகர், சுன்னாகம், நல்லூர் ஆகிய பகுதிகளில் நடந்த வன்முறைகள், தீயிடல் என்பனவும் யாழ்.பொது நூலகம், ஈழநாடு காரியாலயம் என்பன எரித்தழிக்கப்பட்டமையும் தேர்தலை வெற்றி கொள்ள அரசால் எடுக்கப்பட்ட முன்னோடி வன்முறைகளேயாகும்.

மே 31ம் திகதி நாச்சிமார்கோவிலடியில் பொலிஸ்காரர் மேல் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து கோவில், கோவில் தேர், சுற்றியுள்ள வீடுகள், யாழ்.பழைய சந்தைத் தொகுதி, புதிய கட்டிடத் தொகுதி, நாடாளுமன்ற உறுப்பினரின் வீடு, ஈழநாடு காரியாலயம், அச்சகம் என்பன எரித்தழிக்கப்பட்டதுடன் நால்வர் கொல்லப்பட்டும் பலர் காயப்படுத்தவும்பட்டனர். ஜூன் முதலாம் திகதி இரவு தமிழ் மக்களின் அறிவுக் களஞ்சியமான யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டதுடன் தொலைத் தொடர்புப் பணியாளர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார். ஜூன் 2ம், 3ம் திகதிகளில் சுன்னாகம் சந்தை எரியூட்டப் பட்டதுடன், நல்லூரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் தாக்குதல்கள் இடம்பெற்றன.

இவ்வாறு பொலிஸாராலும் காடையர்களாலும் வன்முறைகள் கொடூரமான முறையில் கட்டவிழ்த்து விடப்பட்டு எங்கும் ஒரு பயங்கரம் கோலோச்சிய போதிலும் அவசர காலச் சட்டமோ, ஊரடங்குச் சட்டமோ பிறப்பிக்கப்படவில்லை. அடுத்தநாள் தேர்தல் இடம்பெறவிருந்த நிலையில் அன்று மாலை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. அன்று இரவு அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்படுவதாக ஜே.ஆர். அறிவித்தார்.

ஜூன் மாதம் 4ம் திகதி அதிகாலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் அவருடைய பண்ணாகம் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டுப் பின் குருநகர் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்படுகிறார். காலை ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கைது தவறுதலாக நடந்து விட்டதெனவும் விடுவிக்கும்படி தான் கட்டளையிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதன்பின் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஒரு ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சித் தலைவருக்கு நடந்த இரண்டாவது அவமானம் இது. முதலில் 1977ல் யாழ்ப்பாணத்தில் வைத்து அமிர்தலிங்கம் ஒரு பொலிஸ்காரனால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் அன்றைய தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களான வி.நவரத்தினம், எம்.சிவசிதம்பரம், வி.தர்மலிங்கம் ஆகியோரும் கைது செய்யப்படுகின்றனர்.

பொலிஸாரின் அதிகாரத்தின் முன் மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் தராதரம், ஜனநாயகம் நாட்டில் பொருட்படுத்தப்படுவதில்லை என்பதற்கு இச் சம்பவங்கள் நல்ல உதாரணங்களாகும்.

இவ்வாறு ஐ.தே.கட்சி அமைச்சர்களின் தலைமையில் பொலிஸாராலும் காடையர்களாலும் உருவாக்கப்பட்டுத் தொடர்ந்து கொண்டிருந்த ஒரு நெருக்கடி நிலைமையிலும் திட்டமிட்டு மாகாண அபிவிருத்திச் சபைத் தேர்தல் இடம்பெற்றது. அதிலும் தேர்தல் மோசடிகளை மேற்கொள்ளும் முகமாக யாழ்.தேர்தல் அலுவலகத்தால் தேர்தல் பணிகளுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட 250 பணியாளர்கள் அமைச்சர்களால் நிறுத்தப்பட்டு கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிங்களப் பணியாளர்களே தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஏற்கனவே போராளி அணிகள் தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி கோரியிருப்பதாலும் ஐ.தே.கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதால் மக்களை வாக்களிப்புக்குச் செல்லாமல் தடுக்கவில்லை. தேர்தலில் நியமனப்பத்திரம் தாக்கல் செய்த பின்பே குமார் பொன்னம்பலம் தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு அறிக்கை விட்டமை காரணமாக அவரின் ஆதரவாளர்களும் அவருக்குப் வாக்களித்தனர்.

அன்றிரவு அமைச்சர்கள் சிறில் மத்யூ, காமினி திசாநாயக்க தலைமையில் வாக்குகள் எண்ணப்படும்போது உச்ச கட்டத் தேர்தல் மோசடிகள் இடம்பெற்றன. ஐ.தே.கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகள் கட்டுக்கட்டாக பெட்டிகளில் சேர்க்கப்பட்டன. தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவான இடங்களில் வாக்குப் பெட்டிகள் திறக்கப்படாமலே ஒதுக்கப்பட்டன.

எவ்வளவு மோசடிகள் இடம்பெற்ற போதிலும் வடக்குக் கிழக்கில் ஆறு மாவட்ட அபிவிருத்தி சபைகளிலும் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஒரு மாவட்ட சபையைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை என்பதுடன் ஒரு ஆசனத்தைக்கூட வெற்றி கொள்ள முடியவில்லை.

யாழ்.மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி 2,63,369 வாக்குகளைப் பெற்று முழு ஆசனங்களையும் கைப்பற்றியது. குமார் பொன்னம்பலம் 21,682 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு 23,302 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

இரு அமைச்சர்கள், பாதுகாப்புச் செயலாளர், உயர் மட்ட நிர்வாக அலுவலர்கள், 250 மேற்பட்ட தேர்தல் பணியாளர்கள், பெரும் பொலிஸ் படையொன்று, காடையர் கூட்டம் எனப் பெருங்கூட்டமே யாழ்ப்பாணத்தில் முகாமிட்டு மக்களை வன்முறை மூலம் அச்சுறுத்தியும், தேர்தல் மோசடிகளை மேற்கொண்டும் அவர்களால் ஒரு ஆசனத்தைக் கூட வெல்லமுடியவில்லை.

அவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியால் வெற்றி கொள்ளப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சiயின் தலைவராக சிரேஷ்ட தமிழரசுக் கட்சி உறுப்பினரான பொட்டர் நாகராஜா தெரிவு செய்யப்பட்டார். அவரின் பதவியேற்பின் போது அவருக்குத் தமிழர் விடுதலைக் கூட்டணியால் செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.

ஆனால் அவர் பதவியேற்றும் சில மாதங்களில் அது தனது காரியாலயத்திற்குத் தேவையான காகிதாதிகள் வாங்கக் கூட அதிகாரமற்ற பதவி எனக் கூறி அதிலிருந்து விலகிக் கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நூலக எரிப்பு உட்படக் கொடுமையான வன்முறைகள் பற்றி விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவுமில்லை, சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவுமில்லை.

ஆனால் ஐ.தே.கட்சி வேட்பாளர்கள் தியாகராஜா சுடப்பட்டது பற்றியும் நாச்சிமார் கோவிலடியில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் பற்றியும் விசாரிக்க ஒரு ஆணைக்குழு அமைக்கப்படுமென பிரதமர் ரணசிங்க பிரேமதாச நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

யாழ்.நூலக எரிப்புத் தொடர்பாக எந்தவொரு விசாரணையோ அல்லது வேறு எந்தவொரு நடவடிக்கையுமோ அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படாத நிலையில் ஒரு வருடத்தின் பின்பு அதாவது 1982ல் சர்வதேச மன்னிப்புச் சபையின் அப்போதைய தலைவர் ஒர்வில்ஷெல் இலங்கை அரசாங்கம் குறித்த கொடூரங்களுக்கு காரணமானவர்கள் மீது விசாரணையை நடத்த ஒரு சுதந்திர விசாரணைக்குழுவை நியமிக்காமை கவலைக்குரியதெனவும் இக்கொடூரத்தில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிக்குப் பதவியுயர்வு வழங்கப்பட்டமையும் அவசரகாலச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டமையும் மேலும் கொலைகளை மேற்கொள்ள வழிசமைக்குமெனவும் தனது கடும் கண்டனங்களை வெளியிட்டது.

இப்படியாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் எழுந்த கண்டனங்களை ஜே.ஆர்.ஜயவர்த்தனவோ ஐ.தே.கட்சி அரசாங்கமோ பொருட்படுத்தவேயில்லை.

1977ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவைக் கோரியபோது ஸ்ரீமாவோவை நம்பமுடியாதெனக்கூறி ஆதரவளிக்க மறுத்த அமிர்தலிங்கம் ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதாகத் தெரிவித்தார்.

அவர் ஜே.ஆரிடம் எதிர்பார்த்த ஜனநாயகம் எப்படிப்பட்டது என்பதை 1977 இன அழிப்புக் கலவரம் மூலமும் 1981ல் யாழ்ப்பாண நகரம், யாழ்.பொது நூலகம் என்பனவற்றை எரியூட்டியதன் மூலமும் முறைகேடாக மாவட்ட சபைத் தேர்தலை நடத்தியதன் மூலமும் ஜே.ஆர். தெளிவாகவே வெளிப்படுத்தியிருந்தார்.

வன்முறைகளையே மூலதனமாகக் கொண்டு மோசடிகள், அச்சுறுத்தல்கள் நிறைந்த ஒரு தேர்தலை வழி நடத்தியதன் மூலம் ஜே.ஆர்.ஜயவர்த்தன அதிகார பீடங்களின் ஜனநாயகத்தின் போலித்தன்மையை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தியிருந்தார்.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE