Thursday 25th of April 2024 08:08:24 AM GMT

LANGUAGE - TAMIL
.
உக்ரைனில் முடங்கியுள்ள பெருந்தொகை தானியங்களை வெளியேற்றும் துருக்கியின் முயற்சிக்கு அமெரிக்கா ஆதரவு

உக்ரைனில் முடங்கியுள்ள பெருந்தொகை தானியங்களை வெளியேற்றும் துருக்கியின் முயற்சிக்கு அமெரிக்கா ஆதரவு


ரஷ்யாவின் போர் காரணமாக உக்ரைனில் முடக்கியுள்ள பல மில்லியன் தொன் உணவு-தானியங்களை வெளியேற்றுவதற்கான ஒப்பந்தத்தில் துருக்கியின் தலையீட்டை வரவேற்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு பிரிவு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரைனுக்குள் முடங்கியுள்ள உணவு-தானியங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முயற்சியில் நட்பு நாடுகள் மற்றும் பங்காளிகளுடன் இணைந்து அமெரிக்கா செயற்படுகிறது என்று கிர்பி கூறினார்.

கருங்கடலில் ரஷ்யாவின் முற்றுகையால் தானியங்களை அனுப்ப முடியாமல் உக்ரைன் போராடி வருகிறது. இந்நிலையில் இவற்றை வெளியேற்றுவதில் துருக்கியின் மத்தியஸ்தத்தை நாங்கள் நிச்சயமாக வரவேற்கிறோம் எனவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு பிரிவு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி குறிப்பிட்டார்.

இதேவேளை, உக்ரேனிய துறைமுகங்களை ரஷ்யா முற்றுகையிட்டுள்ளதால் நாட்டுக்குள் தேங்கியுள்ள சுமார் 20 மில்லியன் தொன் தானியங்களை விடுவிப்பதற்கான வழிகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் லக்சம்பேர்க்கில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் விவாதித்னர்.

உலகிற்கு கோதுமை விநியோகம் செய்யும் நாடுகளில் உக்ரைன் முன்னணியில் உள்ளது. ஆனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை அடுத்து அதன் தானிய ஏற்றுமதி ஸ்தம்பித்தது. உக்ரேனிய துறைமுகங்களை ரஷ்யா முடக்கியுள்ளதால் 20 மில்லியன் தொன்களுக்கும் அதிகமான தானியங்கள் தேங்கியுள்ளன.

இவ்வாறு தானிய ஏற்றுமதியை முடக்கியுள்ளதன் மூலம் செயற்கை உணவு நெருக்கடியை ரஷ்யா ஏற்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. எனினும் இக் குற்றச்சாட்டுக்களை ரஷ்யா மறுத்து வருகிறது.

உலகளாவிய உணவு, எரிபொருள் பற்றாக்குறைக்கு ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளே காரணம் என ரஷ்யா குற்றஞ்சாட்டுகிறது.

இதேவேளை, உலகெங்கும் உணவு விலைகள் அதிகரிப்பதுடன், உணவு உற்பத்தி, ஏற்றுமதி குறைந்து வருவதால் இறக்குமதி தானியங்களை பெரிதும் நம்பியிருக்கும் ஏழை நாடுகளில் பட்டினி ஆபத்தை எதிர்கொள்ள நேரிடுவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

ரஷ்ய உணவு மற்றும் உர ஏற்றுமதியை எளிதாக்கும் அதேநேரம் உக்ரைனின் கடல் மார்க்கமான ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை எட்ட ஐக்கிய நாடுகள் சபை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஐ.நாவின் இந்த முயற்சிக்கு ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரவு தெரிவித்துள்ளது. எனினும் இந்த முயற்சிக்கு ரஷ்யா உடன்படுமா? என்பது தெரியவில்லை.

இதற்கிடையே உக்ரைன் மற்றும் ரஷ்யா இரு நாடுகளுடனும் நல்லுறவைக் கொண்டுள்ள துருக்கி, ரஷ்ய உணவு மற்றும் உர ஏற்றுமதியை எளிதாக்கும் அதேநேரம் உக்ரைனின் கடல் மார்க்கமான ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை கண்காணிப்பாற்கான பொறிமுறையில் பங்கேற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE