ஏறக்குறைய 16 ஆண்டுகளுக்கு முன்பு பண்ணைகள் அமைப்பதற்காக கொழும்பு வாழ் தமிழ் வர்த்தகர்களுக்கு 1,000 ஏக்கர் படி 99 வருடக் குத்தகைக்குக் காணிகள் வழங்கப்பட்டபோது டொலர் பண்ணையும் கென்ற் பண்ணையும் மட்டும் 500 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டவையாயமைந்திருந்தன.
அவர்கள் காடுகளை அழித்து காணிகளைத் திருத்த ஏராளமான தொழிலாளர்களை மலையகத்திலிருந்து கொண்டு வந்தனர். அவர்களில் சில குடும்பங்களை மறித்து பண்ணைகளில் நிரந்தரப் பணியாளர்களாக அமர்த்தி ஊதியமும் வழங்கினர். காடுகள் அழிக்கப்படும்போது அங்கு தறித்த மணலாற்றுக் காட்டின் பெரும் மரங்களை மொரட்டுவவுக்கு ஏற்றி பண்ணை உரிமையாளர்கள் தங்கள் காணிகள் திருத்தம் செய்த செலவை விடக் கூடுதலான வருமானத்தைப் பெற்றுக்கொண்டனர். அதுமட்டுமின்றி மிளகாய், வெங்காயம், வாழை என்பவற்றைப் பெருமளவில் பயிரிட்டு அவற்றின் உற்பத்திகளைக் கொழும்புச் சந்தைகை்கு அனுப்பி நிறைய வருமானம் பெற்றனர்.
அதேவேளையில் ஒவ்வொரு பண்ணைகளிலும் நிரந்தரமாக வேலை செய்த மலையக மக்களுக்கு குடியிருப்புகளையும் அமைத்துக் கொடுத்தனர்.
எனினும் அரசாங்கம் மாறிவிடவே உப உணவுப்பொருட்களின் விலைகள் படுமோசமாக வீழ்ச்சியடைந்து விட்ட நிலையில் மெல்ல மெல்லப் பண்ணைகளைக் கைவிட்டு முதலாளிமார் வெளியேற ஆரம்பித்தனர். அவர்களால் கொண்டு வரப்பட்ட மலையக மக்களைத் தொடர்ந்து பண்ணைகளில் தங்க அனுமதித்ததுடன் அங்கு நடப்பட்ட மா, பலா, தென்னை, தோடை, எலுமிச்சை போன்றவற்றின் விளைச்சலை அவர்களையே எடுக்கும்படி கூறிவிட்டனர். ஒவ்வொரு பண்ணையிலும் பல கட்டுக்கிணறுகள் இருந்த காரணத்தால் அக்குடும்பங்கள் வேறு பயிர்களையும் செய்து தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்தனர்.அந்த நிலையில்தான் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அங்கு வந்த கச்சேரி அதிகாரிகள், முதலாளிகளுக்குக் காணி வழங்க மேற்கொண்ட 99 வருடக் குத்தகைகள் ரத்துச் செய்யப்பட்டு விட்டதாகவும் டொலர் பண்ணை சிறைச்சாலைத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும், அங்கு குடியிருப்பவர்கள் இரு வாரத்தில் வெளியேறி விட வேண்டுமெனவும் கட்டளையிட்டனர். மக்கள் தங்களுக்கு வேறு போக்கிடம் இல்லையெனக் கெஞ்சியதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. மக்கள் இரு வாரங்கள் கழிந்த பின்பும் வெளியேறாத நிலையில் இராணுவத்தி்னருடன் வந்த கச்சேரி அதிகாரிகள் 24 மணி நேரத்தில் வெளியேறாவிட்டால் சுட்டுக் கலைக்கப் போவதாகத் தெரிவித்து விட்டுப்போய் விட்டனர். அவர்கள் போன பின்பு வாள்கள், கத்திகளுடன் வந்த பதவி சிறிபரவைச் சேர்ந்த சிங்களக் காடையர், அந்த மக்களை அடித்துத் துன்புறுத்தியதுடன் அவர்களின் சொத்துக்களையும் சூறையாடிச் சென்று விட்டனர்.
வேறு வழியின்றி அந்த மக்கள் கையில் கொண்டு போகத்தக்க பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறினர்.
அவர்கள் கூறிய விடயங்களை அக்கறையுடனும், அனுதாபத்துடனும் கேட்டுக் கொண்டிருந்த மதிவதனி, “அப்ப... இனி என்ன செய்யப் போறியள்...?”, எனக் கேட்டாள்.
அவளுடன் கதைத்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர், “நாவலர் பண்ணை போலை இடங்களிலை நம்மளைப் போலை ஆளுங்களைக் குடியிருத்திறாங்களாம்.... அங்கிட்டு தான் போவமின்னு பாத்துக்கிறம்...” என்றார்.
அவள் சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்துவிட்டுத் தனது அறையை நோக்கிப் போனாள். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென அவளின் மனது துடித்தபோதும் அவளுக்குத் தன்னால் என்ன செய்யமுடியும் எனக் கண்டு பிடிக்க முடியவில்லை.
மதிவதனி தான் கொண்டு வந்த அவித்த சோளம் பொத்திகளை அதிபரின் மனைவியான சொர்ணலட்சுமி ரீச்சரிடம் கொடுத்தாள். அதைக் கையில் வாங்கிய சொர்ணம்... “இதுகள் நாங்கள் நெடுகத் தின்னுறது தானே அதிலை வந்திருக்கிற சனத்தின்றை பொடியளட்டைக் குடுப்பம்...” என்றுவிட்டு, அவற்றைக் கொண்டு மண்டபப் பக்கமாகப் போனாள்.
தனது அறைக்குள் போன மதி உடுப்பை மாற்றி விட்டுத் தன் கட்டிலில் சாய்ந்தாள்.
அவளுக்கு ஜீவனின் எண்ணங்கள் வரும்போது ஒரு இன்பமயமான நினைவில் அவள் திளைப்பதுடன் அவனைக் காணவேண்டுமென்ற ஒருவித தவிப்பும் எழுவதுண்டு.
ஆனால் இப்போது உடனடியாக ஜீவனைக் கண்டு, “இந்த அப்பாவிச் சனங்களைக் குடியிருப்புகளை விட்டுக் கலைக்கிற அரச அதிகாரியளை உங்கடை இயக்கத்தாலை தட்டிக் கேட்க முடியேல்லையெண்டால் ஏன் உந்தத் துவக்குகளைத் தூக்கிக் கொண்டு திரியிறியள்? எனக் கேட்க வேண்டும் போலிருந்தது.
சில மாதங்களுக்கு முன்பு முல்லைத்தீவு அரச அதிபரால் அப்பிரதேசத்திலுள்ள சகல மோட்டார் சைக்கிள்களின் முன் சில்லுகளையும் கொண்டு வந்து கச்சேரியில் ஒப்படைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டது. ஒரு சிலர் பயத்தில் அவற்றை ஒப்படைத்த போதிலும் பெரும்பாலானவர்கள் அக்கட்டளையைப் பொருட்படுத்தவில்லை.
இவ்வாறு அரசாங்கத்திடம் நன்மதிப்பைப் பெறவேண்டுமென்பதற்காக மக்களைத் துன்பத்தில் ஆழ்த்தும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்களென்றே அவள் கருதினாள். அவள் வெளியே வந்து எட்டிப் பார்த்தாள். அதிபர் கொடுத்த கிடாரத்தில் மண்டபத்தின் முன்னால் கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தனர்: சில பெண்கள் தேங்காய் துருவிக்கொண்டிருந்தனர்.
அரிசி, தேங்காய் என்பவற்றையும் கிடாரத்தையும் அதிபரே கொடுத்திருந்தார்.
மயில் வீட்டிலிருந்து பொன்னா திரும்பி வரும்போது குலத்தைக் காணும் ஆவலுடன் குஞ்சாத்தையின் வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள். அவள் அங்கு போனபோது குலமோ, சேனாதியோ தோட்டத்திலிருந்து வந்து சேராதது அவளுக்கு ஏமாற்றமாய் போய்விட்டது. இப்போதெல்லாம் குலம் இயன்றளவு ஊருக்குள் நடமாடுவதைத் தவிர்த்துக் கொண்டான். அவன் படுப்பதையும் தோட்டத்தின் காவல் கொட்டிலிலோ அல்லது சின்னக்குட்டியின் வாடியிலோ என மாற்றிக்கொண்டான். பொலிஸாரோ, இராணுவத்தினரோ ஊருக்குள் தேடி வந்து அவனைப் பிடிப்பதற்கான சாத்தியங்கள் குறைவாயிருந்த போதிலும், நாகராசா அவனை எச்சரிக்கையுடன் இருக்கும்படி கூறியிருந்தான்.
பொன்னா குஞ்சாத்தையிடம் காசியர் சேனாதியை அல்லது குலத்தை வரும்படி சொன்ன விஷயத்தைக் கூறிவிட்டு வீடு நோக்கிப் புறப்பட்டாள்.
குஞ்சாத்தையும் “ஓ... ஓ..... ஆடியிலை காத்தடிச்சால் ஐப்பசியிலை மழை பெய்யும் எண்ணுவினை. இந்த ஆடி நல்ல காத்துத்தானே. அண்ணர் விதைப்புக்கு ஆயித்தப்படுத்தத்தான் கூப்பிட்டிருப்பர். நான் வரச் சொல்லி விடுறன்” என்றாள்.
பொன்னா பட்டிக்குள் மாடுகளை விட்டுக் கடப்புத் தடியைப் போட்டுவிட்டு, வீட்டுக்கு வந்தபோது அங்கு சரவணையப்புவும் காசியரும் வீட்டுத் திண்ணைகளில் எதிரெதிரே அமர்ந்து ஏதோ கதைத்துக் கொண்டிருந்தனர்.
டொலர் பண்ணையிலிருந்து விரட்டப்பட்டு வந்து கொண்டிருந்த மக்களை சரவணையப்பு இடைவழியிலேயே கண்டு விட்டார். அவர் அவர்களிடம் விசாரித்தபோது தாங்கள் பண்ணையிலிருந்து நிரந்தரமாகவே வெளியேற்றப்பட்ட கதையைச் சொன்னதுடன் நாவலர் பண்ணையைத் தேடிச் செல்வதாகவும் கூறினர்.
அவர்கள் இடம்தெரியாத நிலையில் நாவலர் பண்ணைக்குப் போகும் பாதையைத் தவறவிட்டு அப்பால் வந்து விட்டதை அவர் தெரிந்து கொண்டார். சரவணையப்பு அந்த விஷயத்தை அவர்களுக்கு விளங்கப்படுத்திவிட்டு, “அப்ப.... இப்ப என்ன செய்யப் போறியள்...?” எனக் கேட்டார்.
அவர்கள் மிரட்சியுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
சரவணையப்பு, “பொழுதுபடுது.... காட்டுப் பாதை. இனி நீங்கள் போய்க் கொள்ளமாட்டியள். இரவைக்குத் தங்க இடம் நான் ஒழுங்கு பண்ணித் தாறன். இஞ்சை தங்கிப் போட்டு நீங்கள் போற இடத்துக்குக் காலமை போகலாம். இப்ப என்னோடை வாருங்கோ...” என்று விட்டு அவர்களைப் பள்ளிக்கூடப் பக்கமாகக் கூட்டிப் போனார்.
சரவணையப்பு அவர்களை அதிபரிடம் அழைத்துச் சென்று இரவு பாடசாலையில் தங்க அனுமதிக்கும்படியும், அவர்களுக்கு கஞ்சி காய்ச்ச ஏற்பாடு செய்து கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
அதிபரும், “இது கூடிச் செய்யாட்டில் மனுசரெண்டு இருக்கிறதிலையே அர்த்தமில்லை....” எனக் கூறி தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.
பொதுவாகவே அந்த ஊரில் சரவணையப்புவின் சொல்லை எவரும்தட்டுவதில்லை.
இந்த விடயங்களையெல்லாம் சொல்லி முடித்த சரவணையப்பு, “நாளைக்கும் வெளிக்கிட்டுப் போய்ப் பாதை தெரியாமல் எங்கையும் தடுமாறுதுகளோ தெரியாது!” என்றார்.
சில வினாடிகள் யோசித்த காசியர் பின்பு, “இவன் நாகராசவட்டைச் சொல்லி மிஷினிலை கொண்டே விடச் சொல்லுவம்” என்றார்.
“கன சனமெல்லே காசி,”.
“அதிலையென்ன! இரண்டு மூண்டு தரமாய்க் கொண்டு போய் விடுறது”.
“ம்.... ம் ..... அதுவும் சரிதான். இப்படியான விஷயத்துக்கு அவன் மறுக்கமாட்டான்..!” என்றார் சரவணை.
காசியர், “குலத்தை நாகராசாவட்ட விடுவம்!” என்று விட்டுப் பலமாக, “பிள்ளை குலத்தை வரச் சொல்லி விட்டனியே...?” எனக் கேட்டார்.
காலையில் கொத்தி வைத்த விறகுகளை எடுத்துத் அடுக்களைத் தாவாரத் தூக்கில் அடுக்கிக் கொண்டிருந்த பொன்னா, “ஓமப்பு .... இரண்டத்தால் ஒருதரை வரச் சொல்லி் விட்டனான்...” என்றாள்.
அவர்களின் கதை பொன்னாவுக்கு அறைகுறையாக விளங்கினாலும் இருவருக்கும் ஏதோ அவசர ஊர் வேலை வந்து விட்டது என்பதை மட்டும் அவளால் உணர முடிந்தது.
இருவரில் ஒருவரையே அனுப்பும்படி அவள் குஞ்சாத்தையிடம் சொல்லியிருந்தபோதிலும் குலமே வரவேண்டுமென ஆலடி வைரவரை மனதுக்குள் வேண்டிக்கொண்டாள். நான்கைந்து நாட்கள் அவனைச் சந்திக்காததால் மனம் அவனைக் காணத் தவித்துக்கொண்டிருந்தது.
அவன் வந்தபின்பு சிறிது நேரம் அவனுடன் கதைக்கக் கூடாதென நினைத்துக் கொண்டாள். சிறிது நேரத்துக்கு மேல் தன்னாலும் அவனுடன் கதைக்காமல் இருக்கமுடியாது என்பதை அவள் தெரிந்திருந்தபோதும் அப்படி அவனுடன் சண்டை பிடிப்பதில் ஒரு சுகம் இருப்பதை உணர்வதுண்டு.
(தொடரும்)
Category: வாழ்வு, இலக்கியம்
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு