Wednesday 17th of April 2024 07:36:32 PM GMT

LANGUAGE - TAMIL
.
காற்று மாசுபாடு, ஈய நச்சுத்தன்மை பாதிப்புகளால் ஒவ்வொரு ஆண்டும் 90 இலட்சம் பேர் உயிரிழப்பு

காற்று மாசுபாடு, ஈய நச்சுத்தன்மை பாதிப்புகளால் ஒவ்வொரு ஆண்டும் 90 இலட்சம் பேர் உயிரிழப்பு


மோசமான வெளிப்புற காற்று மாசுபாடு மற்றும் ஈய நச்சுத்தன்மை பாதிப்புகளால் 2015 -ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 90 இலட்சம் பேர் உயிரிழப்பதாக விஞ்ஞானிகள் குழுவொன்று அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

உலகளாவிய இறப்பு மற்றும் மாசு அளவுகள் பற்றிய விஞ்ஞானிகளின் பகுப்பாய்வின் படி, 2015 முதல் 2019 வரை, தொழில்துறை செயல்முறைகளின் காற்று மாசுபாடு மற்றும் நகரமயமாக்கல் மாசுபாடு தொடர்பான இறப்புகள் 7% அதிகரித்துள்ளதாக புவியின் ஆரோக்கியம் குறித்து ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள் லான்செட் பிளானட்டரி ஹெல்த் (Journal Lancet Planetary Health ) என்ற இணைய இதழில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த மாசு வெளிப்பாடு மற்றும் இறப்பு அபாயத்தைக் கணக்கிடும் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய நோய்களின் சுமை குறித்து ( Global Burden of Disease) 2019 வெளியிடப்பட்ட தரவுகளை இந்தக் கட்டுரை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்தனர்.

மோசமான வெளிப்புற காற்று மாசுபாடு மற்றும் ஈய நச்சுத்தன்மை பாதிப்புக்களால் நோய்வாய்ப்பட்டு வருடாந்தம் சுமார் 9 மில்லியன் பேர் இறக்கின்றனர். உலகில் பதிவாகும் ஆறு இறப்புகளில் ஒன்று இவ்வாறான மாசுபாட்டால் இடம் பெறுகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஈயம் மனித ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவித்து வருகிறது. உலக அளவில் 0.6% நோய்கள், ஈய நச்சுத்தன்மையால் உண்டாவதாக உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. உலகில் சுமார் 80 கோடி குழந்தைகள் ஈய நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனா். இது உலக குழந்தைகள் தொகையில் மூன்றில் ஒரு பங்காகும் எனவும் அதில் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 50 % தெற்காசியாவைச் சோ்ந்த குழந்தைகள் என 2020- ஜூலை வெளியான ஐ.நா. சிறுவர் நிதியத்தின் அறிக்கை கூறுகிறது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஒரு டெசிலிட்டா் இரத்தத்தில் ஈய செறிவு ஐந்து மைக்ரோ கிராம் அல்லது அதற்கு மேல் இருப்பதாக யுனிசெப் அறிக்கை கூறியுள்ளது. ஒரு டெசிலிட்டா் இரத்தத்தில் 1.4 மைக்ரோ கிராம் என்பதே குழந்தைகளுக்கான இயல்பு நிலையாகும்.

சில ஆரம்ப அறிகுறிகளுடன், ஈயம் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் வளா்ச்சியைத் தடுத்து அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என யுனிசெப் எச்சரிக்கிறது. குழந்தைப் பருவத்தில் இரத்தத்தில் ஈயத்தின் அளவு அதிகரிப்பது, அவா்களின் மனநலம் மற்றும் நடத்தைகளில் பிரச்னையை உருவாக்கும்.

ஈய-அமில மின்கலங்களின் முறையற்ற மற்றும் தரமற்ற மறுசுழற்சியே ஈய பாதிப்பின் மிக முக்கிய காரணமாகும். 2000-ஆம் ஆண்டிலிருந்து நடுத்தர, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், வாகனங்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்த வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஈய-அமில மின்கலங்களில் 50% அந்த நாடுகளின் முறையற்ற மறுசுழற்சியின் மூலம் உருவாக்கப்பட்டவை என்று ஓா் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த மறுசுழற்சி நடவடிக்கைகளில் பழுதான மின்கலங்கள் உடைக்கப்பட்டு அமிலம், ஈய தூசி போன்றவை மண்ணில் கொட்டப்படுகின்றன. ஈயம் திறந்தவெளி உலைகளில் கரைக்கப்படுகிறது. இது நச்சுப் புகையை உருவாக்கும். இச்செயல்கள் அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்குப் பெரும் தீங்கினை விளைவிக்கும் எனவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE