Tuesday 23rd of April 2024 11:37:36 AM GMT

LANGUAGE - TAMIL
-
வற்றாப்பளை கண்ணகி அம்மன் வருடாந்த பொங்கலுக்கான முன்னாயத்த ஆலோசனைக் கூட்டம்!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் வருடாந்த பொங்கலுக்கான முன்னாயத்த ஆலோசனைக் கூட்டம்!


வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவுக்கான முன்னாயத்த ஆலோசனைக் கூட்டம் இன்று(19) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் வருகின்ற 13.06.2022ம் திகதி அன்று நடைபெறவுள்ளது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வுகள் எதிர்வரும் 30.05.2022ம் திகதி அன்று பாக்குத்தெண்டலுடன்  ஆரம்பமாகி 06.06.2022ம் திகதி அன்று தீர்த்தம் எடுத்தல் நிகழ்வும், அதனைத் தொடர்ந்து 12.06.2022ம் திகதி அன்று காட்டா விநாயகர் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்று 13.06.2022ம் திகதி அன்று காலை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து பண்டம் எடுத்து வரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் உடைய பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன.

இந் நிலையில் குறித்த பொங்கல் நிகழ்வு தொடர்பான முன்னேற்பாடுகள் தொடர்பிலான விஷேட கலந்துரையாடல் ஆலய உற்சவத்துடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களுக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆலய நிர்வாகத்தினர் ஆகியோருக்கும்  இடையில் இவ்வாறு இடம்பெற்றது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் குண்டு தாக்குதல்  காரணமாகவும் 2020 ஆம் 2021 ம் ஆண்டுகளில் கொரோனா காரணமாகவும் ஆலய  உற்சவம் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் இடம்பெற்ற நிலையில் இவ்வாண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த உற்சவத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆலயத்திற்கு வருகின்ற வீதிகள் ஆலயத்தில் குடிநீர் மலசலகூட வசதிகள், சுகாதார வசதிகள், பாதுகாப்பு, போக்குவரத்து, மின்சார வசதிகள் என அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அனைத்துத்துறை சார்ந்த அதிகாரிகளுடனும் இந்தக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இவ்வாறு ஒவ்வொரு துறை சார்ந்த விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்ற  நிலையில் ஆலய உற்சவத்திற்கு ஏற்பாடுகளை அனைத்து தரப்பினரும் செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

மேலும் இந்த முன்னேற்பாடுகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 03.06.2022ம் திகதி காலை 10.30 மணிக்கு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெறும் எனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த ஆலயத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக அடுத்த கூட்டத்தில் தெரியப்படுத்தப்படும் எனவும் ஆலயத்தில் பக்தர்கள் வருவதற்கு இம்முறை எந்தத் தடைகளும் இல்லாத நிலையில் ஆலயத்தில் விசேடமான பொங்கல் வழிபாடுகள் வழமைபோன்று இடம்பெறும் எனவும் ஆலயத்தில் பக்தர்களுடைய நேத்திக்  கடன்களை செய்யக்கூடிய வகையிலே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸவரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பொறியியலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள், மாவட்ட சுகாதார பரிசோதகர், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரி, பொலிஸ் அதிகாரிகள், இராணுவ உயரதிகாரிகள், மாவட்ட மின்சார சபை அதிகாரி, மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரி, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினர், கலாசார உத்தியோகத்தர்கள், ஏனைய தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE