Tuesday 23rd of April 2024 09:28:37 PM GMT

LANGUAGE - TAMIL
-
இஸ்ரேல் நாடாளுமன்றைக் கலைக்கத் தீர்மானம்;  4 ஆண்டுகளில் ஐந்தாவது பொதுத் தோ்தல் விரைவில்!

இஸ்ரேல் நாடாளுமன்றைக் கலைக்கத் தீர்மானம்; 4 ஆண்டுகளில் ஐந்தாவது பொதுத் தோ்தல் விரைவில்!


இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தீா்மானம் நேற்று வியாழக்கிழமை இஸ்ரேலிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து 4 ஆண்டுகளில் ஐந்தாவது பொதுத் தோ்தல் விரைவில் இஸ்ரேலில் நடைபெறவுள்ளது.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தை கலைக்கும் இறுதிக்கட்ட தீா்மானத்துக்கு ஆதரவாக 92 எம்.பி.க்கள் வாக்களித்தனர். தீர்மானத்தை எதிர்த்து ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை. அதையடுத்து, தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்படுவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, அடுத்த நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் நவம்பா் 01 நடத்தப்படவுள்ளது.அதுவரை, நாட்டின் இடைக்கால பிரதமராக தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா் யாயிா் லபீட் பொறுப்பு வகிப்பாா்.

இஸ்ரேலில் தொடா்ந்து நடைபெற்று வந்த தோ்தல்களில் எந்தக் கட்சியாலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், அரபு கட்சிகள் உள்பட எதிரெதிா் நிலைப்பாடுகளைக் கொண்ட கட்சிகளை உள்ளடக்கிய தேசிய அரசு சோதனை முறையில் அமைக்கப்பட்டது.

எனினும், அந்த அரசு அமைக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் 1996-99 வரை பிரதமராக பதவி வகித்த நெதன்யாகு, 2009-ஆம் ஆண்டுமுதல் தொடா்ந்து பிரதமராக பதவி வகித்து வந்தார். அவரது தலைமையிலான அரசு தனது 4 ஆண்டுகளை கடந்த 2019-இல் நிறைவு செய்ததைத் தொடா்ந்து, அந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற்றது.

எனினும், எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இரண்டாவது முறையாக மீண்டும் அதே ஆண்டு செப்டம்பா் மாதம் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தலிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆளும் கட்சிக் கூட்டணியும், எதிா்க்கட்சிக் கூட்டணியும் இணைந்து தேசிய அரசை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

எனினும், அந்த அரசில் பிரதமராகப் பொறுப்பு வகிப்பதில் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், முக்கிய எதிா்க்கட்சியான புளூ அண்ட் வைட் கட்சியின் தலைவா் பெஞ்சமின் காண்ட்ஸுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இதனால், தேசிய அரசை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முறிந்தது.

அதையடுத்து, இஸ்ரேல் வரலாற்றில் முதல்முறையாக, ஓராண்டுக்குள் 3-ஆவது முறையாக 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தலிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தேசிய அரசை அமைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன.

அதனைத் தொடா்ந்து, இரண்டே ஆண்டுகளில் 4-ஆவது முறையாக இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு 2021 மாா்ச் மாதம் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தலிலும் யாருக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை.

புதிய அரசை அமைக்க நெதன்யாவுக்கு ஜனாதிபதி ரூவன் ரிவ்லின் அழைப்பு விடுத்தாா். எனினும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைப் பெற நெதன்யாகு தவறியதால் புதிய அரசை அமைப்பதற்கான வாய்ப்பு முக்கிய எதிா்க்கட்சியான யேஷ் அடீடுடின் தலைவா் யாயிா் லபீடுக்கு வழங்கப்பட்டது. அவா் யாமீனா கட்சித் தலைவா் நாஃப்டாலி பென்னட்டுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தாா்.

இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. கூட்டணி ஒப்பந்தத்தின் கீழ், பிரதமராக பென்னட்டும் வெளியுறவுத்துறை அமைச்சராக யாயிா் லபீடும் பொறுப்பேற்றனர். சுழற்சி முறையில் ஆட்சிப் பொறுப்பு மாற்றியமைக்கப்படும் போது பிரதமராக யாயிா் லபீட் பொறுப்பேற்பதாக இருந்தது.எனினும், கூட்டணி அரசில் எதிரெதிா் சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள் இருந்த நிலையில் கூட்டணியில் உள்பூசல் அதிகரித்து வந்தது. இதனால், பென்னட் தலைமையிலான அரசு பெரும்பான்மை பலம் இழந்தது.

இதனையடுத்தே நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்தும் தீா்மானம் இஸ்ரேலிய நாடாளுமன்றில் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE