Friday 29th of March 2024 12:35:45 AM GMT

LANGUAGE - TAMIL
.
உயிர்த்தெழுகை - 18 (நா.யோகேந்திரநாதன்)

உயிர்த்தெழுகை - 18 (நா.யோகேந்திரநாதன்)


மடைமுற்றத்தைச் சுற்றி ஊர்ப் பெரியவர்கள் பக்திபூர்வமாகக் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்க பூசாரியார் பொங்கல் வேலையைத் தொடர்ந்தால் நிற்க பூசாரியார் பொங்கல் வேலையைத் தொடர்ந்தார். குலமும் சால்வையை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு ஒரு பக்கமாக நின்றான்.

பானை பொங்கிச் சரிக்க மூப்பனார் பறையை முழக்க ஆரம்பித்தார். பூசாரியார் அலுமினியச் சட்டியில் வைத்திருந்த பசுப்பாலைப் பானையில் விட்டுத் துளாவினார். புக்கை நன்றாகவே அவிந்து வந்த நிலையில் முந்தியவற்றல், கச்சான், ஏலம் போன்ற பொருட்களையும் போட்டு பானையை இறக்கி திருகணையில் வைத்தார்.

பூசாரியர்! “மூப்பனார்! மடையைப் பரவுவமே....?” எனக் கேட்டார்.

மூப்பனாரும், “பிள்ளையார் ஆணை தந்திட்டார்... தொடங்குங்கோ...” என்றுவிட்டு சலவைத் தொழிலாளி பக்கம் திரும்பி, “கட்டாடி..... மறைப்பைப் பிடி...!” என்றார்.

“தம்பியா..... நேர்த்தி மோதகத்தைக் கொண்டு வரச் சொல்லடா.....” என்றுவிட்டு பூசாரியார் மடை முற்றத்தின் நடுவில் ஒரு தலைவாழையிலையைப் போட்டு அதில் பொங்கலைப் படைக்க ஆரம்பித்தார். மேளம் மீண்டும் முழங்கத் தொடங்கியது.

கட்டாடியாரும் இன்னொருவரும் இரு பக்கமும் நின்று வெள்ளைத் துணியைத் திரைச் சேலை போன்று பிடித்துக்கொண்டனர்.

குலம் போய்ச் சொன்னதும் ஏழெட்டுப் பெண்கள் கடகங்களில் மோதகத்தைக் கொண்டு வந்து பொங்கல் பானைக்கருகில் வைத்தனர்.

பூசாரியார் நடுவில் பிரதான படையலாகப் பொங்கலைப் படைத்துவிட்டு அதன் மேல் வாழைப்பழம் ஒன்றை உரித்து வைத்தார். பிரதான படையலுக்கு நேர் கீழாக தலைவாழையிலையைப் போட்டு பிள்ளையார் மோதகம் எனப்படும் ஒரு பனங்காயளவான பெரிய மோதகத்தை நடுவில் வைத்துவிட்டு, அதைச்சுற்றி கொண்டுவரப்பட்ட ஒவ்வொரு கடகங்களிலுமிருந்து ஒவ்வொரு மோதகத்தையும் வடையையும் எடுத்துப் படைத்தார். பின்பு பாக்கு வெற்றிலை என்பவற்றை ஒரு இலையில் படைத்துவிட்டு பழவகைகள், கரும்பு என்பன இனனொரு இலையில் வைக்கப்பட்டன. பிரதான படையலின் அருகில் மூன்று இளநீர் வெட்டிவைக்கப்பட்டன.

பூசாரியார் படையல்களை முடித்து விட்டு கற்பூரம் கொழுத்திச் சாம்பிராணி போட்ட பின்பு மடை முற்றத்துக்கு வெளியே வரவே பறைமேள அடி நிறுத்தப்பட்டது.

அவர் இரு கரங்களையும் தலைக்கு மேல் கூப்பி வணங்கி கண்களை மூடியவாறே, “மூத்த விநாயகரே, முக்கண்ணனார் மகனே, பாறுவதியார் பாலகனே! அடைக்கலம்! அடைக்கலம்!! அடைக்கலம்!!! வைத்த மடையறியோம், வையாத மடையறியோம், காடு விளையவும், கறவை பெருகவும், நோய்நொடியில்லாமல் காத்து காடை, கறுப்பு முட்டாமல் உன் தாள் வணங்கியெழ மடையேறி வந்து கண்முளித்து அருள் செய்யவேணும் ஐயனே!......” என்றுவிட்டு விழுந்து வணங்கினார். பின்பு எழுந்து குட்டிக் கும்பிட்டு விட்டு மூன்று முறை தோப்புக் கரணம் போட்டார்.

பின்பு அவர் தேவாரம் பாடும் படி கேட்கவே குலம் “வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்” என்ற தேவாரத்தைப் பாடிவிட்டு சிவபுராணம் பாடி! “அரஹர மகாதேவா” என முடித்தான். சுற்றி நின்றவர்கள் பக்தியுடன் “நமப் பார்வதி பதயே....” என்றனர்.

மீண்டும் பறை முழங்க ஆரம்பித்தது.

கற்பூரம் அணைந்ததும் பூசாரியார் தண்ணீர் தெளித்து மடை பரவலை நிறைவு செய்தார். தி்ரையும் விலக்கப்பட்டது.

அடுத்து பூசாரியார் குலத்தை அழைக்கவே அவன் வந்து அவர் முன் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டான். பூசாரியார் அவனுக்கு நேர்த்தி கழிக்கும் முகமாகத் திருநீறு போட்டு விட்டு, நெற்றியில் “சிவ சிவா” என்றவாறு குறுக்காக திருநீற்றால் ஒரு குறியிட்டார். பின்பு பிள்ளையார் பூசையில் வைக்கப்பட்ட நூலை அவனின் இடது மணிக்கட்டில் கட்டினார்.

அவ்வாறு மேலும் சில நேர்த்திகாரருக்கும் திருநீறு போடப்பட்டு நூல்கள் கட்டப்பட்டன.

ஏனைய பொங்கல்காரரும் தங்கள் தங்கள் பொங்கல்களைப் படைத்து வழிபாடு நடத்தினர். குஞ்சாத்தையும் அவளுடன் வந்த பெண்களும் தங்கள் பொங்கலையும் படைத்தனர்.

பின்பு அவர்கள் தங்களின் மோதகம், வடையென்பனவற்றை மக்களைக் கூப்பிட்டுக் கூப்பிட்டு அள்ளியள்ளிக் கொடுத்தனர். ஆயிரம் மோதங்களையும் கொடுத்து முடித்துவிட வேண்டுமென்பதில் குஞ்சாத்தை தீவிரமாயிருந்தாள்.

இவ்வாறு பன்னிரண்டு ஒரு மணியளவில் வழிபாடுகள், சடங்குகள் முடிவடைந்த நிலையில் இசைக் கச்சேரி ஆரம்பமானது. ஆனால் பெரும்பாலான பெண்கள் காப்புக்கடைகள், மணிக்கடைகள் மற்றும் பாத்திரக் கடைகள் பக்கம் குவிந்தனர். சிறுவர், சிறுமியர் ஐஸ்கிரீம் வான்களை மோய்த்தனர். கடலை, கச்சான் வியாபாரமும் அமோகமாக நகர்ந்தது.

பொன்னா, மயில், கிளி மூவரும் காப்புக் கடைகளிலேயே உலா வந்தனர். மயிலும் கிளியும் வெவ்வேறு வர்ணங்களில் ரப்பர் காப்பு, கண்ணாடிக் காப்பு எனப் பலவற்றை வாங்கி அடுக்கினர். குலத்துக்கு சிவப்பு நிறம் மட்டுமே பிடிக்கும் என்பதால் சிவப்பு நிற ரப்பர் வளையல்களையே பொன்னா வாங்கினாள்.

குஞ்சாத்தைக்கு ஒரு இட்டலிச் சட்டி வாங்க வேண்டுமென்பது நெடுநாளைய ஆசை. அங்கிருந்த பாத்திரக் கடைகள் எல்லாம் சல்லடை போட்டு ஒரு கடையில் இட்டலிச் சட்டியைக் கண்டு பிடித்துவிட்டாள். வியாபாரியுடன் பேரம் பேசிச் சண்டையிட்டு அவன் முதலில் சொன்ன விலையில் பாதி விலைக்கு வாங்கிவிட்டாள். ஆனால், அந்த வியாபாரிகள் பெண்களின் குணமறிந்து அவர்களுக்கு விலை சொல்லும்போதே அவர்களுக்கேற்ற மாதிரியே கூட்டிச் சொல்வார்கள்.

குஞ்சாத்தை இட்டலிச் சட்டியை வாங்கிக் கொண்டு புறப்பட்டபோதே இசைக் கச்சேரி ஆரம்பமாகியது. முதல் பாடலாக ஒரு பெண் பாடகி கே.பி.சுந்தராம்பாளின் “பாலும் தெளிதேனும்....” என்ற பாடலுடன் ஆரம்பித்தாள். அவள் சிறுமியாக இருந்தபோது வண்டில் கட்டி குடும்பமாகச் சென்று முல்லைத்தீவில் ஔவையார் படம் பார்த்திருந்தாள். ஒருமுறை தான் கேட்டபோதிலும் அவற்றின் அர்த்தம் முழுமையாக விளங்காமலே அவளுக்கு அது பாடம் வந்துவிட்டது.

வாங்கிய சாமான்களைக் கொண்டு போய்த் தங்கள் பொருட்களுடன் வைத்துவிட்டு பாறுவதி கிழவியும், குஞ்சாத்தையும் கச்சேரியில் போய்க் குந்தினர்.

அடுத்து அந்தப் பாடகி “பரமஞானப் பழத்தை பிழிந்து...” என்ற பாடலைப் பாடவே அவளால் ஆனந்தத்தைத் தாங்க முடியவில்லை தானும் பாடவேண்டுமெனத் தோன்றினாலும் அவள் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

பொன்னா, மரகதம், மயில், கிளி ஆகியோர் இன்னொரு பக்கத்தில் இளம் பெண்கள் அமர்ந்திருந்த பக்கத்தில் அமர்ந்திருந்தனர். அங்கு பாடல் மேடையில் போய்க் கொண்டிருக்க பெண்கள் மத்தியில் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாய்க் கலகலப்பாயிருந்தது.

அடுத்த பாடலாக அந்தப் பெண் பாடகி பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் “அலைபாயுதே கண்ணா! என் மனம் அலைபாயுதே....!” என்ற பாடலைப் பாடினாள். அந்தப் பாடல் ஏதோ தனக்காகப் பாடப்படுவதாகவே பொன்னா உணர்ந்தாள். குலம் புல்லாங்குழல் உதத் தான் அதில் மயங்கி, நிற்பது போலவே ஒரு இன்ப உணர்வு அவளில் படர்ந்தது.

போய்க் கொண்டிருந்த பாடலில், “கதறி மனமுருகி நான் அழைக்கவா? இரத மாதருடன் நீ சுகிக்க வா?” என்ற வரிகள் வரவே பொன்னா திடுக்கிட்டாள். தனக்கொரு காதலியோ மனைவியோ இருக்கும்போதே வேறு பெண்களுடன் சுகிக்கும் ஒருவனைக் கடவுள் எனக் கும்பிடுவது ஒரு மடைத்தனமென்றே அவள் நினைத்தாள். கண்ணனைப் போன்றவர்கள் கடவுளாக மட்டுமின்றி கணவனாகக் கூட மதிக்கப்படமுடியாதவர்கள் என்பதில் அவள் உறுதியாயிருந்தாள்.

பொன்னா திடீரென மயிலிடம் கேட்டாள், “எடியே கண்ணனைப் போலை கண்ட பெண்டுகளோடை திரியிற ஒருத்தன் உனக்குப் பிரியனாய் வந்தால் என்னடி செய்வாய்...?”

மயில் ஒரு மெல்லிய சிரிப்புடன் “ஒரே நாளிலையே அடிச்சுக் கலைச்சுப் போடுவன்...” என்றுவிட்டு “நீ எண்டால் என்னடி செய்வாய்...” எனக் கேட்டாள்.

“நான் கலைக்கவே மாட்டன்!....”

“ஏன்...?”

“எனக்கு வாறவன் அப்பிடியானவனாயிருக்க மாட்டான்” மயில் ஒரு சில விநாடிகள் எதுவுமே பேசவில்லை. பின்பு ஒரு நமட்டுச் சிரிப்புடன், “அப்ப.... நீ ..... இப்பவே உன்ரை ஆளை முடிவு செய்திட்டாய் போலை....!” எனக் கேட்டாள்.

அந்த வினாடியில் பொன்னாவின் மனதில் குலத்தின் முகம் வந்து போகவே அவள் மெல்லிய நாணத்துடன் “அப்பிடி ஒண்டுமில்லையடி....! என்று விட்டுப் பின், “அப்படியான பிழையானவனை அப்படி அப்பு எனக்குப் பார்க்க மாட்டார்....” எனச் சொன்னாள்.

“அப்ப நீ அப்பு பார்க்கிறவனைத்தான் கட்டுவியே?”

“ஓ ..... ஏணென்டால் நான் விரும்பிறவனைத்தான் அப்பு பாப்பர்....” எனச் சொல்லிவிட்டுக் கலகலவெனச் சிரித்தாள்.

மயில் ஒரு பெருமூச்சுடன் “உனக்கு நல்ல அப்பு இருக்கிறார்! நீ அதிட்டக்காறியடி...” என்றாள். அவளின் தகப்பன் பல வருடங்களின் முன்பே ஏதோ நோய் காரணமாக இறந்துவிட்டார்.

“கவலைப்படாதையடி.... உனக்கு அப்பு இல்லை. எனக்கு அம்மா இல்லை. எல்லாருக்கும் ஒவ்வொரு குறை இருக்குது..” என்றவிட்டு இடைநிறுத்திய பொன்னா பின்பு, “எண்டாலும் எங்களுக்கு வாறவங்கள் தான் அந்தக் குறையை நிறப்ப வேணும்...” எனக்கூறி முடித்தாள்.

“உண்மைதான், ஆனால் அதுக்கும் நாங்கள் விரும்பிறவங்கள் எங்களுக்குக் கிடைக்வேணுமல்லே....”

மயிலின் குரலில் ஒருவிதமான ஏக்கம் தொனித்தது.

“அப்படியெண்டால் உனக்குக் கிடைக்க முடியாத ஒருத்தனை நீ விரும்பிறியே....?”

“அவன் கிடைக்கக் கூடியவனோ இல்லையோவெண்டு இனி இனித்தான் தெரியவரும்” என்று விட்டு மயில் ஒரு விரலால் மண்ணைத் துழாவத் தொடங்கினாள்.

அவளின் நாடியைப்பிடித்து முகத்தைத் தன் பக்கம் திருப்பிய பொன்னா கனிவுடன், “ஆரடி அவன்....?” எனக் கேட்டாள்.

“வேண்டாம் பொன்னா! என்ரை துன்பம் என்னோடை இருக்கட்டும். அதைவேறை ஆரும் பங்கு போடவேண்டாம்,” என்ற மயில் தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு, “இப்ப...... என்னை ஒண்டும் கேளாதை .... நேரம் வர நானே சொல்லுவன்....” எனக் கூறினாள். அப்போது திடீரெனக் கிளி பெரும் பதட்டத்துடன் .... “பங்கை பாரக்கா!” என்றவாறே கிழக்கு வானத்தை நோக்கிக் கையைக் காட்டினாள்.

மரங்களுக்கு மேலால் வெகு தொலைவில் ஒரு பெரிய வெளிச்சம், மெல்ல மெல்லக் குறைந்து அணைந்தது. ஆனால் அது அணையும் முன்பே இன்றுமொரு வெளிச்சம் தோன்றி சிறிது நேரம் நிலைத்துவிட்டுப் பின் மெல்லக் குறைந்து அணைந்தது. இவ்வாறு மூன்று, நான்கு இடங்களில் வெளிச்சம் தோன்றுவதும் அணைவதுமாகத் தொடர்ந்தது.

ஒருவருக்கொருவர் வானத்தைச் சுட்டிக் காட்டிய நிலையில் அங்கு ஒரு பயமும் பதட்டமும் கலந்த சூழல் நிலவியது. சனங்கள் என்ன நடக்கிறது, தாங்கள் என்ன செய்யவேண்டும் என்பது பற்றித் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் மடைமுற்றத்தடியில் நின்ற நாகராசா மற்றவர்களிடம் எதுவும் சொல்லாமலே இசை நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு அருகில் இருந்த ஒலி பெருக்கி நிலையத்தை நோக்கி ஓடினான். குலமும் அவன் பின்னால் போக ஆரம்பித்தான்.

(தொடரும்)


Category: வாழ்வு, இலக்கியம்
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு, முள்ளியவளை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE