Thursday 8th of December 2022 07:29:57 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையின் மூலோபாய நலனை நோக்கிய புதுடில்லி-கொழும்பு உறவின் நகர்வு - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

இலங்கையின் மூலோபாய நலனை நோக்கிய புதுடில்லி-கொழும்பு உறவின் நகர்வு - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


இலங்கைக்கும் இந்தியாவுக்குமான புரிதல் தீவிரம் பெற ஆரம்பித்துள்ளது. பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு முரண்பாடுகளை அதிகம் பிரதிபலித்த இலங்கை - இந்தியா உறவு மாற்றத்திற்கு உள்ளாகி நெருக்கமான உறவினை ஏற்படத்துவதற்கான சமிக்ஞைகளை இலங்கை அரசாங்கமும் புதுடில்லியும் மேற்கொண்டு வருகிறன. இத்தகைய புரிதலை எற்படுத்துவதில் இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் போன்றவர்களுடைய அணுகுமுறையோடு இந்தியா இராணுவ அதிகாரிகளும், இந்திய வெளிவிவகார அமைச்சும் செயற்பட்டு வருகிறன. இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள வெளியுறவு சார்ந்த நெருக்கடியில் இந்தியா பிரதான இடத்தை பெறுவதோடு இந்தியாவூடாக மேற்குலகத்தில் இலங்கைக்கு ஏற்பட்டு இருக்கக்கூடிய நெருக்கடிகளை கையாள முடியுமென இலங்கை ஆட்சியாளர்களின் கொள்கை வகுப்பு பிரிவினர் தீர்மானித்துள்ளனர். அத்தகைய வரைபுக்குள் இக்கட்டுரை இலங்கை-இந்திய சமச்சீரற்ற உறவை கடந்து மூலோபாய உறவாக மாற்றுவதில் இரு தரப்பும் நகர்கிறது என்பதை விளங்கிக்கொள்வதற்கான முயற்சியாக உள்ளது.

முதலாவது, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸிடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும், விருப்பத்தை கொண்டுள்ளதாகவும், இருதரப்பு உறவுக்கு வழிகாட்டும் சிறந்த அயலுறவு நட்புறவின் முக்கியத்துவம் மற்றும் தலைமைத்துவத்தின் இலக்குக்கு அமைவாக இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறே இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பால்கே வெளியுறவு அமைச்சராக பீரிஸ் பதவியேற்ற சந்தர்ப்பத்தில் அவரை சந்தித்த இருநாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்து பேச்சு நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இரண்டாவது, இதே சந்தர்ப்பத்தில் இந்தியாவின் ஓய்வுநிலை இராணுவ அதிகாரியும், அரசியல் பாதுகாப்பு துறையின் ஆய்வாளருமான மேஜர் மதன் குமார் வழங்கிய செவ்வியில், இலங்கை-இந்திய உறவு ஒரு வர்த்தக ரீதியிலான உறவு மாத்திரமே என்றும் அதனை முன்னேற்றுவதற்கான மூலோபாய உறவு நிலையை நோக்கி எடுத்துச்செல்வதே மிலிந்த மொறகொடயின் நியமனம் என்று குறிப்பிட்டுள்ளதோடு, இலங்கையில் தற்போது நிகழும் குடும்ப ஆட்சியை எப்படி கையாள்வது என்பதை பற்றிய பின்புல வேலைகள் இந்திய அரசாங்கம் மேற்கொண்டு நிறைவடைந்து விட்டது எனவும் இதற்கு உண்டான அறிவிப்பு மிகவிரைவில் வெளிவரும் என தாம் எதிர்பார்ப்பதாகவும், அமெரிக்க-இந்திய உறவு இலங்கையில் அதிக மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறதெனவும் அத்தகைய மாற்றங்களூடாக இலங்கை அரசின் நடவடிக்கைகள் கையாளுவதற்கான பாதை மிக விரைவில் சாத்தியமாகுமென நம்பிக்கை வெளியிட்டார்.

மூன்றாவது, ஓய்வு நிலை இராணுவ அதிகாரியான ஆர்.எஸ்.வாசன் மூலோபாயக் கற்கைநெறி திருகோணமலைக்கு எனும் அமைப்புக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் குறிப்பிடும் போது, இந்தியாவின் கொல்லைப்புறமான இலங்கைத்தீவில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் இராணுவ தளமாக பயன்படுத்துமாக இருந்தால் அத்தகைய சவாலை கையாள்வதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்ட வாசன், இந்துசமுத்திர பிராந்தியத்தில் இந்தியா அனுபவிக்கிற பூகோள அமைவிடமே இதற்கு காரணமென தெரிவித்தார். அம்பாந்தோட்டையை சீனா எந்தவொரு இராணுவ பயன்பாட்டுக்கும் உட்படுத்தினால் இந்திய ஆயுத களஞ்சியத்தில் இருக்கக்கூடிய சகல ஏவுகணைகளும் தாக்கக்கூடிய தொலைவிலேயே அந்த துறைமுகம் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. எந்தவொரு இராணுவ சாகசத்திலும் ஈடுபட முன்னர் சீன கருத்தில் எடுக்க வேண்டிய அம்சம் இதுவாகும். அதேபோன்று பிரம்மாண்டமான முதலீடுகளை பெறும் வாய்ப்பைக்கொண்ட கொழும்பில் புதிய சர்வதேச நிதி நகரமும் நெருக்கடியான கால கட்டங்களில் தாக்குதல்களினால் இலகுவில் பாதிப்படைய கூடியதாக இருக்கிறது என்பதனை கவனம் கொள்ளுதல் வேண்டும் எனத் தெரிவித்தார்.. மேற்குறித்த மூன்று இந்திய கொள்கைவகுப்பின் மற்றும் அமுலாக்கலில் பங்கெடுப்பை கொண்ட அதிகாரிகளின் எண்ணங்களில் காணப்படும் விடயங்களை அவதானிக்க முடிகிறது. அதில் முதன்மையான எண்ணத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்த கருத்துக்களிலிருந்து இலங்கையும் இந்தியாவும் மூலோபய உறவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது என்பதை கோடிட்டு காட்டுகிறது. இதற்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே மதன்குமார் மற்றும் வாசன் போன்றவர்களது கருத்துக்கள் உள்ளது. இவர்கள் இருவரும் ஓய்வுநிலை இராணுவ அதிகாரிகளாக இருக்கின்றமையால் இவரது எண்ணங்கள் எந்தளவுக்கு கொள்கை வகுப்பில் தாக்கத்தை செலுத்தும் என்பது கேள்விக்குரியது. ஆனால் இந்திய அரசாங்கத்தின் இறுதியிலும் இறுதியான நகர்வுகளை வாசன் அவர்களது கருத்துநிலை உறுதிப்படுத்துகிறது. அது கொள்கை வகுப்பில் தாக்கத்தை செலுத்தாத போதும் இலங்கையுடனான அரசியல் உறவில் இத்தகைய எச்சரிக்கைகள் தாக்கத்தை செலுத்தக்கூடியதாக அமைந்து விடுவது வழமையான அரசியலாகும். இதன் பிரதிபலிப்பு இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறைகளில் புவிசார் அரசியல் எல்லையையும் குறிப்பிடப்பட்ட அளவுக்கு மேல் மீற முடியாது என்பதை கோடிட்டு காட்டியதுடன், 2009ஆம் ஆண்டு போர்க்காலத்தில் பின்பற்றிய அதே மூலோபாயத்தை புதிய வடிவத்தில் இலங்கையும் தற்போது ஆரம்பித்துள்ளது. இதற்கு பல காரணங்கள் அடிப்படையாக இருந்த போதும் அமெரிக்க-இந்திய உறவு அதற்கான அடிப்படை காரணங்களில் ஒன்றாகும். இரு நாடுகளும் இலங்கை விடயத்தில் கூட்டாக இயங்க முயற்சிக்கின்ற சந்தர்ப்பத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸா மற்றும் மிலிந்த மொறகொட நகர்வுகளில் அவதானிக்க முடிகிறது. அதுமட்டுமன்றி இராணுவ ரீதியிலான விடயங்களில் இந்தியா இலங்கை தொடர்பில் கொண்டுள்ள அணுகுமுறையானது இலங்கையால் தவிர்க்க முடியாது அங்கீகரிக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது. இதனை ஆதாரப்படுத்தம் விதத்தில் இந்தியாவின் கிழக்கின் கடற்படை பிராந்திய தளபதி வைஸ் அட்மிரல் ஜென்ரல் அஜேந்திர பஹதூர் சிங் மன்னார் தீவுக்கும் தலைமன்னாருக்கும் அண்மையில் (23.07.2021) மேற்கொண்ட விஜயம் தெளிவுபடுத்தக்கூடியதொன்றாகும்.

எனவே இலங்கையின் இந்தியா பொறுத்த அணுகுமுறை என்பது இந்தியாவின் நெருக்கடிகளுக்குள்ளால் மாற்றத்துக்கு உந்தப்பட்டுள்ளது. அத்தகைய மாற்றம் சீன-இலங்கை நட்புறவினால் ஏற்பட்ட நெருக்கீடாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. இச்சந்தர்ப்பத்தில் இந்தியா ஒரு கொள்கை மாற்றத்தை மேற்கொள்வதற்கு பதிலாக இலங்கை அரசாங்கம் மீது நெருக்கடியை ஏற்படுத்தி அதன்மூலமாக இலங்கையின் கொள்கை மாற்றம் உருவாக்க முடியுமென கருதி செயற்படுகிறது. ஆனால் இலங்கை அரசாங்கமோ அல்லது இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களோ இந்தியா பொறுத்து காலங்காலமாக பின்பற்றி வந்த கொள்கையில் மாற்றம் குறித்த சிந்திக்காது மூலோபாய மாற்றம் குறித்து நகர தொடங்கி உள்ளனர். இந்தியாவின் இந்துத்துவ அரசுக்கு ஏற்ற குறிகாட்டிகளையும் சுலோகங்களைம் முன்னிறுத்திக்கொண்டு இந்தியாவை அணுக இலங்கை முனைகிறது. அத்தகைய அணுகுமுறையின் ஆரம்பத்தை அல்லது தோற்றத்தை தனிமனித உறவுமுறைக்கூடாக கட்டியெழுப்புகிறது. அதாவது பிரதமர் நரேந்திர மோடிக்கும் மிலிந்த மொறகொடக்கும் இடையிலான நட்பு இலங்கை-இந்தியா மூலோபாய நட்பாக கட்டமைப்பதில் கவனத்தை செலுத்துகிறது. இதுவே இலங்கை இந்திய உறவுக்கான யதார்த்தமாகும். எல்லா சந்தர்ப்பங்களிலும் இலங்கை ஆட்சியாளர்கள் நெருக்கடிகளை முகாமை செய்யும் வலிமை கொண்டவர்கள். அத்தகைய நெருக்கடியானதொரு சூழலை இலங்கையின் வெளிவிவகாரத்தை கையாளும் அனைத்த தரப்பும் தமது இராஜதந்திர உத்திகளுக்கூடாக மேற்கொள்ள முனைந்துள்ளன. இதில் இந்திய தரப்பு மீளவும் இலங்கை ஆட்சியாளர்களின் மூலோபாய உத்திகளை நட்புறவின் உத்தினளாக அளவீடு செய்து பயணிப்பதோடு நெருக்கடிக்கூடாக குறுகிய நன்மைகளை அடைவதிலும் அவற்றை தமக்குரியதாக்குவதிலும் கவனம் கொள்கின்றனர். ஓய்வுநிலை கொமான்டர் வாசனின் கருத்தில் முன்னிறுத்தப்பட்ட கொழும்பு நிதி நகர முதலீடு சார்ந்து அமெரிக்கா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளும் முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிடுகின்றது என்பது அவரது கருத்துநிலையின் பலவீனத்தை தெளிவுபடுத்துகிறது.

எனவே, இலங்கை-இந்திய நட்புறவு இந்திய தரப்பின் குறுகிய நோக்கங்களையும் இலங்கை தரப்பின் நீண்டகால நலன்களையும் மையப்படுத்தி நகர்வதனை அவதானிக்க முடிகிறது. சுதந்திர இந்தியாவின் இலங்கை பொறுத்த கொள்கை இத்தகைய குறுகிய நோக்கங்களுக்கான பயணமாகவே அமைந்திருக்கின்றது. ஆயினும் இலங்கை ஆட்சியாளர்கள் நெருக்கீடுகளை முகாமை செய்வதனூடாக நீண்டகால நலன்களை அடையும் இராஜதந்திரத்தை கடந்த காலத்தில் எவ்வாறு கையாணட்டு நகர்ந்தார்களோ அவ்வாறே சமகாலத்திலும் மேற்கொள்ள முனைகின்றனர்.இதன் விளைவுகள் இலங்கை தமிழரது அரசியலில் ஏற்படுத்தக் அதிக பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியதாக அமைய வாய்ப்புள்ளது. காரணம் தமிழர் தரப்பு எத்தகைய அரசியல் நகர்வையும் மேற்கொள்ளாத போக்கு நீட்சி பெறுகிறது.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE