Monday 11th of November 2024 02:13:20 AM GMT

LANGUAGE - TAMIL
.
உயிர்த்தெழுகை - 17 (நா.யோகேந்திரநாதன்)

உயிர்த்தெழுகை - 17 (நா.யோகேந்திரநாதன்)


ஆவணிச் சதுர்த்தியன்று குளக்கரைப் பிள்ளையார் கோவில் வளாகம் கலகலப்படைய ஆரம்பித்துவிட்டது.

ஐயர் அதிகாலைாயிலேயே வந்து அந்த சிறுகோவில் கட்டிடத்தைக் கழுவி, சாம்பிராணி போட்டுப் பின் காலைப் பூசையையும் முடித்துவிட்டார். அன்றைய பொங்கல் கருமங்கள் எல்லாமே பூசாரி கந்தர்ப்பர் தலைமையிலேயே இடம்பெறும் என்ற போதிலும் ஐயர் மூன்று நேரப் பூசைகளையும் நடத்தி பக்தர்களுக்குத் திருநீறு, சந்தனம், தீர்த்தம் வழங்குவார்.

காலையிலேயே இருபுறமும் வரிசையாக காப்புக்கடைகள், பாத்திரக்கடைகள், மணிக்கடைகள், தற்காலிக தேநீர்க் கடைகள், ஐஸ்கிறீம் வாகனங்கள் என்பன வியாபாரத்துக்குத் தயாராகி விட்டன. மதியம் நெருங்க நெருங்க அயல் கிராமங்களிலிருந்து மக்கள் வண்டில்களிலும் உழவு யந்திரங்களிலும் வந்து சேர ஆரம்பித்துவிட்டனர். கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் பக்கமிருந்து உழவு யந்திரங்கள் வந்திருந்தன. கொக்குத்தொடுவாய் விதானையார் மூன்று பெரிய பானைகளில் தயிர் கொடுத்தனுப்பியிருந்தார்.

மாலையாகும்போதே குஞ்சாத்தை தலைமையில் பதினைந்து இருபது பெண்கள் தலை தோய்ந்து புத்தாடை உடுத்திக் கொண்டு வந்து சேர்ந்து விட்டனர். பொங்கலுக்குரிய அரிசி, பயறு, தேங்காய், முந்திரி வத்தல், ஏலம் மற்றும் மோதகம், வடைக்குரிய பொருட்கள் என எல்லாவற்றையும் பனம் கடகப் பெட்டிகளில் வைத்துத் தலையில் சுமந்து கொண்டு வந்து விட்டனர். அவர்கள் வந்து சேர்வதற்கு முன்பே பொன்னாவும் நான்கைந்து இளம் பெண்களும் வந்து பொங்கல் வேலைகள் செய்யும் இடத்தை கூட்டி நீர் தெளித்து சுத்தப்படுத்திவிட்டனர்.

நன்றாகப் பொழுது படுவதற்கு முன்பே நெடுங்கேணி வர்த்தகர்கள் ஏற்பாடு செய்திருந்த “லைட்” எஞ்சின் வளாகத்தை ஒளி மயக்கமாக்க ஆரம்பித்து விட்டது. நாகராசா இசை நிகழ்ச்சிக்கென ஒழுங்கு செய்திருந்த ஒலி பெருக்கியில் சுந்தராம்பாள், வசந்த கோகிலம், தண்டபாணி தேசிகர், ரமணியம்மாள் ஆகியோரின் பழைய பக்திப் பாடல்களும், சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், மதுரை சோமு ஆகியோரின் அண்மைக்காலப் பக்தி கீதங்களும் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. அயலூர்களிலிருந்து வந்திருந்தவர்களும் தமது பொங்கல்களுக்குரிய ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தனர்.

குஞ்சாத்தையும் அவளுடன் வந்த பெண்களும் மோதகத்திற்கு மாக்குழைப்பது, தேங்காய் துருவுவது போன்ற வேலைகளை ஆரம்பித்து விட்டனர். ஆயிரம் மோதகங்கள் அவிப்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பதை அவர்கள் அறிவார்கள்.

ஆனால் பூசாரியார் வந்து தலைப் பொங்கல் பானையை வழுந்தேற்றி அடுப்பிலேற்றும் வரை மற்ற எவருமே பொங்கலுக்கு அடுப்பு மூட்டமாட்டார்கள்.

அனைவரும் மடைப்பண்டம் வரும் திசையை அடிக்கடி பார்த்தவாறே காத்திருந்தனர்.

தூரத்தே பறைமேளம் சத்தம் கேட்கவே கண்ணகைப்பாட்டி, “எடி .... குஞ்சி .... பண்டம் வருகுதடி, நீங்கள் மற்றத் ஆயத்தங்களைச் செய்யுங்கோ...” என்றாள்.

பூசாரியார் வீட்டிலிருந்தே பண்டம் கொண்டு வரப்படுவதுண்டு. ஒரு வாரத்துக்கு முன்பே வாழைக்குலை வெட்டிக் கிடங்கில் போடப்பட்டு புகையூதிப் பழுக்க வைத்து விடுவார்கள். அந்த வாரத்தில் நெல் குத்தி அரிசி எடுத்தல்.... பயறு வறுத்தல்..... பழம், பாக்கு, வெற்றிலை என்பன ஆயத்தப்படுத்தல் இடம்பெறும்.

பொங்கலன்று ஊர்ப் பெரியவர்கள், குடிமக்கள் என அழைக்கப்படும் பறையடிப்பவர், சவரத் தொழிலாளி, சலவைத் தொழிலாளி ஆகியோர் மாலையே பூசாரியார் வீட்டில் கூடி விட்டனர்.

ஊர்ப் பெரியவர்கள் பறைமேள முழக்கத்துடன் குடி மக்கள் சகிதமாக கோவிலிருந்து பூசாரியார் வீட்டுக்குப் போனார்கள். பொழுதுபட்டதும் பூசாரியார் வீட்டு முற்றத்தில் கும்பம் வைத்து அதன் அருகே சாணத்தால் பிள்ளையார் பிடித்துவைத்து அவற்றின் முன்பு வெள்ளைத் துணி விரித்து அதன் மேல் பொங்கல் பானை, சட்டி உட்பட படைப் பண்டங்கள் பரப்பினர். பூசாரியார் கற்பூரம் கொளுத்தி வணங்க மூப்பனார் பறையடித்தவாறே மூன்று முறை வலம் வந்து பறையடித்தார்.

கற்பூரம் அணைந்ததும் பூசாரியார் தண்ணீர் தெளித்துவிட்டு பொருட்களைத் தூக்கி ஒவ்வொருவரிடமும் கொடுக்க அவர்கள் பயபக்தியுடன் வாங்கித் தோள்களில் வைத்தனர். கட்டாடியார் நான்கு தடிகளை ஒரு வெள்ளைத் துணியின் நான்கு மூலைகளிலும் தடி கட்டிக் கொடுக்க அதைப் பந்தல் போலப் பிடித்துக்கொண்டார்கள். பின்பு கட்டாடியார் பந்தத்தைக் கொளுத்தி ஒன்றைப் பரியாரியாரிடம் கொடுத்தார்.

மூப்பனார் பறையடித்தவாறே முன் செல்ல அவரருகே கட்டாடியாரும் பரியாரியாரும் பந்தம் பிடித்து வழிகாட்ட பூசாரியார் பொங்கல் பானை, சட்டியைத் தோளில் சுமந்து செல்ல ஏனையோர் வெள்ளைத் துணிப்பந்தலின் கீழ் ஏனைய மடைப் பண்டங்களைத் தோளில் சுமக்க மடை வலம் ஆரம்பமாகியது.

பக்தர்கள் “அரோகரா! சொல்ல கோவில் முன்றலில் சுத்தப்படுத்தப்பட்டு மெழுகிக் கோலம் போட்டிருந்த இடத்தில பூசாரியாரும் மற்றவர்களும் பண்டங்களை இறக்கி வைத்தனர்.

பறைமேளம் தொடர்ந்து முழங்கிக் கொண்டிருந்தது.

பூசாரியார் தலைக்குமேல் கை கூப்பி வைத்தவாறே தன்னைத் தானே மூன்று முறை சுற்றிப் பிள்ளையாரை வணங்கி விட்டு, “ஆனை முகத்தானே, அடிகொடிக்கு மூத்தவனே சரணம்...! சரணம்..!! சரணம்...!!! ஆனை, கரடி அடியாமல் ஆனை சர்ப்பம் தீண்டாமல், மான மருந்தும் இல்லாமல் வானம் மழை பொழிய மோட்டை குளம் தண்ணி நிறைய, களனியில் பொலி பெருக மனை விளங்க வரம் தரவேணும் ஐயனே!” என்று விட்டு வலது கையால் இடது காதையும் இடது கையால் வலது காதையும் பிடித்து மூன்று தரம் தோப்புக் கரணம் போட்டுவிட்டு, இரு கைகளாலும் தலையில் குட்டி வணங்கினார்.

பின்பு பயபக்தியுடன் கும்பம் வைத்து கண்மூடி உச்சாடனம் செய்து அதில் பிள்ளையாரை மனதால் மடைக்கு அழைத்தார்.

அடுத்து, அவர் “அரோகரா” என்றவாறே வழுந்தேற்ற பொங்கல் பானையை எடுத்து தோளில் வைத்து மூன்று முறை தன்னைத்தானே சுற்றிவிட்டு பிள்ளையாரை வணங்கி வழுந்தை அடுப்பில் ஏற்றினார்.

பறைமேளம் முழங்கப் பொங்கல் ஆரம்பமானது.

அதையடுத்து, ஏனையோரும் அடுப்பை மூட்டித் தங்கள் பொங்கல் வேலைகளை ஆரம்பித்தனர்.

குஞ்சாத்தையும் அவளுடன் வந்த பெண்களும் தங்கள் வேலைகளைத் துரிதமாக ஆரம்பித்தனர்.

ஒரு பகுதியினர் மோதகம் பிடிக்க, இன்னும் சிலர் அடுப்பை மூட்டி, பானையை வைத்துப் பிடித்த மோதகங்களை நீர்த்துப் பெட்டியில் வைத்து அவிக்கத் தொடங்கினர்.

பொன்னா, மரகதம், கிளி ஆகியோர் கிணற்றிலிருந்து ஓடியோடி நீர் எடுத்துக்கொண்டு வந்தனர். சன நெருக்கடிக்குள் குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு வருவது அவ்வளவு இலகுவாக இல்லை, கிணற்றடியிலும் அதிகம் பேர் நீரெடுத்ததால் ஒவ்வொரு முறையும் அவர்கள் அதிக நேரம் காக்க வேண்டியிருந்தது. எனினும் இரண்டு மூன்று இளைஞர்கள் சலிப்பின்றி நீரை இறைத்துக் குடங்களில் ஊற்றியதால் பெண்கள் பாடு கொஞ்சம் இலகுவாக இருந்தது.

அந்த முறை பொன்னா வந்தபோது குலம் சிறிது நேரம் நீரிறைத்து ஊற்றிவிட்டு வாளியை மற்றவனிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.

தண்ணீருக்காக ஏற்கனவே சில பெண்கள் காத்திருந்த நிலையில் பொன்னா குடத்தைக் குனிந்து நிலத்தில் வைத்துவிட்டு நிமிர்ந்தாள்.

குலம் பொன்னாவைக் கண்டுவிட்டு அவளருகில் வந்தான்.

பொன்னா, “என்ன மச்சான் நீ .... இப்பிடிக் கவனமில்லாமல் திரியிறாய்....? பச்சை ஜீப்காரர் வந்தால் என்ன செய்வாய்...?” என மெல்லிய பயத்துடன் கேட்டாள்.

“எங்கட பெண்டுகள் விட்டுக் கலைச்ச அவங்களை இப்ப எவ்வளவு இளந்தாரிகள் நிற்கிறம் பிடிச்சுக் கட்டமாட்டமோ...?” எனக் கேட்ட அவன் பின்பு காண்டீபன் பச்சை ஜீப்பை நிழல் வாகைச் சந்தியில் மறித்து எச்சரித்து அனுப்பிய கதையைச் சொன்னான்.

காண்டீபனும் இன்னொரு போராளியும் வீதியால் போய்க் கொண்டிருந்தபோது அந்த வீதியால் வந்த பச்சை ஜீப் அவர்களின் அருகில் வந்ததும் திடீரென நின்றது. ஜீப்புக்குள்ளிருந்த செங்கண்ணன் எட்டிப் பார்த்துவிட்டு...., “என்ன சுவரொட்டியெல்லாம் ஒட்டிறியள் போலை....” எனக் கேட்டான்.

காண்டீபன் கடுப்புடன் “ஓ..... இப்ப அதுக்கென்ன...?” எனத் திருப்பிக் கேட்டான்.

“அதிலை.... எச்சரிக்கை எண்டு கிடந்தது..... அது ஆரைச் சுட்டியிருக்கிறியள்...”

“தொப்பியை அளவானவை போடலாம்...!”

செங்கண்ணன், “நீங்கள் பொடியளைக் கூட்டிகொண்டு போனால் இயக்கத்துக்கு ஆள் சேர்க்கிறது..... நாங்கள் அதைச் செய்தால் பொடியளைக் கடத்திறதே....?” எனக் கேட்டு முறுகினான்.

“எங்களுக்கு இயக்கத்துக்கு ஆள் சேர்க்கிறதுக்கும், ஆள் கடத்தலுக்கும் வித்தியாசம் தெரியும். ஆமிக்கு எதிராய் துவக்குத் தூக்கிறதுக்கும், சனத்துக்கு எதிராய்த் துவக்குத் தூக்கிறதுக்கும் வித்தியாசம் தெரியும்....”.

“சனம் எங்களை மரியாதை கெடுத்தினால் நாங்கள் விட்டிட்டுப் போறதே....?”

சனம் தேவையில்லாமல் ஒருதரோடையும் சோலிக்குப் போறேல்லை. சனத்தின்ரை காசிலை சாப்பிட்டிட்டு அதுகளின்ரை காசிலை வேண்டின துவக்கை அதுகளுக்கு எதிராய் நீட்டுறதை நாங்கள் அனுமதிக்கமாட்டம்...”

“எங்களுக்கு அனுமதி தர நீங்கள் ஆர்...?”

காண்டீபன் உறுதியாகச் சொன்னான், “நீங்கள் இனியும் சனத்தோடை சொறியப் போனால் நாங்கள் ஆரெண்டு தெரியும். பிறகு மரம் பத்தையெல்லாம் சுடத் துவங்கும் கவனம்....”.

“அதையும் பாப்பம்....!” என்று விட்டு ஜீப்பை எடுத்தான் செங்கண்ணன்.

“அப்பிடித்தானெண்டால் ..... பிறகு இயக்க மோதலாய் இருக்காது. கொஞ்சம் காவாலியளைச் சுட்டுக்கட்டித் தூக்கினதாய்த்தான் இருக்கும்....”, என்றான் காண்டீபன்.

காண்டீபனின் எச்சரிக்கையை முழுமையாகக் கேட்க ஜீப் அங்கு நிற்கவில்லை.

குலம் சொன்னவற்றை வியப்புடன் கேட்ட பொன்னா.... “மச்சான்.... எங்கடை பொடியளட்டைக் கிடக்கிறதும் துவக்கு..... அவங்களட்டைக் கிடக்கிறதும் துவக்கு, என்னண்டு....” எனக் கேட்டாள்.

“பொன்னா.... ஆர் கெட்டிக்காரர் எண்டது துவக்கிலை இல்லை. துவக்குப் பிடிக்கிறவனிலைதான்...?” என்று விட்டுக் குலம் வாளியை வாங்கிப் பொன்னாவின் குடத்தை நிரப்ப ஆரம்பித்தான்.

“அங்கை தண்ணிக்குத் தேடப் போகுதுகள்!...” என்றுவிட்டு பொன்னா குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்தவாறு நடக்க ஆரம்பித்தாள்.

வழுந்தேத்த அரிசி போட பானை பொங்க, பால்விட என ஒவ்வொரு சம்பவங்களையும் பூசாரியார் செய்ய பறை மேளமும் ஒவ்வொரு விடயத்துக்கும் ஒவ்வொரு விதமாக ஒலித்தது. பொங்கலின் பிரதான வாத்தியம் பறை மேளம் தான்.

பொன்னா முழுப்பாவாடையும் அரைத் தாவணியுடனும் இடுப்பில் குடத்தை வைத்துக்கொண்டு போனபோது குலத்தால் அவளை விட்டுக் கண்களை அகற்ற முடியவில்லை.

குலத்துக்காக வைத்த நேர்த்திக்காக ஆயிரம் மோதகம் அவிக்கப்பட்டதால் அதைப் பூசாரியார் பிரதான மடையில் படைக்க அனுமதித்திருந்தார்.

அவனும் மடை பரவுமிடத்தை நோக்கி வேகமாகப் போனான்.

(தொடரும்)


Category: வாழ்வு, இலக்கியம்
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு, முள்ளியவளை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE