இணையம் ஊடாக ஊடுருவல் சதி முயற்சி இடம்பெறலாம் என்ற எச்சரிக்கையை அடுத்து பிரிட்டனில் புதிய பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் நேற்று நடைபெறவிருந்த வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
நடைபெறும் தோ்தலில் இணையதளம் மூலம் சிலா் ஊடுருவி முடிவுகளை மாற்றும் அபாயம் இருப்பதாக உளவுத் தகவல் வெளியானதைத் தொடா்ந்தே வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் பிரிட்டன் அரசின் தகவல் தொடா்புத் தலைமையகத்தின் ஒரு பிரிவான இணையதள பாதுகாப்பு மையம் புதிய கட்சித் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளில் சில மாற்றங்கள் செய்ய கன்சா்வேட்டிவ் கட்சிக்கு அண்மையில் பரிந்துரைத்துள்ளதாக ‘தி டெய்லி டெலகிராஃப்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
கட்சித் தலைவரையும் அதன் மூலம் அடுத்த பிரதமரையும் தோ்ந்தெடுப்பதற்காக கட்சி உறுப்பினா்கள் தபால் மூலம் வாக்களித்தாலும், இணையதளம் மூலம் பின்னா் தங்களது முடிவுகளை மாற்றிக் கொள்ள அவா்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனினும், இணையதளம் மூலம் வாக்களிக்கும் போது அதில் சிலர் சட்டவிரோதமாக ஊடுருவி, முடிவுகளை மாற்றியமைப்பதற்கான அபாயம் உள்ளது. எனவே, இந்த நடைமுறை தொடர்பான முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கன்சர்வேட்டிவ் கட்சியிடம் இணைய பாதுகாப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, ஒரு முறை வாக்களித்த கட்சி உறுப்பினர்கள் தங்கள் முடிவுகளை மாற்றி மீண்டும் வாக்களிக்கும் வாய்ப்பை நீக்க கன்சர்வேட்டிவ் கட்சி முடிவு செய்துள்ளது.
மேலும், இணையதள ஊடுருவலில் இருந்து தப்புவதற்காக, வாக்களிப்பு முறையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏதுவாக, வாக்களிப்பை சற்று தாமதமாக்க கட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்று ‘தி டெய்லி ரெலிகிராப்’ தெரிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி அரசு இல்லத்தில் கேளிக்கை விருந்து நடத்தியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியையும் பிரதமர் பதவியையும் போரிஸ் ஜோன்ஸன் கடந்த மாதம் 7-ஆம் திகதி ராஜினாமா செய்தாா்.
அவருக்குப் பதிலாக கட்சியின் புதிய தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படுபவா் நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த நிலையில், கட்சித் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு கன்சா்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களிடையே 5 சுற்றுகளாக நடைபெற்றது.
வாக்கெடுப்பின் அனைத்து சுற்றுகளிலும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்தாா். கடைசியாக கடந்த 20-ஆம் திகதி நடைபெற்ற 5-ஆவது சுற்று வாக்குப் பதிவில் ரிஷி சுனக் முதலிடத்தையும் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.
அதனைத் தொடா்ந்து, அவா்களில் ஒருவரை கட்சியின் தலைவராகவும் அதன் மூலம் நாட்டின் அடுத்த பிரதமராகவும் ஜூலை 22 முதல் செப்டம்பா் 2-ஆம் திகதி வரை நடைபெறும் கன்சா்வேட்டிவ் கட்சித் தோ்தலில் நாடு முழுவதும் உள்ள சுமாா் 1.8 இலட்சம் கட்சி உறுப்பினா்கள் தோ்ந்தெடுப்பாா்கள்.
புதிய பிரதமரின் பெயர் செப்டம்பர் 5-ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து