Thursday 18th of April 2024 06:52:53 PM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா தொற்றும் விலைவாசி உயர்வும்! - நா.யோகேந்திரநாதன்!

கொரோனா தொற்றும் விலைவாசி உயர்வும்! - நா.யோகேந்திரநாதன்!


சீனாவின் வூஹான் மாநிலத்தில் ஆரம்பமான கொரோனாத் தொற்று தற்சமயம் உலகெங்கும் பரவி கோடிக்கணக்கான மக்களைப் பாதித்ததுடன் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலி கொண்டு வருகிறது. பெரும் வல்லரசுகள் கூட, இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுவதுடன் இதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கமுடியாமல் திணறுகின்றன. மருத்துவத்துறையில் மிக முன்னேறிய நாடுகள் எனக் கருதப்படும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் கூட நாளாந்தம் இந்த நோய் காரணமாக மரணிப்போர் தொகையைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுகின்றன.

இலங்கையில் சீன உல்லாசப் பயணி ஒருவரில் ஆரம்பமான இந்த கொரோனா தொற்றின் முதலாவது அலை மிகக் குறைந்தளவு பாதிப்புகளுடன் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை, பேலியகொட பொருளாதார மத்திய நிலையம் என்பவற்றில் உருவானதாகக் கூறப்படும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல நாடு முழுவதும் பரவி இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. அரசாங்கமும் அமைச்சர்களும் சுகாதாரத்துறையினரும் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். “இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என அமைச்சர் ஒருவர் கூறுமளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

அண்மையில் சுகாதார அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை 36 வீதத்தாலும் மரணமடைவோர் தொகை 64 வீதத்தாலும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாகத் தொற்றிவரும் டெல்ரா வைரஸ் முன்னையதைவிட 60 தொடக்கம் 70 வரை வீரியம் கூடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஏழு நாட்களில் மட்டும் மரணமடைவோர் தொகை 60 வீதமாக உயர்வடைந்து காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளையில் வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதாரப் பணியாளர்களில் 50 வீதமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் இனிவரும் நாட்களில் நோயாளிகளைப் பராமரிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிவருமெனவும் தெரிவித்துள்ளது.

தற்சமயம் நாளொன்றுக்குத் தொற்றுக்கு உள்ளாவோர் தொகை நான்காயிரத்தைக் கடந்து விட்டது. மரணிப்போர் தொகையும் இருநூறை எட்டித் தொட்டு விட்டது. கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 4,700 பேர் நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் பல வாரங்களுக்கு முன்பே பொதுச் சுகாதார வைத்தியர்கள் சங்கம், வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக ஆய்வு நிபுணர்கள் ஆகியோர் நாட்டை ஒரு குறிப்பிட்ட காலத்துக்காவது முடக்கும்படி அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் அவர்களின் ஆலோசனைகளுக்குச் செவிசாய்க்கவில்லை. மாறாக மக்கள் பொறுப்பற்று நடக்கின்றனர் எனப் பழியை மக்கள் மீது போட்டுக் கொண்டிருந்தனர்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அரச தரப்பு உறுப்பினர் ஒருவர் அதிபர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரின் ஆர்ப்பாட்டங்களே கொரோனாத் தொற்று அதிகரிப்பதற்கான காரணம் எனக் கூறியிருந்தார். அங்கு உரையாற்றிய அமைச்சர் ஒருவரோ நாளாந்தம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள், மற்றும் நடைபாதை வியாபாரி கள் நாட்டை முடக்கினால் பட்டினி கிடக்க வேண்டி வருமெனக் கவலைப்பட்டார்.

இதில் முக்கியமான விடயம் என்னவெனில் அரச தரப்பிடமிருந்து குற்றங்களை மற்றவர்கள் மேல் சுமத்தும் கருத்துகள் வெளிவருகின்றனவேயொழிய அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான ஆரம்பம் எதுவும் தென்படுவதாக இல்லை.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தையடுத்து அதன் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும உலக நாடுகள் கொரோனாவைக் கட்டுப்படுத்த மூன்று வழிகளைக் கையாள்கின்றன எனவும் முதலாவது முழுமையாக நாட்டை முடக்குவது, இரண்டாவது நாட்டை முடக்காமல் தடுப்பூசிகளை ஏற்றல், மூன்றாவது ஒரு பகுதியினருக்கு தடுப்பூசி வழங்கிய பின்பு நாட்டைப் பகுதிபகுதியாகத் திறப்பது எனவும் தாங்கள் மூன்றாவது முறையையே பின்பற்றுவதாகத் தெரிவித்தார்.

அதிலிருந்து ஒரு விடயத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். அதாவது அரசாங்கத்தின் தற்போதைய வழிமுறையே பின்பற்றப்படும் என்பதுதான் அது.

நடைமுறையில் இப்போது அரசாங்கம் தடுப்பூசி ஏற்றவதைப் பிரதானவழியாக ஏற்றுக்கொண்டு விட்டது.

ஆனால் புதிதாகத் தொற்றுக்கு உட்படுபவர்களின் பிரச்சினை இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்படுகிறது.

போதிய விடுதி வசதிகள், கட்டில் வசதிகள் ஒட்சிசன் சிலிண்டர் வசதிகளில் பற்றாக்குறையே காணப்படுகின்றன. அதேவேளையில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கும் பற்றாக்குறையே நிலவுகிறது.

இந்த நிலையைச் சமாளிக்க அறிகுறிகள் காணப்படாத தொற்றாளர்களை வீடுகளில் வைத்தே பராமரிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வழிமுறையில் எவ்வளவு தான் கட்டுப்பாடாக இருந்தாலும் நோய் தொற்றுக்குள்ளானவரின் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்குப் பரவாது எனச் சொல்லிவிடமுடியாது.

இப்படியான நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்தச் சில நாட்களாவது நாட்டை முடக்கும்படி எதிர்க்கட்சியினரும் சுகாதாரத் துறையினரும் விடுத்த கோரிக்கைகளை அரசாங்கம் புறந்தள்ளி வந்தது. எனினும் மகாநாயக்க தேரர்களின் வலியுறுத்தலையடுத்து கடந்த 20ம் திகதி முதல் 30ம் திகதிவரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு அது பின்பு 6ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போதும் வீதியில் வாகனங்கள் வழமைபோல் ஓடிக்கொண்டிருக்கின்றன. மக்கள் நடமாட்டமும் இடம்பெறுகிறது. விழாக்கள், ஒன்று கூடல்கள் போன்றவை, சில்லறைக் கடைகள் வியாபாரம் என்பன நிறுத்தப்பட்டுள்ளனவேயொழிய வேறு மாற்றங்கள் எதுவும் தென்படவில்லை. அரசாங்கம் அறிவித்த நடமாடும் சேவைகள் மூலம் பொருட்கள் விநியோகம் என்பதைக் கண்களால் கூடக் காணமுடியவில்லை. மரக்கறி, மீன் போன்றவை நடைபாதை வியாபாரம் மூலமே நடைபெறுகிறது. இப்படியான நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துமளவுக்கு ஊரடங்கு அமுல் பயனளிக்குமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

இவ்வாறு கொரோனா தொற்று மனித உயிர் வாழ்வுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் இன்னுமொரு பக்கத்தால் நாளாந்தம் கொரோனா தொற்றுக்குச் சமாந்தரமாக அதிகரித்துவரும் விலைவாசி, நாளாந்த வாழ்வைக் கடத்த முடியாமல் மக்களைத் திண்டாட வைக்கிறது.

அரிசி மா, சீனி, கருவாடு, ரின் மீன், பருப்பு போன்ற அத்தியாவசியப் பாவனைப்பொருட்கள் பதுக்கப்பட்டு செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கின் நெற்களஞ்சியமான மட்டக்களப்பில் 2,500 மெற்றிக் தொன் நெல்லு மதுசார உற்பத்திக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதேவேளையில் அரிசி ஆலை உரிமையாளர்களாலும் மொத்த வியாபாரிகளாலும் பல்லாயிரக்கணக்கான மெற்றிக் தொன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக 85 ரூபா விற்ற அரிசி தற்சமயம் 140 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. அதேவேளையில் கடந்த அறுவடை காலத்தில் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ நெல் 50 ரூபாவுக்கும் குறைந்த விலையிலேயே கொள்முதல் செய்யப்பட்டது.

இன்னொருபுறம் அண்மையில் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளின் போது 11,070 மெ.தொன் சீனி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 8 மாதங்களாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவ்வாறே கொழும்பு மாவட்டத்தில் வத்தளையில் 1,200 தொன்னும், கிவுள்பத்துகமவில் 8 மாதங்களாகப் பதுக்கி வைக்கப்பட்ட 37,770 தொன்னும், கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் கடந்த மாதம் 135 ரூபா விற்ற சீனி தற்சமயம் 220 ரூபாவுக்கு விற்கப்படுகிறது.

அவ்வாறே கடந்த மாதம் 167 ரூபா விற்ற பருப்பு 250 ரூபாவாகவும் 238 ரூபா விற்ற உருளைக்கிழக்கு 295 ரூபாவாகவும் 360 ரூபா விற்ற கௌபி 680 ரூபாவாகவும் விலையுயர்த்தப்பட்டுள்ளன.

அதாவது பெரும் வர்த்தக முதலைகள் தங்கள் இரகசியக் களஞ்சியங்களில் ஏராளமான நாளாந்த உணவுத் தேவைக்கான பொருட்களை பதுக்கி வைத்து அநியாய விலைக்கு விற்றுக் கொள்ளை லாபம் அள்ளிக் குவிக்கின்றனர்.

ஆனால் மக்கள் குறிப்பாகச் சுயதொழில் செய்பவர்கள், கூலித் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் போன்றோர் ஒருபுறம் ஊரடங்கு காரணமாகத் தொழிலின்றி வருமானம் இழந்தும் விலைவாசி உயர்வு காரணமாக தேவையான பொருட்களை வாங்க முடியாமலும் திணறுகின்றனர். போதுமான உணவு கிடைக்காத நிலையில் உடலில் உட்டச் சத்துக் குறைபாடு காரணமாக இவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி பலவீனமடைகிறது. எனவே இவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

எனினும் தற்சமயம் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டு பதுக்கல்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அத்துடன் அரிசி, சீனி ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவை வெற்றி பெறுமானால் மகிழ்ச்சியான விடயமாகத்தான் இருக்கும். ஆனால் இவை வெற்றிபெறுமா என்பதுதான் கேள்விக்குரிய பிரச்சினையாக இருக்கின்றது.

எனவே இன்று நாட்டு மக்கள் இருவிதமான ஆபத்துகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. ஆனால் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஒன்று கொரோனாவால் சாதாரண மக்களின் வருமான இழப்பு காரணமாக ஊட்டமுள்ள உணவு கிடைக்காத காரணத்தால் உடல் பலவீனமடையும் நிலை. மற்றது உடல் பலவீனமடைவதால் நோயெதிர்ப்புச் சக்தியை இழந்து தொற்றுக்குள்ளாதல்.

அரசாங்கம் கொரோனாவைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட ஊரடங்குச் சட்டமும் பதுக்கலைத் தடுத்து விலைவாசியை இயல்புக்குக் கொண்டுவரப் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர காலச்சட்டமும் எதிர்பார்த்தளவு வெற்றியளிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தென்படவில்லை.

இன்னொருபுறம் சுற்றுலாத்துறையும் ஆடைத்தொழிற்சாலைகளும் எவ்வித கட்டுப்பாடுமின்றி இயங்கி வருகின்றன. ஏற்கனவே ஆடைத் தொழிற்சாலைகளை அடிப்படையாகக் கொண்டே பல கொரோனா கொத்தணிகள் உருவாகின என்பதை மறந்து விடமுடியாது.

எனவே கொரோனா ஆபத்தைத் தடுத்து நிறுத்த நம்பிக்கையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.

எனவே நாம் ஒவ்வொருவரும் எம்மை நாமே பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளோம். இரு தடவைகளும் தடுப்பூசிகளைப் போட்டாலும் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை என்ற நிலையில் தொற்று எற்பட்டாலும் உரியமுறையில், உரிய நேரத்தில், உரிய சிகிச்சை கிடைக்குமா என்பதும் நிச்சயமில்லை. மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில் சிகிச்சை பெறுவதும் சிரமமே.

எனவே நாம் சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக அனுசரித்து எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதே கடுமையான நோய்ப்பாதிப்பையோ அல்லது மரணத்தையோ தவிர்க்க உள்ள ஒரே வழியாகும்.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்

07.09.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE