Friday 29th of March 2024 04:55:28 AM GMT

LANGUAGE - TAMIL
-
எங்கே தொடங்கியது இன மோதல் - 72 (வரலாற்றுத் தொடர்) - நா.யோகேந்திரநாதன்

எங்கே தொடங்கியது இன மோதல் - 72 (வரலாற்றுத் தொடர்) - நா.யோகேந்திரநாதன்


'இரண்டு வகையான தரப்பினர் இப்போது யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். ஒரு தரப்பு அரசியல் நோக்கம் கொண்டது. மற்றைய தரப்பு மிகப் பாரதூரமான குற்றவாளிகளைக் கொண்டது. அவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். அரசியல் நோக்கம் கொண்டவர்கள் தமது நோக்கத்தை அடைவதற்கு வன்முறையை வழிமுறையாகப் பார்க்கிறார்கள். அவர்களக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எந்த சம்பந்தமும் இல்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி தனது நோக்கத்தை அமைதி வழியிலேயே அடை முயல்கிறது”.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குமிடையே இடம்பெற்ற பேச்சுகளில் எவ்வித முன்னேற்றமுமின்றி அவை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில். வடக்கில் பொலிஸார், இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் எவ்வித தொய்வுமின்றி இடம்பெற்று வந்தன. இந்த நிலையில் ஜே.ஆர்.ஜயவர்த்தனவைத் திருப்திப்படுத்தும் முகமாக த.வி.கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் தங்களுக்கும் போராளிகளுக்குமிடையே எவ்வித தொடர்புமில்லையெனத் தெரிவிக்க, மேற்படி போராளிகள் மீதான கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஏற்கனவே வைகுந்தவாசனின் தமிழீழப் பிரகடனம் மேற்கொள்ளவேண்டுமென்ற கோரிக்கையைக் கண்டித்து அறிக்கை விட்டதன் மூலம் தமிழீழத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையை நிராகரித்திருந்த அமிர்தலிங்கத்தின் போராளிகள் பற்றி வெளியிட்ட இந்த அறிக்கை அவரின் உண்மையான நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்திருந்தது.

அமிர்தலிங்கத்தின் உணர்ச்சிகரமான மேடைப் பேச்சகள் காரணமாக சிவகுமாரன், பிரபாகரன், குட்டிமணி போன்றோர் அவருடன் நெருக்கமான உறவைப் பேணியதுடன், அவரிடம் ஆலோசனை பெறுபவர்களாகவும் விளங்கினர். பல சமயங்களில் நல்லூரில் உள்ள சிவசிதம்பரம் அவர்களின் வீட்டையே பயன்படுத்தி வந்தனர். தேர்தல்களில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குச் சவாலாக சிலர் தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் துரோகிகளாக வர்ணிக்கப்பட்டு அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தினர்.

அதன் காரணமாக அல்பிரட் துரையப்பா, குமாரசூரியர், அருளம்பலம், தியாகராஜா வினோதன் போன்றவர்கள் மீது கொலைகளும் கொலை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்நாட்களில் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இளைஞர்கள் மூலம் தமது போட்டியாளர்கள் மீது இலக்கு வைக்கின்றனர் எனக் குற்றம் சாட்டியிருந்தனர். அதில் உண்மையில்லாமலில்லை என்பதைப் பல சம்பவங்கள் வெளிப்படுத்தியிருந்;தன.

அதேபோன்று 1977ல் தமிழீழக் கோரிக்கைக்கு மக்களிடம் ஆணை கோரப்பட்டதன் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களில் பெரும் வெற்றியீட்டியது.

ஆனால் 1981ல் தமிழீழப் பிரகடனத்தை நிராகரித்ததன் மூலமும் போராளிகளைக் கண்டித்து அறிக்கை விட்டதன் மூலமும் அவர்கள் தங்கள் தேர்தல் வெற்றிகளுக்காகவே போராளிகளைப் பயன்படுத்தினர் என்பதும் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தமையையும் புரிந்து கொள்ளமுடிந்தது.

அத்துடன் இந்தியாவில் இன்னொரு முக்கிய விடயமும் இடம்பெற்றது. சென்னை பாண்டிபஜாரில் பிரபாகரனும் உமாமகேஸ்வரனும் பகிரங்கமாக மோதி துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர். எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத போதிலும் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதை அறிந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்கள் இவரும் குற்றங்கள் தொடர்பாகத் தேடப்படும் நபர்களெனவும் அவர்களை இலங்கையிடம் ஒப்படைக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக்கூடாதெனவும் விடுதலை செய்ய வேண்டுமெனவும் கோரிக திராவிட முன்னேற்றக் கழகம், வீரமணியின் தலைமையிலான திராவிடக் கழகம், தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் நெடுமாறன் ஆகியோர் தலைமையில் தமிழகம் பரந்த தொடர் போராட்டங்களை நடத்தினர். அப்போது தமிழக முதல்வராயிருந்த எம்.ஜி.ஆர். அவ்விடயத்தில் உறுதியாக இருந்ததுடன், போராளிகளை இலங்கையிடம் ஒப்படைக்கக்கூடாதெனவும் விடுதலை செய்ய வேண்டுமெனவும் இந்திரா காந்தியிடம் கடும் அழுத்தங்களைக் கொடுத்தார்.

இப்படியான நிலையில் திருமதி இந்திரா காந்தி ஜே.ஆரின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். அத்துடன் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இங்கு கவனிக்க வேண்டிய விடயம் ஜே.ஆருடன் பேச்சுகளை நடத்திய அமிர்தலிங்கம் இவ்விடயம் தொடர்பாக மௌனம் காத்தார். இவ்விடயம் தொடர்பாகக் கருத்து வெளியிடக் கூட இல்லை.

1977ம் ஆண்டில் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் வெற்றி விழாவில் உரையாற்றிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 5,000 இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடத் தயாரானால் தாங்களும் சமாந்திரமான முறையில் அஹிம்சைப் போராட்டங்களை நடத்தி தமிழீழத்தைப் பெற்று விடலாமெனச் சூளுரைத்திருந்தார்.

ஆனால் 1981ல், ஐ.தே.கட்சி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய காலப்பகுதியில் அது தமிழீழக் கோரிக்கையை நிராகரித்ததுடன், ஆயுதமேந்திய போராளிகளுக்கு எதிரான கருத்துகளையும் வெளியிட்டிருந்தார். அதாவது தனது வார்த்தைகளுக்கு எதிராகத் தானே செயற்பட்டதன் மூலம் அவர் தனக்குத்தானனே துரோகமிழைத்துக் கொண்டார்.

இப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்த காலப்பகுதியில் 1979ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தற்காலிக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 3 வருடகால அவகாசம் முடிவடையவிருந்தது. ஆனால் ஜே.ஆர்.ஜயவர்த்தன 1982 மார்ச் மாதம் ஏற்கனவே அமுலிலிருந்த பயங்கரவாதச் சட்டத்துக்குத் திருத்தம் கொண்டு வந்ததன் மூலம் அது மூன்று வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற ஏற்பாடு நீக்கப்பட்டு அது நிரந்தரச் சட்டமாக்கப்பட்டது.

இச்சட்டத்தின் மூலம் போராளிகள் மட்டுமின்றி சாதாரண பொது மக்களும் வேட்டையாடப்பட்டனர். அப்படியிருந்தும் அமிர்தலிங்கம் பேச்சுவார்த்தைகளின்போது அச்சட்டத்திற்கு எதிராகத் தனது வழமையான கண்டனத்தை முன்வைத்து ஜே.ஆர்.அதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டிருக்கவேண்டும். அதாவது பயங்கரவாதத் தடைச் சட்டம் நிரந்தரமாக்கப்படுவதை ஆட்சேபித்து பேச்சுகளை விட்டு வெளியேறியிருக்கவேண்டும்.

1977ல் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட கொடிய இனஅழிப்புக் கலவரம், 1981ம் ஆண்டு மேற்கொள்ளபட்ட யாழ்.நூலக எரிப்பு உட்பட வடபகுதியின் முக்கிய நகரங்களை எரியூட்டியும், உயிரிழப்புகள் உட்பட அழிவு நடவடிக்கைகளை மேற்கொண்டமை, 1981ல் யாழ்.பேரழிவுகளின் தொடர்ச்சியாகத் தென்னிலங்கைகளிலும் மலையகத்திலும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீடித்தமை போன்ற மனித குல விரோத நடவடிக்கைகள் ஐ.தே.கட்சியின் தலைமையில் இடம்பெற்ற போதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அரசாங்கத்தில் நம்பிக்கை வைத்தும் பேச்சுகளை நடத்திக் கொண்டிருந்தனர்.

இந்த நிலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களின் நம்பிக்கையை இழக்கக் கூடிய சூழ்நிலை வேகமாக உருவாகி வந்தது. எனவே தமிழ் மக்களுக்கான தலைமை தங்களின் கையை விட்டுப் பறிபோய் போராளிகளின் கைகளுக்கு மாறி விடுமோ எனற் அச்சம் ஏற்பட்டிருந்தது.

எனவே த.வி.கூட்டணியினர் எவ்வளவு விட்டுக்கொடுப்புகளைப் செய்தாவது பேச்சுகள் மூலம் ஒருசில உரிமைகளைப் பெற்று விட்டாலும் அதுவொரு ஆரம்பம் எனக் கூறித் தமிழ் மக்களிடம் தங்கள் தலைமையைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமென நம்பினர்.

அவர்களின் பலவீனத்தை நன்கு புரிந்து கொண்ட ஜே.ஆர்.ஜயவர்த்தன பேச்சுவார்த்தைகளை இழுத்தடித்துக் கொண்டு மறுபுறத்தில் தனது அதிகாரத்தை அடுத்த கட்டத்துக்கு நீடிக்கும் முயற்சிகளில் இறங்கினார்.

முறைப்படி முதலில் நாடாளுமன்றத் தேர்தலும் அதன் பின்பே ஜனாதிபதித் தேர்தலும் நடத்தப்படவேண்டியிருந்தது. முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் நிலை தோன்றலாம். அவர்கள் ஆட்சியமைத்தால் உடனடியாகத் திருமதி ஸ்ரீமாவோவின் குடியுரிமை பறிக்கப்பட்டமையை ரத்துச் செய்வார்கள். அப்படியான நிலையில் திருமதி ஸ்ரீமாவோ தனக்கெதிரான வலிமையான போட்டியாளராதலால் அவர் வெற்றி பெறும் வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். அப்படி ஒரு நிலைமை ஏற்படுமானால் நாடாளுமன்ற அதிகாரத்தையும் இழந்;து ஜனாதிபதிப் பதவியையும் இழக்க வேண்டிவரும்.

எனவே ஜே.ஆர்.தனது 5/6 நாடாளுமன்றப் பலத்தைப் பாவித்து காய்களை நகர்த்தத் தொடங்கினார்.

திருமதி ஸ்ரீமாவோவின் குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் தன்னுடன் போட்டியிடக்கூடிய வேறு வலிமையான போட்டியாளர்கள் இல்லையென்பதை அவர் உணர்ந்திருந்தார்.

எனவே அரசியலமைப்பில் திருத்தத்தைக் கொண்டு வந்ததன் மூலம் ஜனாதிபதித் தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் வைப்பதற்கு ஏற்றவாறு மாற்றங்களைத் தனது 5/6 பெரும்பான்மையை மேற்கொண்டு செய்து முடித்தார்.

அதாவது ஜனாதிபதி தனது பதவிக் காலத்தில் நான்காண்டுகள் கடந்த பின்பு, அவர் தனது இரண்டாவது பதவிக்காலத்துக்கான மக்கள் ஆணையைத் தேர்தல் மூலம் பெறமுடியும் என்ற பிரகடனத்தைச் செய்யமுடியும் என்ற திருத்தம் 1972ம் ஆண்டின் குடியரசு யாப்பின் 3வது திருத்தமாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு 2/3 க்கு அதிகமான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இத்திருத்தம் செல்லுபடியாகாதெனச் சிவில் உரிமைகள் அமைப்பினால் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றம் குறித்த மசோதாவைப் பரிசீலணை செய்து பின்பு அது 2/3 வாக்குகளால் நிறைவேற்றப்படமுடியுமெனத் தீர்ப்பு வழங்கியது.

இதன் மூலம் ஜே.ஆர்.ஜயவர்த்தன அப்போது எஞ்சியிருந்த பதவிக் காலமான 2 வருடங்களையும் புதிய தேர்தல் மூலம் மேலும் 6 வருடங்களையும் சேர்த்து மேலும் 8 வருடங்களுக்குத் தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து கொண்டார்.

அவர் தனது அதிகாரத்தை நீடிக்கத் திட்டமிட்ட வகையில் வியூகங்களை வகுத்துக்கொண்டிருந்த அதேவேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணி அவருடன் வெற்றி பெறமுடியாத பேச்சுவார்த்தையை நடத்தியதன் மூலம் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்து கொண்டிருந்தது. அவர்கள் தமிழ் மக்களின் தலைமை சக்தி என்ற தகுதியை இழந்து கொண்டிருக்கப் புதிய தலைமைகளாகவும் தமிழ் மக்களை வழிநடத்துபவர்களாகவும் போராளிக் குழுக்கள் உருவாகிக் கொண்டிருந்தனர்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE