Thursday 28th of March 2024 06:14:43 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல்? - 97!

எங்கே தொடங்கியது இன மோதல்? - 97!


கலைக்கப்பட்ட மாகாண சபையும் தமிழீழப் பிரகடனமும்! - நா.யோகேந்திரநாதன்!

“தனக்குச் சாதகமான பாதையை நோக்கிப் பயணிப்பவன் உண்மையான மனிதனால்ல. கடமை எத்திசையிலிருந்து அழைக்கிறதோ அத்திசையில் பயணிப்பவனே உண்மையான மனிதன். அவனது இன்றைய கனவு நாளைய சட்டமாகும். ஏனென்றால் அவன்தான் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்ப்பவன். பல நூற்றாண்டுகளாக வரலாற்றின் பழைய பக்கங்களிலுமுள்ள இரத்தம் தோய்ந்த போராட்ட நடவடிக்கைகளையும் பெரும் நெருப்பில் அழிந்து போன சமூகங்களையும் அறிந்தவனால் மட்டுமே மனித குலத்தின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கமுடியும்”.

இது கியூபப் புரட்சியைத் தலைமையேற்ற நடத்தி அமெரிக்க ஆதரவு பெற்ற பாட்டிஸ்லாவின் சர்வாதிகார ஆட்சியை விழுத்தி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலை வாசலிலேயே சுதந்திர கியூப தேசத்தை உருவாக்கி சுபீட்சம் கொண்ட நாடாக அதை நிலைபெறச் செய்த பெடல் கஸ்ரோ அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதியாகும். கியூபாவின் மான்கெடா இராணுவ முகாம் கஸ்ரோ தலைமையில் விடுதலைப் போராளிகளால் தாக்கப்பட்டபோது அத்தாக்குதல் வெற்றிபெற முடியாமல் போன நிலையில் மலைப் பகுதியை நோக்கிப் பின் வாங்கிய கஸ்ரோ அங்கு வைத்து பாட்டிஸ்லாவின் இரகசியப் பொலிஸாரால் எதிர்பாராத விதமாகக் கைது செய்யப்பட்டு, இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்.

நாம் ஒடுக்குமுறைகளுக்கெதிராக போராட்டங்களில் இறங்கும்போது எங்கள் முன்பாகப் பல பாதைகள் வருகின்றன. இவற்றில் சில சுலபமானவையாகவும் இலகுவில் கடந்து சென்று விடக் கூடியனவாகவும் தென்படுகின்றன. இன்னும் சிலவோ கடினமானவையாகவும் கடக்க முடியாதவை போலவும் தோன்றக் கூடும். எம்மில் பலர் சுலபமான தமக்குச் சாதகமான பாதையைத் தெரிவு செய்வதன் மூலம் தமது இலக்கை எட்டிவிட முடியுமெனக் கருதி மூக்குடைபடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பாதை கடினமானதெனக் கருதி பயணிக்கத் தயங்குவதன் மூலம் இலக்கை எட்டத் தவறுவதுடன், எதிர்விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவல நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். பெடல் கஸ்ரோ அவர்களின் கூற்றுப்படி அப்படியானவர்கள் உண்மையான போராளிகள் மட்டுமல்ல உண்மையான மனிதர்கள் கூட அல்ல என்பது தெளிவாக்கப்படுகிறது.

உண்மையிலேயே விடுதலைப் போராட்டம் என்பது மிகமிகக் கடினமானது. எத்தனையோ இடையூறுகளைக் களைய வேண்டியதுமாகும். எதிரிகள் ஆயுத பலம், அதிகார பலம், ஆளணி பலம் என்பவற்றைக் கொண்டவர்கள் மட்டுமின்றி பல நூற்றாண்டு கால ஒடுக்குமுறை அனுபவங்களைக் கொண்டவர்கள். இவையெல்லாம் சரியாகக் கணக்கிலெடுக்கப்பட்டு அதற்கேற்ற வகையில் எமது கடமையை நாம் இனங்கண்டு அந்தக் கடமை அழைக்கும் பாதையில் நாம் பயணிக்க முடியும். அதுவே எமது இலக்கை எட்டுவதற்கான ஒரே வழியாகும்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு, மாகாண சபைகள் அமைக்கப்பட்டு, இங்கு இந்தியப் படை நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் விடுதலைப் போராளிகள் முன்பு இரு பாதைகைள் முன் வைக்கப்பட்டன. ஒன்று எவ்வித அதிகாரமுமற்ற மத்திய அரசால் கட்டுப்படுத்தக்கூடிய மாகாண சபையை ஏற்றுக்கொள்வது. அது சுலபமானதும் அன்றைய நிலையில் சாதகமானதாகவும் இருந்தது. ஆனால் ஆற்றவேண்டிய கடமையோ மத்திய அரசின் அதிகாரத்தால் கட்டுப்படுத்த முடியாத நிரந்தரமாக வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட ஒரு சுயாட்சி அதிகார அலகாகும். எனவே இக்கடமை விடயத்தில் புலிகள் உறுதியாக நின்ற காரணத்தால் இந்திய இராணுவத்துடனான போர் உட்பட ஒரு கடினமான பாதையில் பயணிக்க வேண்டியிருந்தது.

அதேவேளையில் மாகாண சபையை ஏற்றுக்கொள்வதைத் தமக்குச் சாதகமான நிலைமையாக எடுத்துக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈ.என்.டி.எல்.எப். கூட்டணி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டதுடன் அதன் அதிகாரத்தையும் கைப்பற்றினர். ஈ.பி.ஆர்.எல்.எப்.தலைவர் வரதராஜப் பெருமாள் வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரானார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகள் அமைக்கப்பட்டு அதற்கான முதலமைச்சர், அமைச்சரவை என்பன உருவாக்கப்பட்டும் அதற்கென வகுக்கப்பட்ட அதிகாரங்களைப் பிரயோகிக்க முடியவில்லை என்பது இங்கு அவதானிக்கப்படவேண்டிய முக்கிய விடயமாகும்.

13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான அதிகாரங்களை அமுல்படுத்தவிடாமல் தடுப்பதில் அரசியல் யாப்பில் போதிய ஓட்டைகள் இருந்தன. குறிப்பாக அதிகாரங்கள் தொடர்பான பொதுப்பட்டியல் மற்றும் தேசியக் கொள்கைகள் தொடர்பான மத்திய அரசின் மேலாதிக்கம் என்பன மாகாண சபையில் அதிகாரங்களை நடைமுறைப்படுத்த முட்டுக்கட்டையாக விளங்கின.

இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு 26 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் ஒரு பொதுவாக்கெடுப்பு மூலம் வடக்கு – கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்படவில்லை என்பதும் காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதும் மாகாண சபைகள் எவ்வாறான போலித்தனமானது என்பதையும் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு பங்களிப்பு வழங்க முடியாதது என்பதையும் புரிந்து கொள்ளமுடியும்.

அதிகாரங்கள் எதுவுமற்ற வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வரதராஜப் பெருமாள் பதவி வகித்த ஒன்றரை வருட காலப்பகுதியில் புலிகள் - இந்தியப் போர் தீவிரமாக இடம்பெற்றது. அதாவது அமைதிப் படையின் ஆதரவுடன் மாகாண சபை ஆட்சியும் அமைதிப் படைக்கு எதிராகப் புலிகளின் போரும் இடம்பெற்றன.

ஜே.ஆர்.ஜயவர்த்தன எவ்வாறான நரி வேலைகள் மூலம் வடக்கு கிழக்கில் ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டமைக்கு அமைவாகப் புலிகளில் இடைக்கால நிர்வாகம் அமையவிடாமல் குழப்பியடித்தாரோ அவ்வாறே மாகாண சபையின் அதிகாரங்களை அமுல்படுத்துவதையும் லாவகமாகத் தட்டிக்கழிப்பதில் வெற்றி பெற்றார்.

இப்படியான நிலையில்தான் இலங்கை இந்தியா ஆகிய இரண்டு நாடுகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இடம்பெற்ற தேர்தலில் இலங்கையின் ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டார்.

பிரேமதாச ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வந்த அரசியல்வாதி என்பதுடன் உண்மையான ஒரு சிங்கள தேசியவாதியாகவும் விளங்கினார். இலங்கை இந்திய ஒப்பந்தம், இந்திய அமைதிப் படையின் வருகை என்பன தொடர்பாக எதிரான நிலைப்பாட்டையே அவர் கொண்டிருந்தார். அவர் அதிகாரத்துக்கு வந்ததும் இந்திய அமைதிப் படையைத் திருப்பியழைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் ராஜீவ் காந்தி அதை உடன் நிறைவேற்றவில்லை.

இந்திய அமைதிப்படைக்கு எதிராகப் போரிட்டுக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்கியதுடன், பேச்சுவார்த்தைக்கு வரும்படி பகிரங்க அழைப்பு விடுத்தார். அதன்படி விடுதலைப் புலிகளுடன் பேச்சுகள் ஆரம்பமாகியதுடன், இந்திய படைகளுக்கெதிராகப் போரிட ஆயுதங்களும் பிரேமதாஸவால் வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி பிரேமதாசதான் விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுகளை நடத்துவதாகவும் அதன் காரணமாகப் புலிகள் மீதான தாக்குதல்கள் பேச்சுகளுக்கு இடையூறு விளைவிக்குமாதலால் தாக்குதல்களை நிறுத்தும்படி இந்திய அரசைக் கேட்டுக்கொண்டார்.

இக்காலப்பகுதியில் இந்திய மத்திய அரசுத் தேர்தலில் இந்திய காங்கிரஸ் தோல்வியடைய ஜனதாதள் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. வி.பி.சிங். இந்தியப் பிரதமரானார். அதேவேளையில் தமிழகத்திலும் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்திய அமைதிப் படை தாக்குதல்களை நிறுத்திக் கொண்டது.

பிரேமதாசவுக்கும் புலிகளுக்குமிடையே இடம்பெற்ற பேச்சுகளின்போது, புலிகளால் இரு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று – அரசியலமைப்பின் 6 வது திருத்தமான பிரிவினைவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது அடுத்தது, அப்போது அதிகாரத்திலிருந்த மாகாண சபையைக் கலைத்துவிட்டு மீண்டும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது.

முதலாவது பிரிவினைவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதானால் அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையாலேயே நிறைவேற்றப்படவேண்டும். ஆனால் அந்நாட்களில் பிரேமதாச தலைமையில் ஐ.தே.கட்சி அத்தகைய பெரும்பான்மையைப் பெற்றிருக்கவில்லை. இரண்டாவது 13வது திருத்தச் சட்டத்தின் படி முதலமைச்சரின் உடன்பாடு இல்லாமல் மாகாண சபையைக் கலைக்கமுடியாது.

இவை இரண்டும் அப்போதைய நிலையில் பிரேமதாசவால் நிறைவேற்றப்பட முடியாதவையாக இருந்தபோதிலும் அவர்அவற்றை சாதகமாகப் பரிசீலிப்பதாகக் கூறி பேச்சுகளைச் சுமுகமாகத் தொடரும் சூழலை ஏற்படுத்தினார்.

அதற்கான முக்கிய தேவைகள் அவருக்கிருந்தன.

இலங்கையில் இந்திய அமைதிப் படையினர் நிலைகொண்டிருப்பதை இரு தரப்பினருமே விரும்பவில்லை. அவர்களை வெளியேற்றுவது தொடர்பான நோக்கத்தில் இரு தரப்பினருமே ஒரே கோட்டில் நின்றனர்.

தென்னிலங்கையில் ஜே.வி.பி. கிளர்ச்சி தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. அவர்களும் இந்திய எதிர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதால் அவர்களுக்கெதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மாறுப்பட்ட கருத்துக்களை உருவாக்கலாம். எனவே இந்தியப் படையினரை தான் வெளியேற்றும் போது அத்தகைய பிரசாரங்களுக்கு இடமின்றிப் போய்விடும்.

எனவே புலிகளுடன் பேசுவதன் மூலம் இனப்பிரச்சினை விவகாரத்தை அரசும் புலிகளும் பேசிய தீர்த்துக் கொள்ளமுடியும்.

இந்தியாவின் தலையீடு அவசியமற்றது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த பிரோமதாச புலிகளுடன் தொடர்ந்து பேச்சுகளை நடத்துவதில் தீவிரம் காட்டினார்.

இந்நிலையில் இந்தியப் படைகள் தொடர்ந்து சந்தித்த தோல்விகள். இந்தியப் படைகளை வெளியேறும்படி ஜனாதிபதி பிரேமதாச விடுத்த அழுத்தங்கள், தமிழகத்தில் ஜனதாதள் கட்சி அரசின் பங்காளிக் கட்சியான தி.மு.க. கொடுத்த வலியுறுத்தல் போன்ற காரணமாக இந்தியப் பிரதமர் வி.பி.சிங் இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெறும் முடிவை மேற்கொண்டார்.

அதற்கமைய 1989 இறுதிப் பகுதியில் இந்தியப் படைகளை வெளியேற ஆரம்பித்தன.

இந்த நிலையில் ஒரு வருடத்துக்குக் கூடிய காலம் மாகாண சபை அதிகாரத்தைக் கொண்டிருந்த போதிலும் எந்தவொரு சிறு விடயங்களையும் செய்யமுடியவில்லை. மாகாண சபைக்குரிய அதிகாரங்களை அமுல்படுத்த முயன்ற போதெல்லாம் ஜே.ஆர். தந்திரமாக அவற்றை முறியடித்து வந்தார். பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்பு அவர் மாகாண சபை அதிகாரங்களைச் செயற்படுத்த முனைந்த வரதராஜப் பெருமாளின் முயற்சிகளை இந்தியப் படைகள் வெளியேற்றப் பிரசாரத்துக்குள் போட்டு அமுக்கி விட்டார்.

இவ்வாறு பெயரளவிலான முதலமைச்சர் பதவி, அமைச்சரவை என்பனவற்றைக் கொண்டிருந்த போதிலும் எந்தவொரு விடயத்தையும் நிறைவேற்ற முடியாத நிலையில் முதலமைச்சர் தான் வடக்குக் கிழக்கு மாகாண சபைப் பிராந்தியத்தை ‘தமிழீழமாகப்’ பிரகடனம் செய்வதாக அறிவித்தார்.

அத்துடன் மாகாண சபையும் கலைக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி மாகாண சபையில் பங்கு கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈ.என்.டி.எல்.எவ் தரப்பினரும் ரெலோ அமைப்பும் இந்திய அமைதிப் படையுடன் இலங்கையை விட்டு வெளியேறி விட்டன.

அதேவேளையில் புலிகளுக்கும் பிரேமதாசவுக்குமிடையே பேச்சுகள் இடம்பெற்ற போதிலும் இந்தியப் படைகள் வெளியேறிக் கொண்டிழுந்தபோது ஏற்பட்ட வெற்றிடங்கள் மீண்டும் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன.

இறுதியாக 24.03.1990 அன்று இந்திய அமைதிப் படையின் இறுதி அணி வெளியேறியது.

பெடல் காஸ்ரோ அவர்கள் கூறியது போன்று ஈ.பி.ஆர்.எல்.எவ்., ஈ.என்.டி.எல்.எவ் கூட்டு தமக்குச் சாதகமானதெனத் தோன்றிய மாகாண சபையை ஏற்றுக்கொண்டு எவ்விதப் பயனும் பெறாமல் படுதோல்வியையே சந்திக்க வேண்டிய நிலை எழுந்தது.

அதுமட்டுமன்றி இந்திய அமைதிப் படை வெளியேறும்போது அவர்களுடன் சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறவேண்டிய அவல நிலையும் எழுந்தது.

ஆனால் கடந்த கால வரலாற்று அனுபவங்களைச் சரியாகக் கணக்கெடுத்து புலிகள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் அவர்கள் தங்கள் இலட்சியத்தில் உறுதியாக நின்றதுடன், எதிர்காலத்துக்குச் சாதகமான வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொண்டனர்.

தொடரும்....

அருவி இணையத்துக்காக ;- நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE