Friday 30th of September 2022 03:51:16 AM GMT

LANGUAGE - TAMIL
-
குற்றச் செயல்களுக்குத் தண்டனை வழங்காத நாடே இலங்கை; மனித உரிமை செயற்பாட்டாளர் சந்தியா எக்னெலிகொட!

குற்றச் செயல்களுக்குத் தண்டனை வழங்காத நாடே இலங்கை; மனித உரிமை செயற்பாட்டாளர் சந்தியா எக்னெலிகொட!


காணாமல்போன கணவருக்காகச் சளைக்காமல் போராடியதற்காக சர்வதேச விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் சந்தியா எக்னெலிகொட, இலங்கை குற்றச் செயல்களுக்குத் தண்டனை வழங்காத நாடு என்று சர்வதேச சமூகத்துக்குத் தெரிவித்துள்ளார்.

12 வருடங்களுக்கும் மேலாக நீதிக்காகப் போராடி வரும் சந்தியா எக்னெலிகொட, ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அமர்வில் உரையாற்றும்போதே சிங்கள மொழியில் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று நீங்கள் காணும் எனது மொட்டையடிக்கப்பட்ட தலை மற்றும் கறுப்பு ஆடைகள், நான் குற்றவியல் சக்திகளுக்குத் தண்டனை கிடைக்காத, பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்காத நாட்டிலிருந்து வந்துள்ளேன் என்ற செய்தியை உங்களுக்கு வழங்குகின்றது.

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட எனது கணவர் ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவுக்கு நீதி கிடைக்க ஒவ்வொரு நாளும் புதிய மற்றும் முடிவில்லாத போரில் ஈடுபட வேண்டியுள்ளது.

என்னைப் போன்று காணாமல்போன தமது உறவுகளைத் தேடி வரும் சிங்கள, தமிழ், முஸ்லிம் தாய்மார்கள் நாடு பூராகவும் உள்ளனர்.

வடக்கில் தமிழ் தாய்மார்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். என்னைப் போலவே, அவர்களும் பொலிஸ் போன்ற பல அரசு நிறுவனங்களுடன் மோதுகின்றார்கள்.

கடந்த நான்கு தசாப்தங்களில் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும், எந்தவொரு ஆணைக்குழுவும் காணாமல்போனவர்களுக்கோ அல்லது அவர்களது குடும்பங்களுக்கோ நீதி வழங்கவில்லை" - என்றார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான சந்தியா எக்னெலிகொட, பாதிக்கப்பட்டவர்கள் உண்மையையும் நீதியையும் அடைய நம்பக்கூடிய ஒரு சட்டப் பொறிமுறையைப் பெறுவதற்கு ஐ.நா. தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டார்.

2017ஆம் ஆண்டில், இலங்கையில் நடந்த போரிலும் முந்தைய கிளர்ச்சிகளிலும் காணாமல்போன ஆயிரக்கணக்கான மக்களின் உறவினர்களின் அடையாளமாக மாறிய ஒரு பெண்ணாக சந்தியா எக்னெலிகொடவுக்கு அமெரிக்காவின் சர்வதேச தைரியத்துக்கான விருதை அளித்தது.

காணாமல்போன தமது கணவர் பிரகித் எக்னெலிகொட குறித்த உண்மையை வெளிக்கொண்டுவர, அதிகாரிகளின் தடைகளையும் மீறி 80 தடவைகளுக்கு மேல் நீதிமன்றம் சென்று சந்தியா காட்டிய தைரியமே அவருக்கு இந்த விருது கிடைத்தமைக்குக் காரணம் என அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் தோமஸ் ஏ ஷெனொன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE