Wednesday 29th of November 2023 11:50:21 AM GMT

LANGUAGE - TAMIL
.
உயிர்த்தெழுகை - 10 (நா.யோகேந்திரநாதன்)

உயிர்த்தெழுகை - 10 (நா.யோகேந்திரநாதன்)


பொன்னா இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு வெளியே வந்து கையைக் கழுவியபோது திண்ணைக் கப்பில் முதுகைச் சாய்த்தவராகச் சுருட்டைப் புகைத்துக்கொண்டிருந்த காசியர், “என்ன பிள்ளை, குலத்தான் வருவனெண்டாய் ... இன்னும் காணயில்லை...?” எனக் கேட்டார்.

சாப்பாட்டுத்தட்டைச் சிறாம்பில் வைத்து விட்டுத் திரும்பிய பொன்னா “அவரப்பு... பெரியத்தானைப் பாத்துக் கொண்டு நிக்கிறார். வந்திடுவார்...” என்றாள்.

அவள் சொல்லி முடிக்கும்போது தான் குலம் வந்து கடப்புத் தடியைக் கழற்றுவதை அவள் கவனித்தாள்.

“என்ன.... மச்சான்.... இவ்வளவு நேரமும் செய்தனீ...? இஞ்சை அப்பு.... எங்கை... எங்கையெண்டு ஒரே துறட்டி..?.” எனக் குலத்திடம் கேட்டாள் பொன்னா.

“சேனாதியண்ணன் இப்பதானே வந்தவன்....”.

“அவர் சைக்கிளைப் பற்றி ஒண்டும் கேட்கேல்லையே...?”

“நான் விசயத்தைச் சொன்னனான். அவன் கவலைப்படாதை எண்டு என்னைச் சமாதானப்படுத்திப் போட்டு பட்டிக்குடியிருப்பிலை வைச்ச வெங்காயம் வாற கிழமை கிண்டப் போறானெண்டும், வித்தவுடனை வேறை சைக்கிள் வேண்டித்தாறனெண்டும் சொல்லியிட்டான்..” என்றான் குலம்.

“நல்லா வேண்டிக் கட்டுவாய்” எண்டு பாத்தன்...! தப்பியிட்டாய்” என்ற பொன்னா, ஒரு பலகைக் கட்டையை எடுத்துக் கொண்டு வந்து முற்றத்தில் போட்டு விட்டு, “இரன்!”, என்றாள்.

காசியர், “ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாவோடை போன மாதிரித் தப்பியிட்டாய்! ஏதும் ஏறுமாறாய் நடக்க ஆலடி வைரவர் விடார்...”! என்றார் ஒருவித திருப்தியுடன்.

நாடரின் தென்னம் கள்ளும், உடும்பு இறைச்சிக் கறியும் சுருட்டுப் புகையின் மணத்தை மேவி ஒரு சந்தோசமான ஏவறையை வெளியே விட்டன.

மாணிக்க நாடார்தான் அந்த ஊரில் வாழும் ஒரே சீவல் தொழிலாளி. எல்லோரும் அவனின் பேரைக் கைவிட்டு அவனை “நாடார்...” எனச் சுருக்கமாக அழைப்பதுண்டு. காசியர், சரவணையப்பு உட்பட அந்த ஊரிலுள்ள பலர் அவனின் வாடிக்கையாளர்கள்தான்.

காசியர் “சாப்பிட்டிட்டியே...?” எனக் கேட்டார்.

“இல்லை... வந்தவுடன் குடிச்ச மோர் வயிறூதிக் கொண்டிருந்தது. பிறகு வந்து சாப்பிடுறன் எண்டிட்டு வந்திட்டன்...” என்றான் குலம்.

“பிள்ளை அவனுக்குச் சாப்பாட்டைப் போட்டுக் குடு!....” என்ற காசியர், “இண்டைக்கு நல்ல உடும்புக் கறி” எனச் சொல்லிவிட்டு பொன்னாவைப் பார்த்தார்.

பொன்னா சிறாம்பியில் கவிழ்த்துக் கிடந்த தட்டை எடுத்துக் கழுவிக் கொண்டு அடுக்களைக்குள் சென்றாள்.

“உடும்பொண்டைக் கண்டிட்டு எங்கடை “சூரன்“ நாய் கலைச்சுக் கொண்டு போக அது ஓடிப்பொய் புத்துக்கை பூந்திட்டுது. நாய் வாலைப் பிடிச்சு இழுத்தது! பின்னாலை ஓடிப்போன நான் மடியுக்கை கிடந்த வில்லுக் கத்தியாலை உடும்பின்ரை அடி வயித்திலை கீற அது பிடியை விட்டிட்டுது. அந்த இறைச்சியிலைதான் குஞ்சாத்தைக்கும் குடுத்துவிட்டனான்...”.

“ஓ.... அங்கையும் உடும்புக் கறியெண்டு தான் அவ சொன்னவ...!”

பொன்னா சாப்பாடு போடப்பட்ட வட்டிலைக் கொண்டு வந்து குலத்திடம் கொடுத்தாள். குலம் வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தான்.

மாணிக்கத்தின் தென்னங்கள்ளும் வயிறு நிறைந்த சாப்பாடும் கண்களைச் சொருகவே காசியர், “குலம் நீ ஆறுதலாய் வடிவாய்ச் சாப்பிட்டிட்டுப் போ...... நான் கொஞ்சம் கண்ணயரப் போறன்....!” என்றுவிட்டு எழுந்து மாலுக்குள் போனார். மழையோ, பனியோ எதுவென்றாலும் மாலுக்குள்தான் அவரின் படுக்கை.

அவன் சாப்பிடுவதையே கண் வெட்டாமல் பாத்துக் கொண்டிருந்த பொன்னா, “மச்சான்.... நீ சாப்பிடாமல் வருவாயெண்டு தெரிஞ்சிருந்தால் நானும் சாப்பிடாமலிருந்திருப்பன். இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டிருக்கலாம்....”என்றாள். மென்னொளியை அள்ளிப் பொழிந்து கொண்டிருந்த நிலவிலும் உடலை வருடிச் சென்ற மெல்லிய காற்றிலும் சேர்ந்து சாப்பிடுவதில் ஒரு எல்லையற்ற இன்பம் இருப்பதாகவே அவள் கருதினாள்.

குலம் மெல்ல மால்பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு, “இப்ப... நான் தீத்தி விடுறன்.... சாப்பிடு..” என்றான் மிகவும் தணிந்த குரலில்.

“உனக்கு ஆகலும் வர.... வர....” என்ற பொன்னா எழுந்து, “பொறு ரசம் கொண்டு வாறன்...!” என்று விட்டு உள்ளே போனாள்.

அன்றுதான் அடுக்களைக்குள் அவனை முத்தமிட நினைத்ததன் மூலம் தான் அவனிடம் அளவுக்கு மீறி நடந்து விடக்கூடும் எனவும், அதன் காரணமாக அவன் தன்னிடம் இடம் கண்டு விடவும் கூடும் எனவும் அவளுக்குத் தோன்றியது. அவனிடமுள்ள அளவற்ற அன்பின் காரணமாகவே தான் அப்படி நினைப்பதாகவும் தன்னிடம் அவன் கொண்ட அன்பின் காரணமாகவே அவனும் இப்படியெல்லாம் ஆசைப்படுவதாகவும் அதில் தவறு இல்லை போலவும் அவளுக்குத் தோன்றியது. ஆனால் இப்படியான நடவடிக்கைகளால் எல்லை மீறும் ஆபத்து உண்டு என்பதை அவள் மறக்கவில்லை.

கொண்டு வந்த ரசத்தை அவள் அவனுக்கருகில் வைத்துவிட்டு அவனெதிரே முழங்கால் குத்தி அமர்ந்து கொண்டு,

“என்னிலை கோபமே...?” எனக் கேட்டாள்.

“இல்லை..!” என்ற அர்த்தத்தில் தலையசைத்தான்.

அவள் வாயைத் திறந்து ”ஆ....” என்றாள்.

அவன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்துவிட்டு ஒரு பிடி ஊட்டி விட்டான். அந்த நிலவொளியிலும் அவனின் முகம் பிரகாசமடைந்ததை அவளால் அவதானிக்க முடிந்தது.

அவள் கனிவான குரலில், ”மச்சான்...!” என்றாள்.

அவனும், “என்ன ...?” எனக் கேட்பது போன்று அவளின் முகத்தைப் பார்த்தான்.

பொன்னா, “மச்சான்....” இனி இப்படியான செல்ல விளையாட்டுகளெல்லாம் இதுக்குப் பிறகு தான். என்ன மச்சான்...?”, என்று விட்டுத் தாலி கட்டுவது போல் தன் கழுத்தைச் சுற்றிக் கையால் சைகை செய்தாள்.

அவனும் “உன்ரை விருப்பம் தான் என்ரை விருப்பமும்...” எனச் சொல்லிவிட்டு மனப்பூர்வமாகச் சம்மதித்ததன் அறிகுறியாக மெல்லப் புன்னகைத்தான்.

இரசக் கிண்ணத்தைக் கையில் எடுத்த பொன்னா, “விடட்டே...?” எனக் கேட்டாள்.

“விடு!”, என்ற குலம், “உடும்புக் கறி கொண்டெழுப்புது...” எனப் பாராட்டினான். பொதுவாகவே பொன்னா குஞ்சாத்தையைவிட ருசியாகச் சமைப்பாள். காசியரின் கள்ளு வாய்க்கு நாக்கில் ருசிக்கவேண்டும் என்பதால் அவள் சமையலில் கூடுதல் அக்கறை காட்டுவதுண்டு.

கைகழுவச் செம்பில் தண்ணீர் எடுத்துக் கொடுத்த பொன்னா, “என்ன மச்சான் இந்த இயக்கம் கூத்தாடிக் கொண்டு சனத்துக்குக் கரைச்சல் குடுத்துக் கொண்டிருக்கிறாங்கள்?” எனக் கேட்டாள்.

“என்ன கரைச்சல்?”

“அவன் செங்கண்ணன் போகவரவிடாமல் என்னைக் கலைக்கிறான். இண்டைக் கென்னண்டால் இயக்கம் ஆமிக்காரரோடை சொறியப் போய் நீ தப்பினதும் அருந்தப்பு! முள்ளியவளைச் சனமும் நாலு பேர் செத்திட்டுதுகள்”.

“விளங்காம கதையாதை பொன்னா?” என்றான் குலம் மெல்லிய கோபத்துடன், செங்கண்ணன் தனக்குத் தொல்லை கொடுப்பதைப் பொன்னா ஏற்கனவே குலத்திடம் சொல்லியிருந்தாள். குலம் பொன்னாவிடம் பொறுமையாயிருக்கும்படியும் தான் அது பற்றி விதானையாரிடம் சொன்னதாகவும், அவர் நேரம் வரும்போது நல்ல பாடம் படிப்பிப்பதாகவும் சொல்லியிருந்தார்.

பொன்னா செங்கண்ணன் குழுவினரையும் அன்று இராணுவத்தின் மேல் தாக்குதல் தொடுத்த அணியினரையும் ஒரே அமைப்பு எனக் கருதியதால்தான் பொன்னா அப்பிடிக் கதைத்தாள் என்பதைக் குலம் புரிந்து கொண்டான்.

“பொன்னா! இவங்கள் வேறை, அவையள் வேறை! முதல் இரண்டு தரப்பும் ஒரே இயக்கமாய்த்தான் இருந்தவங்கள். பிறகு செங்கண்ணன் ஆக்களின்ரை நடத்தை சரியில்லாததாலை அவங்களைத் தலைமை கலைச்சு விட்டுட்டுது. அவங்கள் வேறை இயக்கமொண்டு துவங்கி வைச்சுக்கொண்டு அட்டகாசம் போடுறாங்கள். காண்டியண்ணை ஆக்கள் சேர்ந்திருக்கிற இயக்கம் சரியான ஒழுக்கமும் கட்டுப்பாடும் உள்ளது”.

“எனக்கிதெல்லாம் விளங்குமே மச்சன்...”, என்றாள் பொன்னா அப்பாவித்தனமாக. பின்பு அவள், “ஆனால்....! என்றுவிட்டு இடை நிறுத்தினாள்.

“என்ன, பொன்னா...?”

“ஒரு நாளுமில்லாமல் இண்டைக்கு என்னிலை பாய்ஞ்சு விழுந்திட்டாய்?”

“அட.... அதே.... என்னண்டால் உயிரைக் குடுத்து எங்களுக்காகப் போராடுறவையை, “சொறியினம், கிறியினம்”, எண்டு சொன்னவுடனை எனக்கு என்னையறியாமலே கோபம் வந்திட்டுது...” என்றான் குலம்.

“இன்னும் கோபம் போகேல்லையே...?”

அவன் சிரித்துக்கொண்டே, “போய்க் கொண்டிருக்குது...” என்றான்.

“இந்தா.... இனிப் போகும்!” என்றுவிட்டு அவள் எட்டி அவனின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள்!

குலம் ஆச்சரியத்துடன் “சாப்பிடயுக்கை ஏதோ சொன்னாய்? இப்ப ....” எனக் கேட்டான்.

அவள் மெல்லிய நாணத்துடன், “இப்போதைக்கு இதுதான் கடைசி ...” என்றாள்.

அவர்களுக்கிடையே பரிமாறப்பட்ட கடைசி முத்தம் அதுதான் என்பதை அவர்கள் இருவருமே கனவிலும்கூட நினைத்துப் பார்த்ததில்லை.

(தொடரும்)


Category: வாழ்வு, இலக்கியம்
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு, முள்ளியவளைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE