Friday 19th of April 2024 12:40:08 PM GMT

LANGUAGE - TAMIL
-
உயிர்த்தெழுகை - 20 தொடர் நாவல் (நா.யோகேந்திரநாதன்)

உயிர்த்தெழுகை - 20 தொடர் நாவல் (நா.யோகேந்திரநாதன்)


படையினரால் அருகருகாக உள்ள சில ஊர்களைச் சுற்றி வளைத்து நூற்றுக்கணக்கான மக்களை ஒரு இடத்தில் கூட்டி வைத்து விட்டுச் சுற்றி நின்று துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் கொடூரமான நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால், எங்காவது படைகளின் மீது போராளிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால், பின்பு அவ்விடத்தில் பெருந்தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சுற்றிவர கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொள்வதும், வீடுகள் கடைகளை எரிப்பதும், அகப்படும் இளைஞர்களைக் கைது செய்வதும் இடம்பெறத் தவறுவதில்லை.

எனினும் திருநெல்வேலியில் போராளிகளின் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டதற்காக தென்னிலங்கையின் நகரங்களிலும், மலையகத்திலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் நரபலி கொள்ளப்பட்டதுடன், அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டும் எரியூட்டப்பட்டும் அழிக்கப்பட்டன. எனவே, இரத்த வெறி கொண்டலையும் அவர்கள் பிள்ளையார் கோவில் பொங்கலில் புகுந்து கொலைகளை நடத்தக்கூடுமெனப் போராளிகள் சந்தேகப்பட்டனர். குறைந்த பட்சம் சில இளைஞர்களைக் கைது செய்யக்கூடுமெனவும் கருதினர். அதிலும் கொக்கிளாய், மண்கிண்டி ஆகிய முகாம்களிலிருந்து படையினர் முல்லை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டதும், அவர்களின் சந்தேகத்தை மேலும் அதிகரித்தது. எனவேதான் போராளிகள் ஒரு திசை திருப்புத் தாக்குதலை முல்லைப் படைத்தளம் மீது நடத்தினர்..

இந்த விடயத்தைப் போராளிகள் நேரடியாக நாகராசாவிடம் கூறாத போதிலும் அவர்களின் கதைகள் மூலம் அவன் ஊகித்தறிந்து கொண்டான்.

எனவே அவன் போராளிகள் மீது மக்களுக்கு நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் முகமாகப் படையினர் பொங்கலைக் குழப்பி விடாமல் தடுப்பதற்காகவே முல்லைப் படைத்தளம் மீது தாக்கினர் என்ற கதையை மெல்ல மெல்ல ஊரெல்லாம் பரப்பி விட்டான்.

சில நாட்கள் அக்கிராமத்தின் பேசுபொருளாக அந்த விடயமே விளங்கியது.

அந்த விடயம் பொன்னாவின் காதில் விழுந்த பின்பு அவள் எல்லையற்ற சந்தோசத்தில் மிதக்க ஆரம்பித்தாள். ஏற்கனவே குலம் தேடப்படும் நபர் என்ற வகையில் படையினர் சுற்றிவளைத்திருந்தால் அவனுக்கும் பெரும் ஆபத்து நேர்ந்திருக்கும் என்பதை நினைத்தபோது நெஞ்சு “படபட” என அடித்தபோதும் குலம், ஒரு கண்டத்திலிருந்து தப்பி விட்டதாக எண்ணி மனதைத் தேற்றிக் கொண்டாள். அந்த சந்தோஷத்தை யாரிடமாவது பகிர்ந்து மகிழ வேண்மென்ற ஒருவித தவிப்பு அவளை ஆட்கொண்டது.

எங்கோ போய்விட்டு அப்போதுதான் வந்து கால்முகம் கழுவி விட்டுத் திருநீற்றுக் குடுவையிலிருந்து நீரை எடுத்து, “சிவசிவா” என்றபடி நெற்றியில் பூசினார் காசி.

பொன்னா சாப்பாட்டைப் போட்டுக் கொடுத்தாள்.

அவர் சாப்பிட்டுக் கைகழுவி முடித்ததும், வட்டிலைக் கையில் வேண்டிய பொன்னா, “அப்பு.... நானொருக்கால் மயில் வீட்டை போட்டு வரட்டே...?” எனக் கேட்டாள்.

“சரி..... போட்டு வா.... வரயுக்கை அவள் குஞ்சி வீட்டை போய் சேனாதியை அல்லது குலத்தை வரட்டாம் எண்டு சொல்லிப் போட்டு வா....“ என்றார் காசி.

தன்ரை சந்தோசத்தை மயிலோடை மட்டுமின்றி குலத்தோடையும் பகிர முடியும் என நினைத்தபோது மனம் மேலும் துள்ளியது.

பொன்னா கிளியையும் கூட்டிக்கொண்டு மயில் வீட்டுக்குப் போனபோது அங்கு மதிவதனி ரீச்சரும் வந்திருந்தாள். மயில் அவித்துக் கொடுத்த சோளப் பொத்திகளைச் சாப்பிட்டவாறே இருவரும் கலகலப்பாகக் கதைத்துக் கொண்டிருந்தனர்.

மயில் பொன்னாவிடமும், கிளியிடமும் ஒவ்வொரு பொத்திகளைத் தூக்கிக் கொடுத்தாள். பொன்னா சோளத்தை ஒவ்வொரு மணியாக உடைத்துச் சாப்பிட்டவாறே போராளிகள் இராணுவம் பொங்கலைக் குழப்புவதைத் தவிர்க்கவே முல்லை முகாம் மீது தாக்குதல் நடத்தினர் என்ற கதையை அவர்களிடம் சொன்னாள்.

“உனக்கு உன்ரை மச்சான்மார் இரண்டு பேரும் தப்பின சந்தோஷம்....”, என்று விட்டுப் பெரிதாகச் சிரித்தாள் மயில்.

“அவை மட்டுமே? எல்லாரும்தானே தப்பினனாங்கள்....” என்றாள் பொன்னா.

அப்போது கிளி, ”அப்ப மயிலக்கா.... அப்ப நீ ஆர் தப்பினதுக்காகச் சந்தோசப்பட்டனீ?....” எனக் கேட்டாள்.

“நீ தப்பினதுக்காகத்தான்!....” என்ற மயில் ரீச்சரிடம், “இவளுக்கு வயதுக்கு மிஞ்சின வாய் ரீச்சர்.... வகுப்பிலை நாலு போட்டு இவளைத் திருத்துங்கோ!....“ என்றாள்.

மதிவதனி, “அப்பிடி கதைக்கிறது நல்லது மயில்...! பிள்ளையளின்ரை தன்முனைப்பை நாங்கள் கெடுக்கக்கூடாது...” என்றாள்.

மயில் சிரித்தவாறே, “ரீச்சரும் உன்ரை பக்கம்தான்!...” என்றாள்.

பொன்னாவும், “ஓம் ரீச்சர்..... அந்தப் பச்சை ஜீப்காறனின்ரை சேட்டையளுக்கு இவள் வாயாலை வெட்டுற வெட்டைப் பாத்தால் எனக்கு மலைப்பாயிருக்கும்....” என்றாள்.

“உங்களுக்கு நெடுக இப்படிக் கரைச்சல் குடுக்கிறவனே?......”.

“ஓம்.... ரீச்சர்.... சேனாதி அத்தானட்டைச் சொன்னனெண்டால் அவனையும் முறிச்சுப் போட்டிட்டு ஜீப்பையும் தூக்கிப் பிரட்டி விட்டிடுவன். ஆனால்.....” என்று விட்டு இடைநிறுத்தினாள் பொன்னா.

“ஆனால் என்ன பொன்னா..?” எனக் கேட்டாள் மதிவதனி.

“இயக்கக்காறரோடை ஏன் சோலியை எண்டுட்டு நான் அதை அவரட்டைச் சொல்லே ல்லை....”

“உவங்களெல்லாம் உண்மையான இயக்கம் இல்லைப் பொன்னா, நான் யாழ்ப்பாணத்திலை கல்வியியல் கல்லூரியிலை படிச்சுக் கொண்டிருக்கேக்கை எனக்கு இயக்கங்களைப் பற்றி வடிவாய்த் தெரியும். அங்கை கன இயக்கங்கள் திரியுது. ஒண்டிரண்டு தான் உண்மையாக எங்கடை விடுதலைக்குப் பாடுபடுற இயக்கங்கள்.... இவங்களெல்லாம் அங்கை மோட்டச் சைக்கிள் ஒரு விலாசம் காட்டுறதொழிய வேறை ஒரு மண்ணும் இல்லை...”

“விடுதலையோ.... எங்களுக்கு என்ன விடுதலை ரீச்சர்...?” எனக் கேட்டாள் கிளி.

“விடுதலை எங்களுக்கு மட்டுமில்லை, முழுத் தமிழ்ச் சனத்துக்கும்தான்.... நான் ஒரு நாளைக்கு ஆறுதலாய் விளங்கப்படுத்திறன். என்னோடை ஆசிரியர் படிப்பு ஜீவா எண்டொருத்தன் படிச்சவன். அவன் ஏ.எல்லிலை 180 மாக்ஸ் எடுத்தவன்.... ஆனால் 100 மாக்ஸ் எடுத்த மாத்தறையில் சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழகம் எடுபட்டவங்கள். ஆனால், 180 எடுத்த அவன் எடுபடேல்லை...”.

ஒன்றுமே விளங்காத போது மூவரும் அவள் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். கிளி மட்டும், “ஏன் ரீச்சர்...?” எனக் கேட்டாள்.

“தரப்படுத்தல் எண்ட பேரிலை நாங்கள் கல்வி கற்கிற உரிமையைப் பறிக்கிறாங்கள். நானும் 172 மாக்ஸ் எடுத்தனான். தமிழர் எண்டதாலை என்னாலையும் பல்லைக்கழகம் போக முடியேல்லை. இது மட்டுமில்லை இப்பிடி எல்லா விஷயங்களிலையும் தமிழருக்குத் துன்பத்தின் மேலை துன்பம் குடுக்கிறாங்கள்....”.

பொன்னாவின் நினைவில் மலை நாட்டிலிருந்து உறவுகளையும் தொழில்களையும் பறி கொடுத்துவிட்டு பண்ணைகளில். அகதிகளாகத் தங்கியிருக்கும் மக்கள் வந்து போயினர்.

மதி தொடர்ந்தாள்..... “அதாலைதான் கொஞ்ச இளைஞர்கள் சிங்கள ஆட்சியிலையிருந்து விடுபட வேணுமெண்டு போராட வெளிக்கிட்டவை....”

பொன்னாவுக்கும் மயிலுக்கும் ஏதோ மெல்ல மெல்ல விளங்குவது போலிருந்தது.

கிளி மீண்டும் கேட்டாள், “அப்ப இந்தப் பச்சை ஜீப்காறர் ஏன் ரீச்சர் திரியிறாங்கள்...?” எனக் கேட்டாள்.

“இவங்களும் போராடத்தான் வெளிக்கிட்டவங்கள்.... ஒழுக்கம் கட்டுப்பாடு இல்லாததாலை தலைமை இவங்களைக் கலைச்சு விட்டிட்டுது.... இப்ப தாங்களும் இயக்கமெண்டு திரியிறாங்கள்....” எனச் சொல்லி முடித்தாள் ரீச்சர். அவளின் மனதில் ஜீவா பெண்களுடன் பண்பாகவும் மரியாதையாகவும் பழகுவதும், அநீதிகளைக் கண்டு கொதித்தெழுவதும் வந்து போனது, அவன் இறுதிப் பரீட்சை முடிந்ததும் அவளிடம் சொல்லி் விட்டுத்தான் இயக்கத்திற்குப் போனான். ஆனால் அவள் ஜீவா பற்றி மேற்கொண்டு எதுவும் அவர்களிடம் கூறவில்லை.

மதி சில நிமிடங்கள் தன்னையறியாமலே ஜீவாவின் நினைவில் மூழ்கி விடவே, “என்ன ரீச்சர் இருந்தாப்போலை கதையை நிப்பாட்டிப் போட்டியள்...?” எனக் கேட்டாள் பொன்னா.

மதி ஒருவாறு தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, “அப்பிடி ஒண்டுமில்லை! ஏதோ பழைய நினைவுகள்”, என்றாள் பெருமூச்சுடன்.

அவளின் திடீர் அமைதியும், முகமாற்றமும் பெருமூச்சும் பொன்னாவின் மனதில் மதி, அந்த ஜீவாவைக் காதலிக்கிறாளோ என்ற கேள்வியை எழுப்பியது. ஆனால், அவள் அதைப்பற்றி எதுவுமே கேட்கவில்லை.

மதி மீண்டும் போராளிகளின் வீரதீரத் தாக்குதல்கள் பற்றியும் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக விளங்கும் அவர்கள் மக்கள் மேல் காட்டும் அன்பு, மரியாதை என்பன பற்றியும் அவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு பற்றியும் ஒருவித உற்சாகத்துடன் அவர்களுக்கும் சொன்னாள்.

அவள் சொல்வதைப் பொன்னாவும், மயிலும், கிளியும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.

என்றாலும் மாடுகள் பட்டிக்கு வரும் நேரத்தை உணர்ந்து கொண்ட பொன்னா, “இனி நான் போகவேணும் ரீச்சர்! மாடுகள் பட்டிக்கு வந்திடுங்கள்....” என்றாள்.

“சரி.... சரி.... நானும் வாறன் போவம்,” என ரீச்சரும் எழவே மயில் ஓடிப்போய் ஒரு கடதாசிப் பையில் போட்டு வைத்தி்ருந்த சோளப் பொத்திகளைக் கொடுத்து, “அதிபர் வீட்டுக்கும் குடுத்து விடுங்கோ!....” என அவளிடம் கூறினாள்.

பாடசாலை வெளிவாசலில் வைத்து பொன்னாவுக்கும் கிளிக்கும் விடை கொடுத்துவிட்டு, உள்ளே வந்த மதிவதனி பாடசாலையின் இரண்டு மண்டபங்களில் ஒன்றில் ஆண்கள், பெண்கள், முதியோர், சிறுவர், சிறுமியர் என ஏராளமான சனங்கள் நிரப்பியிருந்ததைத் கண்டு திகைத்து விட்டாள்.

அவள் வியப்புடன் அவர்களைப் பார்ப்பதைக் கண்ட அதிபர் ராமேஸ்வரன் அருகில் வந்து, “டொலர் பண்ணையிலை கனகாலமாய்க் குடியிருந்த சனங்கள், நேற்று கச்சேரிக்காரரும் ஆமி்யும் வந்து 24 மணித்தியாலங்களுக்கை வெளிக்கிட்டிட வேணுமெண்டும் இல்லாட்டில் சுட்டுப் போடுவதாகவும் வெருட்டினாங்களாம். அதுகள் பயத்திலை வெளிக்கிட்டு வந்திட்டுதுகளாம். என்னட்டை வந்து இரவைக்குத் தங்கப் போறதாய்க் கேட்டுதுகள், நான் ஒரு மண்டபத்தை ஒழுங்கு பண்ணிக் குடுத்திருக்கிறன்....” என்றார்.

“என்ன சேர்! ஆமிக்காரர் தான் அப்படியெண்டால் கச்சேரி அதிகாரியளுக்கும் மனச்சாட்சி இல்லையே....?”

அவர் ஒரு பெருமூச்சுடன் “அவங்களுக்கென்ன மனச்சாட்சி? சொல்லறதைச் செய்யுற சுப்பர்மார் தானே...?” என்றார்.

மதிவதனி ஒருவித கோபத்துடனும் இயலாமையுடனும் மண்டபத்தை நோக்கிப் போனாள்.

(தொடரும்)


Category: வாழ்வு, இலக்கியம்
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE