Wednesday 8th of May 2024 02:31:01 PM GMT

LANGUAGE - TAMIL
பெண் பணியாளரை வெளியேற்ற அம்புலன்ஸ் விமானத்தை பயன்படுத்த முயற்சி?!

பெண் பணியாளரை வெளியேற்ற அம்புலன்ஸ் விமானத்தை பயன்படுத்த முயற்சி?!


"சுவிஸ் தூதரகப் பெண் அதிகாரி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரங்களும் இப்போது வரையில் கிடைக்கவில்லை. அத்துடன், உரிய பெண் அதிகாரியும் இன்றுவரை வாக்குமூலம் எதையும் வழங்காது மௌனம் காக்கின்றார்."

- இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் இலங்கை அரசையும் புதிய ஜனாதிபதியையும் நெருக்கடிக்குள் தள்ளும் சர்வதேச இராஜதந்திர ரீதியிலான சதித்திட்டம் என்றே கருத வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,

"சுவிஸ் தூதரகப் பெண் அதிகாரி கடத்தப்பட்டார் எனக் கூறப்படும் விடயம் மற்றும் அவர் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அரசாக நாம் எமது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டியுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற 25ஆம் திகதி இது குறித்த முறைப்பாடுகள் எவையும் பதியப்படவில்லை. 27 ஆம் திகதி சுவிஸ் தூதுவர் என்னைச் சந்தித்த நேரத்தில் இந்த விடயம் குறித்து என்னிடம் அறிவித்தார். அவர் முன்னிலையிலேயே பதில் பொலிஸ்மா அதிபருக்குப் தொலைபேசியில் அழைப்பு விடுத்து குறித்த காரணிகள் தொடர்பில் விசாரணை நடத்தக் கோரினேன்.

பிரதமரும்கூட இந்த விடயம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். எனினும், 26 ஆம் திகதியே சர்வதேச ஊடகம் ஒன்றிலும் இன்னொரு சர்வதேச இணையத்தளத்திலும் இந்தச் செய்தி பிரசுரிக்கப்பட்டது. அது குறித்து எமக்கு எதனையும் கூற முடியாது.

எவ்வாறு இருப்பினும் 27ஆம் திகதியில் இருந்து குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் முழுமையான விசாரணைகளும் உண்மையைக் கண்டறியும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

சுவிஸ் தூதரம் எம்மிடம் வழங்கிய தகவல்கள் மட்டுமே இந்தச் சம்பவத்தில் ஆதாரமாக இருந்த நிலையில் அதனை வைத்து ஏனைய அனைத்தையும் எமது பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் உரிய பெண் அதிகாரி இதுவரை தானாக வாக்குமூலம் எதனையும் வழங்கவில்லை. வாக்குமூலம் தாருங்கள் எனக் கேட்டும் இன்றைவரை அவர் வாக்குமூலம் வழங்காது தவிர்த்து வருகின்றார்.

இன்றும் அவர் சுகயீனமான நிலையில் இருப்பதால் அவரால் வாக்குமூலம் வழங்க முடியாது போயுள்ளது சுவிஸ் தூதரகத்தினர் கூறி வருகின்றனர். எனினும், முவைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் அன்றைய தினம் இடம்பெற்ற சூழலுக்கும் இடையில் எந்தவித தொடர்புகளும் ஏற்படுவதாகத் தெரியவில்லை.

அவரது அன்றைய நாள் பயணங்கள், அவர் வந்து சென்ற இடங்கள் என அனைத்தும் அறிந்துகொள்ள முடிந்துள்ளது. அவற்றில் இவ்வாறான கடத்தல் ஒன்று இடம்பெற்றதாகக் கருதுவது கடினமான விடயமாக உள்ளது.

எவ்வாறிருப்பினும் இலங்கையில் உள்ள சகல தூதரகங்களுக்கும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கும் அழைப்பு விடுத்து தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் சந்திப்பொன்றை நடத்தி அரசின் நிலைப்பாடு மற்றும் இந்தச் சம்பவத்துடன் இதுவரை கண்டறியப்பட்ட தகவல்கள் என அனைத்தையும் முன்வைத்துள்ளோம். எமது தரப்பு நியாயங்களை நாம் முன்வைத்துள்ளோம்.

இந்தநிலையில். சுவிஸ் தூதரகப் பெண் அதிகாரி குறித்து இன்றுவரை தூதரகமும் முறைப்பாடு எதனையும் செய்யாதுள்ளது. மாறாக குறித்த பெண் அதிகாரி சுகயீனமாகவுள்ள காரணத்தால் சுவிஸ் நாட்டின் வைத்தியர் ஒருவரின் பரிந்துரைக்கு அமைய குறித்த பெண் அதிகாரியை சுவிஸுக்கு அனுப்ப வேண்டும் என எமக்குக் கடிதம் மூலமாக சுவிஸ் தூதரகம் அறிவித்துள்ளது.

குறித்த பெண் யார்? எங்கு உள்ளவர்? இலங்கைப் பிரஜையா? அவர் குறித்து கூறும் சம்பவம் உண்மையா? பொய்யா? அவரின் வாக்குமூலம் என்ன? அவரின் கடவுச் சீட்டு எது? என்பவை குறித்து தெரியாது எவ்வாறு ஒரு நபரை நாட்டை விட்டு வெளியேற்றுவது என்ற சட்ட ரீதியிலான கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பில் நீதிமன்றம்கூட ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. எதிர்வரும் 9 ஆம் திகதிக்குள் வாக்குமூலம் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் எந்தவித ஆதாரமும் இல்லாத ஒரு விடயத்தில் இன்று சர்வதேசமும், எதிர்க்கட்சிகளும் அரசின் மீது விரல் நீட்டுவது அரசையும் நாட்டின் புதிய ஆட்சியையும் அழுத்தங்களுக்கு உட்படுத்தும் நோக்கத்தில் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த ஆட்சியில் இராஜதந்திரிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் இன்று எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அதே காரியத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

புதிய ஜனாதிபதி மற்றும் புதிய அரசைக் குற்றவாளியாக்கவும் அவமதிக்கவும் அடுத்த பொதுத் தேர்தலை இலக்கு வைத்த திட்டமாகவும் இது அமைந்திருக்கின்றது என்பதே அரசு என்ற ரீதியில் எமது நிலைப்பாடு.

குறித்த விடயத்தை சுவிஸ் தூதரகம் தான் எமக்கு அறிவித்தது. விசாரணையை நடத்துங்கள் எனவும் அவர்கள்தான் கேட்டுக்கொண்டனர்.

சுவிஸ் தூதரகத்துடன் நாம் நெருக்கமான நட்புறவைப் பேணி வருகின்றோம். சுவிஸ் - இலங்கை நட்புறவில் எந்த விரிசலும் விழ நாம் இடமளிக்கவும் மாட்டோம். தற்போதும் சுவிஸ் வெளிவிவகார அமைச்சருடன் நாம் பேசியுள்ளோம். அதுமட்டுமல்ல குறித்த பெண் அதிகாரி தைரியமாக தனது வாக்குமூலத்தை வழங்கினால் அடுத்த கட்டமாக அரசு நடவடிக்கை எடுக்கும். பெண் அதிகாரிக்கும் அவரது குடும்பத்துக்கும் முழுமையான பாதுகாப்பை வழங்க அரசு தயாராகவே உள்ளது. ஆகவே, இந்தக் காரணிகளை வெளிப்படுத்த உரிய பெண் அதிகாரி வாக்குமூலம் வழங்கியாக வேண்டும்" - என்றார்.

குறித்த சந்திப்பில் கருத்துவெளியிட்ட அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, தூதரக பணியாளரை சுவிசுக்கு கொண்டு செல்வதற்காக அம்புலன்ஸ் விமானத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு சுவிஸ் அதிகாரிகள் முயன்றனர் எனவும் குற்றம்சாட்டியதாகவும் தெரியவருகிறது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE