Thursday 28th of March 2024 09:09:23 AM GMT

LANGUAGE - TAMIL
-
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பும் உலக அரசியல் மாற்றமும் - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பும் உலக அரசியல் மாற்றமும் - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


ரஷ்ய-உக்ரைன் போர் பாரிய நெருக்கடியை உலகளாவிய பரப்பில் ஏற்படுத்தியுள்ளது. தனித்து உக்ரைன் - ரஷ்ய போராக அமைந்தாலும் அதன் விளைவுகள் உலகளாவிய பாதிப்பினை தருவதாக உள்ளது. நேட்டோவில் இணைவதற்கான உக்ரையினின் திட்டமிடலே இப் போருக்கான அடிப்படையாக அமைந்துள்ளது. ரஷ்யாவின் புவிசார் அரசியலை இலக்குவைத்த நேட்டோவின் உத்தியே இப்போர் இவ்வளவு வேகமாக நகர்வதற்கு காரணமாக உள்ளது. தற்போது உக்ரையினின் நகரங்களை நோக்கிய ரஷ்ய இராணுவத்தின் தாக்குதல் தலைநகரான கீவ்வை அடைந்துள்ளது. பல உக்ரையின் நகரங்களில் ரஷ்ய தேசியக் கொடியை ஏற்றியுள்ள ரஷ்ய இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்திவருகிறது. உக்ரையின் படைகள் சரணடைவதாகவும் இராணுவ தளபதிகள் சுட்டுக் கொல்லப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரம் ரஷ்ய விமானங்கள் உக்ரையின் ஏவுகணைகளால சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இக்ட்டுரையும் ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் அடைந்துவரும் பிந்திய நிலையை தேடுவதாக அமையவுள்ளது.

முதலாவது ரஷ்ய ஜனாதிபதி உக்ரைனுடன் பேச்சுக்களை மேற்கொள்ள தூதுக் குழுவை அனுப்ப தயாராவதாகவும் உக்ரையின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ரஷ்யாவுடன் பேசத் தயாராக இருப்பதாகவும் மேற்கு ஊடகங்கள் முதன்மைச் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் இவ்வாறு ஜனாதிபதி புடின் பேச்சுக்களுக்கு அழைப்பதன் நோக்கம் உக்ரைனுடனான போரை மட்டுப்படுத்தவும் நேட்டோவை ஈடுபடாது தடுக்கும் உத்தியாகவே தெரிகிறது. குறிப்பாக சுவீடன் - உக்ரைனுக்கு வழங்கிவரும் ஆதரவை கண்டித்த ரஷ்யாவின் அணுகுமுறை அதனையே வெளிப்படுத்துகிறது. அதே நேரம் போர் ஒரு நீண்டதாக அமைந்துவிடக் கூடாது என்பதிலும் ரஷ்யா கவனம் கொள்கிறது. போரை ஒரு குறுகிய நாட்களுக்குள் நிறைவு செய்யவே ரஷ்யா திட்டமிட்டுள்ளது. நீடிக்க அனுமதிக்குமாயின் நேட்டோவின் ஆயுததளபாடங்கள் உக்ரையினுக்குள் குவியவும் போர் நீண்டு செல்லவும் வாய்ப்பு ஏற்பட கூடியதாக அமையுமென்று ரஷ்யா கருதுகிறது. இரண்டாவது நேட்டோ நாடுகளின் அணுகுமுறையை அவதானிக்கும் போது உக்ரையினை போரில் ஈடுபடுத்தவும் அதற்கான பேச்சுக்களை முதன்மைப்படுத்துவதிலும் கவனம் கொள்கிறது போல் தெரிந்தாலும் உலகவங்கி உட்பட நேட்டோ நாடுகள் ஆயுததளபாடங்களை உக்ரையினுக்கு வழங்குவதில் கவனம் கொள்கிறது. அமெரிக்கா உக்ரைனுக்கு அணுவாயுதஙடகளை வழங்கியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. அது மட்டுமன்றி நவீனரக ஆயுததளபாடங்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிவருவது கவனத்திற்குரியதாகும். இத்தகைய ஆயுதங்களாலேயே ரஷ்யாவின் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இத்தகைய ஆயுதங்க் ரஷ்ய படைகளிடம் சரணடையும் உக்ரைன் இராணுவம் கையளித்துவிடும் என்ற அச்சமும் நேட்டோ தரப்புக்கு உண்டு. ஆரம்பத்தில் ரஷ்ய -உக்ரைன் போரை தூண்டிய நேட்டோ தரப்பு அதிலும் குறிப்பாக அமெரிக்கா பின்னர் போர் ஆரம்பித்ததும் தனது படைகளை அனுப்பமுடியாது என அறிவித்தது. ரஷ்யா இப்போரை நிகழ்த்த வேண்டும் என்ற திட்டத்துடனேயே அமெரிக்காவின் நகர்வுகள் காணப்பட்டது. தற்போது போர் நீடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே அமெரிக்கா உட்பட நேட்டோ நாடுகள் முன்னெடுக்கின்றன. அதற்குப் பின்னால் ஐரோப்பாவுடனான ரஷ்ய விரிசலை ஏற்படுத்துவதுடன் அமெரிக்காவின் செல்வாக்குக்குள் ஐரோப்பா பயணிக்க வேண்டும் என்பதில் கவனம் கொள்ளும் நிலைப்பாட்டையே அமெரிக்கா எடுத்துவருகிறது. ஜேர்மனி பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் ரஷ;சியாவுடனான நெருக்கத்தை கடந்த காலத்தில் ஜி-7 நாடுகளின் அமைப்பிலும் ஐரோப்பிய யூனியன் கூட்டிலும் வெளிப்படுத்திவந்ததை அமெரிக்கா அவதானித்துள்ளது. அதற்கு பதிலளிக்கும் விதத்திலேயே அமெரிக்கா ரஷ்ய - உக்ரைன் போரை கையாள முனைகிறது.

மூன்றாவது மேற்கு ஊடகங்கள் போரின் மறுபக்கத்தை முதன்மைப்படுத்த முயலுவதை விடுத்து உக்ரைனின் வெற்றிகளை மட்டுமே முதன்மைப்படுத்த அதிக பிரயத்தனம் செய்வதைக் காணமுடிகிறது. குறிப்பாக மேற்குலக ஊடகங்களே உக்ரைன் இராணுவரீதியில் வெற்றி கொள்வதாகவும் ரஷ்ய இராணுவம் கொல்லப்படுவதாகவும் செய்திகளை வெளியிட்டுவருகின்றன. ஆனால் போரில் உக்ரைனிய மக்கள் அடையும் இழப்புகளை பட்டியலிடவோ தாக்கங்களை அடையாளப்படுத்தவோ தயாராக இல்லாத நிலை காணப்படுகிறது. பாரிய இழப்புகள் அந்த மக்களுக்கு ஏற்பட்டிருப்பதுடன் பெரியளவான இடப்பெயர்வை எதிர்கொண்டிருப்பதுடன் தொடர்ச்சியாக போர் நீடித்தால் ஏற்படப்போகும் நெருக்கடியை மேற்குலக ஊடகங்கள் கவனத்தில் கொள்ளாத போக்கே அதிகமாகவுள்ளது. இது உக்ரையினிய மக்களின் கடந்தகால துயரத்தை மீள கொடுப்பதற்கான முனைப்பாகவே காணப்படுகிறது. அதாவது இரண்டாம் உலக போரில் அதிக இழப்பினையும் அழிவுகளையும் எதிர்கொண்ட மக்களாக உக்ரேயினியர்களே காணப்பட்டனர்.

நான்காவது ரஷ்யாவின் ஆறு போர் விமானங்கள் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தாக்குதலை மேற்கொண்ட தரப்போ ஆயுதமோ கண்டறியப்படவில்லை(Unknown Weapon). என்பன கவனத்தில் கொள்ளப்படவேண்டியதாகும். மேற்குலகத்தின் ஆயுததளபாடங்களால் குவிந்துள்ள உக்ரையின் போரை நகர்த்துவதில் அதிக மாற்றத்தை ஏற்படுத்திவருகிறது. ஆனாலும் களநிலமை தெளிவாகவோ ஆதாரபூர்வமாகவோ இல்லாதுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இரு தரப்பினதும் உண்மைத்தகவல்களை உறுதிப்படுத்த முடியாதுள்ளமைக்கு காரணமாக ஊடகங்களின் ஆதிக்கமே அடிப்படையானது. மேற்குலகத்தின் ஊடக ஆதிக்கமே போரினை அளவிட முடியாதுள்ளது. அத்தகைய அணுகுமுறையே உண்மைத்தகவல்களை வெளிப்படுத்தவோ போரின் தாக்கங்களை சரிவர அளவிடமுடியாதுள்ளது.

ஐந்தாவது உக்ரையின் தலைநகரத்தை ரஷ்யப் படைகள் நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரையின் ஜனாதிபதி இராணுவ தாக்குதலில் ஈடுபட்டிருப்பதுடன் ரஷ்யப் படைகளை எதிர்கொள்ளும் போர்வீரராக மாறியுள்ளமை கவனத்திற்குரியதாகும். உலக அரசியல் தலைவர்களின் இருப்பினை ஜெலன்ஸ்கி திரும்பிப்பார்க்க வைத்துள்ளார். அவர் களத்தில் நிற்கும் அரசியல் தலைவராக மாறியுள்ளார். மக்களுடன் ஒன்றித்து இணைந்த தலைவராக உக்ரைன் ஜனாதிபதி விளங்குகிறார். அவரது அரசியல் வருகையும் அதிகாரத்தை கைப்பற்றிய உத்தியும் சினிமாவாக அமைந்தாலும் அதற்கான ஆளுமையும் தியாக எண்ணமும் கொண்ட தலைவராக ஜெலன்ஸ்கி காணப்படுகின்றார். நேட்டோவின் உத்திக்குள் அகப்பட்ட ஜெலன்ஸ்கி புவிசார் அரசியலை கையாளும் தன்மையை வெளிப்படுத்தியிருந்தால் நிலமையை இலகுவாக கையாண்டிருக்க முடியும். மேற்குலகத்தின் சேவகராக மாறியதே ஜெலன்ஸ்கியின் நெருக்கடிக்கான காரணமாகும். புவிசார் அரசியலை சரிவரக் கையாளத் தவறியதன் விளைவே உக்ரைனின் நெருக்கடிக்கு வழிவகுத்த விடயமாகவுள்ளது. இலங்கை அரசியல் தலைவர்கள் அத்தகைய நெருக்கடியை வெற்றிகரமாக கையாண்டுவருவதுடன் பாரிய நெருக்கடியை தவிர்த்து வருகின்றனர்.

எனவே உக்ரைன் - ரஷ்ய போர் நீடிக்கும் நிலையை கடந்துள்ளது. உக்ரையின் தலைநகரம் வீழும் நிலை முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதுடன் மேற்குலக அரசியல்' இருப்புக்குள் அதிக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைய வாய்ப்புள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி மர்க்கோன் குறிப்பிடுவது போல் ரஷ்ய - உக்ரைன் போர் ஐரோப்பாவுக்குள் மாற்றத்தை ஏறட்படுத்தும் என்பது போல நிலமை உலகளவிலும் நிகழவாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போர் ரஷ்யாவை மட்டுமல்ல அதன் அணிகளையும் மாற்றத்திற்கு உள்ளாக்கும். அதற்கான வாய்ப்புக்கள் சாதகமாகவோ பாதகமாகவோ அமையவாய்ப்புள்ளது. எதுவாயினும் உலகம் ஒரு மாற்றத்தை நோக்கி நகர்கிறது.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE