Thursday 28th of March 2024 03:44:04 AM GMT

LANGUAGE - TAMIL
-
பேரறிவாளனுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் பிணை!

பேரறிவாளனுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் பிணை!


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞசாட்டப்பட்டு 32 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி இந்திய உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளன் தற்போது சிறை விடுப்பில் உள்ள நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் தற்போது தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பேரறிவாளன் 32 ஆண்டுகளாக இந்த வழக்கில் சிறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவை அடங்கிய அமர்வு, அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. பேரறிவாளனின் 32 ஆண்டுகால சிறைவாசத்தில் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்குவது இதுவே முதல் முறையாகும்.

பேரறிவாளனுக்கு பிணை வழங்க இந்திய மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்தபோதும் மனுதாரர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்குவதாக என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர் பிணையில் விடுவிக்கப்படுவார் என்றும் ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்திலும் அவர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் தற்போது தண்டனை அனுபவித்துவரும் 7 பேரில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தூக்கு தண்டனை 2014ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ் ஆஜரானார். பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை 2014ல் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இதன் மூலம் ஏற்கனவே அவர் ஒரு சலுகையை அனுபவித்துவிட்டாா் என அவா் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மத்திய அரசால் செயல்படுத்தப்படும் சட்டங்களின் கீழ் அவர் தண்டிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு தண்டனை குறைப்பு செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என நடராஜ் வாதிட்டார்.

அவர் எந்தெந்தச் சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட்டிருக்கிறார் என நீதிமன்றம் கேள்வியெழுப்பியதும், "பேரறிவாளன் இந்திய தண்டனைச் சட்டம், ஆயுதச் சட்டம், வெளிநாட்டவருக்கான சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரித்தது என்பதையும் மனதில் கொள்ளவேண்டும் என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.

இந்த விவகாரங்கள் பிறகு விவாதிக்கலாம். அவர் 32 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால், அவருக்கு ஏன் பிணை வழங்கக்கூடாது? என நீதிமன்றம் கேளிவியெழுப்பியது.

"302வது பிரிவின் கீழ் செய்யப்படும் குற்றம் பொது ஒழுங்கு தொடர்பானது. இது மாநில அரசின் கீழ் வரக்கூடிய சட்டம்" என தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் த்விவேதி வாதிட்டார்.

பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், "302வது பிரிவின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக ஆளுநர்கள் பல முறை முடிவெடுத்திருக்கிறார்கள்" என்பதை சுட்டிக்காட்டினார்.

பேரறிவாளனுக்கு மூன்று முறை சிறை விடுப்பு அளிக்கப்பட்டிருந்தும் அவர் எவ்வித தவறுகளும் செய்யவில்லை என்பதையும் சங்கரநாராயணன் சுட்டிக்காட்டினார். மேலும் தண்டனைக் காலத்தில் அவருடைய நடத்தை சிறப்பாக இருந்ததையும் அவர் தனது கல்வித் தகுதியை வளர்த்துக் கொண்டது குறித்தும் சிறையில் உள்ள நூலகத்தில் உதவிசெய்தது குறித்தும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

மகாத்மா காந்தி கொலைவழக்கைச் சுட்டிக்காட்டிய ராகேஷ் த்விவேதி, அந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே தண்டனை குறைப்புப் பெற்று 14 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டார். ஆனால், பேரறிவாளன் 32 ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

முடிவில், பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உத்தரவிடுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE