அமெரிக்காவில் குரங்கம்மை நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்நோயை பொது சுகாதார அவசரநிலையாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த முடிவின் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுக்க தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படுவதுடன், விரைவுபடுத்தப்படும்.
அமெரிக்காவில் இதுவரை 6,600 பேருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டர்களில் 25 வீதமானவர்கள் நியூயோர்க் மாகாணத்தில் உள்ளனர். நியூயோர்க் மாகாணம் கடந்த வாரம் குரங்கம்மை சுகாதார அவசர நிலையை அறிவித்தது.
தொடர்ந்து அதிக நோயாளர்களைக் கொண்ட கலிபோர்னியா மற்றும் இல்லினாய்ஸ் மாகாணங்களும் அவசர நிலையை அறிவித்தன. இதனையடுத்தே நாடு முழுவதும் தற்போது குரங்கம்மை பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டு இதுவரை உலகளவில் 26,000 க்கும் மேற்பட்ட குரங்கம்மை நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
குரங்கம்மை பாதிப்புடன் அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஒருபால் உறவில் ஈடுபடும் ஆண்கள் என என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனினும் இது முற்றிலும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்று அல்ல. பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு மூலம் பரவலாம் எனவும் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக உலக அளவில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அறிவித்தது. இதன்மூலம் அதிகபட்ச எச்சரிக்கையுடன் இருக்கும் நோய் பரவலாக குரங்கம்மை வகைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.