Thursday 8th of December 2022 05:53:22 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 71 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 71 (வரலாற்றுத் தொடர்)


எதிர்க்கட்சித் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானமும் மீண்டும் மூட்டப்பட்ட இன வெறியும்! - நா.யோகேந்திரநாதன்!

'தாயகம் இல்லாத தமிழர்களுக்கு எதிராக இனப்பாகுபாடு காட்டப்படுகிறதென்றால் அவர்கள் ஏன் இங்கு இருக்கவேண்டும்? அவர்கள் அவர்களின் வீட்டுக்கு அதாவது இந்தியாவுக்கு போய்விடலாம். அங்கே உங்களின் கோவில்கள் இருக்கின்றன, உங்களின் கடவுள்கள் இருக்கிறார்கள், உங்கள் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன, அங்கு உங்கள் கல்வியைத் தொடரமுடியும். அங்கு உங்கள் விதியைத் தீர்மானிக்கும் எஜமானர்கள் நீங்கள் தான். தமிழர்கள் தனித் தமிழீழம் அமைக்க முயல்வதை உறங்கிக்கொண்டிருக்கும் சிங்களவர்கள் கண்டு விழித்துக்கொள்வார்களானால் பின்பு விடயங்கள் அமைதியாக இருக்காது. உறங்கிக் கொண்டிருக்கும் சிங்களச் சகோதரர்களை எழுப்பாமலிருப்பதே தமிழ் மக்களுக்கு நான் வழங்கக் கூடிய ஆலோசனையாகும். சிங்கங்கள் குழப்பமடைந்தால் விடயங்கள் அமைதியாக இருக்காது'.

இது யாரோவொரு இனவாதி ஆற்றிய உரையோ, அல்லது ஒரு தேர்தல் கூட்டத்தில் மக்களை உணர்ச்சி வசப்படுத்தி அவர்களின் வாக்குகளைப் பெற ஆற்றிய மேடைப் பேச்சோ அல்ல. ஜனநாயகத்தின் உயர்பீடமெனக் கூறப்படும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை முன் வைக்கப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லொக்கு பண்டார கக்கிய இனவெறிக் கருத்துகளாகும். அவரின் இலங்கைத் தமிழ் மக்களுக்கு இலங்கையில் எவ்வித உரிமையுமில்லை என்பதை வலியுறுத்தியமையை அவதானிக்க முடியும். அது மட்டுமின்றித் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை முன்வைத்தால் வன்முறைகளாலும் அழிப்பு நடவடிக்கைகளாலுமே பதில் வழங்கப்படும் என்ற வகையிலான எச்சரிக்கையாகவும் இது அமைந்திருப்பதைக் காணமுடியும்.

எதிர்க்கட்சித் தலைவர் என்பது உத்தியோகபூர்வமான அதிகாரமுள்ள ஒரு பதவியல்ல. அது ஒரு சம்பிரதாயபூர்வமான ஒரு கௌரவமான பதவியாகும். எனவே எதிர்க்கட்சித் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படுவதால் எவ்வித பயனும் கிட்டப்போவதில்லை. ஆனால் ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையிலான ஐ.தே.கட்சி இப்படியான தீர்மானத்தை முன்வைத்தமைக்கான உண்மையான காரணம் இத்தீர்மானத்தை ஆதரித்து ஆற்றும் நாடாளுமன்ற உரைகள் சிங்கள மக்களை இன வெறியூட்டி தமிழ் மக்கள் மீது வன்முறையை ஏவி விடுவதாகும்.

எனவேதான் லொக்கு பண்டார மட்டுமின்றி ஏனைய பல ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இனவெறி உரைகளை இத்தீர்மானத்தை முன்வைத்து நிகழ்த்தினர். கிராமப்புற அபிவிருத்தி அமைச்சர் விமலா கன்னங்கர, 'நாம் சிங்கள பௌத்தர்களாக இந்த நாட்டை ஆளவேண்டும். நான்கு ஆண்டுகளாகச் சிறுபான்மையினருக்கு அடங்கிப் போயிருந்த நாம் இனியாவது பெரும்பான்மைச் சமூகமாக நாட்டை ஆளவேண்டும்' என முழங்கினார். குண்டசாலை உறுப்பினர் டி.எம்.சந்திரபால தனக்கு அதிகாரமிருந்தால் தமிழர்களின் தலைவரை ஒரு தூணில் கட்டி வைத்து அவனின் மூளை தெளிவடையச் சவுக்கால் அடித்துவிட்டுக் குளத்தில் வீசப் போவதாகக் கூறினார். பாணந்துறை உறுப்பினர் டாக்டர் நெவில் பர்னாண்டோ அமிர்தலிங்கத்துக்கு இரு கால்களையும் பாக்கு மரத்தில் பிணைத்து தலைகீழாகத் தொங்கவிட்டு பாக்கு மரங்களின் பிணைப்பை அறுத்துவிட்டு அவரின் உடல் இரண்டாகக் கிழிக்கப்பட வேண்டுமெனக் கூறினார். தமிழ்த் தலைவர்களைக் காலி முகத்திடலில் வைத்துச் சுட்டுத்தள்ள வேண்டுமெனவும் முழங்கினார்.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தரத்திலிருந்து பல படிகள் இறங்கிக் கேவலமான முறையில் உரைகளை ஆற்றிய போதும் அமிர்தலிங்கத்துக்குப் பதிலுரையை வழங்க சபாநாயகர் அனுமதிக்க வில்லை. எனவே. த.வி.கூட்டணி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்தனர்.

அதேவேளையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மைத்திரிபால சேனநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு விரோதமானதெ னத் தெரிவித்து ஆட்சேபனையை முன்வைத்தார்.

அதுவும் காலம் தாழ்த்தப்பட்டு விட்டதாகச் சொல்லி சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டதையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் வெளியேறி விட்டனர்.

அமைச்சர் தொண்டமான் மட்டும் எதிர்த்து உரையாற்றிவிட்டு பிரேரணையை எதிர்த்து வாக்களித்தார். அவருடன் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஷெல்டன் ஜயசிங்கவும் எதிர்த்து வாக்களித்தார். பிரேரணை 121 வாக்குகள் ஆதரவாகவும் 2 வாக்குகள் எதிராகவும் பெற்று நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் காலப்பகுதியில் வடக்கில் இடம்பெற்ற யாழ்.நூலக எரிப்பு உட்பட வன்முறைகள் தொடர்பாகவும் உயிரிழப்பு உட்படத் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றியும் அவற்றுக்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டுமெனவும் வலியுறுத்தி அமிர்தலிங்கம் நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தார். 5/6 பெரும்பான்மையைக் கொண்ட ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் அது நிறைவேறுவது சாத்தியமில்லை என்ற போதிலும் அவர்அதை ஒரு ஆவணப் பதிவாகவே கொண்டு வந்தார்.

அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பதிலாகவே அமிர்தலிங்கம் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அங்கு ஆற்றப்பட்ட உரைகளும் அதையொட்டி நடத்தப்பட்ட பிரசாரங்களும் தமிழ் மக்கள் மீதான இனவெறி வன்முறைகளைத் தூண்டவே பயன்படுத்தப்பட்டன என்பதைச் சந்தேகமின்றிப் புரிந்து கொள்ளமுடிந்தது.

இந்நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது அமைச்சர் சிறில் மத்யூ ஆற்றிய நாடாளுமன்ற உரை பல்லாயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களாக அச்சிடப்பட்டு நாடு முழுவதுமுள்ள சிங்கள மக்கள் மத்தியில் விநியோகிகப்பட்டது. அதுமட்டுமின்றி வடக்குக் கிழக்கிலுள்ள விகாரைகளின் ஒரு வரைபடம் அச்சிடப்பட்டு அவை தமிழர்களால் அழிக்கப்படவுள்ளன என ஒரு பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. அது மட்டுமின்றி 'சிங்கள மக்களே, தமிழர்களுக்கெதிராக விழித்தெழுங்கள்' என அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மேலும் அமைச்சர் சிறில் மத்தியூ தமிழ் பகுதிகளிலுள்ள விகாரைகளைப் பாதுகாக்க சிங்கள மக்களை அவ்விகாரைகளைச் சுற்றிக் குடியேறுமாறு அறைகூவல் விடுத்தார்.

இவ்வாறு அரச தரப்பினரால் திட்டமிட்டு வெறியூட்டப்பட்ட சிங்கள மக்கள் தமிழ் மக்கள் மீது வன்முறைகளை மேற்கொண்டனர். மட்டக்களப்பு, அம்பாறை, கல்லோயா ஆகிய பகுதிகளில் வசித்த தமிழ் மக்கள் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. அது மட்டுமின்றி மலையகத்தில் ஏற்கனவே குடியேற்றப்பட்டிருந்த சிங்களவர்கள் தோட்டங்களுக்குள் புகுந்து தமிழ் மக்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்தனர். இரத்தினபுரியில் ஆரம்பித்த தாக்குதல்கள் பதுளை, நுவரெலியா ஊடாக மலையகமெங்கும் பரவின. இக்கலவரங்களில் 28,000 மலையகக் குடும்பங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டன.

இப்படியான நிலையில் அமைச்சர் தொண்டமான் தலைமையிலான குழுவினர் அன்று ஜே.ஆர்.ஜயவர்த்தனவை நேரடியாகச் சந்தித்து உடனடியாக மலையக மக்கள் மீதான வன்முறைகள் நிறுத்தப்படவேண்டுமெனவும் தவறினால் மலையக மக்களும் திருப்பித் தாக்கும் நிலை ஏற்படுமென எச்சரித்தார்.

உடனடியாக அன்றிரவே சகல வன்முறைகளும் நிறுத்தப்பட்டன. தீவிரமடைந்திருந்த வன்முறைகள் ஜே.ஆரினால் உடனடியாக நிறுத்தப்படக்கூடியதாக இருந்ததென்றால் அவற்றின் பின்னணியில் யார் செயற்பட்டவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.

அதுமட்டுமின்றி 17.08.1981 அன்று ஜே.ஆர்.ஜயவர்த்தன, தொண்டமானுடன் இணைந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று ஆறுதல் கூறியதுடன் நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் வாக்குறுதி வழங்கினார். இப்படி கலவரத்தை நிறுத்தவும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்கவும் ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கு இரு முக்கிய தேவைகள் இருந்தன.

1982ல் இடம்பெறவிருந்த தேர்தலில் மலையக மக்களின் ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சிக்குத் திரட்ட வேண்டியிருந்தது. மற்றைய தேவை 1981 ஒக்டோபர் மாதம் பிரித்தானிய மகாராணி இலங்கை வரவிருந்தார். அவருக்கு நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவுவதாகவும் இனங்களுக்கிடையே சுமுகமான சூழல் ஏற்பட்டு விட்டதெனவும் காட்டவேண்டியிருந்தது. அதற்கான அத்திவாரத்தை ஜே.ஆர். மலைநாட்டு விஜயத்தின் மூலம் உருவாக்கிக் கொண்டார்.

அதைவிட வேறு புறக்காரணங்களும் இருந்தன.

இக்கலவரத்தின்போது திஸ்ஸமாறகமவில் வைத்து இந்திய சுற்றுலாப் பயணிகள் பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தனபதி என்ற ஒரு தமிழகத் தமிழர் கொல்லப்பட்டுப் பலர் படுகாயமடைந்தனர். இது தமிழகமெங்கும் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியது. ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் என ஒரு கொதிநிலையை உருவாக்கியது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நரசிம்மராவ் இலங்கை அரசிடம் நேரடியாகவே விளக்கம் கோரியிருந்தார். அதுமட்டுமின்றி யாழ்ப்பாண அழிவுகளைப் பார்வையிட வந்த ஜப்பான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையில் தங்கியிருந்தபோதே இக்கலவரங்கள் நடத்தப்பட்டமை ஜே.ஆரை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளிவிட்டது.

ஆசியாவில் நரி என்று கூறப்படும் ஜே.ஆர்.ஜயவர்த்தன இவற்றால் ஏற்பட்ட சிக்கல்களிலிருந்து விடுபட இரு வழிகளிலான தந்திரத்தை மேற்கொண்டார்.

ஒன்று தொண்டமானை வழிக்குக் கொண்டு வருவது மற்றது, தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுகளை ஆரம்பிப்பது.

மலையக விஜயத்தின் மூலம் தொண்டமானை முன்வைத்து மலையக மக்களின் வெறுப்பை வெற்றி கொண்ட ஜே.ஆர்., எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் மருமகன் ஏ.ஜே.வில்சன் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணியை நோக்கித் தன் காய்களை நகர்த்தினார்.

லண்டனிலிருந்த வில்சனை ஜே.ஆர்.அவசரமாக அழைத்து த.வி.கூட்டணியை பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இப்பேச்சுவார்த்தை தொடர்பாகத் தமிழர் தரப்பிலிருந்து முக்கியமாகத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உட்பட தமிழ் ஆயுதக் குழுக்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டபோதும், ஏ.ஜே.வில்சனின் மத்தியஸ்த்துடன் 31.08.1981 அன்று பேச்சுவார்த்தை ஆரம்பமானது. அதன்போது பேச்சின் முன் நிபந்தனையாக அமிர்தலிங்கம் மே, ஜூன் மாதங்களில் இடம்பெற்ற வன்செயல்களை விசாரிக்க சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்படவேண்டுமெனவும் அவற்றுக்குக் காரணமான பொலிஸார் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் வன்முறைகளைத் தடுக்க ஊர்காவற்படை அமைக்கப்படவேண்டுமெனவும் வடக்கு கிழக்கில் 78 வீத பொலிஸார் தமிழராக இருக்கவேண்டுமெனவும் நிர்வாக அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு மாவட்ட அதிகார சபைகள் வினைத்திறனுடன் செயற்பட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டது. ஜே.ஆர்.சர்வதேச விசாரணைக் கொமிஷனுக்குப் பதிலாக உள்ள10ர் கொமிஷன் அமைக்கப்படுமென ஏற்றுக்கொண்டதன் பேரில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. ஜே.ஆர். இதன் காலத்தை இழுத்தடித்துத் தன் அடுத்த கட்ட நடவடிக்கைக்கான கால அவகாசமாகப் பயன்படுத்தினாரேயொழிய பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் அதைப் பயன்படுத்தவில்லை.

இவ்வாறு பேச்சுவார்த்தை எவ்வித பயனுமின்றி இழுபட்டுக் கொண்டிருந்த நிலையில் 1980ம் ஆண்டு காங்கேசன்துறைத் தொகுதியில் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துக்கு எதிராகக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணா வைகுந்தவாசன் பின்பு தீவிர தமிழ் தேசியவாதியாக மாறி, லண்டனிலுள்ள புலம் பெயர் தமிழர்களின் அமைப்பு மூலம் 14.01.1982 அன்று தமிழீழப் பிரகடனம் செய்யப் போவதாக அறிவித்தார். இவர் 1978ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைப் பிரதிநிதி உரையாற்றும் நேரம் வந்தபோது தான் தமிழீழத்தின் சார்பில் பேசுவதாக உரையாற்ற ஆரம்பித்தார். காவலர்கள் இவரை அடையாளம் கண்ட நிலையில் வெளியேற்றப்பட்டார். அவர் இவ்வாறான பரபரப்பான விடயங்களுக்குப் பெயர் போனவர்.

இவ்வறிவித்தல் 1977ல் தமிழீழ ஆணை கோரி தேர்தலில் போட்டியிட்ட த.வி.விடுதலைக் கூட்டணிக்குப் பெரும் இக்கட்டான நிலையைத் தோற்றுவித்தது.

எனினும் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோர் இலங்கை வாழ் தமிழர்களின் தலைவிதியை இலங்கைத் தமிழர்களே தீர்மானிக்க வேண்டுமெனவும் தமிழர்கள் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையையும் அவர்கள் சார்பாக முன்னெடுக்க எந்தவொரு நபருக்கும் அதிகாரம் இல்லையெனவும் சிந்திக்காமல் எடுக்கும் இப்படியான முடிவுகள் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரப்போவதில்லையெனவும் தனிநாட்டுப் பிரகடனம் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் தீர்வல்ல எனவும் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டதன் மூலம் ஜே.ஆர்.ஜயவர்த்தனவைத் திருப்திப்படுத்திக் கொண்டனர்.

ஆனால் ஜே.ஆர். ஒருபுறம் பேச்சுகளை நடத்திக் கொண்டு மறுபுறம் லண்டனிலுள்ள பிரபல சர்வதேச மக்கள் தொடர்பாடல் சந்தைப்படுத்தல் நிறுவனம் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு எதிராகப் பெருந்தொகைப் பணத்தை வழங்கி பிரசாரப் பணிகளை முன்னெடுக்க ஏற்பாடு செய்திருந்தார்.

நாடாளுமன்றத்தில் அமிர்தலிங்கத்தின் மேல் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் அவரையும் தமிழ் மக்களையும் கீழ்மைப்படுத்தியும் இனவெறியைச் சிங்கள மக்களிடம் மக்கள் மயப்படுத்தியும் ஐ.தே.கட்சி தனது இன ஒடுக்குமுறை முகத்தைப் பகிரங்கப்படுத்தியபோதும், அவர் தங்களுக்கு மக்கள் வழங்கிய ஆணையையே புறந்தள்ளி வெற்றி பெறாது எனத் தெரிவித்த போதிலும் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்தார்.

அதன் காரணமாகவே ஒரு கட்டத்தில் அவர் அரசியலிலிருந்து ஓரங்கப்பட்ட நிலையும் படுகொலை செய்யப்படும் நிலையும் உருவானது என்பதே வரலாறாகும்.

தொடரும்.....

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE