Thursday 25th of April 2024 02:00:37 AM GMT

LANGUAGE - TAMIL
-
உயிர்த்தெழுகை - 22 (நா.யோகேந்திரநாதன்)

உயிர்த்தெழுகை - 22 (நா.யோகேந்திரநாதன்)


பொன்னா காட்டுப் பட்டிக்குப்போய் செங்காரிப் பசுவில் பாலைக் கறந்து கொண்டு திரும்பி வந்தபோது திண்ணையில் சரவணையப்பு, காசியர் ஆகியோருடன் சேனாதியும் ஒரு ஓரமாக இருந்து கதைத்துக்கொண்டிருந்தான். குலம் வராதது பொன்னாவுக்குப் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. குலம் தான் வரவேண்டுமென்ற தனது வேண்டுதலை நிறைவேற்றாத ஆலடி வைரவர் மீதுதான் அவளின் கோபமெல்லாம் திரும்பியது.

அவள் பாலை அடுக்களைக்குள் வைத்துவிட்டு பாற்சட்டியை எடுத்து வந்து குடத்தடியில் வைத்து ஒரு உடைந்த ஓட்டினால் சுரண்டிக் கழுவத் தொடங்கினாள்.

சரவணையப்பு, “தம்பியா.... நாகராசனட்டைப் போய் விடியவாய் மிசினைப் பெட்டியைப் பூட்டிக் கொண்டு வரச் சொல்லிறியே?....” எனக் கேட்டார்.

காசியர் குறுக்கிட்டு, “விடிய ஏன்? அதுகளை என்னண்டு வெறு வயித்தோடையே அனுப்பிறது? காலமை ஏதேனும் தின்னக் குடுத்துவிட வேணும். நாவலர் பண்ணையிலை இதுகள் வருமெண்டு சமைச்சு வைச்சிருக்கப் போறாங்களே?” என்றார் காசி.

“சனம் குஞ்சு குருமானோடை எழுபது எண்பது பேரடா காசி!”

“அதுக்கென்னப்பு.... பொன்னா நாலைஞ்சு பெட்டையளைக் கூட்டிவந்து நெல்லைக்குத்தி அரிசியை ஊறப்போட்டு விட்டால், விடியப்பறம் போய் மாவிடிச்சுக் குடுக்க அயலட்டைப் பெண்டுகளையெல்லாம் கொண்டு வந்து ஆச்சி வறுப்பிச்சுப் புட்டவிச்சு விட்டிடுவ. சனம் பல்லுத் தீட்ட சாப்பாடு கொண்டு போய்க் குடுத்திடலாம்”, என்றான் சேனாதி.

“ஓ.... ஓ.... அவள் குஞ்சாத்தை நினைச்சால் மலையையும் பிரட்டிற ஆளல்லே...” என்றார் சரவணை.

“அப்ப.... தம்பியா... நீ போய் அவள் குஞ்சியட்டை எல்லா ஆயித்தத்தையும் செய்யச் சொல்லிப் போட்டு நாகராசாவின்ரை அலுவலைப் போய்ப் பார்.... பொன்னாவையும் கூட்டிக் கொண்டு போ.... நெல்லுக் குத்திற வேலையைப் பாக்கட்டும்...” என்றார் காசி.

அதையடுத்து போவதற்காக எழுந்த சேனாதி, “பொன்னா.... வா .... போவம்.... இப்ப போனால் தான் வேலையை முடிக்கலாம்...” என அழைத்தான்.

“நீ போ மச்சான்.... நான் பொழுதுபட அப்புவுக்குச் சாப்பாடு குடுத்திட்டு வாறன்....”.

“நீ போ பொன்னா... நான் போட்டுத் தின்னுவன்...”, என்றார் காசி.

அதைக் கேட்ட பொன்னா, “நில் மச்சான் பால் அடுப்பிலை! ஊத்தித் தாறன், எல்லாரும் குடிச்சாப் போலை போவம்....” என்றாள்.

சேனாதி மீண்டும் மாலின் குந்தில் அமர்ந்து கொண்டான்.

சேனாதியும் பொன்னாவும் தெருவில் இறங்கி நடந்தபோது பொன்னா, “மச்சான்! அப்படியே போற வழியிலை மயிலட்டையும் புவனத்தட்டையும் வரச் சொல்லிப் போட்டு வருவம். மற்றப் பெட்டையள் அயலிலை தானே..... கிளியை விட்டுக் கூப்பிடுவம்....” என்றாள்.

“நான் நாகராசா அண்ணரட்டையும் போக வேணும்.... சரி .... வா.... கெதியாய்ப் போட்டு வருவம்!” எனச் சம்மதம் தெரிவித்தான் சேனாதி.

அவர்கள் மயில் வீட்டை அடைந்தபோது, அவள் முன்பக்க வேலியில் கொக்கத் தடியால் ஆட்டுக்குக் குழை வெட்டிக் கொண்டிருந்தாள்.

“மயில்!..” என்ற பொன்னாவின் அழைப்புடன் திரும்பிப் பார்த்த அவளின் முகம் ஏனோ திடீரென இருளடைந்தது. அவள் இருவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, “என்ன பொன்னா....?” எனக் கேட்டாள்.

“பொழுதுபட குஞ்சாத்தை வீட்டை வாறியே...?”.

“ஏன்...?”

சேனாதி கேலியாக, “என்ன உன்னைக் கலியாணம் கட்டவே கூப்பிடுவம்.... கொஞ்ச நெல்லுக் குத்தக் கிடக்கு... அதுக்குத்தான்..” என்றான் பகிடியாக.

மயில் ஒரு பெருமூச்சுடன் நிலத்தைப் பார்த்தவாறே.... ம்.... என்னை ஆரும் ஏன் கலியாணத்துக்குக் கேட்கப் போகினை..... சொத்து சுகமிருக்கோ.... பெத்த தேப்பன் தான் இருக்கோ?....” என்றாள்.

சேனாதி திகைத்துப் போய்விட்டான்.

“என்னடி மயில் நான் பகிடிக்குச் சொல்ல நீ இப்பிடி.....” எனத் தடுமாறினான்.

தங்கள் இருவரையும் கண்டதும் திடீரென அவளின் முகம் மாறியதும், அவள் இப்படியான ஒரு கதை சொன்னதும் ஏன் என்பதைப் பொன்னாவாலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

“என்னடி மயில்.... “நீ என்ன சொல்லுறாய்?”

“ஒண்டுமில்லை.... நானும் பகிடிக்குத்தான் சொன்னனான். நீங்கள் போங்கோ ..... நான் பின்னாலைவாறன்...” என்றாள் மயில்.

பொன்னாவால் அதைப் பகிடியாக ஏற்றுக்கொள்ளமுடியாவிட்டாலும், அது பற்றி தனியாக இருக்கும்போது கேட்க வேண்டுமென நினைத்துக் கொண்டாள்.

இருவரும் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டனர்.

அவளின் பதில் சேனாதியையும் கூடத் திருப்திப்படுத்தவில்லை.

அவன் பொன்னாவிடம், “நாங்கள் பொடியள் பெட்டையள்... எங்களுக்கை எவ்வளவு பகிடி கதைக்கறனாங்கள், அப்பிடியிருந்தும் இவள் இண்டைக்கு ஏன் இப்படிக் கதைச்சவள்...?” எனக் கேட்டான்.

“எனக்கும் விளங்கேல்லை....? ஆனால்.....” என்று விட்டு இடை நிறுத்தினாள் பொன்னா.

“சொல்லன்....!”

“என்னண்டா மச்சான், இவள் அண்டைக்குக் கோயிலடியிலை தான் ஆரையோ விரும்பிறதெண்டு என்னட்டைச் சொன்னவள்....”.

“ஆராம்...?”

“அதைச் சொல்லமாட்டனென்ட்டிட்டாள்!”.

“நீ மெல்ல அவளட்டை அவன் ஆரெண்டு கேள்..... சரவணையப்புவட்டைச் சொல்லி விஷயத்தை முடிப்பம்..... பாவம் நல்ல பெட்டை.... தேப்பனில்லாத குறையை நாங்கள்தான் போக்க வேணும்....”.

பொன்னா, “அவள் விரும்பிறவன் நீ தான் எண்டால் என்ன செய்வாய் மச்சான்...?” எனக் கேட்க நினைத்தவள் அந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கி விட்டாள். அப்படி அவள் கேட்டிருந்தால் பதில் கிடைக்குமோ இல்லையோ செவியில் பிடித்து முறுக்கிச் சேனாதி அவளின் தலையில் குட்டுவது மட்டும் நிச்சயம் நடக்குமெண்டு அவளுக்குத் தெரியும்.

ஆனால், தாங்கள் அங்கு போனபோது சேனாதியைக் கண்டதும் அவளின் முகம் மாறியதும்.... அவன் கேலியாக உன்னைக் கலியாணம் பேசவே கூப்பிடறம்....” எனக் கேட்டவுடன் அவள் உணர்ச்சி வசப்பட்டதும் பொன்னாவுக்கு ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்தத் தவறவில்லை. என்றாலும் பொன்னா, “கேட்டுப் பாக்கிறன் மச்சான்!” என்றாள்.

அவர்கள் இருவரும் கிளி வீட்டடியை நெருங்கியபோது சேனாதி, “நீ கிளியை விட்டு எல்லாம் பெட்டையளையும் கூப்பிடு, நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு நாகராசா அண்ணரட்டைப் போட்டு வாறன்...” என்றான்.

“சரி! மச்சான்!” என்று விட்டுப் படலையைத் திறந்து கொண்டு உள்ளே போனாள் அவள்.

பொன்னா நான்கைந்து இளம் பெண்களிடம் கிளியை அனுப்பிவிட்டுக் குஞ்சாத்தை வீட்டுக்கு வந்தபோது அவள் “பொன்னா நான் போய் நாலைஞ்சு பெண்டுகளைக் கூட்டிவாறன்.... மாலுக்கை குலம், கொம்பறையிலை நெல்லள்ளுறான், கடகத்திலை போட்டு அடுக்களைத் தாவாரத்துத் திண்ணையிலை கொண்டு வந்து வையுங்கோ....” என்று விட்டுப் படலையை நோக்கிப் போனாள்.

மாலுக்குள் போனபோது குலம் நெல்லைக் கடகத்தில் நிரப்பிக்கொண்டிருந்தான்.

பொன்னாவுக்கு ஐந்தாறு நாட்களாக அவனைக் காணாததால் ஏற்பட்ட தவிப்பு அவனைக் கண்டதும் கோபமாக மாறியது.

“இவ்வளவு நாளும் எங்கை காசி யாத்திரை போனனியே...?”

“பாவம் செய்தவைதான் அதைக் கங்கையாத்திலை பாவத்தைக் கழுவ காசிக்குப் போறவையெண்டு குஞ்சாத்தை சொல்லுறவ..... நான் என்ன பாவம் செய்தனான்...?”

“ஒரு பெட்டையை படலையை பாத்துப்பாத்து விசர் பிடிக்கிற மாதிரித் தவிக்க வைக்கிற பாவம்தான்...”.

“என்ன பொன்னா செய்யிறது...? பகலிலை தோட்ட வேலை இரவிலை படுக்க ஒரு நாளைக்கு ஒரு இடம் தேடியலைய வேணும்.... நான் நேரிலை வராட்டியும் நீ நெடுகவும் என்ரை நினைவிலை வாறனீதானே...!” எனச் சமாதானப்படுத்தினான்.

ஓரளவு மனம் தணிந்த பொன்னா, “மச்சான்.... ஒவ்வொரு நாளும் என்னை ஒருக்காலெண்டாலும் காண் .... இப்படி ஐஞ்சாறு நாளைக்கொருக்கால் கண்டால் பிசகாய்ப் போடும்...” என்றாள் ஒரு மெல்லிய புன்னகையுடன்.

“என்ன பிசகு...?”

“கனநாள் விட்டிட்டுக் காணயுக்கை கண்டவுடனை....” என்று விட்டு வார்த்தைகளை இடைநிறுத்தியபோது அவனின் முகம் ஓடிச் சிவந்தது.

“கண்டவுடனை...?”

“அண்டைக்கு நீ ஆலமரத்தடியிலை நடந்த மாதிரியோ, ஒரு இரவு கடப்படியிலை நான் உன்னோடை நடந்த மாதிரி ஓடி வந்து கட்டிப்பிடிச்சு அப்பிடி நடக்க வேணும் போலை அந்தரமாயிருக்கும்...” என்று விட்டு தலையைக் குனிந்து கொண்டாள் பொன்னா...

குலம் அவளின் நாடியில் பிடித்து முகத்தை நிமிர்த்தி, “இப்பவும் அப்படி நடக்க வேணும் போலை இருக்குதே...?” எனக் கேட்டான்.

அவள், “இல்லை!” என்பது போன்று பக்கவாட்டில் தலையசைத்துவிட்டு “பிறகு அண்டிரவு கடப்படியிலை பொருந்திக் கொண்ட விஷயம் பிசகிப் போகக் கூடாதல்லே மச்சான்....” என்றாள்.

“எனக்கும் அப்பிடி ஆசை வாறதுதான்.... ஆனால், நானும் இவ்வளவு நாள் கழிச்சு சந்திச்சாலும் சொன்ன வாக்கு மாறமாட்டன்”.

“மச்சான்! உன்னை நானோ..... என்னை நீயோ சந்திக்கத் துடிக்கிறது ஒருதரிலை ஒருதர் வைச்சிருக்கிற கொள்ளை ஆசையிலை தான். அப்பிடியெல்லாம் சந்திக்கிற நேரமெல்லாம் நடப்பமெண்டால் பிறகு அதுக்காகவே சந்திக்கத் தவிக்கிற மாதிரிப் போடுமல்லே மச்சான் ....”

குலம் வியப்புடன் அவளின் முகத்தைப் பார்த்தான். அவள் சில விஷயங்களை எவ்வளவு ஆழமாக யோசிக்கிறாள் என்பதை எண்ணியபோது அவனுக்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது.

உணர்ச்சிவசப்பட்ட குலம் “பொன்னா..... அதுக்கான நேரம் வராமல் நான் அப்பிடி நடக்கமாட்டன். ஏனெண்டால் உன்னை நினைச்சாலே ஆயிரம் முத்தம் கிடைச்ச மாதிரித்தான்....” என்றான்.

உந்தக் கதையே எனக்கு ஆயிரம் முத்தங்கள் கிடைச்ச மாதிரி இருக்கிது மச்சான்....” என்றுவிட்டு நெல்லுக் கடகத்தைத் தூக்கினாள் பொன்னா.

(தொடரும்)


Category: வாழ்வு, புதிது
Tags: வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE