Thursday 8th of December 2022 08:04:59 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கை அரசியலில் ஆப்கானிஸ்தானின் ஆட்சி மாற்றம்! - நா.யோகேந்திரநாதன்!

இலங்கை அரசியலில் ஆப்கானிஸ்தானின் ஆட்சி மாற்றம்! - நா.யோகேந்திரநாதன்!


2001ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து அண்மைக்காலம்வரை ஆப்கானிஸ்தான் மண்ணில் நிலை கொண்டிருந்த அமெரிக்க இராணுவம் வெளியேறியமையை அடுத்து தலைநகர் காபூல் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணமான படஷான் பகுதி தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.

மிகக் கடுமையான இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எனக் கருதப்படும் தலிபான்களின் ஆட்சி அதிகாரத்திற்குள் கொண்டு வரப்பட்ட பின்பு பல்வேறு தரப்பினராலும் வெவ்வேறு விதமான அபிப்பிராயங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. எனினும் அவை எல்லாமே தலிபான்கள் ஷரிஆ சட்டத்தை அமுல்படுத்துவார்களெனவும் அதற்கமைவாக ஜனநாயக உரிமைகள், பெண்களின் உரிமைகள் என்பன பறிக்கப்படுமெனவும் குறிப்பிடும் வகையிலே அமைந்துள்ளன.

அதேவேளையில் சீனா தலிபான்களின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்ததன் மூலம் தலிபான்களுக்கு உத்தியோகப்பற்றற்ற அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

அதேபோன்று இலங்கையின் ஆட்சியாளர்கள், ஆப்கானிஸ்தான் சார்க் நாடுகளில் ஒன்று என்ற வகையின் அங்கு இடம்பெறும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பெண்கள் உரிமைகள், மனித உரிமைகள் தொடர்பாக அக்கறை செலுத்தும்படி தலிபான்களைக் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கனடா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் தாம் தலிபான்களின் ஆட்சியை அங்கீகரிக்கப் போவதில்லையெனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதுடன் இவ்விடயம் தொடர்பாக ஜீ- 7 மாநாட்டில் விவாதிக்கவுமுள்ளனர். இன்னொருபுறம் ஆப்கானை விட்டு முழுமையாக படைகளை வெளியேற்ற வேண்டாமென்ற இவற்றின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்து விட்டது. எதிர்வரும் 31ம் திகதிக்குள் அமெரிக்கப் படைகள் ஆப்கானை விட்டு வெளியேறி விடுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளையில் இலங்கையின் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இலங்கை தலிபான் ஆட்சியை ஏற்கக்கூடாதெனவும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் மத்திய நிலையமாக மாறும் அபாயம் உள்ளதெனவும் அரசாங்கத்தை எச்சரித்திருப்பதுடன் உடனடியாகக் காபூலில் உள்ள இலங்கைத் தூதரகத்தை மூடி விடும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தலிபான்களை அங்கீகரித்தால் எமது வலயத்தில் ஒழிக்கப்பட்ட பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க வழி வகுத்துவிடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் தலிபான்களின் வெற்றியையிட்டு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஆனால் சம்பந்தன் ஐயாவோ, த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனோ தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவோ இவ்விடயம் பற்றி எதுவுமே பேசவில்லை.

ரணில் விக்ரமசிங்க இப்படியொரு கருத்தை வெளியிட்டிருப்பதில் ஆச்சரியப்பட இடமில்லை. அவரின் பார்வையில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிரானவர்கள். மற்றும் ஒடுக்குமுறைகளுக்கெதிராக ஆயுதப் போராட்டங்களை நடத்துபவர்கள் என அனைவருமே பயங்கரவாதிகள்தான். அவர் உயர் கல்வி அமைச்சராக அரசியலில் உட்புகுந்த காலம் தொட்டு இன்றுவரை கௌரவமான இன ஒடுக்குமுறையாளனாகவும் மக்கள் விரோத அரசியல்வாதியாகவும் வலம் வந்தவர். ராஜபக்ஷ் தரப்பினர் நேரடியாக தமிழ் மக்களின் உரிமைகளை மறுக்கும்போது இவரோ வழங்கப் போவதாகப் போக்குக்காட்டியே குழிபறிக்கும் வல்லமை படைத்தவர்.

ஆனால் ஒரு காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் எடுத்துப் போராடியது மட்டுமின்றி பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டிருந்த செல்வம் அடைக்கலநாதன், தலிபான்கள் ஆட்சிப் பீடமேறு முன்பே அதாவது அவர்கள் தங்கள் ஆட்சியை எப்படிக் கொண்டு செல்லப் போகின்றனர் என்பதை அறிந்து கொள்ளாமலே அவர் ஏன் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டார் என்பதைத் தெரிந்து கொள்ளமுடியவில்லை.

யாரோ சில சக்திகளைத் திருப்திப்படுத்த இப்படி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளாரா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

எனினும் தலிபான்களிடமுள்ள இரு நல்ல அம்சங்களைப் பலரும் கண்டு கொள்வதில்லை. அப்படிக் கண்டுகொண்டாலும் அதை வெளிப்படுத்த விரும்புவதில்லை.

ஒன்று அவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் குணாம்சம். அவர்கள் காலம் காலமாகத் தங்கள் மண்ணை அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்து சுதந்திரமான தேசமாகக் கட்டியமைக்கப் போராடியவர்கள்.

முன்னாள் ஆப்கான் அதிபர் நஜிபுல்லாவுடன் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தம் மூலம் ரஷ்யப் படைகள் அங்கு நிலை கொண்டிருந்தபோது அதற்கெதிராகப் போராடியவர்கள் ஒன்றரை இலட்சம் ரஷ்யத் துருப்புகளுக்கும் ஒரு இலட்சம் ஆப்கானின் அரச படைகளுக்குமெதிரான போராட்டத்தை நடத்தியவர்கள். இறுதியில் 15,000 பேரைப் பலி கொடுத்த நிலையில் ரஷ்யா ஆப்கானை விட்டு வெளியேறியது. அவர்கள் 1996ல் ஆப்கானிஸ்தான் ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு அமெரிக்காவின் கைப்பொம்மையாக இருக்கவில்லை. ஒரு சுதந்திரதேசமாக நாட்டைக் கட்டியெழுப்பினர்.

ரஷ்யாவை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்றவும் இடதுசாரி ஆதரவாளரான நஜிபுல்லாஹ் ஆட்சியைக் கவிழ்க்கவும் அமெரிக்கா பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பினூடாக ஆயுதங்கள், பயிற்சிகள், நிதியுதவி என்பவற்றை தாராளமாக வழங்கி தலிபான்களை வளர்த்தது. அமெரிக்கா மீண்டும் தனக்குச் சார்பான ஒரு ஆட்சியை உருவாக்கவும் தனது சுரண்டலை தங்கு தடையின்றி மேற்கொள்வதற்காகவுமே மேற்படி உதவிகளை அமெரிக்கா வழங்கியது. அது நிறைவேறாத நிலையில் அமெரிக்கா மீண்டும் அங்கு தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த தருணம் பார்த்திருந்தது. இந்த நிலையில் 2001ம் ஆண்டு அல்கொய்தா இயக்கத் தலைவர் பின்லாடனைத் தலிபான்கள் பாதுகாத்து வைத்திருக்கின்றனர் எனச் சொல்லி நேட்டோ படைகளின் உதவியுடன் அமெரிக்கா ஆப்கான் மீது படையெடுப்பை மேற்கொண்டது. நீண்ட போராட்டத்தின் பின் தலிபான்கள் பாகிஸ்தான் எல்லையிலுள்ள கந்தகார் மலைப் பகுதிக்குப் பின்வாங்கினர். ஆனால் அவர்களின் போராட்டம் தொடர்ந்தது. இறுதியில் அமெரிக்கா தலிபான்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து ஆப்கானை விட்டு அண்மையில் படைகளை வெளியேற்ற ஆரம்பித்தது.

இதிலுள்ள முக்கிய விடயம் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரு பெரும் வல்லரசுகளை எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ளுமளவுக்கு அவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும் தங்கள் தாயகத்தை மீட்கும் சுதந்திர வேட்கையும் கொண்டவர்கள் என்பதாகும்.

அடுத்தது, அவர்கள் தங்கள் பாரம்பரிய கலாசாரப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதிலும் ஒழுக்கத்தைப் பேணுவதிலும் கடைப்பிடித்த கட்டுப்பாடுகள்.

ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தான் அபின், ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களின் மிகப் பெரும் உற்பத்தி விநியோக மையமாகத் திகழ்ந்தது. சர்வதேச போதைப் பொருள் மாபியாக்களின் பிரதான செயற்பாட்டுத் தளமாக விளங்கியது. 2001ம் ஆண்டு இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருளைத் தங்கள் நாட்டிலிருந்து முற்றாகவே ஒழித்தனர். களவு, பாலியல் வல்லுறவு, லஞ்சம் என்பவற்றுக்குக் கடும் தண்டனைகள் வழங்குவதன் மூலம் அவை முற்றாக இல்லாமல் செய்யப்பட்டன.

இந்த இரு அம்சங்களையும் நியாயபூர்வமான எவரும் குறைசொல்லி விட முடியாது.

ஆனால், இவர்கள் ஷரியா சட்டத்தைப் பின்பற்றுவதன் மூலம் பெண்களின் கல்வி, தொழில், இயல்பான பழக்கங்கள் என்பவற்றைத் தடை செய்தனர். மேலும் வேறு மத்தவர்களின் வழிபாட்டு மையங்களைச் சேதப்படுத்தினர். இவ்விடயங்கள் அவர்களுக்கு சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்தியதுடன் இவர்களிடம் ஒரு சிறிதளவு நல்ல அம்சங்கள் கூட இல்லையென்ற பிரசாரத்தை எதிரிகள் கட்டவிழ்த்துவிட வாய்ப்பை வழங்கினர். இவ்வாறான பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள், கழுத்தை வெட்டிக் கொல்லல், கல்லெறிந்து கொல்லல், கைகளை வெட்டுதல் போன்ற கொடிய தண்டனைகள் சவூதி அரேபியா உட்பட்ட சில மத்திய கிழக்கு நாடுகளில் பின்பற்றப்பட்டாலும் அவற்றை யாரும் கண்டனம் செய்வதில்லை. அதற்காகத் தலிபான்கள் செய்வது சரியெனச் சொல்லிவிட முடியாது.

ஷரிஆ சட்டம் என்பது அடிமை சமூகக் கட்டமைப்பு இருந்த காலத்தில் உருவாக்கப்பட்டது. இப்போது சமூகம் நிலவுடைமைச் சமூகம், முதலாளித்துவ சமூகம் எனப் பல விதத்தில் மாற்றத்துக்கு உட்பட்டு விட்டது. எனவே இச்சட்டங்கள் எவ்வாறு இப்போது பொருத்தமுடையவையாக இருக்கமுடியும்?

அது மத நம்பிக்கையின் பேராலும் மூட நம்பிக்கைகளின் பேராலும் இப்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. அதிகார பீடங்கள் தங்கள் வசதிக்காக அவற்றைச் கட்டிக்காத்து வருகின்றன.

இவற்றை ஒருசில தனிநபர்களாலோ அல்லது ஒன்றிரண்டு அமைப்புகளாலோ மாற்றிவிட முடியாது. முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியில் இல்லாத தேசங்களில் முஸ்லிம்கள் மத்தியில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடியும். ஈராக், லிபியா போன்ற நாடுகள் சதாம் ஹுசைன், கேணல் கடாபி ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் இச்சட்டங்களிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தன. சீனா, ரஷ்யா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் முஸ்லிம்களிடம் இவை அமுலில் இல்லை.

தலிபான்களும் இந்தச் “ஷரியா“ சட்டங்களிலிருந்து வெளியே வந்து காலத்துக்குப் பொருத்தமற்றவற்றை நிராகரிக்கும் போது மட்டுமே. ஆப்கானிஸ்தான், நீண்ட காலமாக வல்லரசுகளுடன் போராடி எவ்வளவோ தியாகங்கள் செய்து பெற்ற விடுதலையை அர்த்தமுள்ளதாக்க முடியும்.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்

31.08.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, அமெரிக்கா, உலகம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE