Friday 30th of September 2022 05:32:17 AM GMT

LANGUAGE - TAMIL
.
உயிர்த்தெழுகை - 23 (நா.யோகேந்திரநாதன்)

உயிர்த்தெழுகை - 23 (நா.யோகேந்திரநாதன்)


அடுத்தநாள் காலையில் காசியரும், சரவணையப்புவும் பாடசாலைக்கு வந்தபோது டொலர் பண்ணையிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தங்கியிருந்த மண்டபத்தின் ஒரு மூலை வாலைக்குலைகளாலும் பலாப்பழங்களாலும், சோளம் பொத்திகள் நிரப்பப்பட்ட உரப்பைகளாலும் நிறைந்திருந்தது.

அவற்றை ஆச்சரியத்துடன் பார்த்த சரவணையப்பு “காசி... எங்கடை சனம் உதவி செய்யிறதிலை எங்களையே மேவுறதெண்டு தான் நிக்குதுகள்....“என்றார் ஒருவித பெருமையுடன்.

காசியும் “ஓமப்பு..... நேற்று பின்னேரம் நாங்கள் இஞ்சை வரயுக்கை எங்கடை சனம் கனபேர் வந்து இதுகளோடை நடந்த விஷயங்களைப் பற்றிக் கதைச்சுக் கொண்டிருக்கேக்கை நானும் ஏதோ விடுப்புப் பாக்கத்தான் வந்திருக்கிதுகள் எண்டு நினைச்சன்... இப்ப பார்த்தால் தங்களாலை ஏலுமானளவு சாமான்களைக் கொண்டு வந்து குடுத்திருக்குதுகள்....” என சரவணையப்புவின் கதையை ஆமோதித்தார்.

முதல்நாள் மாலை பொன்னாவும் சேனாதியும் குஞ்சாத்தை வீட்டுக்குப் புறப்பட்டுப் போன பின்பு சரவணையப்புவும் காசியரும் மறுநாள் சனங்கள் போவதற்கு உழவு யந்திரம் ஏற்பாடு செய்யப்பட்டது பற்றியும் காலை உணவு கொண்டு வரப்படுமென்பது பற்றியும் அவர்களுக்கு அறிவிக்கப் பாடசாலைக்குப் போயிருந்தனர்.

அங்கு அவர்கள் போய்ச் சேர்ந்த போது, அந்த ஊர் மக்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர். பண்ணையிலிருந்து அங்கு நீண்ட காலமாகக் குடியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு வந்து பாடசாலையில் தங்கியிருக்கும் விடயம் ஊரெல்லாம் பரவி விடவே அங்கு ஏராளமான மக்கள் வந்து விட்டனர்.

பூசாரி கந்தப்பரும் தனது அயலட்டைச் சனங்களிடமும் பின்னேரப் பாலைக் கறப்பிச்சுக் கொண்டு தனது பட்டி மாடுகளின் பாலையும் சேர்த்துக் கொண்டு வந்து அதிபரின் மனைவியிடம் கொடுத்திருந்தார்.

சரவணையப்புவும், காசியரும் அங்கு போனபோது, அதிபரின் மனைவியும் மதிவதனியும் ஒரு பெரிய அலுமினியப் பானையில் கொண்டு வந்த பால் தேநீரைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் அதிபரிடமும் வந்திருந்த மக்களிடமும் கதைத்து காலையில் செய்யவேண்டிய விடயங்களை விளங்கப்படுத்தி் விட்டு விடைபெற்ற போது அதிகாலையிலேயே அந்த ஊர்மக்களால் இவ்வளவு அன்பளிப்புகள் வழங்கப்படுமென நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

அவர்கள் அவற்றைப் போய்ப் பார்த்துவிட்டு மண்டபத்தை விட்டு வெளியே வந்தபோது, சின்னக் குட்டியின் தாயாரான விண்ணாணம் வேதாத்தை தலையில் ஒரு உரப் பையைச் சுமந்துகொண்டு வந்தாள்.

அவள் தான் அந்த ஊரின் ஒரு மருத்துவிச்சியும், முறிவு நோவு வைத்தியருமாவாள். அவள் புக்கை கட்டினால் மாறாத நோவும் மாறுமெண்டும் பத்துப் போட்டால் பொருந்தாத எலும்பும் பொருந்தும் எனவும் மக்கள் பேசிக்கொள்ளுமளவுக்கு அவளின் வைத்தியத்தின் பெறுமதி காத்திரமாக இருந்தது.

சரவணையப்பு, “என்னணை பையிலை?....” எனக் கேட்டார்.

“அதடா சரவணை எரப்பன் மரை வத்தல் கிடந்தது. இந்தச் சனம் பாவமல்லே! குடுப்பமெண்டு கொண்டு வந்தனான்...” என்று விட்டுப் பையை இறக்கி விறாந்தையில் வைத்தாள்.

“என்ன.... உரப்பை நிறையக் கிடக்குது ..... எரப்பன் எண்ணுறாய்? ....... எனக் கிண்டலாய்க் கேட்டார் சரவணை.

“கருங்காலி மண்டையா!..... இவ்வளவு சனத்துக்கும் இது எரப்பன் தானேயடா ....” என்று அவரின் வாயை மூட வைத்தாள் வேதாத்தை.

அந்த ஊரிலேயே சரவணையப்புவை “எடா .... புடா” என அழைக்கும் உரிமை அவளுக்கு மட்டும் தானிருந்தது.

காசி... “நீ ஏனப்பு அவவட்டை வாயைக் குடுத்து வேண்டிக் கட்டுறாய்?..... என மெல்லிய சிரிப்புடன் கேட்டார்.

“கிழவியின்ரை விண்ணாணமும் ஒரு மருந்துதான் காசி....” என்றார் சரவணையப்பு.

அந்த நேரத்தில் குஞ்சாத்தையும் வேறு சில பெண்களும் புட்டுக் கடகங்களைத் தலைச் சுமையாகக் கொண்டு வந்து இறக்கினர். ஒரு கிண்ணத்தில் அம்மியில் அரைத்த செத்தல் மிளகாய்ச் சம்பலைப் பொன்னாவும் இன்னொரு பெரிய அலுமினியப் பாலையில் பொரித்த கத்தரிப் பிரட்டலையும் மயிலும் கொண்டு வந்து இறக்கினர். தயிரை ஏற்கனவே ஊர்ச் சனங்கள் கொண்டு வந்து கொடுத்திருந்தனர்.

சிறிது நேரத்தில் சேனாதி சைக்கிள் கரியலில் ஏராளமான தேக்கம் இலைகளைக் கட்டிக் கொண்டு வந்திறங்கினான்.

அவனின் அருகே சென்ற பொன்னா கரியல் கயிற்றை அவிழ்த்தவாறே, “என்ன மச்சான்? இவ்வளவு சனத்துக்கும் இது காணுமே?....” எனக் கேட்டாள்.

“குலம் வெட்டிக் கொண்டிருக்கிறான். கொண்டு வருவன். நீங்கள் இதைக்கொண்டு போய் கிணத்தடியிலை கழுவுங்க” என்றான் சேனாதி.

பொன்னாவும் மயிலும் புவனமும் இலைகளைத் தூக்கிக் கொண்டு கிணத்தடியை நோக்கி நடந்தனர்.

மயில் இலைகளை அவனிடம் வாங்கும்போது அவனைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தாள். அவன் மெல்லிய சிரிப்புடன் “என்ன நேற்றையில் கோபம் தீர்ந்திட்டுது போலை கிடக்குது?....” எனக் கேட்டான்.

”கோபம் வந்தால் தானே தீருறதுக்கு....” என்று விட்டு அவனின் பதிலை, எதிர்பாராமலே மயில் பொன்னாவுக்குப் பின்னால் நடக்க ஆரம்பித்தாள்.

அவன் அவள் போவதையே பார்த்துக்கொண்டு நின்று விட்டு, சைக்கிளைக் கொண்டு போய் ஒரு ஓரமாய் நிறுத்தினான்.

பொன்னா, மற்றப் பெண்களுடன் சேர்ந்து இலைகளைக் கழுவிக் கொண்டிருந்தபோதிலும் வெளி வாசல் பக்கம் குலத்தை எதிர்பார்த்து அவளின் கண்கள் பாய்ந்து கொண்டிருந்தன.

முதல் நாள் குஞ்சாத்தை வீட்டில் நெல்லுக்குத்தி அரிசி ஊறப்போட்டு முடிக்க நன்றாக இருட்டி விட்டது. மற்றப் பெண்கள் அயலில் உள்ள வீடுகளைச் சேர்ந்தவர்களாதலால் அவர்கள் தாங்களாகவே போய்விட்டனர்.

பொன்னாவையும் மயிலையும் கூட்டிக்கொண்டு போய் விடும்படி குஞ்சாத்தை குலத்திடம் சொன்னாள். அவர்கள் மயிலைக் கொண்டு போய் அவளின் வீட்டில் விட்டு விட்டு காசியர் வீட்டை நோக்கி நடந்தனர்.

இன்னும் நிலவு காலிக்காத போதும் அவர்களின் கண்கள் இருட்டில் கூடப் பார்க்குமளவுக்குப் பழகியிருந்தன.

பொன்னா அவனிடம் மெல்ல... “சரியான கும்மிருட்டாய்க் கிடக்குது எங்கடை வீட்டை படுத்திட்டுப் போவன்....” எனக் கேட்டாள்.

“உங்கடை வீட்டையோ....?”

“ஓ.... அப்பு திண்ணையிலை படுப்பர்..... நீ மாலுக்கை படுக்கலாம்....!

“தற்செயலாய் என்னைப் பிடிக்க ஆரும் வந்திட்டால்.....” எனக் கேட்டு விட்டு இடை நிறுத்தினான் குலம்.

அவள் “என்ன மச்சான் நீ.... தாவாரத்து வளையிலை தானே அப்புவின்ரை துவக்கு சொருகியிருக்கும்... கையிலை எடுத்தாரெண்டால் மழை மாதிரி வெடி பறியும் தானே...! நான் காட்டுக் கத்தியைக் கையிலை எடுக்க மாட்டனே...?” என்றாள்.

பொன்னாவின் துணிவும் தன்னம்பிக்கையும் தனக்காக எதையும் செய்யத் தயாரான உணர்வும் அவனை மெய் சிலிக்க வைத்தன. உண்மையிலேயே காசியர், சின்னக்குட்டி ஆகியோரின் துவக்குகள் ஒவ்வொரு தோட்டாவாகப் போட்டுச் சுட வேண்டியவையாயிருந்தாலும்கூட அவர்கள் அடுத்தடுத்துத் தோட்டா மாற்றிச் சுடும் வேகம் தன்னியங்கித் துப்பாக்கிகளுக்கு நிகராயிருக்கும்.

அவன் உடனடியாகப் பதில் எதுவும் சொல்லாத நிலையில் “ஏன் மச்சான் ஒண்டும் பேசுறாயில்லை.... எங்கடை வீட்டை படுக்க விருப்பமில்லையோ....” எனக் கேட்டாள்.

“கொஞ்ச நாளையாலை உங்கடை வீட்டை தானே படுக்கப் போறன்..... அப்ப மாலுக்கையில்லை. வீட்டுக்கை, அதுவும் உன்னோடை!”

“நீ..... உனக்கு எப்பவும் உந்த எண்ணம்தான்...” எனச் செல்லமாகக் கோபித்தாள் பொன்னா.

“அப்பிடியில்லை பொன்னா...... வேறை ஒரு வீட்டை வாறனெண்டு சொன்னனான் ...... பாத்துக் கொண்டிருக்குங்கள்....” என்றான் குலம்.

“அப்ப விடியப்பறம் அரிசியிடிக்க நான் தனியேவே போறது....?”

“அது கோழி கூவ நான் வந்து கூப்பிடுறன்?...”

“அவள் ஒரு பெருமூச்சுடன் ....ம் ..... செய்யாத ஒரு காரியத்துக்காக இப்படி மாறி மாறிப்படுத்து கஷ்டப்படுறியே...? என்றாள் கவலையுடன்.

“அது நான் செய்யாத காரியம் தான்.... ஆனால் அது நானும் செய்ய வேண்டிய காரியம்தானே!”

குலத்தின் அந்த வார்த்தைகள் சுமந்து வந்த ஏதோ ஒரு விதமான உணர்வைப் பொன்னாவால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

அந்த நினைவுகளில் மிதந்தவாறே பொன்னா இலைகளைக் கழுவிக் கொண்டிருந்தபோதும், “அது நானும் செய்ய வேண்டிய காரியம்தானனே”. என அவன் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவளின் காதில் ஒலித்து அவன் இயக்கத்துக்குப் போய்விடுவானோ என்ற பயத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.

பொன்னா தான் கழுவிய இலைகளை மண்டபத்திற்குள் கொண்டுபோய் வைத்து விட்டுத் திரும்பியபோது குலம் இலைக் கட்டுக்களுடன் வந்து சைக்கிளை நிறுத்திக் கொண்டிருந்தான். அதைப் புவனமும் மயிலும்போய் வாங்கிக் கொண்டனர்.

சிறிது நேரத்தில் குஞ்சாத்தையும், மற்றப் பெண்களும் சாப்பாட்டைப் பரிமாற ஆரம்பித்தனர். சொர்ணம் ரீச்சரும் மதிவதனியும் அவர்களுக்கு ஓடியாடி உதவி செய்தனர். அவர்கள் சாப்பாட்டை முடிக்கவும் நாகராசாவின் உழவு யந்திரம் வரவும் சரியாக இருந்தது. அவன் நாவலர் பண்ணைக்கு அதி்காலையிலேயேபோய் டொலர் பண்ணைச் சனங்களைக் கொண்டு வரப்போகும் விஷயத்தை அறிவித்துவிட்டு வந்திருந்தனர்.

அதிபர், காசியர், சரவணையப்பு, நாகராசா ஆகியோர் கதைத்துக்கொண்டிருந்தபோது மருதோடைக்கு தபால் பை கொண்டு போகும் தபாலோடி வந்து அதிபரின் கையில் அன்றைய தினசரியைக் கொடுத்தான். அதிபர் அவன் வரும்போது ஒவ்வொரு நாளும் நெடுங்கேணியிலிருந்து பத்திரிகை எடுத்துவர ஏற்பாடு செய்திருந்தார். பத்திரிகையைக் கொடுத்து விட்டு “முக்கிய விஷயம் ஒண்டு கேள்விப்பட்டனீங்களே சேர்...” எனக் கேட்டான் அவன்.

“என்னது?”

“வெங்கடை கச்சேரிப் பெரியவரை நேற்றுப் பின்னேரம் பரந்தன் முல்லைத்தீவு றோட்டிலை வைச்சு வாகனத்தாலை இறக்கிக் கடத்திக் கொண்டு போட்டாங்களாம்”.

அந்த வார்த்தைகள் அனைவரையும் திகைக்க வைத்து வி்ட்டன.

அதிபர், “ஆராம் கடத்தினது?” எனக் கேட்டார்.

அவன் “தெரியேல்லை சேர். இயக்கமாயிருக்குமெண்டு தான் எல்லாரும்டி கதைக்கினை....” என்றான்.

ஒருமுறை நாலு பக்கமும் பார்த்துவிட்டு, சரவணையப்புவின் மூளை ஓடி வேலை செய்யத் தொடங்கியது. கச்சேரி அதிகாரிகள் இராணுவத்தினருடன் போய் டொலர் பண்ணைச் சனத்தை வெளியேற்றியமைக்கும் கச்சேரிப் பெரியவர் கடத்தப்பட்டதுக்கும் சம்பந்தம் இருப்பதாகவே அவருக்குத் தோன்றிது.

ஒருசில நிமிடங்களில் கச்சேரிப் பெரியவர் கடத்தப்பட்ட செய்தி அந்த இடமெங்கும் பரவி விட்டது.

அதைக் கேட்டதும் குஞ்சாத்தை “பார்த்தியளே! எளியாரை வலியார் கேட்டால் வலியாரைத் தெய்வம் கேட்கும். ஒண்டுமறியாத இந்தச் சனத்தைத் துடிக்கப் பதைக்க தெருவிலை விட்ட பழியைத் தெய்வம் பொறுக்குமே....?” என்றாள்.

அருகில் நின்ற மதிவதனி தனக்குள் அது தெய்வப் பழியோ இல்லையோ அதை தன்னுடைய ஜீவாவின் இயக்கம்தான் செய்திருக்குமெனத் திடமாக நம்பினாள்.

ஏனெனில் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட பலர் அவர்களால் தண்டிக்கப்பட்டதை அவள் அறிந்திருந்தாள்.

(தொடரும்)


Category: வாழ்வு, இலக்கியம்
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவுபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE