Thursday 28th of March 2024 08:16:39 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களும் உள்ளகப் பொறிமுறையும்! - நா.யோகேந்திரநாதன்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களும் உள்ளகப் பொறிமுறையும்! - நா.யோகேந்திரநாதன்!


கடந்தமாத இறுதியில் ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் 49வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கையை முன்வைத்த ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சலட் பச்சலஜ் அவர்கள் ஐ.நா. தீர்மானங்கள் தொடர்பாக இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்பாக அதிருப்தி தெரிவித்திருந்தார். குறிப்பாகப் பொறுப்புக் கூறல் விடயங்களில் இலங்கை காட்டும் அக்கறையீனம் தொடர்பாக அவர் கவலை தெரிவித்திருந்தார்.

அந்த அறிக்கைக்குப் பதிலளித்து உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் மனித உரிமைகள் பேரவை 46/1 தீர்மானம் இலங்கையின் சம்மதமின்றியே நிறைவேற்றப்பட்டதெனத் தெரிவித்ததுடன், இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும்மனித உரிமைகள் சம்பந்தமான சாட்சியங்களையும் ஆதாரங்களையும் திரட்டும் விடயமானது இலங்கையின் இறையாண்மை, நல்லிணக்கம், இன ஐக்கியம் என்பனவற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமெனவும் அதனால் நாங்கள் அதை நிராகரிக்கிறதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அவர்தான் பல நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடி தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியதாகவும் அவர்களிடம் தாங்கள் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ற வகையிலேயே போரை நடத்தியதாகவும் தங்களால் உள்ளகப் பொறிமுறை மூலம் தீர்வு காணப்படமுடியுமெனவும் அதற்குக் கால அவசாசம் தேவையெனவும் விளங்கப்படுத்தியதாகவும் தெரிவித்தார். தங்கள் நியாயங்களை ஏற்றுக் கொள்ள வைப்பதில் வெற்றிபெறுவது நிச்சயமெனவும் சவால் விட்டிருந்தார்.

போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையிலும் இலங்கை மீது குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படும்போதெல்லாம் இலங்கையின் இறைமை, உள்ளகப் பொறிமுறை என்ற வார்த்தைகளை அவர்கள் உரக்கக் கூவிக் கொள்வதுண்டு.

போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக் கூறல் போன்ற விடயங்களுக்கு உள்ளகப் பொறிமுறை மூலம் தீர்வு காண்பதை மனித உரிமைகள் பேரவை ஏற்றுக்கொண்டிருந்தது. 35/1 தீர்மானம் மூலம் இப்பிரச்சினைகளுக்கான தீர்வை உள்ளகப் பொறிமுறை மூலம் வழங்குவதாக இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியிருந்தது.

ஆனால் எந்த விடயமும் இடம்பெறவில்லை என்பது மட்டுமின்றி கோத்தபாய அரசு ஆட்சிக்கு வந்ததும் 35/1 தீர்மானத்திற்கு தாங்கள் வழங்கிய ஆதரவிலிருந்த வாபஸ் வாங்கிக் கொண்டது.

இந்த நிலையில் தான் 46/1 தீர்மானம் இலங்கை அரசின் ஆதரவின்றியே நிறைவேற்றப்பட்டது. அதில் உள்ள 3 விடயங்கள் மிகவும் முக்கியமானவை. முதலாவது இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.வின் விசேட குழுவினர் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் திரட்டுவது இரண்டாவது காணாமற் போனோர் விவகாரங்களுக்குத் தீர்வு காண்பது, மூன்றாவது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது என்பனவாகும்.

போர்க்குற்றங்கள் மனித உரிமைகள் என்பன தொடர்பாக உள்ளக விசாரணைகளை முன்னெடுக்க முடியுமென அரசு கூறி வந்த போதிலும் அமெரிக்கா போன்ற நாடுகளால் போர்க்குற்றவாளிகள் என இனங்காணப்பட்டவர்களுக்கு உயர் பதவிகளை வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி இவ்விடயம் தொடர்பாக இதுவரை முதல் அடி வைப்புக்கூட முன்வைக்கப்படவில்லை. ஆனால் நாட்டுக்கு வெளியே ஐ.நா.வால் அமைக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழு கணிசமானளவு ஆதாரங்களையும் சாட்சியங்களையும் திரட்டியுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து நாட்டின் இறைமையின் பேராலும் சுயாதீனத்தின் பேராலும் சர்வதேசத்தை ஏமாற்ற முடியாது என்ற செய்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

காணாமற் போனோரின் உறவுகளின் போராட்டம் 5 வருடங்களை எட்டித் தொடுகிறது. எனினும் காணாமற் போனோரைக் கண்டறியும் வகையில் ஒரு சிறு நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை. மாறாக அவர்கள் போரில் இறந்திருக்கலாம் என்றே கூறப்பட்டு வந்தது. ஆனால் ஐ.நா. கூட்டத்தொடரை முன்னிட்டு ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக இழப்பீடு வழங்குவது தொடர்பான சில விசாரணை அமர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் மக்கள் இழப்பீடு பெறத் தயாராயிருக்கவில்லை. அவர்கள் தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதையே கோரி நிற்கின்றனர்.

அடுத்து பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் இலங்கை அரசின் சம்மதத்துடனும் நிறைவேற்றப்பட்டாலும் அது நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் ஜீ.எஸ் பி. பிளஸ் சலுகையைத் தொடர்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுதல் அல்லது திருத்ததப்படுதலை ஒரு நிபந்தனையாக முன் வைத்தது.

இவ்விடயத்திலும் அண்மையில் அரசால் திருத்தம் என்ற பேரில் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திருத்தத்தின் மூலம் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்படாமலே ஒருவரைத் தடுத்து வைக்கும் காலம்டி 18 மாதங்களிலிருந்து 12 மாதங்களாகக் குறைக்கப்படுவதுடன் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை நீதிபதிகள் சட்டத்தரணிகள் சென்று சந்திக்கமுடியும். வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதன் மூலம் வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்படுவது தவிர்க்கப்படும்.

ஆனால் இத்திருத்தங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தையோ, ஐ.நா. சிறப்பு குழுவினரையோ திருப்திப்படுத்தவில்லை. இன, மத அடிப்படையிலும் அரசுக்கு எதிராக விமர்சிப்பவர்களையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பாவித்துப் பழிவாங்கல், சித்திரவதைகள் மூலம் ஒப்புதல் வாக்கு மூலம் பெற்று சாட்சியமாகப் பயன்படுத்தல் காலவரையற்ற முறையில் தடுத்து வைத்தல் போன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் என்பன இத்திருத்தங்கள் மூலம் தடை செய்யப்படவில்லையெனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எவ்வளவு ஏமாற்று முயற்சிகளை மேற்கொண்டாலும் இம்மூன்று விடயங்களிலும் இலங்கை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் பதில் சொல்லவேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்படும்.

இம்முறை தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படாவிட்டாலும் இவ்விடயங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தில் கணிசமான தாக்குதலை ஏற்படுவது தவிர்க்கமுடியாதது.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்

08.03.2022


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE