Thursday 28th of March 2024 03:44:24 PM GMT

LANGUAGE - TAMIL
.
வடகொரியாவில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் தொகை 15 இலட்சத்தை நெருங்கியது - 56 பேர் பலி

வடகொரியாவில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் தொகை 15 இலட்சத்தை நெருங்கியது - 56 பேர் பலி


வட கொரியாவில் கொவிட் தொற்று நோய் தீவிரமடைந்துள்ள நிலையில் சுகாதார சேவைகளை முன்னெடுக்க உதவும் நோக்கில் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுமார் 10,000-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களும் கொவிட் தடுப்பு பணிகளில் களமிறங்கியுள்ளனர்.

கொவிட் தொற்று நோய் உலகெங்கும் பரவியதை அடுத்து வட கொரியா தனது எல்லைகளை மூடி தனிமைப்படுத்திக்கொண்டது.

இதுவரை ஒரு தொற்று நோயாளி கூட பதிவாகவில்லை எனக் கூறிவந்த நிலையில் முதல் கொவிட் தொற்று நோயாளி வடகொரியாவில் கடந்த வாரம் உறுதிப்படுத்தப்பட்டார். தொடர்ந்து பல இலட்சம் பேர் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு கொவிட் தொற்று பாரிய அலை தீவிரமடைந்துள்ளதாக கருதப்படுகிறது.

நேற்று திங்கட்கிழமை 269,510 பேர் காய்ச்சல் அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுடன் மொத்தம் 1,483,060 பேர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 56 ஆக உயர்ந்துள்ளது.

எனினும் இங்கு மர்மக் காய்ச்சல் மற்றும் இறப்புகள் அதிகரித்துவரும் நிலையில் அவர்கள் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்?, எத்தனை கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன? என்ற தகவல்களை தென்கொரிய அரச ஊடகங்கள் வெளியிடவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றுகளை உறுதி செய்வதற்கான சோதனைக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் வட கொரியாவிடம் இல்லை. இந்நிலையில் கொவிட் அறிகுறிகளை வெளிப்படுத்துவோரை பிறரிடம் இருந்து தனிமைப்படுத்தும் பணியையே வட கொரியா பெரும்பாலும் நம்பியிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

வட கொரியா மோசமான சுகாதார - பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளதால் கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவது கடினம் எனவும் இது மோசமான விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு மில்லியன் கணக்கான அஸ்ட்ராஜெனெகா மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை வழங்க சர்வதேச அமைப்புகள் முன்வந்தபோதும் அதனை வட கொரியா நிராகரித்தது. அதற்கு பதிலாக, 2020 ஜனவரி முதல் அதன் எல்லைகளை மூடி கொவிட் நோயைக் கட்டுப்படுத்தியதாக அந்நாடு அறிவித்தது.

இந்நிலையிலேயே அங்கு தற்போது நிலைமை தீவிரமாக உள்ளது என அஞ்சப்படுகிறது. இலட்சக்கணக்கானோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் இது மிகப்பெரிய கொவிட் அலையில் அறிகுறியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

வட கொரியா ஏற்கனவே பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் அங்கு கொவிட் அலை தீவிரமானால் நாட்டுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வது மேலும் கடினமாகும் எனக் கருதப்படுகிறது. இது மோசமான உணவுப் பஞ்சத்துக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நெருக்கடியில் சிக்கியுள்ள வட கொரியாவுக்கு கொவிட் தடுப்பூசி உள்ளிட்ட மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு தயார் என தென் கொரியா தெரிவித்துள்ளது. எனினும் இதற்கு வட கொரியா இன்னும் பதிலளிக்கவில்லை.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE