Friday 29th of March 2024 03:20:34 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல்? - 93!

எங்கே தொடங்கியது இன மோதல்? - 93!


மனித வேட்டையாடிய மீட்பர்கள்! - நா.யோகேந்திரநாதன்!

'துரோகம் இழைப்பதே இராணுவத்தின் பொழுதுபோக்காக உள்ளது. எந்த இடத்தில் இராணுவம் இல்லையோ அந்த இடத்தில்தான் ஜனநாயகம் தழைக்கும்' என்னும் பழமொழி மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு பழமொழி இல்லையென்றால் அதை நானே உருவாக்கினேன் என நினைத்துக் கொள்ளுங்கள். கௌதமாலா இராணுவச் சதிப்புரட்சியிலிருந்து நான் இரண்டு விடயங்களைக் கிரகித்துக்கொண்டேன். ஆயுதங்கள் அவசியம். மக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவேண்டும். ஆயுதங்கள் இருந்திருந்தால் நிச்சயம் கௌதமாலா மக்கள் இன்னும் வெறித்தனமாகப் போராடியிருப்பார்கள். அடுத்தது அமெரிக்கா அநாவசியம். லத்தீன் அமெரிக்கா உயிருடன் இருக்கவேண்டுமானால் அமெரிக்கா என்ற நாசகார சக்தி அழிக்கப்படவேண்டும் அல்லது ஒதுங்கி வேடிக்கை பார்க்குமளவுக்கு ஓரங்கட்டப்படவேண்டும்'.

உலகப் புரட்சித் தலைவர்களில் ஒருவரும் விடுதலை தேடும் மக்களுக்குத் தன் புரட்சிகர நடைமுறைகள் மூலம் வழிகாட்டியவரும், பிடல் காஸ்ரோவுடன் தோளோடு தோள் நின்று போராடி கியூப தேசத்தை விடுதலை செய்தவருமான எர்னால்ட் சேகுவேரா. கௌதமாலாவின் மக்களால் ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்ட அதிபர் அர்பென்ஸ் அவர்களின் ஆட்சி இராணுவப் புரட்சிச் சதி மூலம் கவிழ்க்கப்பட்டபோது வெளியிட்ட கருத்தாகும் அது. அபென்ஸ் ஆட்சிக்கு வந்ததும் கௌதமாலா நாட்டில் சுயாதீனத்தை நிலை நிறுத்தும் பொருட்டு பல ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்தார். அமெரிக்காவின் பிடிக்குள் சிக்கியிருந்த பொருளாதாரத்தைச் சுதந்திரப் பொருளாதாரமாக மாற்றும் வகையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். அந்த நிலையில் அவரின் ஆட்சி இராணுவ சதிப் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது.

அந்த நிலையில் நாடு பரந்தளவில் மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்திய போதிலும் வெகுவிரைவிலேயே அவை இராணுவ ஒடுக்குமுறை மூலம் அடக்கப்பட்டன. அந்த நேரத்தில் தான் 'சேகுவேரா' அவர்கள் மேற்படி கருத்தை வெளியிட்டார்.

இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திலும் இந்தியத் தலையீடு ஆரம்பத்தில் தமிழ் மக்களுக்குச் சார்பான நடவடிக்கைகள் போல் தோற்றிய போதிலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரியாகக் காலப்போக்கில் உருவாகும் நிலை ஏற்பட்டது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இந்திய அமைதிப்படை இங்கு வந்திறங்கியபோது தமிழ் மக்கள் குளிர்பானம் வழங்கி, புகைப் பொருட்கள் கொடுத்து வரவேற்றனர்.

ஆனால் தமிழ் மக்கள் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் மூலம் தமது கோரிக்கைகளை முன்வைத்தபோது, அதாவது இந்தியாவால் ஒப்புக் கொள்ளப்பட்ட விடயங்களை நிறைவேற்றும்படி கோரியபோது அது அலட்சியப்படுத்தியது மட்டுமின்றி சில நாட்களில் அமைதிப் படையின் துப்பாக்கி தமிழ் மக்களுக்கு எதிராக உயர்ந்தது.

இந்திய புலிகள் போர் ஆரம்பமான பின்பு புலிகளின் ஆயுதங்களைக் களைவது என்ற பேரில் எந்தத் தமிழ் மக்களைச் சிங்கள இராணுவத்திடமிருந்து காப்பாற்ற எனக் கூறிக் கொண்டு வந்த இந்திய அமைதிப் படை தமிழ் மக்களுக்கெதிரான போரைக் கட்டவிழ்த்து விட்டது.

குளிர்பானம் கொடுத்து வரவேற்ற மக்களையே டாங்கிகளின் கீழ் போட்டு நசுக்கிக் கொன்றும், உயிர்ப்பாதுகாப்புக்கு பதுங்கு குழிகளுக்குள் பதுங்கிய மக்களைக் குடும்பம் குடும்பமாகக் கொன்றொழித்தும் இந்திய அமைதிப் படை வெறியாட்டம் போட்டது.

இன்னும் சொல்லப் போனால் சிங்கள இராணுவம் மேற் கொண்ட மனித குல விரோதப் படுகொலைகளுக்கு எவ்வித குறைவுமின்றி இந்தியப் படைகளும் மேற் கொண்டன.

எனவேதான் இராணுவம் இல்லாத இடத்திலேயே ஜனநாயகம் தழைக்கும் என்ற வார்த்தைகளை நினைவு கூரவேண்டியுள்ளது.

இந்திய அமைதிப்படையின் முதல் நடவடிக்கை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என அழைக்கப்படும் வடக்கின் ஊடகங்களை முடக்குவதுடனேயே ஆரம்பமானது. அது தமிழ் மக்கள் மீது மட்டுமல்ல ஜனநாயகத்தின் மீதே இந்திய இராணுவம் மேற்கொண்ட மக்கள் விரோத நடவடிக்கையாகும். ஒப்பரேஷன் பவன் நடவடிக்கையின் இரண்டாவது கட்டம் 12.10.1987 நள்ளிரவில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களை கைது செய்யும் நடவடிக்கையாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறது.

யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலுள்ள ஒரு கட்டிடத்தில் புலிகளின் தாக்குதல் கட்டளைப் பீடம் இயங்குவதாகவும் அங்கு முக்கிய தலைவர்கள் தங்கியிருந்து புலிகளில் நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதாகவும் இந்திய அமைதிப் படைக்குப் புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கின்றன.

எனவே உலங்கு வானூர்திகளிலிருந்து பரசூட் படையினரை தரையிறக்கி ஒரு அதிரடித் தாக்குதலை எதிர்பாராத நேரத்தில் தாக்கி விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களைக் கைது செய்வதெனத் தீர்மானிக்கப்படுகிறது.

10வது படையணியைச் சேர்ந்த 17 கொமாண்டோக்கள் முதலில் யாழ்.பல்கலைக்கழக உதைபந்தாட்டத் திடலில் பரசூட் மூலம் தரையிறங்குவதெனவும் அவர்களைத் தொடர்ந்து 13 வது படையணியைச் சேர்ந்த 30 கொமோண்டோக்களும் வானத்திலிருந்து தரையிறங்குவதெனவும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கிய பின்பு தரையால் நகரும் படையணி அவர்களுடன் இணைந்து கொள்வதெனவும் வகுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை ஆரம்பமாகிறது.

முதலாவது அணி உதைபந்தாட்டத் திடலில் தரையிறங்கியதும் அவர்களைச் சுற்றி வளைத்துப் புலிகள் தாக்குதல்களைத் தொடுகின்றனர்.

அடுத்த 13வது அணி இறங்கிக் கொண்டிருக்கும் போதே புலிகளின் இன்னொரு அணி தாக்குதலைத் தொடுக்கிறது.

13 பேர் கொண்ட 10வது படையணியில் 2 விசேட அதிரடிப் படையினரும் 30 பேர் கொண்ட 13வது அணியில் 29 படையினருமாக 30 பேர் கொல்லப்படுகின்றனர்.

அவர்களின் தொலைத் தொடர்பாளர் புலிகளின் சினைப்பர் தாக்குதலில் கொல்லப்பட பலாலி வான் தளத்துடனோ. கட்டளைப் பீடத்துடனோ தொடர்புகள் அற்றுப் போகின்றன. கொரோ சிங் என்ற விசேட அதிரப் படை வீரர் உயிருடன் கைது செய்யப்படுகிறான். உதவிக்கென தரைவழி நகர்வை மேற்கொண்ட படையணி வந்து சேர்ந்த போது இந்திய அமைதிப் படையினரின் 31 சடலங்களை மட்டுமே காண முடிந்தது.

புலிகளின் உயர் மட்டத் தலைவர்களைக் கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட பெரும் எடுப்பிலான நடவடிக்கை பேரிழப்புகளுடன் படுதோல்வியில் முடிவடைந்தது. ஒப்பரேஷன் பவன் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாளன்று இந்திய கொமாண்டோ அணியினர் மீது போராளிகள் நடத்திய தாக்குதலில் 2 அதிரடிப் படையினர் கொல்லப்படுகின்றனர். அதேநாளில் மல்லாகத்துக்கும் தெல்லிப்பழைக்குமிடையில் 10 பேர் பயணித்த இராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 படையினர் கொல்லப்படுகின்றனர். இச் சம்பவங்களையடுத்து பலாலி வீதியின் இரு பக்கமும் உள்ள கிராமங்கள் திடீர் சுற்றிவளைப்புக்கு உள்ளாவதும், இளைஞர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுக் கொண்டுசெல்லப்படுவதும் இடம்பெற ஆரம்பித்தன. அதன் காரணமாக அப்பகுதிக் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிக் கோவில்களிலும் பாடசாலைகளிலும் தஞ்சமடைந்திருந்தனர்.

உரும்பிராயில் புலிகளின் முகாம் இயங்குவதாகக் கிடைத்த தகவலையடுத்து 14ம் திகதி அதிகாலையில் உரும்பிராய் கிராமம் ஆயிரக் கணக்கான அமைதிப் படையினரால் சுற்றி வளைக்கப்படுகிறது. பெரும்பான்மையான மக்கள் வெளியேறி ஒரே இடத்தில் அமைந்திருந்த 3 கோவில்களிலும் தஞ்சமடைந்திருந்தனர்.

ஆனாலும் சில குடும்பங்கள் முதியோர் சிலர் வீடுகளிலேயே தங்கியிருந்தனர். படையினர் வேலிகளை வெட்டியவாறே வருவதைக் கண்டு அஞ்சிய மக்கள் ஓடிப்போய் பங்கர்களில் பதுங்குகின்றனர். படையினர் அப்படியே பங்கருக்குள் வைத்து முதியோர், பெண்கள், சிறுவர் என்ற பேதமின்றிச் சுட்டுக் கொல்கின்றனர். வீட்டுக் காவலுக்கெனத் தங்கியிருந்த முதியோரும், நோயாளிகளும் இழுத்து வரப்பட்டு முற்றங்களில் போட்டுச் சுடப்படுகின்றனர். கைகளை உயர்த்தியவாறே 'நான் பிரஜைகள் குழு உறுப்பினர்' எனக் கூறிக் கொண்டு வந்த சமூகத் தொண்டரும் அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்லப்படுகிறார்.

மூன்று கோவில்களையும் சுற்றி வளைத்த படையினர் அடித்தும் உதைத்தும் மக்களிடம் புலிகள் பற்றி விசாரணை நடத்துகின்றனர். இறுதியில் அங்கிருந்த 6 இளைஞர்களை கொட்டன்களாலும் துவக்குப் பிடிகளாலும் அடித்து விட்டுக் கைகளைக் கட்டித் தங்களுடன் இழுத்துச் செல்கின்றனர்.

இப்படியான சுற்றிவளைப்புகள் கொக்குவில், கோண்டாவில், கோப்பாய், தின்னைவேலி போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுப் பலர் கைது செய்யப்படுகின்றனர். சிலர் சுட்டுக் கொல்லவும்படுகின்றனர்.

அதேவேளையில் நவாந்துறையில் புலிகளின் முகாம் இயங்குவதாகக் கிடைத்த தகவலை அடுத்து அதைக் கைப்பற்றும் முகமாக பலாலியிலிருந்து ஒரு படையணி புறப்படுகிறது. எனினும் நவாந்துறையில் நெருங்கமுடியாதபடி கண்ணி வெடித் தாக்குதல்களும் கிளைமோர் தாக்குதல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. வீட்டுக் கூரைகள் மீதிருந்தும் மரங்களின் உச்சியின் மீது இருந்தும் புலிகள் நடத்திய சிளைப்பர் தாக்குதல்கள் இந்தியப் படையின் நகர்வுகளைத் தடுத்து நிறுத்துகின்றன. இந்த நிலையில் இந்திய இராணுவம் திசையை மாற்றி நல்லூருக்குள் இறங்குகின்றனர். அடுத்து நல்லூர் பிரதேசம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு விட்டதாக அறிவிக்கின்றனர்.

இந்த நிலையில் 15.10.1987ல் இந்திய அமைதிப் படையின் தாக்குதல் நடவடிக்கைளைத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு தங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ரி– 72 போர் டாங்கிகள் பி.எம்.பி. போர் வாகனங்கள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களும் தளபாடங்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. எப். 8, எம். 25 உலங்கு வானூர்திகள் 2.200 பறப்புகள் மூலம் படையினரையும் படைத் தளபாடங்களையும் பலாலியில் கொண்டுவந்து குவிக்கின்றனர். இந்திய விமானப் படையும் போர் நடவடிக்கைக்கெனக் கொண்டு வரப்படுகிறது.

இந்தியக் கடற்படையினர் கிழக்குக் கட்டளைப் பிரிவு திருகோணமலையை மையமாகக் கொண்டு காங்கேசந்துறை தொடக்கம் பொத்துவில் வரை 480 கி.மீ தூரத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளின்போது 5 எம்.8 உலங்கு வானூர்திகள் புலிகளின் சினைப்பர் தாக்குதலில் சேதமடைகின்றன.

21.10.1987 அன்று அதிகாலை புலிகளின் குருநகர் முகாமைப் கைப்பற்றும் முகமாக டாங்கிகள், கவச வாகனங்கள், எறிகணைகள், விமானங்கள் சகிதம் படை நடவடிக்கை ஆரம்பமாகிறது. 21, 22 ஆகிய தினங்களில் கடும் சமர் தொடர்கிறது.

22ம் திகதி இரவு முழுவதும் இந்தியப் படையினர் தொடர் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். அதிகாலையில் எதிர்த்தாக்குதல் எதுவும் வராத நிலையில் 22ம் திகதி இரவே புலிகள் இரவோடு இரவாக பின்வாங்கியமை தெரியவந்தது.

சிங்களப் பேரினவாத சக்திகளிடமிருந்தும் சிங்கள இராணுவத்திடமிருந்தும் தமிழ் மக்களை பாதுகாக்கும் மீட்பர்களாக வருவதாகக் கூறி இங்கு கால் பதித்த இராணுவம், தாங்களே தமிழ் மக்களை வேட்டையாடியதுடன், தமிழ் மக்களின் பாதுகாப்புக் கவசமாக விளங்கிய புலிகளுடன் போரையும் தொடுத்த அவலம் இடம்பெற்றது.

தொடரும்....

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE