Saturday 20th of April 2024 07:13:53 AM GMT

LANGUAGE - TAMIL
.
உயிர்த்தெழுகை - 11 (நா.யோகேந்திரநாதன்)

உயிர்த்தெழுகை - 11 (நா.யோகேந்திரநாதன்)


மெல்ல மெல்லக் கிழக்கு வானம் வெளித்துக் கொண்டிருக்கும்போதே குலம் பிள்ளையார் கோவிலடிக்கு வந்து விட்டான். அந்தக் கோவிலடி ஆளரவமற்று வெளிச்சோடிப் போயிருந்தாலும் பறவைகளின் ரீங்காரமும் குரங்குகள் பாய்வதால் சிறு மரக்கிளைகள் எழுப்பும் ஓசையும் அந்த இடத்துக்கு ஒரு ரம்மியம் நிறைந்த சந்தடியை வழங்கிக் கொண்டிருந்தன.

குலம் சிறுவனாக இருந்த காலத்தில் அந்தக் குளக்கரையில் நின்ற அரச மரத்தின் கீழ் ஒரு கல்லையே வைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். அவ்வூர் மக்கள் வேட்டைக்கோ, தடிவெட்டவோ அல்லது தேனெடுக்கவோ போகும்போது அந்தப் பிள்ளையாரை பூவைத்து வணங்கியே செல்வதுண்டு.

மாலை வேளைகளில் யானைக் கூட்டம் மேயவும் நீ்ர் அருந்தவும் குளத்தின் அலை கரைக்கு வருவதுண்டு. அவற்றை ஊர் மனைக்குள் புகுந்து அழிவுகளை ஏற்படுத்தாமல் பிள்ளையார் பார்ப்பார் என்பது அவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

சிறிது காலத்தின் பின்பு தனிக்கல்லு முதலாளி தனது சொந்தச் செலவிலேயே ஒரு சிறுகோவிலைக் கட்டி ஒரு கருங்கல்லு பிள்ளையாரையும் பிரதிஷ்டை செய்துவிட்டு ஒவ்வொரு வெள்ளியும் நெடுங்கேணியிலிருந்து வந்து பூசை செய்வதற்கு ஒரு பூசகரையும் ஒழுங்கு பண்ணியிருந்தார். அந்த ஊரிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் வருடாவருடம் ஐயருக்கு நெல்லாகவும் தானியங்களாகவும் தட்சணையாகக் கொடுப்பதுண்டு. ஒவ்வொரு ஆவணிச் சதுர்த்தியிலும் பொங்கல் வெகு விமர்சையாக இடம்பெறும். அன்று பெரும் திருவிழாவே இடம்பெறும். யாழ்ப்பாணத்திலிருந்து தவில் கோஷ்டியினர் அழைத்து வரப்படுவதுமுண்டு.

குலம் அடிவானத்தைப் பார்த்தபோது வானம் மெல்ல மெல்ல செந்நிறத்தை இழந்து கொண்டிருந்தது.

அவன் மெல்ல மெல்லக் குளக்கட்டில் ஏறி குளத்தின் மறுகரையைப் பார்த்தான். அங்கு நின்ற உயரம் குறைந்த மரங்களில் வெண்ணிறப் பறவைகள் கிளைகள் வெளியே தெரியாதளவுக்கு அவற்றை வெள்ளை நிறத்தில் போர்த்தியிருந்தன. சில பறவைகள் கூட்டமாக மெலெழுவதும் பின்பு வந்து இருப்பதுமாக வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தன.

குலம் மீண்டும் இறங்கி வந்து வெளியே துருத்திக் கொண்டிருந்த ஒரு வேரில் அமர்ந்து கொண்டான். நேரமாக நேரமாக குலத்தின் மூளை காண்டீபன் ஏன் வரச் சொன்னான்? என்ன கேட்பான்? போன்றவற்றை எண்ணியெண்ணிக் குழம்பிக் கொண்டிருந்தது.

நேரம் கடந்து கொண்டிருக்கவே குலம் கிழக்குப் பக்கமாகச் சூரியனை நோக்கினான். நேரம் எட்டு மணியைக் கடந்து விட்டது போல் தோன்றியது. ஆறு மணிக்கு வரும்படி கூறியவர்கள் இன்னும் வராத நிலையில் அவன் புறப்படுவதாகத் தீர்மானம் எடுத்துக்கொண்டு இருந்த இடத்தை விட்டு எழுந்தான்.

“அண்ணா!” என்ற அழைப்பைக் கேட்ட குலம் திரும்பிப் பார்த்தான்.

ஒரு இளைஞன் கோவில் கட்டிடத்துக்குப் பின்புறமிருந்து ஒரு சைக்கிளை உருட்டியவாறு வந்து கொண்டிருந்தான்.

அவன் அருகில் வந்ததும் “நீங்கள் ...? எனக் கேட்டுவிட்டு இடை நிறுத்தினான்.

குலம் அவன் ஏன் தனது பெயரைக் கேட்கிறான் என யோசித்த போதும் “நான் குலம்!” என்றான்.

அவன் “உங்களை காண்டியண்ணை சந்திக்கச் சொன்னார்!” என்றான்.

“அவர் வரேல்லையோ?”

“இல்லை! உங்களட்டை இந்தச் சைக்கிளைக் குடுக்கச் சொன்னார்”.....! என்றான் அவன்.

குலம் குழப்பத்துடன் “இது என்ரை சைக்கிளில்லை!” என்றான்.

“தெரியும்! உங்கடை சைக்கிளைப் பிறகு வந்த ஆமிக்காரர் ட்ரக்கிலை தூக்கிப் போட்டுக்கொண்டு போட்டாங்கள். எங்களாலை தானே அது உங்களுக்கு இல்லாமல் போனது. அதாலைதான் காண்டியண்ணை இதை உங்களுக்குக் குடுக்கச் சொன்னவர்.... !”

ஆச்சரியப்பட்ட குலம் சில வினாடிகள் யோசித்துவிட்டு, “வேண்டாம் தம்பி.... எனக்கு வெங்காயம் கிண்டினவுடனை அண்ணர் புதுச் சைக்கிள் வேண்டித் தருவர்” என்றான்.

“அவருக்கு ஏன் வீண் சிரமம்.....” இப்ப நீங்கள் இதைக் கொண்டு போங்கோ?”

குலம் தயக்கத்துடன் “வேண்டாம் தம்பி!” என்றான்.

“காண்டியண்ணை குடுக்கத்தான் சொன்னவர். திருப்பிக்கொண்டு வரச் சொல்லேல்லை” என இறுக்கமாகச் சொன்ன அவன், சைக்கிளைக் குலத்தின் கையில் கொடுத்துவிட்டு, “நீங்கள் எங்களுக்கு உதவி செய்யிறதெண்டால் வேறை பல விதங்களிலை செய்யலாம்” என்று விட்டுப் பதிலை எதிர்பாராமல் வேகமாகப் போய்க் காட்டில் மறைந்தான்.

தனது சைக்கி்ளை விடத் தரமானதாக அந்த “ஹீரோ” சைக்கிள் இருந்ததை அவதானித்த குலம் அதில் ஏறி ஓட ஆரம்பித்தான்.

அவனின் காதில் “வேறை பல விதங்களிலை உதவி செய்யலாம்” என்ற அந்த இளைஞனின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் விழுந்து கொண்டிருந்தன. அவன் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ உதவி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவான் என்பதை அவன் சற்றும் அப்போது எதிர்பார்க்கவில்லை.

தான் அப்படி உதவி செய்யமுடிவெடுத்தால் பொன்னா அதை விரும்புவாளா என்ற கேள்வியும் அவனுள் எழத் தவறவில்லை. ஆனால் அவளைச் சம்மதிக்க வைக்க முடியமென்ற நம்பிக்கையும் அவனுள் எழாமல் இல்லை.

அவன் வீட்டுக்கு வந்தபோது சேனாதி பட்டிக்குடியிருப்பு வெங்காயத் தோட்டத்துக்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். அவன் புல்லுப் பிடுங்க நாவலர் பண்ணையில் குடியிருக்கும் சில பெண்களை வரும்படி கூறியிருந்தான்.

அவன் குலத்தைக் கண்டதும், “ஆரின்ரை சைக்கிள்?” எனக் கேட்டான்.

குலம் கோவிலடியில் நடந்த விஷயங்களையெல்லாம் அவனிடம் கூறினான்.

எல்லாவற்றையும் கேட்ட சேனாதி “நல்ல பொடியளாய்க் கிடக்குது...” என்று விட்டு, “ஆரும் கேட்டால் இது நெடுங்கேணியிலை ஒருதரட்டை அரை விலைக்கு வேண்டினதெண்டு சொல்லு” எனச் சொல்லிவிட்டு தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

அங்கு வந்த குஞ்சாத்தை “குலம் சட்டிக்கை பழஞ்சோறு போட்டு வைச்சிருக்கிறன். எடுத்துத் தின்!” என்றுவிட்டு பின் பக்கமாகப் போனாள்.

குலம் சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்து கைகழுவிக் கொண்டிருந்தபோது சின்னக்குட்டி தனது சைக்கிளைக் கொண்டு வந்து முற்றத்தில் நிறுத்தினான். அதன் பெரிய இரும்புக் கரியலில் உரப்பையினுள் கட்டப்பட்ட பெரிய பொதியொன்று இருந்தது.

சின்னக்குட்டி அந்தப் பொதியின் வாய்க்கட்டை அவிழ்த்தவாறே, ”எங்கையடா குலம், குஞ்சாத்தை?” எனக் கேட்டான்.

“அவ பின்னாலை கிடுகு பின்னிக் கொண்டிருக்கிறா .... கூப்பிடட்டே?” எனக் கேட்டான் குலம்.

“ஓ..... கூப்பிடு...!” என்ற சின்னக்குட்டி “ராத்திரியடா மோட்டையிலை நல்லதொரு மான் கலை பட்டுது .... நானும் முனியாண்டிமாய் காவியந்து உரிச்சு வெட்டிப் போட்டு இஞ்சாலை கொண்டந்தனான்!” எனக் கூறினான்.

அந்த மோட்டைக்கு மான், மரை என்பன நீரருந்த வருவதுண்டு. அவற்றை சுலபமாகச் சுடும் வகையில் ஒரு பாலை மரத்தில் அவன் “ஒளி” கட்டி வைத்திருந்தான். நீண்ட கொம்புகளைக் கொண்ட மான் கலையொன்று தண்ணீர் குடித்து விட்டுத் திரும்பும் போது தனது “லைட்டை” அதன் முகத்தை நோக்கி அடித்தான். அது கண்ணைக் கொடுக்கவும் வெடிவிழவும் கணக்காயிருந்தது. நெற்றி வெடியில் மான் சுருண்டு விழுந்தது.

எந்தவொரு வேட்டைக்காரனும் மிருகங்கள் தண்ணீர் குடிக்கவரும்போது அது எவ்வளவு வாய்ப்பான இலக்கில் வந்தாலும் வெடி வைப்பதில்லை.

முணியாண்டியும் சின்னக்குட்டியும் காவு தடியில் தூக்கி வந்து வாடியில் வைத்து உரித்து வெட்டி இறைச்சியாக்கியிருந்தார்கள்.

குஞ்சாத்தையும் அங்கு வரவே அவன் உரப்பைக்குள்ளிருந்து ஒரு தொடையை அப்படியே தூக்கிக்கொடுத்து “எணேய்..... மானெணை..... நீயும் எடுத்துக்கொண்டு காசியண்ணைக்கும் குடுத்து விடு!” என்றான் சின்னக்குட்டி.

பின்பு உரப்பையின் வயைக் கட்டியபடியே அவன், “குலம் எங்கடை கச்சேரிகாரர் போய் டொலர் பண்ணை, கென்ற் பண்ணையிலை இருக்கிற சனத்தையெல்லாம் இரண்டு கிழமையுக்கை வெளிக்கிடச் சொல்லியிட்டினமாம். வெளிக்கிடாட்டில் ஆமிதான் வந்து சுட்டுக் கலைக்குமெண்டிட்டாங்களாம்....!

“ஏனாம்?”

“டொலர் பண்ணைக்கு மறியல்காரரைக் கொண்டு வரப்போறாங்களாம். கென்ற் பண்ணையிலை சிங்கள ஊர்காவல் படைக்கு வீடுகள் கட்டிக் குடுக்கப் போறாங்களாம்!”.

“பாவம் அந்தச் சனம்... என்ன செய்யப் போகுதுகளாம்!”.

“அஞ்சாறு வரியத்துக்கு முந்தின கலவரம், பிறகு இப்போதையில் கலவரத்துக்கெல்லாம் வந்து குடியேறின சனங்கள் பயத்திலை வெளிக்கிட்டு நாவலர் பண்ணை, மருதோடைப் பக்கம் போகுதுகளாம். துவக்கத்திலை வேலைக்கெண்டு பண்ணை முதலாளியள் கொண்டு வந்து இருத்தின சனம் வெளிக்கிடுறேல்லையெண்டு இருக்குதுகளாம்!” என்றான் சின்னக்குட்டி..

“உண்மைதான்.... அதுகள் தாங்கள் வைச்சு உண்டாக்கித் தண்ணியூத்தி வளத்த மா, பிலா, தென்னையளை விட்டிட்டு என்னண்டு தான் போறது?” எனப் பதிலளித்தான் குலம்.

”ஆமியல்லே வந்து சுடுமெண்டு சனம் பயப்பிடுது” எனச் சின்னக்குட்டி ஒருவித கலக்கத்துடன் சொன்னான்.

குலம் “ஆமியென்ன ஆமி? அவையின்ரை வள்ளீசை எங்கடை பொடியள் அவையைக் கண்ணி வெடியிலை எழும்பேக்கை கண்ணாலை கண்டனான் தானே!” என ஒரு மெல்லிய சிரிப்புடன் சொன்னான்.

போராளிகளின் ஆற்றலைப் பார்த்ததுக்கே இப்படிப் பெருமையடிக்கும் குலத்தின் கதை சின்னக்குட்டிக்கு உள்ளூரச் சிரிப்பையே மூட்டியது. ஏனெனில் அடர்ந்த காடுகளிலேல்லாம் பாதை காட்டுவதற்கு அவர்கள் சின்னக்குட்டியையே அழைத்துச் செல்வார்கள். சின்னக்குட்டிக்கு மணலாற்றுக் காட்டிலுள்ள ஒவ்வொரு இடமும் தலைகீழ் பாடம். காட்டுக்குள் எந்த இடத்தில் நின்றாலும் அவன் ஒரு மரத்தின் பட்டையை உரித்துப் பார்த்து அதன் உள்நரம்புகளைக் கொண்டு தான் நிற்கும் இடத்தைத் துல்லியமாகவே சொல்லி விடுவான். ஊர்களுக்கு பெயர் இருப்பதைப் போலவே வேட்டைக்காரர் இடங்களுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்திருந்தனர்.

ஆலமரத்தில் பனை முளைத்த இடத்திற்கு பனையாலடி எனப் பெயர் உள்ளது போன்றே முடக்கிப் பாலையடி மூண்டு முதுரைச் சந்தி, காயாவனம், ஆனைமோட்டை, அருவிக் கல்லடி, ஒற்றை மாவடி எனப் பல பெயர்கள் உண்டு. போராளிகளுக்குப் பாதை காட்டிப் போகும்போது அந்த இடங்களையெல்லாம் காட்டி எப்படி அவற்றை அடையாளம் காண்பது என்பதையும் சொல்லிக் கொடுப்பான்.

ஆனால், அவன் தனக்கும் போராளிகளுக்கும் உள்ள தொடர்பு பற்றித் தனது உதவியாள் முனியாண்டி, தனது மனைவி உட்பட யாருக்குமே தெரியப்படுத்துவதில்லை.

சின்னக்குட்டி விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டான்.

அவன் வீதிக்கு வந்து சைக்கிளில் ஏறியபோது அந்தப் பச்சை ஜீப் அவனருகில் வந்து “பிரோக்“ அடித்து நின்றது.

செங்கண்ணன் எட்டிப் பார்த்து, “கரியலிலை என்ன?”, எனக் கேட்டான்.

அவன் கேட்டவிதம் சின்னக்குட்டிக்கு எள்ளளவும் பிடிக்கவில்லை. அவன் வெறுப்புடன், “மான் இறைச்சி” என்றான்.

“அப்படியே முழுவதையும் தா! காசு தாறன்!”

“வேறை ஆக்கள் சொல்லி வைச்சவை.... குடுக்க வேணும்”.

“என்ன.... அவை எங்களை விடப் பெரிய ஆக்களே?”

“எனக்கு அவை பெரிய ஆக்கள் தான்!”

செங்கண்ணன் துப்பாக்கியை ஒரு கையால் தொட்டவாறே, “தரப்போறியோ..... இல்லையோ....? என முறைப்புடன் கேட்டான்.

சின்னக்குட்டி பெரிதாகச் சிரித்துவிட்டு, “துவக்கோடை பிறந்து துவக்கோடைவாழுற எனக்குத் துவக்குக் காட்டிறியே? போடா பேயா!.....” என்றவாறே சைக்கிளை ஓட ஆரம்பித்தான்.

செங்கண்ணனின் சீறலை அவன் பொருட்படுத்தவேயில்லை.

(தொடரும்)


Category: வாழ்வு, இலக்கியம்
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு, முள்ளியவளை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE