Friday 29th of March 2024 07:19:26 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல்? - 99!

எங்கே தொடங்கியது இன மோதல்? - 99!


சமாதான முயற்சிகளை முறியடிப்பதில் ஆயுதப் படைகள்! - நா.யோகேந்திரநாதன்!

'இராணுவவாதம் என்பது அரசுகளின் வன்முறையை ஒழுங்கமைப்பது தொடர்பில் எழுந்த முன்னீடுபாட்டின் விளைவாகும். அரசு தனக்குட்பட்ட நிலவாட்சியில் சட்டவலுவுள்ள வன்முறையைப் பயன்படுத்த முற்றுரிமை அல்லது ஏகபோக உரிமை உள்ளதான தன்மை கட்டமைக்கப்பட்ட வன்முறைக்கான அவசியத்தன்மையை உருவாக்குகிறது. தேச அரசுகளின் இருப்புக்கு இராணுவவாதம் இன்றியமையாததாக உருவாக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தேச அரசு கட்டுமான பரிமாணத்தில் இராணுவவாதம் இன்றியமையாத அலகாக உருவாக்கப்படுகிறது'.

இது சர்வதேச அரசியல் அறிஞரான மக்ஸ் வேபர் அவர்கள் தனது 'அரச கட்டுமானத்தில் இராணுவவாதம்' பற்றிய நூலில் குறிப்பிட்ட விடயமாகும்.

அரசாங்கத்தையும் ஆட்சியையும் பாதுகாப்பவையே ஆயுதப் படைகள் என்பது மேலோட்டமாகக் காணப்படும் ஒரு தோற்றப்பாடாகும். ஆனால் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ள அரச கட்டமைப்பைப் பாதுகாப்பதே இராணுவத்தின் பணியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்தகைய அரச கட்டமைப்புக்கு உட்படாத தலைவர்கள் அல்லது அரசாங்கங்கள் அதிகாரத்துக்கு வரும்போது அவை கவிழ்க்கப்பட்டு இராணுவம் அல்லது அரச கட்டமைப்புக்குச் சார்பான சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றுகின்றன.

கொங்கோவில் லுமும்பா, சிலியில் அலண்டே, கொளதமாலாவில் அபோன்ஸ், பங்களாதேசில் முஜூபிர்ரஹ்மான். பாகிஸ்தானில் பூட்டோ, இந்தோனேஷியாவில் சுகர்ணோ போன்ற பல தலைவர்கள் ஏற்கனவே நிலவி வந்த அரச கட்டுமானத்துக்கு அப்பால் நாட்டை வழி நடத்த முயன்றபோது அவர்களின் ஆட்சிகள் ஆயுதப் படைகளால் கவிழ்க்கப்பட்டன. பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர்.

இலங்கையிலும்கூட சுதந்திரத்தின் பின்னரான அரசியல் வரலாற்றில் படைக்கட்டுமானம் என்பது இலங்கையின் சிங்கள பௌத்த தேசக் கட்டுமானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அவ்வகையில் இராணுவத் தளபதி அன்ரன் முத்துக்குமார், கடற்படைத்தளபதி அன்ரன் கதிர்காமர், விமானப் படைத் தளபதி உட்பட பிரித்தானிய ஆட்சியில் உயர் பதவி வகித்த படை அதிகாரிகள் விலக்கப்பட்டு அவ்விடங்களில் சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகள் நியமிக்கப்பட்டனர். அவ்வகையில் ஆயுதப் படைகளின் கடப்பாடு இலங்கையின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் சிங்கள பௌத்த அரச கட்டமைப்புக்கும் எதிரான அல்லது அதிலிருந்து விலகும் சக்திகளை அடக்குவது, அல்லது அழிப்பது என வகுக்கப்பட்டது. அதாவது இலங்கை முழுமையும் சிங்கள பௌத்தர்களுக்குரிய தேசம் என்பதும் அதில் ஏனையவர்கள் தங்கியிருப்பவர்கள் என்பதுமான சிங்கள பௌத்த பேரினவாதக் கோட்பாடே ஆயுதப் படைகளின் அடிப்படையாக அமைந்தது.

பிரித்தானியரிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்ட ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவ சக்திகள் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைக்கவும் சாதாரண சிங்கள பௌத்த மக்களைத் தங்கள் பின்னால் அணி திரட்டவும் ஒரு சிங்கள பௌத்த அரசியல் கட்டமைப்பை உருவாக்கினர். அநகாரிய தர்மபாலவின் சிஷ்யரான டி.எல்.சேனநாயக்க தலைமையிலேயே அந்த சக்திகள் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை கொண்ட கட்டமைப்பை உருவாக்குவதில் தீவிரம் காட்டியதுடன் அதில் வெற்றியும் பெற்றனர்.

எனவே அதற்கேற்ற வகையிலேயே படைக் கட்டுமானமும் சிங்கள பௌத்த மயமாக்கப்பட்டு வந்தது. எனினும் 1962ம் ஆண்டு திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கெதிரான இராணுவ சதிப் புரட்சி தோற்கடிக்கப்பட்டபின்பு, இராணுவக் கட்டமைப்பின் பௌத்த சிங்கள மயமாக்கம் முழுமையடைந்தது.

எனவேதான் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை அஹிம்சை வழியிலென்றாலென்ன அல்லது ஆயுதப் போராட்ட வடிவத்திலென்றாலென்ன முன்னெடுத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் இராணுவம் மூர்க்கத்தனமாக அவர்கள் மீது ஏவி விடப்பட்டது. இன அழிப்புக் கலவரங்கள் இடம்பெற்ற போதெல்லாம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், சொத்துகள் சூறையாடப்பட்டும், பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டபோதும் ஆயுதப் படைகள் கைகட்டிப் பார்த்துக்கொண்டு நின்றதையோ அல்லது அவர்களும் பங்கு கொண்டமையையோ மறுத்துவிட முடியாது.

இந்திய அமைதிப் படையை வெளியேற்றுவதில் பிரேமதாச காட்டிய தீவிரத்தை இலங்கையின் ஆயுதப் படைகளின் கட்டமைப்பு விரும்பினாலும்கூட புலிகளுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை என்பது சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரிய தேசம் என்ற பேரினவாதக் கோட்பாட்டின் அடிப்படையில் வளர்க்கப்பட்ட படைக்கட்டமைப்பு விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதையும் அவர்களைச் சமனான நிலையில் வைத்துப் பேச்சுகளை நடத்துவதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கவில்லை. எனவே பேச்சுகளைக் குழப்பக் கிடைக்கக்கூடிய ஒரு சிறு சந்தர்ப்பத்தையும் தவற விடத் தயாராயிருக்கவில்லை.

அதேவேளையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கூட ஜனாதிபதி பிரேமதாசவுக்கு முழுமையான ஆதரவு இருந்ததெனச் சொல்லிவிட முடியாது. தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி, மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமினி திசாநாயக்க ஆகிய இருவருமே பிரேமதாசவுக்கு எதிராகப் பகிரங்கமாகவே செயற்பட்டனர். இருவருமே சிங்களப் பேரினவாத சிந்தனைப் போக்குக் கொண்டவர்கள் என்பதுடன் கொவிகம சாதியல்லாத ஒருவர் நாட்டின் தலைவராக இருப்பதை விரும்பாதவர்கள்.

இலங்கையின் அரசியலமைப்பின்படி முப்படைகளின் தளபதி ஜனாதிபதியாக இருந்தபோதிலும் ஆயுதப் படைகள் மேலுள்ள கட்டுப்பாடு தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத் முதலியிடமே இருந்தது.

இவ்வாறான தனது தரப்பிலேயே சிக்கலான நிலைமைகளுக்கு முகம் கொடுத்தவாறே பிரேமதாச புலிகளுடன் பேச்சுகளைத் தொடர்ந்தார். இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தலைமைப் பேச்சாளராக வெளிவிவகார அமைச்சர் ஹமீத் அவர்களும், விடுதலைப் புலிகளின் சார்பில் தலைமைப் பேச்சாளராக அன்ரன் பாலசிங்கமும் கலந்து கொண்டனர்.

அரச தரப்பில் பேச்சுகளைக் குழம்ப விடமாமல் தொடர்வதிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்பட்ட வேளையில் புலிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை மேலோட்டமாக ஏற்றுக்கொண்ட போதிலும் அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பான திட்டங்கள் வகுக்கப்படுவது வெவ்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டு இழுத்தடிக்கப்பட்டது.

பிரேமதாச புலிகளுடன் நெருக்கத்தைப் பேணுவதில் காட்டிய அக்கறையைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் காட்டவில்லை.

இன்னொருபுறம் ஜே.வி.பி. கிளர்ச்சி முற்றாக ஒடுக்கப்பட்டும் அதன் தலைவர் ரோஹண விஜயவீர கொல்லப்பட்டும் தென்பகுதியில் ஒருவித அமைதி கொண்டு வரப்பட்ட நிலையில் ஆயுதப் படைகள் மீண்டும் ஒரு சண்டையைத் தொடக்கிப் பேச்சுகளைக் குழப்பும் வகையில் தயாராகிக் கொண்டு வந்தன.

பிரேமதாச சிங்கள மக்களுக்குரிய நாட்டின் ஒரு பகுதியைப் புலிகளுக்கு விற்கப் போகிறார் என்ற பிரசாரத்தை லலித் அத்துலத் முதலி, காமினி திசாநாயக்க முதலியோர் தீவிரமாக மேற்கொள்ள ஆரம்பித்தனர். அவர்கள் பௌத்த மத பீடங்களையும் தங்களுக்கு ஆதரவாக இணைத்துக்கொண்டனர்.

வடக்குக் கிழக்கு முற்றாகவே புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்கியது. இராணுவம் முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டிருந்தன. பொலிஸ் நிலையங்கள் இயங்கவில்லை. ஒரு நிழல் நிர்வாகம் அமைக்கப்பட்டு மக்களின் தேவைகள் நிர்வகிக்கப்பட்டன. இணக்கசபை, பிரஜைகள் குழுக்கள் போன்ற மக்கள் அமைப்புகளும் இயங்க ஆரம்பித்தன.

எனினும் இராணுவத்தினர் கடைகளுக்குச் செல்வது போன்ற காரணங்களைக் காட்டி முகாம்களை விட்டு வெளியேறும் போதெல்லாம் புலிகள் அவர்களைத் திருப்பியனுப்பும் நிலையே நிலவியது.

இச்சிறு முயற்சிகள் பெரும் எடுப்பில் இராணுவம் வெளியே வந்து தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான ஒத்திகைகளாகவே அமைந்திருந்தன. தேசிய பந்தோபஸ்து அமைச்சராக விளங்கிய அத்துலத் முதலியும் இராணுவத் தளபதிகளுடன் மேற்கொண்ட உத்தியோகப் பற்றற்ற சந்திப்புகள் மூலம் அதற்கான அனுசரணையை வழங்கியிருந்தார். அது மட்டுமின்றி வடக்குக் கிழக்கில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் அவற்றை நிலை நாட்ட ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற பிரசாரத்தை அரசாங்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.

அவர்களின் இரகசியத் திட்டத்தின் அடிப்படையில் படையணிகளை இடம் மாற்றுவதென்ற தோற்றப்பாட்டில் வவுனியாவிலிருந்து கவச வாகனங்கள் சகிதம் ஒரு படையணி முல்லைத்தீவை நோக்கிப் புறப்பட்டது.

அப்படையணி ஓமந்தையில் வைத்து விடுதலைப் புலிகளால் வழிமறிக்கப்பட்டது. அதை மீறி இராணுவம் முன்னேற முயற்சிக்கவே மோதல் தொடங்கியது. ஏறக்குறைய இரு மணிநேரம் நீடித்த இச்சமரில் படையினரின் கவச வாகனம் ஒன்று சேதமடைந்ததுடன், படையினர் பின்வாங்க ஆரம்பித்தனர். எனினும் பின்வாங்கிய படையினர் தாண்டிக் குளத்தில் ஒரு நிரந்தர முகாமை அமைத்துக் கொண்டனர்.

இந்நிலையில் போர் நிறுத்தம் படையினரால் மீறப்பட்ட நிலையில் புலிகள் பேச்சுக்களைத் தொடர்வதா இல்லையா என்பதை மீள் பரிசீலணை செய்ய வேண்டி வருமெனப் பிரேமதாசவுக்கு அறிவித்திருந்தனர்.

உடனடியாகவே பிரேமதாச புலிகளுடன் பேச வெளிவிவகார அமைச்சர் ஹமீத் அவர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினார். பலாலியில் வந்திறங்கிய அவரைப் புலிகள் யாழ்ப்பாணம் நோக்கித் தங்கள் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

ஆனால், அவர் அழைத்துச் செல்லப்பட்டபோது அந்த வாகனத்தின் மீது இலங்கை விமானப் படையினர் குண்டு வீச்சை நடத்தினர். ஆனால் சாரதியான போராளியின் சாதுரியத்தால் வாகனம் எவ்வித ஆபத்துமின்றித் தப்பித்தது.

புலிகள் தமது நிலைப்பாட்டை ஹமீத் அவர்களுக்கு விளக்கிய பின்பு பாதுகாப்பாக அவரைத் திருப்பியனுப்பினர்.

அத்துடன் ஒரு வருடத்துக்கு மேல் இடம்பெற்ற புலிகள் - பிரேமதாச பேச்சுகள் முறிவடைந்து முற்றுப் பெற்ற நிலை ஏற்பட்டது.

வடக்குக் கிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அனைத்தும் புலிகளின் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டன. ஏற்கனவே வடக்கில் பொலிஸ் நிலையங்கள் தாக்கியழிக்கப்பட்டு விட்ட நிலையில் பொலிஸார் அனைவரும் கோட்டைக்குள் உள்வாங்கப்பட்டனர்.

எனவே பிரேமதாச மேற்கொண்ட சமாதான முயற்சிகள் ஆயுதப் படையினரால் வெகுலாவகமாக முறியடிக்கப்பட்டது.

மீண்டும் அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையே போர் வெடித்தது.

அத்துடன் அரசுக்கும் தமிழர் தரப்பினருக்குமிடையேயான அரசியல் பேச்சுவார்த்தைகளின் சகாப்தம் முடிவுக்கு வர பிரச்சினையைத் தீர்க்கும் மார்க்கத்தை ஆயுதப் போராகவே இரு தரப்பும் கைகளில் எடுத்துக் கொண்டனர். இடையிடையே அரச தரப்பினருக்கும் புலிகளுக்குமிடையே பேச்சுகள் இடம்பெற்ற போதும் அவை போரின் ஒரு பகுதியாகவே இடம்பெற்றன. எனவே ஆயுதப் போராட்டம் ஈழப் போர் என்ற கட்டத்துக்கு முன் நகர்ந்தது.

தொடரும்....

அருவி இணைத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE