உலகப் பெருங்கடல்கள் முன்னொருபோதும் இல்லாதவாறு கடந்த ஆண்டு அதிக வெப்பமயமானதுடன், அதிகளவு அமிலத்தன்மை கொண்டதாக மாறியுள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது.
அத்துடன், கடந்த தசாப்தத்தில் கடல் மட்டம் 4.5 செ.மீ. (1.8 அங்குலம்) உயர்ந்துள்ளது. 1993 முதல் 2002 வரையான கடல்மட்ட அதிகரிப்பை விட 2013 முதல் 2021 வரையிலான காலப்பகுதியில் கடல்மட்டம் இரண்டு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது எனவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பே இதற்கு பிரதான காரணியாகும். அத்துடன், இது தீவிர வெப்ப அலைகள், காட்டுத் தீ, வெள்ளம் மற்றும் பிற காலநிலை தொடர்பான பேரழிவுகளை ஏற்படுத்தியதுடன், 100 பில்லியன் டொலருக்கு அதிகமான சொத்துக்கள் சேதத்துக்கு வழிவகுத்தது எனவும் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் நடக்கும் போர் உலகின் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கடப்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பாக கண்காணித்துவரும் ஐ.நா. அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டில் கடல் மட்டம் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. அதிக வெப்பம் காரணமாக பனிக்கட்டிகள் உருகுவதே கடந்த ஆண்டு கடல்மட்டம் கணிக்கப்பட்டதை விட குறிப்பிடக்கக்க அளவு உயர காரணமாக இருந்தது என உலக வானிலை அமைப்பு நேற்று வெளியிட்ட அதன் வருடாந்த சர்வதேச காலநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காலநிலை நம் கண்முன்னே மாறிவருகிறது. மனிதனால் தூண்டப்படும் பசுமை இல்ல வாயுக்களால் (greenhouse gases) பல தலைமுறைகள் காணாத அளவு வெப்பநிலை அதிகரித்துள்ளது என உலக வானிலை அமைப்பு பொதுச்செயலாளர் பெட்டேரி தாலாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மனிதகுலம் அதன் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை கடுமையாக குறைக்க வேண்டும் அல்லது உலகம் பேரழிவு மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போர் போன்ற நெருக்கடிகள் இப்போது தலைப்புச் செய்திகளாக மாறியுள்ளன. இவை குறித்தே நாடுகள் அதிக கவனம் செலுத்துகின்றன. இதனால் காலநிலை மாற்றம் குறித்த சவால்களைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என பெட்டேரி தாலாஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மோதல்கள் காரணமாக காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை உலக நாடுகள் கைவிடுவதை ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் சிறப்பு ஆலோசகர் செல்வின் ஹார்ட் விமர்சித்தார்.
உக்ரைன் மீதான ரஷ்யப் போர் காரணமாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு குறைந்து எரிசக்தி பயன்பாடு அதிகரித்துள்ளது.
பல முக்கிய பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகள் எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பதால் அதிக கார்பன் டை ஒக்சைட் வெளியேற்றம் நிகழ்கிறது. இது காலநிலை மாற்றத்தை தீவிரப்படுத்த வழிவகுக்கும் என்று ஹார்ட் செய்தியாளர்களிடம் கூறினார்.
அனைவரும் இணைந்து செயல்பட்டால் 21ஆம் நூற்றாண்டை புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான நூற்றாண்டாக மாற்ற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.