;

Sunday 31st of May 2020 09:04:57 PM GMT

LANGUAGE - TAMIL
தமிழ்த் தலைமைகளின் ஒன்றிணைவு சாத்தியமா?
புதிய அரசியல் புத்தூக்கம் - தமிழ்த் தலைமைகளின் ஒன்றிணைவு சாத்தியமா?

புதிய அரசியல் புத்தூக்கம் - தமிழ்த் தலைமைகளின் ஒன்றிணைவு சாத்தியமா?


ஜனாதிபதி தேர்தல் மூலமாகத் தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள திருப்பத்தில் புதிய அரசு புத்தூக்கம் பெற்றிருக்கின்றது. இந்தப் புத்தூக்கம் முழுக்க முழுக்க அதிகார பலத்தை ஆதாரமாகக் கொண்டது. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கின்ற, இதுகால வரையிலான – மரபு வழியிலான வழிமுறைகளைக் கடந்து புதிய பாதையில் பயணிக்கின்ற ஒன்றாகத் திகழ்கின்றது.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கின்ற மரபு வழி முறையானது, நீதியை அடிப்படையாகக் கொண்டது. ஜனநாயகத்தை மதிப்பது. உரிமைகளுக்கு உரிய இடமளித்துச் செயற்படுவது. நாட்டு மக்கள் அனைவரையும் உள்ளடக்கி பொதுவான சுபிட்சத்தை நோக்கி நகர்வது. இந்த வழிமுறைகள் புதிய அரசாங்கத்தில் கடைப்பிடிக்கப்படமாட்டாது என்பதை நிகழ்வுகள் நிதர்சனமாகக் காட்டியுள்ளன.

யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஐக்கியத்தையும், இன நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த நிலைமாறுகால நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியம் என்பதை சர்வதேசம் உணர்த்தியது. ஐநா மன்றம் தனது மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களின் ஊடாக அதற்கான வழித்தடத்தைக் காட்டியது.

ஆனால் யுத்தத்தில் வெற்றியடைந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதனை ஏற்கவில்லை. மறுத்துரைத்தது. போர்க்குற்றங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் உள்ளக நீதிப் பொறிமுறைகளின் ஊடாகவே பொறுப்பு கூறப்படும் என்று பிடிவாதம் பிடித்தது. அவ்வாறே செயற்படுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தது.

ஆனால் 2015 ஆம் ஆண்டின் ஆட்சி மாற்றத்தையடுத்து, நாட்டில் மலர்ந்த நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பு கூறும் விடயத்தில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை ஏற்றுக் கொண்டது. அவற்றை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்தது. ஐநாவின் தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி அவற்றை நிறைவேற்றுவதில் பங்களிப்பு செய்தது.

ஆனால் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் அரசாங்கம் போதிய அளவில் அக்கறை செலுத்தவில்லை. ஏனோ தானோ என்ற வகையிலேயே நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. காணாமல் போனோருக்கான அலுவலகத்தை உருவாக்குவதிலும் அரசாங்கம் அசமந்தப் போக்கிலேயே செயற்பட்டிருந்தது. இதன் காரணமாகவே, அந்த அலுவலகம் உருவாக்கப்பட்ட போதிலும், அதனால் எதுவித பயனும் இல்லாமல் போயுள்ளது.

ஆட்சி நிர்வாகத்தில் திறமின்மை, அதிகாரப் போட்டி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமை போன்ற பல்வேறு காரணங்களினால் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் அதிருப்தி அடைந்திருந்தார்கள். குறிப்பாக ஆயுதமேந்தும் அளவுக்குத் தீவிரம் பெற்றிருந்த முஸ்லிம் அடிப்படைவாதத்தின் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களினால் நிலைகுலைந்து போன நாட்டின் தேசிய பாதுகாப்பு நிலைமை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழப்பதற்கு வழியேற்படுத்தி இருந்தது.

மறுபக்கத்தில் வெல்ல முடியாத யுத்தத்தில் வெற்றியடைந்து நாட்டை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து பாதுகாத்த மக்களின் மீட்பராக மகிந்த ராஜபக்ச கருதப்பட்டார். வரலாற்றுத் தேசிய வீரனாக உயர்ந்த நிலையில் வைத்து போற்றப்பட்டார். ஆனாலும் அவருடைய சர்வாதிகாரப் போக்கும் குடும்ப அரசியலை நிலைநிறுத்த முற்பட்ட அவருடைய நடவடிக்கைகளும் 2015 ஆம் ஆண்டு தேர்தல் அவரைப் படுதோல்வி அடையச் செய்துவிட்டன.

ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டுச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேன தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகியதும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்புரிமையின் அடிப்படையில் அதன் தலைமைப் பதவியை மகிந்த ராஜபக்சவிடம் இருந்து கைப்பற்றி இருந்தார். கட்சித் தலைமையுமில்லை. அரசியல் அதிகாரமும் இல்லை என்ற நிலையில்தான் சாதாரண உறுப்பினராக அவர் நாடாளுமன்றத்தில் வலம் வந்தார்.

யுத்த வெற்றியையே தனது அரசியல் முதலீடாகக் கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச இந்தத் தோல்வியை எதிர்பார்த்திருக்கவில்லை. இருப்பினும் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சியில் நிலைத்திருக்க வேண்டும் என்ற உறுதியான குறிக்கோளுடன் அரசியல் செயற்பாடுகளில் அவர் முனைந்திருந்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அதி உயர்நிலையில் இருந்த அவர், அரசியலில் சாதாரண நிலைமைக்கு ஆளாகிய போதிலும், தனது குறிக்கோளில் தளர்ச்சியடையவில்லை. ராஜபக்ச குழுவினராக தனது சகோதரர்கள் மற்றும் புதல்வர்களுடன் ஆட்சி பீடம் ஏறுவதற்காக அவர் அயராத முயற்சிகளில் ஈடுபட்டார். பெரும்பான்மையினராகிய சிங்கள மக்கள் மத்தியில் கிராமிய மட்டத்தில் இருந்து தனது அரசியல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தார்.

இதற்கு மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த அதிருப்தி பேருதவியாக அமைந்தது. தேசிய பாதுகாப்பை நிலைகுலையச் செய்திருந்த உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மகிந்த ராஜபக்சக்களின் மீள் எழுச்சிக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்திருந்தது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் மூலம் நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்த ராஜபக்சக்களினால் மட்டுமே முஸ்லிம் பயங்கரவாதத்தினால் பாதிப்புக்கு உள்ளாகிய தேசிய பாதுகாப்பை நிமிர்த்தி நிலைபெறச் செய்ய முடியும் என்ற பிரசாரத்தையும் உயிரோட்டத்துடன் ராஜபக்சக்கள் முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன், தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து கரம்கோர்த்திருந்த மைத்திரி - ரணில் கூட்டு அரசாங்கம் தமிழர்களுக்கு அடிபணிந்துவிட்டது. யுத்தத்தில் தன்னால் அழிக்கப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு மீண்டும் இந்த அரசு உயிர் கொடுத்து வருகின்றது என்ற ரீதியில் அவர் தனது அரசியல் பிரசாரங்களை முன்னெடுத்து சிங்கள மக்களை அணி திரட்டினார்.

அவருடைய முயற்சிக்கு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கைமேல் பலன் கிட்டியது. கூட்டாட்சியின் பங்காளிக் கட்சிகளகிய ஐக்கிய தேசிய கட்சியையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் மண் கவ்வச் செய்து பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சியின் மூலம் வெற்றிப்பாதையில் அவர் அடியெடுத்து வைத்தார்.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்து, அரசியல் வாழ்க்கையே அஸ்தமித்துவிடுமோ என்று அச்சம் கொண்டிருந்த மகிந்த ராஜபக்சவுக்கு உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கிடைத்த வெற்றி அரசியல் ரீதியாகப் புதிய இரத்தத்தைப் பாய்ச்சியிருந்தது.

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து பொதுஜன பெரமுன என்ற கட்சியின் அரசியல் கட்டமைப்பின் ஊடாக நாடாளுமன்றத்தில் இருந்து கிராமிய மட்டம் வரையில் தனது பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அந்த முயற்சியின் பலனாகவே ராஜபக்ச குழுவினரே எதிர்பாராத வகையில் ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபாய ராஜபக்ச 13 லட்சம் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று அமோகமாக வெற்றி பெற்றார்.

சிறுபான்மை இன மக்களின் ஆதரவின்றி, பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள மக்களின் பேராதரவுடன் ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோத்தாபாய ராஜபக்ச நாட்டைப் புதியதோர் பாதையில் வழிநடத்திச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அந்தப் புதிய பாதை, வழமையான சிறுபான்மை இன மக்களின் பங்களிப்பு அற்ற நிலையில் ஆரம்பமாகி உள்ளது.

வழமையாகவே எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் அதில் நிச்சயமாக முஸ்லிம்களுக்குக் கணிசமான அமைச்சர் பதவிகள் கிட்டியிருக்கும். மலையகத் தமிழர்களுடன் வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த தமிழர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் ஜனாதிபதி கோத்தாபாய தலைமையிலான அரசு அவ்வாறு அமையவில்லை. ஒரு தந்காலிக அரசாங்கத்தை அமைத்துள்ள போதிலும், சிறுபான்மை இனத்தவரை போதிய அளவில் கவனத்தில் கொள்ளவில்லை என்பதையே அமைச்சர்களினதும், பிரதி அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்களின் நியமனங்கள் எடுத்துக் காட்டுவனவாக அமைந்திருக்கின்றன. அமைச்சுப் பதவிகள் மட்டுமல்லாமல் அமைச்சுக்களுக்கான செயலாளர்களின் நியமனங்களிலும் சிறுபான்மை இனத்தவர் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது வெட்ட வெளிச்சமாக உள்ளது.

அமைச்சுச் செயலாளர்களில் முன்னாள் வவுனியா மற்றும் மட்டக்களப்பு அரசாங்க அதிபராக இருந்து சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றிய திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் மாத்திரமே ஒரேயொரு தமிழ்ப் பெண்ணாவார். மொத்தத்தில் நான்கு பெண்கள் அமைச்சுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராக சுகாதார அமைச்சின் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய அனைவருமே சிங்களவர்களாவர். முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எவரும் அமைச்சுச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்பது கவனத்திற்கு உரியது.

சிங்கள பௌத்த தேசிய கொள்கையானது முஸ்லிம் சமூகத்திற்கு விரோதமானது. அது முஸ்லிம்களைப் பகைவர்களாகவே நோக்கும் தன்மை கொண்டது. புதிய அரசு சிங்கள பௌத்த தேசிய அரசியல் உளவியலைக் கொண்டிருக்கின்றது என்பதற்கு இந்த நியமனங்களே உறுதியான சாட்சியமாக அமைந்திருக்கின்றன.

தேசிய பாதுகாப்பையும், அபிவிருத்தியையும் பிரதான நோக்கங்களாக முன்வைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச சிறுபான்மை இனமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது பற்றி எதையும் பேசவில்லை. அதேபோன்று பல தசாப்தங்களாகப் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை குறித்து அவர் கவனம் செலுத்தவே இல்லை.

சொன்னதைச் செய்பவர்கள். செய்வதைச் சொல்பவர்கள் என்ற அரசியல் கோஷத்தைக் கொண்ட ராஜபக்சக்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்காத விடயங்களில் கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. தேர்தலில் மக்களிடம் பெற்ற ஆணைக்குரிய விடயங்களிலேயே அவர்கள் தீவிர கவனம் செலுத்துவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் அமோகமாக வெற்றியீட்டி தற்காலிக அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளது. அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மக்கள் ஆணையை முழுமையாகப் பெற்ற ஓர் அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தேவை உள்ளது. அநத அரசாங்கத்தை அமைக்கின்ற தரப்பினரே முழுமையான ஆட்சியின் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தக்க வல்லமை கொண்டிருப்பார்கள்.

தற்போதைய நிலையில் பொதுஜன பெரமுனவை பொதுத் தேர்தலில் வலிமையுடன் எதிர்த்து நிறகத்தக்க சக்தி பிரதான கட்சிகளாகிய ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக கட்சி போன்றவற்றிடம் இல்லையென்றே கூற வேண்டும்.

ஏனெனில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டமைப்பு குலைந்து போனது. அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்குக் கூட சக்தியற்றதாகத் தளர்ந்து விட்டது. பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அந்தக் கட்சியை அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேனவோ அல்லது அந்தக் கட்சியின் மீது அளவற்ற பற்றுகொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவோ கட்டி எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் மகிந்த ராஜபக்சவின் பின்னால் பொதுஜன பெரமுனவில் அணி சேர்ந்துள்ளனர்.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியைக் கொண்டுள்ள பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருப்பதனால் வெற்றி வாய்ப்புள்ள பக்கத்தைச் சார்ந்திருப்பதற்கே அரசியல்வாதிகள் விரும்புவார்கள். எனவே பலமிழந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கு இயல்பிலேயே எவரும் விரும்பமாட்டார்கள். ஆகவே சிறிலங்கா சுதந்திரக்கட்சி தன்னை சுதாரித்துக் கொண்டு வலிமையுடன் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகும் என்று எதிர்பார்க்க முடியாது.

அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியும் உட்கட்சிப் பூசலில் சிக்கி தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துள்ள நிலையில் அதிகாரத்தில் உள்ள ஓர் அரசியல் கட்சியைத் தேர்தலில் வலிமையுடன் எதிர்த்து நிற்பதற்குத் தன்னைத் தயார் செய்து கொள்ளுமா என்பதும் சந்தேகத்திற்குரியதாகவே தோன்றுகின்றது.

மறுபக்கத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் தேர்தலில் வெற்றி பெறக் காத்திருக்கின்ற ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தமக்குப் போட்டியாக எந்த வகையிலும், எந்தவோர் அரசியல் கட்சியும் தலையெடுப்பதை விரும்பமாட்டார்கள். அதற்கு இடமளிக்கவும் மாட்டார்கள்.

இத்தகைய பின்னணியில் தன்னிகரற்ற நிலையில் ராஜபக்சக்கள் தமது ஆட்சியைக் கொண்டு செல்வார்கள் என்பதற்கான அரசியல் அறிகுறிகளே காணப்படுகின்றன.

சிறுபான்மை இன மக்களைக் கவனத்தில் கொள்ளாத போக்கைக் கொண்டுள்ள ராஜபக்சக்களை தேர்தலில் எதிர்கொள்வதற்குத் தமிழ்த் தரப்பு அரசியல் ரீதியாகப் பலமுள்ளதாகவோ அல்லது அதற்கான அரசியல் வியூகங்களைக் கொண்டிருப்பதாகவோ தெரியவில்லை.

அதிகாரம் கொண்ட ஆட்சியாளர்களாக மீண்டும் அரசியலில் தலையெடுத்துள்ள ராஜபக்சக்களை எதிர்கொள்வதற்குப் பலமுள்ள ஓர் அரசியல் தரப்பாக, தமிழ்த்தரப்பு இன்னுமே தன்னைக் கட்டமைத்துக் கொள்ளவில்லை. அரசியல் ரீதியாக பலமுள்ள ஓர் அணியாக உருவாக வேண்டும் என்ற தேவை 2009 ஆம் ஆண்டில் இருந்தே அவசியமாகி இருந்தது.

ஆயினும் தமிழ் மக்களின் எகோபித்த அரசியல் தலைமையாகத் திகழ்ந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பலம் வாய்ந்த ஓர் அரசியல் கட்சியாக அல்லது அமைப்பாகக் கட்டியெழுப்புவதற்குத் தமிழ்த் தலைவர்கள் முழு மனதுடன் முனையவே இல்லை. குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக் கட்சி தன்னை நிகரற்றதோர் அரசியல் கட்சியாக வளர்த்து பலப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருந்தது.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை, தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்குக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டதே தவிர, சமநிலையில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் அக்கறை காட்டவில்லை.

தமிழ்த்தேசியத்திற்கு எதிராக வலுவானதோர் அரசியல் சக்தியாகத் தலையெடுக்கத் தொடங்கிய சிங்கள பௌத்த தேசியத்தை எதிர்கொள்வதற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து தனித்துவமாக இயங்கச் செய்வதற்கு தமிழரசுக் கட்சியின் தலைமை - முற்படவே இல்லை.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பைத் தனியொரு கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பங்காளிக் கட்சிகள் தரப்பில் இருந்து எழுந்த போதெல்லாம் தந்திரோபாய ரீதியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை – தமிழரசுக் கட்சியின் தலைமை தட்டிக்கழிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டது. அதில் அது வெற்றியும் கண்டிருந்தது. இதன் காரணமாகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பிளவு ஏற்பட நேர்ந்தது.

இத்தகைய பின்னணியில்தான் மகிந்த ராஜபக்சக்கள் பலமுள்ள அரசியல் சக்தியாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் கூட்டமைப்புடன் ஒன்றிணைய வேண்டும் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ராஜபக்சக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற்றுவிடக் கூடாது என்றும் அதனைத் தடுப்பதற்காக தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தலுக்காகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் ஏனைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பது சிங்கள பௌத்த தேசிய அரசியலின் புதிய அரசியல் போக்கை எந்த வகையில் கட்டுப்படுத்தும் என்பது தெரியவில்லை. சிறுபான்மை இனங்களை ஒதுக்கிச் செல்கின்ற அந்த புதிய அரசியல் போக்கில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க இந்த ஒன்றிணைவு எந்த வகையில் உதவும் என்பதும் தெரியவில்லை.

அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE