Wednesday 24th of April 2024 04:41:08 AM GMT

LANGUAGE - TAMIL
-
தமிழ்த் தேச அங்கீகாரமும்  தனியரசுக் கோரிக்கையும்: ஈழத்தமிழரது அடையாள மாற்றம்!

தமிழ்த் தேச அங்கீகாரமும் தனியரசுக் கோரிக்கையும்: ஈழத்தமிழரது அடையாள மாற்றம்!


பொதுவெளியில் ஈழத்தமிழர் தொடர்பில் தனிநாட்டுக் கோரிக்கைக்கும் தேசஅங்கீகாரத்திற்கும் இடையில் புரிதலின்றிய உரையாடல்கள் மேலெழுகின்றன. ஈழத்தமிழரது அரசியலின் வளர்ச்சிக் கட்டத்தை (Evolution) இனங்காணத் தவறும் எல்லாச் சந்தர்ப்பத்திலும் அத்தகைய தவறுகள் ஏற்பட முனைகின்றன. ஈழத்தமிழரது இன்றைய இருப்பானது பல நூற்றாண்டுகளாக தமிழர்களின் மூதாதையர் ஏற்படுத்திய அரசியல் சமூக வாழ்வியலின் தொடர்ச்சி என்பதை மறுக்க முடியாது. இது தமிழினத்தின் இயங்கியலின் ஒருகட்டமேயாகும். மொழி மதம் பண்பாட்டு அடையாளங்கள் மற்றும் பொருளாதார இருப்பின் நியமமே இன்றைய வடிவமாகும்.

தேசியத்தின் பிறப்பென்பது 18 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய சிந்தனையாக இருந்தாலும் மனித குலம் அதனை பூகோளமயப்படுத்தியுள்ளது. அது சமானியர்களின் யுகமாகவே கட்டமைக்கப்பட்டது. முடியாட்சி முறைமைகளுக்கு எதிராக மக்களது திரட்சியே அத்தகைய தேசியத்தின் தோற்றமாகும். இன மத நிற சாதிய வேறுபாடுகளைக் கடந்து மக்களது திரட்சியே தேசியம் என்று சுருக்கமாக கூறிக்கொள்ளலாம். மக்கள் அரசியல் தீர்மானங்களில் பங்கெடுக்கும் ஜனநாயக ஈடுபாடு இல்லையாயின் அதனை தேசியம் எனக்குறிப்பிட முடியாது. மக்கள் தமக்குரிய விருப்புக்களை தீர்மானமாக எடுத்துக் கொள்வதே அவர்களது சுய உரிமையாகும். அதுவே சுயநிர்ணய உரிமையாகும். ஒரு சுயம் பிறருக்கு தீங்கில்லாத தன்னகத்தே சுயமாகச் செயல்படுவதும் சுயம் இன்னோர் சுயத்துடன் பரஸ்பரம் நலனடிப்படையில் ஒன்று சேருவதும் ஜனநாயகத்திற்கான அடிப்படைகளேயாகும். ஜனநாயம் என்பது உயிர்துடிப்புள்ள பண்பாட்டு அடையாளம். அது நாகரீகத்தின் முதிர்ச்சி.

ஈழத்ததமிழர் மன்னராட்சிக்குள் இருந்து விடுபட வழிவகுத்த பிரித்தானிய ஆதிக்கவாதம் தனது நிர்வாக நலனுக்காக ஒன்றையாட்சி மரபுக்குள் ஒன்றிணைத்தது. இலங்கைத்தீவின் பிரிதானிய அரசியலமைப்பால் கட்டப்பட்ட ஒன்றையாட்சி நியமத்திற்குள் ஈழத்தமிழர்கள் வலிந்து பிணைக்கப்பட்டார்கள். ஆனாலும் அவர்களது வாழ்விடமும் மொழியும் பண்பாட்டு அடையாளங்களும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அதனை சுதந்திர இலங்கைக்குள் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக்குள்ளேயே தந்தை செல்வா சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தார். அதுமட்டுமன்றி தந்தை செல்வாவுக்கு முன்பே ஆறுமுக நாவலரும் சேர் பொன் இராமநாதன் மற்றும் அருணாசலம் போன்றவர்கள் அதற்கான ஆரம்பப் புள்ளியை ஏற்படுத்திவிட்டார்கள். அதிலும் நாவலரும் அருணாச்சலமும் தமிழ்த் தேச அங்கீகாரத்திற்கான மொழி மத அடையாளங்களுடன் பண்பாட்டச் சேர்க்கையை முதன்மைப்படுத்தி தமிழ்த் தேச அங்கீகாரத்தை உறுதிப்படுத்தினார்கள். இவர்களது பங்களிப்பிலிருந்து மேலும் முன்னேறிய தந்தை செல்வநாயகம் அவர்கள் இரண்டு பிரதான விடயங்களை முன்மொழிந்தார்.

ஒன்று சமஷ்டிக் கோரிக்கை. சமஷ்டிக் கோரிக்கை என்பது வெளித் தேற்றத்தில் தமிழ் தேச அங்கீகாரம் போன்று அமைந்திருந்தாலும் அதன் உள்ளார்ந்த அர்த்தம் பிரிந்து செல்வதற்கான சுயநிர்ணயத்தை கொண்டது. அமெரிக்காவின் அனுபவத்தை வைத்துக் கொண்டு நோக்கும் போது பிரிந்து செல்லவிடாது அதிகாரத்தை பகிர்ந்து கொண்டு பல தேசங்கள் ஒன்றிணைந்து இயங்குவதென்று குறிப்பிட்டாலும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக உலகம் முன்வைத்த ஒருவிடயமாக சமஷ்டி கருதப்படுகிறது. லெனின் தலைமையிலான சோவியத் ரஷ்சியாவின் சமஷ்டியானது அத்தகைய அர்த்தத்திலேயே இயங்கியது. அது ஸ்டாலின் யுகத்தில் தலைகீழானது வேறுவிடயம். அதாவது சுயநிர்ணயம் என்பது ஒரு தேசிய இனமானது தனக்கென சுயாதிபத்தியமுள்ள ஒர் அரசை அமைப்பது. அல்லது ஒர் அரசமைப்பிலிருந்து பிரிந்து தனியரசை அமைப்பது அல்லது அவ்வாறு பிரிந்து இன்னோர் அரசுடன் இணைந்து கொள்வது அல்லது தனியரசாக இருக்கும் ஒரரசு இன்னோர் அரசுடன் இணைவது எனக்கொள்ளப்படுகிறது. இன்னோர் அர்த்தத்தில் சுயநிர்ணயம் ஆனது ஓர் அரசின் இறைமை இன்னோர் அரசினால் மீறப்படாது அல்லது தலையிடாது இருத்தலாகும். அந்த வகைக்குள் பார்த்தால் சமஷ்டி சுயநிர்ணயத்தின் பால்பட்டதென்பது தெளிவாகிறது.

இரண்டாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம். இது தந்தை செல்வாவின் தலைமையில் ஈழத்தமிழரது தனியரசமைப்பதற்கான தீர்க்கமான வெளிபாடே வட்டுக் கோட்டைத் தீர்மானமாகும். அதாவது சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்ட அதே தரப்பே தனியரசுக்காக பிரிந்து செல்லும் தீர்மானத்தை தமிழ் மக்களிடம் முன்வைத்து அங்கீகாரம் பெற்றுக் கொண்டது. 1944 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கை கம்யூனிசக் கட்சி தமிழர்கள் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தேசிய சுயநிர்ணய உரிமையை உடையவர்கள் என்பதை பிரகடனப்படுத்திய 35 வருடங்களுக்க பின்னர் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதிலிருந்தே மூன்றாவது கட்டம் ஈழத்தமிழரது அரசியல் பரப்பில் மேலெழுகின்றது. அத்தகைய கட்டத்தை ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் அனைத்தும் மேற்கொண்டன. அதனை தமிழீழ விடுதலைப்புலிகள் தனித்துவமாக கொண்டு செயல்பட்டனர்.

வட்டுக் கோட்டைத் தீர்மானம் மிதவாத சக்திகளால் முன்வைக்கப்பட்ட போது ஈழத் தமிழர்கள் வளர்ச்சி பெற்ற ஒரு தேசிய இனமாக வரலாற்றில் நிலைநிறுத்தப்பட்டதுடன் அதற்கான வரலாற்று இருப்பையும் மொழியையும் பண்பாட்டையும் பொருளாதாரத்தையும் கொண்டவர்கள் என்பதை இலங்கைத் தீவு மட்டுமல்ல உலகமே ஏற்றுக் கொண்டது.

இதன் அடுத்த கட்டமே தனியரசுக்கான போராட்டமாகும். மிதவாதம் தீர்மானங்களை முன்வைத்து அகிம்சை ரீதியில் போராடியத. ஆனால் இளைஞர்கள் பிரிந்து செல்வதற்கான ஆயுதப் போராட்டத்தை செயல்பூர்வமாக ஆக்குவதில் முனைப்புக் காட்டினர். அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் தனியரசொன்றையே நிர்வகித்தார்கள். அதாவது பலமான ஆயுதப்படைகளைக் கொண்ட விடுதலைப் புலிகள் தனித்து தனியரசுக்கான ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்தியதோடு ஓர் அரசை கட்டமைத்தார்கள்.

முப்படைகளையும் கொண்ட அரச இயந்திரத்தை நிறுவியது மட்டுமல்லாது அத்தகைய அரசுக்கான சட்டவாக்கம் நிர்வாக இயந்திரம் நீதிக்கட்டமைப்பு என்பவற்றை நிறுவினர் அது மட்டுமன்றி இறைமை கொண்ட அரசுக்கான நியமங்களாக கடலிலும் தரையிலும் ஆகாயத்திலும் எல்லை வகுத்து அதில் வாழும் மக்களது உரிமைகளையும் சட்ட ஒழுங்கையும் பொருளாதார வாய்ப்புக்களையும் சமத்துவத்தையும் பாதுகாப்பதில் கவனம் கொண்டனர். ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் விடுதலைப் புலிகள் ஓரசைக் கட்டமைத்து அதன் நிர்வாக அமைப்பையும் தேசிய இருப்பையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்தினர். அதாவது தனியரசுக்காக பிரிந்து செல்லும் போராட்டத்தையும் அதற்குரிய தனியரசையும் சமதளத்தில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் அமுல்படுத்தி வந்தனர்.

2009 களுக்கு பின்னர் அத்தகைய நிலை முற்றாகவே தலைகீழானது. மீளவும் தனியரசை அமைத்து நிர்வாக கட்டுப்பாட்டுக்குள் இயங்கிய மக்கள் இலங்கைத் தேசியத்துக்குள் உட்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்காக ஈழத்தமிழர்கள் தேசியமாக இல்லை என்றோ பிரிந்து செல்வதற்கான தனியரசை கோரவில்லையென்றே அல்லது அதற்கு தலைமை தாங்கிய தலைமைகளும் அமைப்புகளும் தனியரசைக் கோரவில்லையென்றே வாதிக்க முடியாது. ஈழத்தமிழர்கள் ஒர் அரசியல் சமூகமாக தம்மை தக்கவைப்பதில் கரிசனையுடனேயே இயங்குகிறார். அது ஈழத்தமிழரது வரலாற்றில் ஒரு காலப்பகுதி நியமம். அதனை நிராகரிக்கவோ திரிபடுத்தவோ முடியாது. வரலாறு வரலாறாகவே உச்சரிக்கப்பட வேண்டும். எத்தகைய உன்னதமான இலட்சியமானாலும் செயல்பூர்வமான வடிவத்தை அது கொண்டிருக்க வேண்டும். அத்தகைய வாய்ப்புக்களை கொண்டிருக்கவில்லை எனின் இறுதியில் அது எதிர்கணியமான பயனையே அளிக்கும். அதனால் எதிரியே அதிக நன்மைய வாய்ப்பு ஏற்படும்.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே ரீ கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE