Friday 29th of March 2024 04:14:17 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் எம்மவர்களின் அறிக்கைகளும் - நா.யோகேந்திரநாதன்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் எம்மவர்களின் அறிக்கைகளும் - நா.யோகேந்திரநாதன்!


கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சான்றாதாரங்களையும் ஆவணங்களையும் நிரப்பும் முகமாக ஒரு அமைப்பு உருவாக்கப்படுமெனவும் அதற்கான நிதி ஆதாரங்களை உருவாக்கும் முயற்சிகள் எடுக்கப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. எனவே எதிர்வரும் செப்டெம்பர் 13ம் திகதி இடம்பெறவுள்ள கூட்டத்தொடரில் அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

தற்சமயம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக ஏற்கனவே வெளிவிவகாரங்களில் அனுபவமுள்ளவரும் இனப் பிரச்சினை விவகாரங்களில் இலங்கையின் தலைமைப் பேச்சாளராகக் கலந்து அது வெற்றி பெறமுடியாத நகர்வுகளைத் தந்திரமாக மேற்கொண்டவருமான ஜீ.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்கா உட்பட மேற்குலக வல்லரசுகளுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் பதவி ஏற்றதுமே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத் தொடரில் இலங்கை அரசு தங்களை நியாயப்படுத்தும் வகையிலும் அதற்கு ஆதரவு திரட்டும் வகையிலும் செயற்பட ஆரம்பித்து விட்டார். அமெரிக்கத் தூதரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரனையும் ஒரே இடத்தில் வைத்துப் பேச்சுகளை நடத்தியிருந்தார். மேலும் அதே சூட்டோடுடன் பிரிட்டன், பிரான்ஸ், கனடா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களையும் சந்தித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அண்மையில் இலங்கைக்கு ஆதரவு கோரி கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் ஐ.நா.அலுவலகம் அதன் கிளை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அவர் 18 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் இலங்கை மனித உரிமைகளை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் அரசியல் கைதிகளை விடுவித்தமை பற்றியும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேபோன்று ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் ஆகியோர் மேற்கு நாடுகளுக்குச் சாதகமான பொருளாதார சமிக்ஞைகளைக் காட்டுவதன் மூலமாக அவை இலங்கை தொடர்பாக ஒரு இறுக்கமான நிலைமையை ஏற்படுத்த முடியாத நிலைமை நோக்கி ஊக்குவிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு இலங்கையின் அரசாங்க தரப்பு நிலைமைகளைத் தமக்குச் சாதகமான வகையில் மாற்றப் பல முனைகளிலும் பகிரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டுவரும் வேளையில் தமிழர் தரப்பின் நிலைப்பாடு எப்படியிருக்கிறது என்பது இப்போது எழும் கேள்வியாகும். பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் அரசாங்கத்தைவிட தீவிரமான முறையில் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டிய தார்மீகக் கடமை தமிழர் தரப்புக்கு முக்கியமாகத் தமிழ்த் தேசியத் தலைமைகளுக்கு உண்டு.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குப் பாதிக்கப்பட்ட தரப்புகள் தங்கள் அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்து ஓகஸ்ட் 21ம் திகதியுடன் முடிவடைந்து விட்டது. இனிச் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறும் கூட்டத் தொடர்லேயே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த நிலையில் இலங்கையிலுள்ள எந்தவொரு தமிழ் அமைப்பாலும் இதுவரை ஐ.நா.ம.உ. பேரவைக்கு எந்தவித அறிக்கையும் சமர்ப்பிக்கப்படல்லையெனவும், ஆனால் தமிழ்ப் புலம்பெயர் அமைப்புகளால் 27; ஆவணங்கள் குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மரியதாஸ் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் தரப்பு ஜனாதிபதி சட்டத்தரணிகள், நீதிபதிகள், பிரபல வழக்கறிஞர்கள், கல்விமான்கள், முதிர்ந்த அரசியல்வாதிகள், முன்னாள் ஆயுதப் போராளிகள் எனப் பலதரப்பட்ட ஆற்றலர்களைத் தலைமையாகக் கொண்டிருந்தபோதிலும் குறிப்பிட்ட காலப்பகுதியில் பயனுள்ள வகையில் ஒரு அறிக்கைகூட அனுப்பப்படவில்லையென்றால் வேதனைப்படுவதுடன் வெட்கப்படவும் வேண்டியுள்ளது.

ஆனால், இலங்கையின் தமிழர் தரப்பிலிருந்து தனித்தனியாக 3 தரப்பினரிடமிருந்து அறிக்கைகள் அனுப்பப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. அதாவது மூலாதாரமான விவகாரங்களில் கூட தமிழ்த் தலைமைகள் ஒற்றுமைப்பட்டு ஒரே குரலில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்து முடியாத கேவலமான நிலைப்பாடு இலங்கையைக் கடந்து சர்வதேசத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும் ரெலோ, புளட் ஆகிய பங்காளிக் கட்சிகள் அதில் கையெழுத்திட மறுத்து வெளியேறி விட்டதாகவும் தமிழரசுக் கட்சியில் உள்ள சிலரும் அதை ஏற்க மறுத்து கடும் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிக்கப்படுகிறது. அவ்வறிக்கை பான்கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என்ற விடயத்தை மேற்கோள் காட்டித் தயாரிக்கப்பட்டதாலேயே பங்காளிக் கட்சிகள் அதில் கையெழுத்திட மறுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அது உண்மையானால் அவர்கள் கையெழுத்திட மறுத்தது முழுக்கமுழுக்க நியாயமானது.

விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர் என்ற அரசாங்கத்தின் குரலை ஐ.நா. சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்பில் முன்வைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?

எனவே புளட், ரேலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய முன்னாள் போராளி அமைப்புகளும், தமிழ் மக்கள் கூட்டணியும் தமிழ்த் தேசியக் கட்சியும் ஒன்றிணைந்து ஒரு அறிக்கை தயாரித்துள்ளன. அதில் ஜெனீவாவில் 46ஃ1 தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்பும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்தல், புராதன இந்து வழிபாட்டிடங்களைப் பௌத்த மயப்படுத்தல், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தொடரும் கைதுகள், காணாமற்போனோர் அலுவலகத்துக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்தமை, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை பேரணியை நடத்தியவர்கள் மீது விசாரணைகள், அச்சுறுத்தல்கள், அவசரகாலச் சட்டத்தின் அத்துமீறல்கள் போன்ற ஒடுக்குமுறைகள் தொடர்பான விடயங்கள் ஆதாரங்களுடன் முன் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதுவொரு நியாயபூர்வமான, காலத்தின் தேவைக்கேற்ற அறிக்கையாகவே கருதப்படுகிறது.

அதேவேளையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தனியாக ஒரு அறிக்கை வெளியிடப் போவதாகத் தெரிவித்துள்ள போதிலும் அது எப்படி அமையும் என்பது வெளியே தெரியவரவில்லை.

எப்படியிருந்த போதிலும் இவ்வறிக்கைகள் குறிப்பிட்ட திகதி கடந்த பின் அனுப்பப்படும் நிலையில் அவை தற்சமயம் இடம்பெறவுள்ள கூட்டத் தொடரில் எவ்வித பயனுள்ள பங்களிப்பையும் செலுத்தப் போவதில்லை. அதுமட்டுமின்றி போர்க் குற்றங்களாலும் மனித உரிமை மீறல்களாலும் பேரிழப்புகளைச் சந்தித்த தமிழ் மக்களின் தலைமைகள் ஒன்றிணைந்து ஒரே குரலில் தங்கள் அபிலாஷைகளை வெளிப்படுத்த முடியாதளவு பலவீனமானவை என்பது சர்வதேச மட்டத்தில் எவ்வித வெட்கமுமின்றி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எவ்வித பிளவுமில்லையெனவும் அதை எந்த சக்தியாலும் பிளவுபடுத்த முடியாது எனவும் த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன தெரிவித்துள்ளார். த.தே.கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளால் இரண்டு வெவ்வேறு அறிக்கைகள் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படும் நிலையிலும் அதற்குள் பிளவு இல்லையென்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் முட்டாள்கள் எனக் கருதும் ‘அப்புக்காத்து மூளையின்’ பிரசவம் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் கூட்டமைப்பில் முன்பு ஈ.பி.ஆர்.எல்.எப்., சி.வி.விக்னேஸ்வரன் குழுவினர், அனந்தி சசிதரன், ஐங்கரநேசன் போன்றவர்கள் வெளியேறியமைக்கும் தற்சமயம் ரெலோ, புளட் என்பன 5 கட்சிகளுடன் இணைந்து அறிக்கை அனுப்புவதற்கும் சம்பந்தனும் சுமந்திரனும் தான் காரணம் என்பதை எவரும் மறுத்துவிடமுடியாது. அதாவது கூட்டமைப்பைப் பிளவுபடுத்தும் சக்தி வெளியில் இல்லை என்பதும் அது இவர்களேதான் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

புலிகளும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என ஒப்புதல் வாக்குமூலம் வழங்க ஏனையோர் மறுத்தமை கூட்டமைப்பைப் பிளவுபடுத்தல் என்றால் அந்தப் பிளவு ஆரோக்கியமானதே.

தமிழ் மக்களின் மூலாதாரப் பிரச்சினைகள் ஒருமித்து தமிழ்த் தேசியத் தலைமைகள் சார்பில் ஜெனிவாவில் ஒலிக்காத நிலைமை ஏற்படுமானால் இவர்கள் ஒன்றாயிருந்தாலென்ன துண்டு துண்டாகச் சிதறிச் சிதைந்து போனாலென்ன எல்லாம் ஒன்றுதான்.

நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE