உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போருக்கு உரிய நியாயமான தண்டனையை ரஷ்யா நிச்சயம் எதிர்கொள்ள வேண்டும். உலகம் இதை உறுதி செய்ய வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் உலகத் தலைவர்கள் மத்தியில் உக்ரைன் ஜனாதிபதியின் பதிவு செய்யப்பட்ட உரை நேற்று ஒளிபரப்பப்பட்டது.
இதன்போதே உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொலை செய்த குற்றங்கள், பெண்கள் மற்றும் ஆண்களை சித்திரவதை மற்றும் அவமானப்படுத்திய குற்றங்கள் ஆகியவற்றுக்கான தண்டனை ஐக்கிய நாடுகள் சபை ரஷ்யாவிற்கு வழங்க வேண்டும் என ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.
ரஷயாவின் போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க சர்வதேச சிறப்பு நீதிமன்றத்தை நிறுவ வேண்டும். இந்த நடவடிக்கை அனைத்து ஆக்கிரமிப்பாளர்களுக்கும் ஒரு சமிக்ஞையாக இருக்கும் எனவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
இந்தப் போரால் ஏற்படுத்திய பெரும் அழிவுகளுக்கு ரஷ்யா அதன் சொந்த சொத்துக்களைக் கொண்டு இழப்பீட்டு தொகை கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
போர் நிறுத்தம் தொடர்பான உண்மையான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா பயப்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்களும், பயங்கரவாதிகளும் பொய் சொல்வது பொதுவானது. அதைப் போல ரஷ்யா அனைவரிடமும் பொய் சொல்கிறது எனவும் ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டினார்.