Thursday 18th of April 2024 12:05:11 AM GMT

LANGUAGE - TAMIL
.
கருக்கலைப்பு உரிமை குறித்த 50 ஆண்டுகால தீர்ப்பை இரத்துச் செய்து அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கருக்கலைப்பு உரிமை குறித்த 50 ஆண்டுகால தீர்ப்பை இரத்துச் செய்து அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு


அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை இரத்துச் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரம் இனி தேசிய அளவில் இன்றி மாகாணங்களுக்கு இருக்கும்.

அமெரிக்காவில் 1973ஆம் ஆண்டில் ரோ மற்றும் வேட் (Roe v.Wade) இடையிலான வழக்கில், 'கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அது அரசியலமைப்பு உரிமை' என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதேபோல, 1992ஆம் ஆண்டில் பெனிசில்வேனியா மற்றும் கேசே இடையிலான வழக்கில், '22 முதல் 24 வார கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டபூர்வமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்' என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று வெளியான தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகளில் மாற்றம் ஏற்படும். கருக்கலைப்பு நடைமுறைக்கு தடை விதிக்க இனி மாகாணங்கள் நடவடிக்கை மேற்கொள்ளும்.

அநேகமாக அமெரிக்கா மாகாணங்களில் பாதியாவது கருக்கலைப்புக்கு தடை விதிக்க ஏதுவாக புதிய சட்டம் அல்லது கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் சட்டங்களை 13 மாகாணங்கள் இயற்றியுள்ளன. மற்றவை சில புதிய கட்டுப்பாடுகளை விரைவாக நிறைவேற்ற வாய்ப்புள்ளது.

மொத்தத்தில், கருத்தரிக்கும் வயதுடைய சுமார் 36 மில்லியன் பெண்கள் கருக்கலைப்புக்காக செல்ல முடியாத நிலையை இது ஏற்படுத்தும் என்று பிளாண்ட் பேரன்ட்ஹுட் (plant parenthood) என்ற கருக்கலைப்பு சேவை வழங்கும் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

15 வாரங்களுக்குப் பிந்தைய சிசுவை கருக்கலைப்பு செய்வதற்கு மிஸ்ஸிசிப்பி மாகாணம் விதித்த தடையை எதிர்த்து நடைபெற்ற டாப்ஸ் மற்றும் ஜாக்சன் மகளிர் சுகாதார அமைப்பு (Dobbs v Jackson Women's Health Organization ) இடையிலான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. கன்சர்வேட்டிவ் உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அந்த நீதிமன்ற அமர்வில், கருக்கலைப்புக்கு வழங்கப்பட்டு வந்த அரசியலமைப்பு உரிமைக்கு முடிவு காணும் வகையில், சித்தாந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

கருக்கலைப்புக்கான உரிமையை அரசியலமைப்பு வழங்கவில்லை என்று நாங்கள் கருதுகிறோம். மேலும் கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மக்களுக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் திரும்ப வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பின் ஒரு பகுதியில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தமது சொந்த தீர்ப்புக்கு முற்றிலும் உள்ளது. இப்படி நடப்பது மிகவும் அரிதான செயல். மேலும் தேசத்தை பிளவுபடுத்தும் அரசியல் வாதங்கள் இதன் மூலம் தூண்டப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

அத்துடன், இத்தீர்ப்பின் மூலம் கருக்கலைப்பு பற்றிய கருத்துக்கள் தொடர்பாக முரண்பட்ட நிலைபாடு நிலவும் பென்சில்வேனியா, மிஷிகன், விஸ்கான்சின் உள்ளிட்ட மாகாணங்களில் தேர்தல் அடிப்படையில் ஒவ்வோர் முறையும் தடை விதிக்கும் சட்ட நடைமுறையை தீர்மானிக்க முடியும்.

மற்றவற்றில், தனி நபர்கள் கருக்கலைப்புக்காக வெளி மாகாணங்களுக்குச் செல்லலாமா? என்பது உள்ளிட்ட புதிய சட்டப் போராட்டங்களுக்கு இந்தத் தீர்ப்பு வழிவகுக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கலிபோர்னியா, நியூ மெக்சிகோ, மிஷிகன் உள்ளிட்ட பல மாகாணங்களில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஆளுநர்கள் கருக்கலைப்பு உரிமையை தங்கள் அரசியலமைப்பிற்குள் உள்ளடக்கும் திட்டங்களை ஏற்கெனவே அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கருக்கலைப்பு உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஏழு மாகாணங்களின் ஜனநாயக கட்சியின் சட்டமா அதிபர்களுடன் கடந்த வியாழக்கிழமை விவாதித்துள்ளார்.

1973ஆம் ஆண்டு நடந்த ரோ மற்றும் வேட் (Roe v.Wade)வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏழுக்கு இரண்டு வாக்குகள் மூலம் ஒரு பெண்ணின் கர்ப்பத்தை கலைக்கும் உரிமை அமெரிக்க அரசியலமைப்பால் பாதுகாக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பு அமெரிக்கப் பெண்களுக்கு அவர்கள் கருத்தரித்த முதல் மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்வதற்கான முழுமையான உரிமையை வழங்கியது. ஆனால் இரண்டாவது மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்து கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுவே 6-9 மாதங்களில் கருக்கலைப்பு செய்வது அறவே தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த பல தசாப்தங்களில், கருக்கலைப்புக்கு எதிரான தீர்ப்பை சுமார் ஒரு டசின் மாகாணங்கள் திரும்பப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE