Friday 19th of April 2024 01:18:34 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஐபிஎல் 2022; அறிமுகத் தொடரிலேயே கிண்ணம் வென்றது குஜராத்!

ஐபிஎல் 2022; அறிமுகத் தொடரிலேயே கிண்ணம் வென்றது குஜராத்!


ஐபில் ரி – 20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 2022 ஆம் ஆண்டுக்கான கிண்ணத்தை குஜராத் டைட்டன்ஸ் அணி கைப்பற்றியுள்ளது.

ராஜஸ்தான் அணியுடன் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அறிமுக அணி குஜராத் டைட்டன்ஸ் அணி 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்து கிண்ணத்தை கைப்பற்றியது.

நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர்.

ஷமி வீசிய முதல் ஓவரில் இருவரும் நிதானித்து விளையாட, யாஷ் தயாள் வீசிய 2வது ஓவரில் நான்கு ஓட்டம் ஒன்றைப் பெற்றார் பட்லர்.

யாஷ் தயாள் வீசிய 4வது ஓவரில் ஒரு ஆறு ஓட்டத்தினைப் பெற்றுவிட்டு அடுத்த பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார் ஜெய்ஸ்வால்.

அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் சாம்சன், பெர்குசன் வீசிய அதிவேகப்பந்து ஒன்றை நான்கு ஓட்டமாக்கினார். அந்த ஓவரில் 157.3 கீ.மீ வேகத்தில் பட்லருக்கு வீசினார் பெர்குசன். இந்த ஐபிஎல் தொடரில் மிக அதிவேகமாக வீசப்பட்ட பந்து இதுவாகும்.

பெர்குசன் வீசிய 7வது ஓவரில் பட்லர் 2 நான்கு ஓட்டங்களைப் பெற்றார். ஆனால் ரஷீத் ஓவரில் பட்லர் திணறுவதை உணர்ந்த ஹர்திக் அவரையே அடுத்த ஓவரையும் வீசச் செய்தார். விளைவு ஒரு நான்கு ஓட்டம் கூட பெற முடியாமல் ஓட்ட சராசரி சரியத் தொடங்கியது.

அடுத்து அணித் தலைவர் ஹர்திக் வீசிய ஓவரில் அணித்தலைவர் சாம்சன் தன் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த படிக்கல் நிதானமாக ஆட, பட்லர் ஷமீ வீசிய ஓவரில் 2 நான்கு ஓட்டங்களைப் பெற்றார். அதே வேளையில் 25 ரன்களை கடந்தபோது ஒரே தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த டேவிட் வார்னரின் சாதனையை (848 ரன்கள்) முறியடித்தார். ஆனால் மறுமுனையில் படிக்கல் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ரஷித்திடம் சிக்கி வெளியேறினார்.

அடுத்து நன்றாக ஆடிக் கொண்டிருந்த பட்லர் விக்கெட்டை வீழ்த்தி ராஜஸ்தான் அணியை கடும் நெருக்கடிக்கு தள்ளினார் ஹர்திக் பாண்டியா. இக்கட்டான சூழலில் ஜோடி சேர்ந்த அஸ்வின், ஹெட்மேயர் அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர்.

ஆனால் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சாய் கிஷோர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார் அஸ்வின்.

அடுத்து வந்த போல்ட் அதிரடியாக விளையாட முயன்று, ஒரு ஆறு ஓட்டம் மட்டும் பெற்றுவிட்டு அடுத்த பந்திலேயே வெளியேறினார்.

கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த ரியான் பராக், ஒபெட் மெக்காய் ஆகியோர் கடுமையாக முயற்சித்த போதிலும் ஓட்ட எண்ணிக்கையை பெரிதாக உயர்த்த முடியாமல் போய்விட்டது.

கடைசி ஓவரில் மெக்காய் ரன் அவுட்டாகி வெளியேற, ரியான் பராக்கை க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார் ஷமி. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களை மட்டுமே பெற்றது ராஜஸ்தான் அணி.

அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாய் கிஷோரும் தன் பங்குக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ராஜஸ்தானின் ஆட்ட வரிசை நிலைகுலைந்து போய்விட்டது. 131 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியது குஜராத் அணி. ஆனால் போல்ட் வீசிய முதல் ஓவரில் சுப்மன் கில் கொடுத்த அருமையான பிடி எடுப்பு வாய்ப்பை தவறவிட்டார் சஹால்.

பிரஷித் கிருஷ்ணா வீசிய 2வது ஓவரில் விருத்திமான் சஹா க்ளீன் போல்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களத்திற்கு வந்த மேத்யூ வேட் பொறுமையாக விளையாடினார். 3வது ஓவரில் ஒரு ஓட்டம் கூட விட்டுக் கொடுக்காமல் மெய்டனாக்கி அசத்தினார் போல்ட். பிரஷித் வீசிய 4வது ஓவரில் ஆறு ஓட்டம் ஒன்றை அடித்து அசத்தினார் மேத்யூ வேட். ஆனால் போல்ட் வீசிய அடுத்த ஓவரில் ரியான் பராக்கிடம் பிடி கொடுத்து வெளியேறினார் வேட்.

அடுத்து களத்திற்கு வந்த ஹர்திக் பாண்டியா பொறுப்புடன் விளையாட ஆரம்பித்ததால் ஓட்ட எண்ணிக்கை உயரத் துவங்கியது. சஹால் ஓவரில் சுப்மான் கில் நான்கு ஓட்டம் பெற்று அசத்தினார். பிரஷித் வீசிய 9வது ஓவரில் ஹர்திக், கில் இருவரும் தலா ஒரு நான்னு ஓட்டங்கள் பெற, குஜராத் கூடாரத்தில் நம்பிக்கை பரவத் துவங்கியது. மெக்காய் ஓவரில் ஹர்திக் தன் பங்குக்கு மற்றொரு நான்னு ஒட்டமும் அடிக்க இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது குஜராத் அணி.

அஸ்வின் வீசிய 12வது ஓவரில் ஒரு நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் விளாசி வான வேடிக்கை காட்டினார் ஹர்திக் பாண்டியா. ஆனால் சஹால் பந்துவீச்சில் ஹர்திக் அவுட்டாக ராஜஸ்தான் பக்கம் காற்று வீசத் துவங்கியது. ஆனால் அந்த காற்றை கில்லராக வந்து தடுத்து நிறுத்தினார் டேவிட் மில்லர். மெக்காய் ஓவரில் ஒரு நான்கு ஓட்டத்தை சிதறடித்த மில்லர், அஸ்வின் ஓவரில் அபாரமான ஆறு ஓட்டம் ஒன்றை விளாசி அசத்தினார்.

பிரஷித் ஓவரிலும் இரு நான்கு ஓட்டங்களை விளாசி தாம் “கில்லர்” என்பதை மில்லர் உணர்த்த இலக்கை நோக்கிய குஜராத்தின் பயணம் மிக எளிதாக அமைந்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மில்லர், மெக்காய் வீசிய ஓவரில் ஆறு ஓட்டம் விளாசி அணியை வெற்றி இலக்கை எட்ட வைத்தார். 11 பந்துகளை மீதம் வைத்த நிலையில் 18.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி. அறிமுகமான முதல் தொடரிலேயே கோப்பையை சுவீகரித்தது குஜராத் அணி.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE