Friday 29th of March 2024 08:35:17 AM GMT

LANGUAGE - TAMIL
.
தங்கத்தில் கண் வைக்கும் கடபடத்தனமான அரசியல்! - நா.யோகேந்திரநாதன்!

தங்கத்தில் கண் வைக்கும் கடபடத்தனமான அரசியல்! - நா.யோகேந்திரநாதன்!


இலங்கையில் இடதுசாரி அரசியல் வரலாற்றில் அமரர் கார்த்திகேயன் மாஸ்ரர் அவர்களை அறியாதவர்கள் இருக்கமுடியாது. அவர் ஒரு தலைசிறந்த ஆங்கில ஆசிரியர் மட்டுமின்றி அவர் இடையிடையே கூறும் நகைச்சுவைத் துணுக்குகள் சிரிக்க வைப்பது மட்டுமின்றி சிந்திக்கவும் வைக்குமளவுக்கு ஆழமானவை.

அத்தகைய நகைச்சுவைத் துணுக்குகளில் ஒன்றைத் தற்சமயம் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அதாவது “இந்தியாவில் கோவில்களிலுள்ள தங்கத்தைக் கொள்ளையடிக்க கஜினி முகமது 14 தடவைகள் படையெடுத்தும் அதில் அவனால் வெற்றிபெறமுடியவில்லை. ஆனால் ஜவகர்லால் நேரு ஒரேயொரு போருடன் இந்தியக் கோவில்களின் தங்கத்தைக் கைப்பற்றி விட்டார். கோவில் ஆதீனங்களும் மடாலயங்களும் தாங்களாகவே கொண்டு போய்க் கொடுத்துவிட்டனர். 1962 இடம்பெற்ற சீன இந்திய எல்லைப் போர்”, என்பது தான் அது.

அதாவது ஆட்சியாளர்கள் தேசத்தின் பேராலும் தேசத்தின் பாதுகாப்பு என்ற பேரிலும் மக்களிடமிருந்து வரிகள் மட்டுமின்றி அன்பளிப்பாகவும் தேச பக்தியின் பெயராலும் விதம்விதமான கொள்ளைகளையும் நடத்தி வருகின்றனர்.

அவ்வகையில் இலங்கையில் அண்மையில் பதவி பெற்ற இராஜாங்க அமைச்சர் ஒருவர் உரையாற்றும்போது, தென்கொரியா பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருந்தபோது மக்கள் தாங்கள் தாங்களாகவே நகைகளைக் கொண்டு சென்ற கொடுத்து நாட்டைக் காப்பாற்றினர் எனக் கூறியிருந்தார். அடுத்து உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தாங்கள் அதற்காக மக்களிடம் தங்கத்தைக் கேட்கவில்லையெனவும் அந்தக் கொரிய மக்களின் நாட்டுப் பற்றை விளங்கப்படுத்தவே அது பற்றிக் கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இலங்கையில் அரிசியில், கோதுமை மாவில், பால்மாவில், எரிபொருளில், சமையல் எரிவாயுவில் என எல்லாவற்றிலுமே கைவைத்து விட்ட அரசாங்கம் தங்கத்தில் மட்டும் கை வைக்காது என எப்படிச் சொல்லிவிட முடியும்? ஏற்கனவே ஒரு பவுண் தங்கத்தின் விலை ஒன்றரை இலட்சம் வரை ஏறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நாடு மீளமுடியாத நெருக்கடிகளைச் சந்திக்கும் காலங்களில் மக்கள் அதிலிருந்து மீள அர்ப்பணிப்புடன் உழைப்பது அப்படியொன்றும் அதிசயமுமல்ல, உலகில் எங்கும் நடைபெறாமலும் இல்லை.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிமாணம் பெற்ற நாட்களில் விடுதலைப் புலிகள் மக்களிடம் வீட்டுக்கு 2 பவுண் கோரினர் சிலரிடம் வலிந்தே பெறவேண்டியிருந்த போதிலும் பெரும்பாலோனோர் தாமாக விரும்பியே கொடுத்தனர். ஒரு தொகுதி மக்கள் தங்கள் விடுதலையை நேசித்தபோது அதற்காக எதையும் அர்ப்பணிக்கத் தயங்கமாட்டார்கள் என்பதற்கு இதுவொரு நல்ல உதாரணமாகும்.

தங்களது உயிர்த் தியாகங்கள் நிதி, வழங்கல் உள்ளிட்ட அர்ப்பணிப்புகள் தங்கள் தேசத்தின் நலன்களுக்கோ அல்லது இன விடுதலைக்காகவோ பயன்படுமென மக்கள் கருதும்போது அவர்கள் எவ்விதமான இழப்புகளுக்கு முகம் கொடுக்கத் தயங்குவதுமில்லை.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது சோவியத் யூனியன் ஆண்களில் பெரும்பாலானோர் ஜேர்மன் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போரிட களமுனைக்கு வந்து விட்டனர். உற்பத்திப் பணிகளில் பெண்களே முழுமையாக இறங்கி நாட்டினதும் களமுனையினதும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்தனர். நாட்டுக்கு ஆண்கள், பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என்ற பேதமின்றி வழங்கிய அர்ப்பணிப்புகளாலேயே ஜெர்மனியைத் தோற்கடித்து இளம் சோவியத் நாட்டைக் காப்பாற்ற முடிந்தது.

அதேபோன்று 1960ம் ஆண்டு காலப்பகுதியில் சோவியத் ஒன்றியத்துக்கும் சீனாவுக்குமிடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக சோவியத் நாடு தனது சீனாவுக்கான சகல உதவிகளையும் நிறுத்தியது. அந்த நேரத்தில் சீனத் தலைவர் மாஓசேதுங் சீன மக்களிடம் “யாங்ஷி நதியின் சீற்றத்தைக் கட்டுப்படுத்தி உற்பத்தியைப் பெருக்க சீன தேசத்தை மின்சார மயப்படுத்துவோம்” என்ற அறைகூவல் விடுத்தார்”.

அவரின் அறைகூவலை ஏற்ற சீன மக்களில் 5 இலட்சம் பேர் இரு வருடங்கள் தொடர்ச்சியாக உணவையும், உடையையும் மட்டுமே பெற்றுப் பணியாற்றினர். யாங்ஷி நதிக்குக் குறுக்காகப் பிரமாண்டமான அணை கட்டப்பட்டது. அதனால் யாங்ஷி ஆறு திசை திருப்பப்பட்டு உற்பத்தி பெருக்கப்பட்டது. சீனாவின் பெரும் பகுதி மின்சார மயப்படுத்தப்பட்டது.

வறுமையிலும் பட்டினிச் சாவிலும் அவஸ்தைப்பட்ட சீனா இன்று உலகின் முக்கிய பொருளாதார, அரசியல், இராணுவ வல்லரசாக எழுச்சி பெற்று நிற்கிறது.

விடுதலைப் புலிகளின் போரில் மக்களின் பங்களிப்பு, சீனா சோவியத் நாடு ஆகிய நாடுகளின் மக்கள் தன்னலம் கருதாது வழங்கிய உழைப்பு என அனைத்து மக்களின் அர்ப்பணிப்புகளும் முழுத் தேசத்தின் நலன்களுக்கே பயன்படும் என மக்கள் கருதியபோது அவர்கள் தயங்காமல் களமி்றங்கினர்.

இலங்கையிலும் அப்படியொரு நிலைமை ஏற்படுமானால் தங்கமென்ன இருப்பவற்றையெல்லாம் அள்ளிக் கொடுத்து நாட்டை நெருக்கடியிலிருந்து காக்கத் தயங்கப் போவதில்லை.

ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் மீதும் மக்களுக்கு அரச இயந்திரத்தின் மீதும் நம்பிக்கை ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

2015இற்கு முற்பட்ட காலத்தில் ஆட்சியிலிருந்தவர்களே இப்போதும் அரச அதிகாரத்தில் உள்ளனர். தற்போது ஜனாதிபதியாயிருக்கும் கோத்தபாய ராஜபக்ஷ் அரசாங்கத்துக்கு வரவேண்டிய 110 கோடிகளை தனியார் நிறுவனம் கொள்ளையடிக்க உதவி செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ் தேர்தல் காலத்தில் பஞ்சாங்கம் அடித்து விநியோகித்து அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இப்படிப் பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் மீது வழக்குகள் போடப்பட்டிருந்தன. இப்படியான சகல வழக்குகளும் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் தள்ளுபடி செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட பலர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.

இப்படி ஒரு சிலரின் நலன்களைப் பாதுகாக்க நீதி, நியாயம் என அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம் என்பன இயல்பானவையாக மாறிவிட்ட நிலையில் மக்கள் நாட்டுக்காகத் தங்களை அர்ப்பணிக்கத் தயாராவார்களா?

அதை விளங்கித்தான் போலும் ஜீ.எல்.பீரிஸ் தாங்கள் மக்களிடம் தங்கம் கேட்கப் போவதில்லையெனக் கூறியுள்ளார்.

நாட்டுக்காக எதையும் அர்ப்பணிக்கத் தயாரான மக்கள் தனி நபர்களின் மோசடிகளுக்கு பலி போக தியாகம் செய்வார்கள் என எதிர்பார்க்கமுடியுமா?

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.

22.03.2022


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE