Friday 29th of March 2024 05:05:39 AM GMT

LANGUAGE - TAMIL
.
செயற்கைத் தட்டுப்பாடுகளும் திட்டமிட்ட விலையேற்றங்களும்! - நா.யோகேந்திரநாதன்!

செயற்கைத் தட்டுப்பாடுகளும் திட்டமிட்ட விலையேற்றங்களும்! - நா.யோகேந்திரநாதன்!


அண்மையில் பாரம்பரிய தேங்காயெண்ணை உற்பத்தியாளர்கள் சங்கங்களின் தலைவர் புத்திக டி சில்வா தற்சமயம் சந்தையில் தேங்காய் எண்ணெய்க்கு நிலவும் தட்டுப்பாடு பற்றிக் குறிப்பிடுகையில், நாட்டில் போதியளவு தேங்காயெண்ணெய் கைவசம் உள்ளதாகவும் பல்தேசிய நிறுவனங்களும் அவர்களின் முகவர்களான இறக்குமதியாளர்களும் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம் விலையை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி விடுவதாகக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் நாட்டுக்குத் தேவையான எண்ணெய்யை வழங்குமளவுக்கு தங்களிடம் எண்ணெயும் மூலப் பொருட்களும் உண்டு எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் 1 கிலோ 70 ரூபா விற்ற அரிசி சிறிது சிறிதாக அதிகரித்துக்கொண்டு சென்ற நிலையில் அரசாங்கம் அரிசிக்குக் கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்தது. உடனடியாகவே சந்தையில் அரிசி காணாமற் போய்விட கறுப்புச் சந்தையில் 200 ரூபா வரை அரிசி விலை போனது. அதன் காரணமாகக் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டது. இன்றுவரை அரிசி அதிகரித்த விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு சமையல் எரிவாயு, பால்மா என்பவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டமையும் பின்பு விலை அதிகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அவற்றுக்கான தட்டுப்பாடு மீண்டும் தற்சமயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 400 கிராம் பால்மா பக்கற்றின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு விட்டது.

அதாவது அண்மைக்காலமாக நிலவிவரும் பொருளாதார நெருக்கடி ஆரம்பமான காலம் தொட்டு சில பொருட்களுக்குத் தட்டுபாடு ஏற்படுவதும் அவை சந்தையில் காணாமற் போவதும் பின்பு நுகர்வோர் பாதுகாப்புச் சபையின் சம்மத்துடன் அவற்றின் விலை அதிகரிக்கப்படுவதும் சம்பிரதாயபூர்வமான நிகழ்வுகள் போன்று தொடர்கின்றன. இன்றைய இத்தகைய நெருக்கடிக்கு நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறை, உலகச் சந்தையில் எரிபொருள் விலை உயர்வு, கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி என்பனவே காரணமாகக் கூறப்படுகின்றது.

டொலர் தட்டுப்பாடுதான் பொருட்களின் விலையுயர்வுக்குக் காரணமென்றால் அரிசி, தேங்காயெண்ணெய் மீன், இறைச்சி, முட்டை போன்ற உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலைகள் ஏன் அதிகரிக்கப்படுகின்றன. கொரோனா தான் காரணமென்றால் இலங்கையைவிட வேகமாகப் பாதிக்கப்பட்ட பங்களாதேஷ், மியன்மார், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் மீண்டும் தலைநிமிர்ந்து விட்டன. இலங்கையால் முடியவில்லை.

1977க்கு முற்பட்ட காலத்தில் இலங்கை உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டியிருந்தது. பாராட்டத்தக்க பொருளாதார வளர்ச்சியை அக்காலப்பகுதியில் இலங்கை எட்டாதபோதிலும் மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை என்பன நிறைவு செய்யப்பட்டன.

1977ல் இலங்கை திறந்த பொருளாதாரக் கொள்கைக்குள் புகுந்தபின் பொருளாதார வழிமுறைகள் மாற்றம் பெற்றன. வருமானம் ஈட்டும் துறைகளாக சுற்றுலாத்துறை, ஆடை ஏற்றுமதி என்பன முன்தள்ளப்பட்டன. அதிக வருமானத்தை ஈட்டிய தேயிலை உற்பத்தி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

அதேவேளையில் அந்நியப் பொருட்கள் சந்தையில் வந்து குவிய ஆரம்பித்த பின்பு உள்ளூர் உற்பத்திகளில் வீழ்ச்சி ஏற்பட்டது. கிரமியக் கைத்தொழில்கள் காணாமற் போய்விட்டன. விவசாய உற்பத்தியிலும் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டது.

அதாவது சுயதேவைப் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக முன்னேறிய இலங்கை ஒரு தங்கு நிலை பொருளாதாரத்தை நோக்கித் திசை மாற்றப்பட்டது.

எனவே கொரோனா, உலக எரிபொருள் விலையேற்றம் என்பன இலங்கைப் பொருளாதாரத்தில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தின.

அதுமட்டுமின்றி, இது காலவரையும் இரசாயனப் பசளை, கிருமி நாசினிகள் என்பவற்றில் தங்கி நின்ற விவசாயம் ஒரு இரவுக்குள் சேதனப் பசளைக்கு மாற்றும் திட்டம் கொண்டு வரப்பட்டது. நிலம், விதைகள், சுற்றுச் சூழல் என்பன இரசாயனப் பசளைகளுக்கு இசைவாக்கம் பெற்று விட்ட நிலையில் அவற்றை சேதனப் பசளைக்குப் பழக்கப்படுத்துதல் படிப்படியாக மேற்கொள்ளப்படவேண்டும். உடனடியாக மாற்ற எடுத்த முயற்சிகள் நெல் உற்பத்தியில் கணிசமான வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன் காரணமாக அரிசி, சோளம், சோயா, உழுந்து போன்ற உணவுப் பொருட்கள் கூட இறக்குமதி செய்யப்படவேண்டிய தேவை எழுந்தது.

சுற்றுலாத்துறை, ஆடை ஏற்றுமதி என்பவற்றில் அந்நியச்செலாவணி வருமானத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. அதேவேளை உள்ளூர் உற்பத்திப் பொருட்களையே இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் அந்நியச் செலாவணியின் தேவை மேலும் பல மடங்காக அதிகரித்தது. எனவே வருவாயும் செலவினமும் ஒன்றை ஒன்று நெருங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி அந்நிய முதலீட்டாளர்களையும் சுற்றுலாத் துறையினரையும் கவரும் வகையில் அதிவேக நெடுஞ்சாலைகள், பிரமாண்டமான கட்டிடங்கள், துறைமுக நகரம் எனப் பல நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவை அனைத்தும் கடன் வாங்கியே அமைக்கப்பட்டன. அவற்றுக்கான தவணைப் பணமும் வட்டியும் கட்ட பெருந்தொகை அந்நியச் செலாவணி தேவைப்படுகிறது.

ஒட்டுமொத்தத்தில் நாம் பெறும் அந்நியச் செலாவணி குறைவாகவும் செலுத்த வேண்டிய அந்நியச் செலாவணி அதிகமாகவுள்ளன.

இப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இரு வழிகளே உண்டு.

ஒன்று கடன் வாங்குவது, அடுத்தது உற்பத்திகளைப் பெருக்குவது.

இலங்கை அதில் சுற்றுலாத்துறை, அந்நிய முதலீகள் என்பவற்றை எதிர்பார்த்து முதலாவது வழியையே தேர்ந்தெடுத்தது. ஆனால் ரஷ்ய – உக்ரேனியப் போரும் எண்ணெய் விலை அதிகரிப்பும் அந்தக் கனவையும் கலைத்துவிட்டது.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் கடைசியாகத் தேர்ந்தெடுத்த வழி சாதாரண மக்களின் பாவனைப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது. இதனால் மக்களின் நுகர்வு குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவை தற்காலிக ஏற்பாடுகளே. காலப்போக்கில் நிலைமை மேலும் மோசமாகலாம். பாவனைப் பொருட்களின் பயன்பாடு குறைவடையும்போது அது நாட்டின் பொருளாதார உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

எப்படியிருந்த போதிலும் நாட்டில் ஏற்படுத்தப்படும் செயற்கைத் தட்டுப்பாடுகளும் திட்டமிட்ட விலையேற்றங்களும் மேலும் நாட்டை நெருக்கடிக்குள் தான் தள்ளும். ஒரு தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கிய பாதைக்கு மாற்றாவிடில் விமோசனத் திற்கு வழியே இல்லை.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.

15.03.2022


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE