Tuesday 7th of May 2024 05:59:28 AM GMT

LANGUAGE - TAMIL
மைத்திரி - கூட்டமைப்பு இன்று முக்கிய பேச்சு!

மைத்திரி - கூட்டமைப்பு இன்று முக்கிய பேச்சு!


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் மற்றும் திணைக்களங்களின் பிடியில் உள்ள நிலங்களின் விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை முக்கிய பேச்சு நடைபெறவுள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), த.சித்தார்த்தன் (புளொட்) ஆகியோர் ஜனாதிபதியை இன்று மாலை 6 மணிக்கு சந்திப்பதாக முடிவாகியுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் திணைக்களம், வன உயிரிகள் திணைக்களம் ஆகியவற்றின் பிடியில் உள்ள நிலங்கள் விடுவிப்பு தொடர்பில் குறித்த திணைக்களங்களின் பணிப்பாளர்களுடன் விரைவில் ஜனாதிபதி ஒரு சந்திப்பை ஏற்படுத்தி அவர்களுடனான நேரடிச் சந்திப்பில் அவர்களிடம் இருந்து உடனடியாகப் பதிலைப் பெற்றுத்தர வேண்டும் என இன்றைய பேச்சில் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

அதேவேளை, வடக்கு, கிழக்கில் 8 மாவட்டங்களில் இன்னமும் படையினரின் பிடியிலுள்ள நிலங்களின் விவரங்களையும் ஜனாதிபதியிடம் இன்று சமர்ப்பித்து அதற்கான பதிலைப் பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றைய சந்திப்பின்போது தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் கூட்டமைப்புடன் ஜனாதிபதி கலந்துரையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தச் சந்திப்புத் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா கருத்துத் தெரிவிக்கையில், "படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசுவதற்கு நேரம் கேட்டோம். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கேட்டபோது அவர் வெளிநாடுகளுக்குத் தொடர்ச்சியாகச் சென்றதனால் அவருடைய நேரத்தைப் பெறமுடியாமல் போனது. இப்போது மயிலிட்டிப் பிரதேசத்தில் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டபோதும் அந்த மக்கள் அங்கு மீளக்குடியமர அனுமதிக்கப்படவில்லை. முக்கியமாகப் பிரதமர் யாழ்ப்பாணம் வந்தபோது கடந்த 16ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பலாலி கிழக்கு உள்ளிட்ட ஏனைய பகுதிகளை இராணுவம் தங்களுக்குத் தேவையானது என்று கூறியுள்ளது என்றார். நாங்கள் அங்கேயே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தோம். அதுமட்டுமல்லாமல் மயிலிட்டித் துறைமுகத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடிக்கல் நட்டபோது அந்த வருட இறுதிக்குள் மக்கள் மீள்குடியமர்வதற்கு அனுபதிப்பதாகப் பகிரங்கமாகக் கூறியிருந்தார். அது பற்றியும், மயிலிட்டி, பலாலி மட்டுமல்லாது வடக்கு, கிழக்கில் எங்கெங்கு இராணுவம் மக்களுடைய காணிகளை ஆக்கிரமித்துள்ளதோ அவற்றை விடுவிக்குமாறும் ஜனாதிபதியை வற்புறுத்தவுள்ளோம்" - என்றார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE