Monday 6th of February 2023 09:51:55 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமது அடையாளங்களை தொலைத்துநிற்கும் மட்டக்களப்பு சமூகம் - மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்

தமது அடையாளங்களை தொலைத்துநிற்கும் மட்டக்களப்பு சமூகம் - மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்


தமது அடையாளங்களை தொலைத்துநிற்கும் சமூகமாகவே மட்டக்களப்பு சமூகத்தினை பார்ப்பதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டின் ஒன்றாக கருதப்படும் கபடி விளையாட்டின் முக்கியத்துவத்தினையும் அதன் தமிழர் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பாடல் இன்று மட்டக்களப்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட கபடி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகரசபையில் இந்த நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கபடி சங்கத்தின் தலைவரும் மாநகரசபை உறுப்பினருமான துரைசிங்கம் மதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் சிப்ஸ் சினிமா பணிப்பாளருமான டாக்டர் க.சுகுணன் ஆகியோரும் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரன் சிறப்பு அதிதியாகவும் கலந்துசிறப்பித்தனர்.

இலங்கை தேசிய கபடி அணி உட்பட இலங்கையின் பல கபடி அணிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச்சேர்ந்த பல வீரர்கள் சாதனை படைத்துவரும் நிலையில் மட்டக்களப்புக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமைசேர்த்த குறித்த வீரர்களைக்கொண்டதாக பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மண்மைச்சேர்ந்த புகழ்மிக்க துள்ளிசை பாடகர்களான க.கஜிந்தன், ஜி.ரதியன் ஆகியோரால் பாடப்பட்டு, இசையமைக்கப்பட்டு இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளதுடன் கபடி விளையாட்டின் முக்கியத்துவம் அதன் தமிழர்கள் பண்பாடு மற்றும் தமிழர்களின் வீரத்தினை பறைசாற்றும் வகையில் பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கபடி அணி வீரர்கள், மட்டக்களப்பு மாவட்ட கபடி சங்க உறுப்பினர்கள், கபடி ஆர்வலர்கள் என பல தரப்பட்டவர்களும் கலந்துகொண்டனர்.

இலங்கை தேசிய கபடி அணியின் 12 வீரர்களுள் 4 பேரை மட்டக்களப்பு வழங்கியுள்ளதுடன் இலங்கை தேசிய கபடி நிருவாகத்திலும் செயலாளரை மட்டக்களப்பு கொண்டுள்ளது. இலங்கை கபடி அணி கடந்த மாதம் பங்களாதேஷ் நாட்டில் இடம்பெற்ற ஆசிய அணிகளுக்கான கபடிபோட்டியில் மூன்றாவது இடத்தை பெற்று வெற்றிக்கிண்ணத்தையும் சுவீகரித்தபோது மட்டக்களப்பு வீரர் ஒருவரே சிறந்த வீர்ராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து தெரிவித்த மாநகர முதல்வர்,

இலங்கையில் மட்டக்களப்பிலும் பல இராசதானிகள் இருந்துள்ளன. தங்களது அடையாளத்தினை தொலைத்து நிற்கும் சமூகமாகவே நான் என்னை பார்க்கின்றேன். ஆவனப்படுத்தலில் நாங்கள் ஆர்வம் செலுத்தாமையே எமது வரலாறுகள் முன்கொண்டுசெல்லப்படாததற்கு காரணமாகும்.

காந்திபூங்காவில் முப்பரிபான அரங்கை அமைத்து மட்டக்களப்பில் இருந்த இராசதானிகள் தொடர்பில் சிறியளவிலான குறுந்திரைப்படங்களை உருவாக்கி அதனை இளம் சமூகத்தின் மத்தியில் கொண்டுசெல்வதற்கான திட்டம் உள்ளது.

படுவான்கரை பகுதியில் பல குடிகள் உள்ளது. அந்த ஒவ்வொரு குடியும் ஒவ்வொரு இராசாக்களைக்கொண்டுள்ளது. அவை மழுங்கடிக்கப்பட்டு எமது நினைவுச்சின்னங்களை நாங்களே அழித்து எதுவும் இல்லாத நிலையே உள்ளது. இன்று ஈரளக்குளம் பகுதியில் பழைய கோட்டைகள் உள்ளன. ஆனால் அதனை ஆண்டவர்கள் யார் என்று தெரியாது. காடுகளில் பல இடங்களில் கோட்டைகள் உள்ளது. ஆனால் வரலாறுகள் இல்லை. அதனால் சிறியளவில் ஆய்வுகள் செய்து அவற்றினை குறுந்திரைப்படங்களாக மாற்றி மக்கள் மத்தியில் வரலாறை கொண்டுசெல்ல வேண்டும்.

நாங்கள் எங்களைப்பற்றிய பிழையான வரலாறுகளையே எமது இளம்சமூகத்திற்கு சொல்லிவருகின்றோம். மட்டக்களப்பு மக்களைவந்தேறு குடிகளாகவும் இலங்கையின் இறுதிக்குடியேற்றம் செய்யப்பட்டவர்கள் என்ற வகையில் பிழையான வகையில் வரலாறுகளை இலங்கையில் கொண்டு செல்லமுற்படுகின்றனர். ஆனால் இலங்கையிலேயே ஆதிக்குடிகளாக மட்டக்களப்பு மக்களே இருந்துள்ளார்கள். கி.மு.2030ஆமண் ஆண்டுக்கு முற்பட்ட தொல்பொருட்கள் மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏதோ ஒரு கதை நூலில் தெரிவிக்கப்பட்ட விடயத்தினை சிங்கள அரசாங்கம் தூக்கி எடுத்துக்கொண்டு மட்டக்களப்பு மக்களின் வரலாற்றினை தீர்மானிக்கின்றார்கள்.

எங்களிடம் ஆவணப்படுத்தல் இல்லாத காரணத்தினாலேயே நாங்கள் யார் என்பது இதுவரையில் வெளிப்படுத்தப்படாமல் உள்ளது. நாங்கள் இந்தியாவுக்கு திட்ட முன்மொழிவொன்றை வழங்கியிருந்தோம். கலாசார மண்டபம் ஒன்றை அமைத்து அதில் அருங்காட்சியம் ஒன்றை உருவாக்கி இராசதானிகளையும் அதில் காட்டுவதற்கான திட்டமுன்வரைவுகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்திய அரசாங்கம் உறுதியளித்தபோதும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

நாங்கள் யார் என்பதை இன்று நிரூபிக்கவில்லையென்றால் எமது அடுத்த சமூகம் வரலாற்ற நிலையிலேயே இருக்கும். நாங்கள் போராட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள். போராட்டத்தின் வலிகள் அறிந்தவர்கள். ஆனால் இன்றைய சந்ததிக்கு அந்த வலிகள், வேதனைகள் தெரியாது.

நாங்கள் வரலாறுகளை இன்றைய சந்ததிக்கு கொண்டுசெல்லவேண்டும். இன்று எமது போராட்டத்தினை அழித்தவர்களுக்கும் வாக்களிக்கின்றோம், அதற்கு துணை நின்றவர்களுக்கும் வாக்களிக்கின்றோம். அதற்கு காரணம் எமது சரித்திரமும் தெரியாது, வலியும் தெரியாது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்புபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE