Friday 29th of March 2024 05:14:03 AM GMT

LANGUAGE - TAMIL
-
கேள்விக்குள்ளாக்கப்படும் பசுமை விவசாயப் புரட்சி - நா.யோகேந்திரநாதன்!

கேள்விக்குள்ளாக்கப்படும் பசுமை விவசாயப் புரட்சி - நா.யோகேந்திரநாதன்!


ஜனாதிபதி கோத்தபாய ராஜபகஷ் அவர்களால் இலங்கையின் விவசாயத்தில் பசுமை வேளாண்மைப் புரட்சி ஏற்படுத்தப்படப் போவதாகப் பிரகடனம் செய்யப்பட்டு இரசாயனப் பசளை இறக்குமதி முற்றாகத் தடை செய்யப்பட்டதுடன் இனி வருங்காலத்தில் சேதனப் பசளைப் பாவனையை முன்னெடுக்குமாறு ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது.

இரசாயனப் பசளை, இரசாயனக் கிருமி நாசினி என்பவற்றால் பொது மக்கள் பலவித நோய்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்ற காரணம் கூறப்பட்டே மேற்படி திடீர் தடைகள் விதிக்கப்பட்டன.

2015ம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் விவசாய உற்பத்திப் பொருக்கம் என்ற போரில் பயன்படுத்தப்பட்ட அதிக இரசாயனப் பசளை, கிருமி நாசினிகள் என்பன காரணமாக வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் ஏறக்குறைய 1/3 பங்கு மக்கள் சிறு நீரக நோய்த் தாக்கத்துக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது இந்த இரசாயனப் பசளைப் பாவனைக்குத் தடை விதிக்க வேண்டுமென்ற குரல்கள் பல தரப்பினராலும் எழுப்பப்படவில்லை. ஆனால் அவை பொருட்படுத்தப்படவில்லை.

இப்போது திடீரென்று இத்தடை விதிக்கப்பட்டமைக்கு தான் ஏற்கனவே தேர்தல் காலத்தில் பசுமை விவசாயம் தொடர்பாக வழங்கிய வாக்குறுதியே காரணம் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். எனினும் நாட்டில் அந்நியச் செலவாணி பற்றாக்குறை ஏற்பட்டமையாலேயே இத்தடை விதிக்கப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் போதியளவு சேதனப் பசளை இறக்குமதி செய்யப்படுமென வாக்குறுதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சீனாவிலிருந்து ஒரு கப்பலில் பசளை கொண்டு வரப்பட்டது. அதில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் இருப்பதாகக் கூறப்பட்டு அது இறக்குமதி செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது. எனினும் அந்தப் பசளையின் உற்பத்தி நிறுவனம் கப்பலின் பெயரை மாற்றி விட்டு மீண்டும் வந்து இலங்கையின் கடற்பரப்பில் தரித்து நிற்கிறது. தமது சேதனப் பசளையை ஏற்றுக் கொள்ளாவிடில் கப்பல் கட்டணம், தாமதக் கட்டணம் என்பனவாக 8 கோடி டொலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டி வருமென அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்னொருபுறம் ஏற்கனவே தடை செய்யப்பட்ட 5 கிருமி நாசினிகளின் தடைகள் அகற்றப்பட்டு விட்டதாக வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்துள்ளது. ஆனால் விவசாய அமைச்சர் இவ்வறிவித்தல் தனது அனுமதியின்றியே வெளியிடப்பட்டதாகக் கூறி அதை ரத்துச் செய்யவும் அவ்வறிவித்தலை விட்ட அதிகாரியைப் பதவி நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அந்த அதிகாரி அதைத் தான் தன்னிச்சையாக மேற்கொள்ளவில்லையென்றும் விவசாய அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாக சட்ட மா அதிபர் வழங்கிய ஆலோசனைக்கு அமைவாகவே தான் அவ்வறிவித்தலை விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இரசாயனப் பசளைகள், கிருமி நாசினிகள் என்பனவற்றின் தடை காரணமாகப் பொருங்குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் பல்வேறு பயிர் வகைகளின் உற்பத்தியிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலில் இரசாயனப் பசளைத் தடை காரணமாக ஏற்பட்ட உற்பத்தி வீழ்ச்சி பற்றி பெருந்தோட்டத்துறை உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் தோட்டத்துறையில் பெரும் பாதிப்பு ஏற்படும் ஆபத்தை எதிர்கொள்ளவேண்டிய நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாகப் பல்வேறு தோட்டங்களில் தொழிலாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளையில் நாட்டின் பல பகுதிகளில் தமக்குரிய உரப் பசளைகளை வழங்கும்படி கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பெரும்போக உற்பத்திக் காலத்தில் பசளை இல்லாமையால் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்படுமென்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தம்புள்ள, நுவரெலியா, கொழும்பு பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் காய்கறிகள் வரத்து சரி பாதியாக வீழ்ச்சியடைந்து விட்டதெனவும் அவற்றின் தரம் குறைவடைந்து விட்டதாகவும் விலைகள் இரண்டு மூன்று மடங்காக அதிகரித்து விட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே அரிசி, கோதுமை மா, சீனி, பால்மா, எரிபொருள், எரிவாயு போன்ற அத்தியாவசியத் தேவைப் பொருட்களின் விலைகள் அளவுகணக்கின்றி அதிகரித்துள்ள நிலையில் மக்கள் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். இப்படியான ஒரு நிலையில் மரக்கறி, மீன் என்பவற்றின் விலை அதிகரிப்பு மக்களைப் பொறுமையின் எல்லைக்கே தள்ளிவிட்டது.

இவ்வாறு விவசாயிகள், தோட்டத் தொழிலாளர் ஆகிய தரப்பினர் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்திவரும் அதேவேளையில் தாதியர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்கள், புகையிரதத் தொழிலாளர்கள், மின்சார, எரிபொருள், நீர்வழங்கல் தொழிலாளர்கள், துறைமுகத் தொழிலாளர்கள், கொலன்னாவை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத் தொழிலாளர்கள் எனப் பல தரப்பினரும் அடையாள வேலை நிறுத்தங்களை நடத்தியும், வேலை நிறுத்த அறிவிப்புகளை விடுத்தும் தமது எதிர்ப்புகளை வெளியிட்டும் வருகின்றனர். கடைசியாக மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிப் போராட்டங்களை நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

மக்கள் மேல் சுமைக்கு மேல் சுமைகள் சுமத்தப்படும் நிலையில் நாட்டின் வறிய மக்கள் மட்டுமின்றி நடுத்தர மக்கள் கூட நாளாந்த வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாத அவல நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இப்படியான குழப்பம் நிறைந்த சூழ்நிலையில் ஜனாதிபதி உயரதிகாரிகளுடன் மேற்கொண்ட கூட்டத்தில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது அறிவிப்பில் சோளம், சோயா, மரக்கறி வகைகள் போன்ற உப உணவுப் பயிர்களுக்கான இரசாயனப் பசளைத் தடை நீக்கப்படுமெனவும் நெற் பயிருக்கான இரசாயனப் பசளைத் தடை நீக்கப்படாதெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இரசாயனப் பசளை பாவனையாளர்களுக்கு மானியங்களோ, நிவாரணங்களோ வழங்கப்படாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இரசாயனப் பசளைக்கான தடை, கிருமி நாசினிகளுக்கான தடை என்பவற்றின் ஒரு பகுதி நீக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் வன்னி கிராமங்கள், குடியேற்றத் திட்டங்கள் என்பனவற்றில் ஒவ்வொரு வீட்டுக்கும் மாட்டுப் பட்டிகள் அமைந்திருந்தன. மேலும் சில பகுதிகளில் செம்மறியாட்டுப் பட்டிகளும் அமைந்திருந்தன. அப்போது பசளைத் தேவைக்குப் போதியளவு மாட்டெரு காணப்பட்டது. தற்சமயம் மாட்டுப் பட்டிகள் இல்லாமற் போய்விட்டன. பனையோலை, குழைகள், போன்றனவும் முன்போல் பெற்றுக் கொள்ளமுடியாது. எனவே போதுமான சேதனப் பசளை உற்பத்தி என்பது சாத்தியமில்லை. விவசாயிகள் கள்ளச் சந்தையிலாவது கூடுதல் விலைக்கு இரசாயனப் பசளைகளை வாங்கிப் பாவிப்பார்கள்.

உபஉணவுப் பொருட்களுக்கு இறக்குமதி் செய்யப்படும் இரசாயனப் பசளைகளின் ஒரு பகுதி பதுக்கப்பட்டு கள்ளச் சந்தையில் விற்கப்படும் சாத்தியம் இல்லையென்று சொல்லிவிட முடியாது.

எனவே நெல்லின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் நிலை தவிர்க்கப்படமுடியாது. இதன் காரணமாக மீண்டும் அரிசி விலை அதிகரிப்பு, உற்பத்தி வீழ்ச்சி என்பன இடம் பெறுவது தவிர்க்கமுடியாததாகும்.

இந்த நிலையில் கோத்தபாயவின் பசுமை வேளாண்மையின் நிலை என்ன?

அடிப்படையில் பசுமை வேளாண்மை முயற்சி என்பது சரியான திட்டமிடலும் தூரநோக்குமின்றித் தொடங்கப்பட்டதும், அதில் ஏற்படும் பின்னடைவுகள் விவசாயிகளைத் தற்கொலை செய்யும் நி்லைக்குத் தூண்டுவதும் நாடு உணவுக்கு வேறு நாடுகளிடம் கையேந்துவதுமே பலனாகக் கிடைக்க வழி கோலியுள்ளன என்பதே உண்மையாகும்.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.

30.11.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE