;

Sunday 27th of September 2020 08:39:16 AM GMT

LANGUAGE - TAMIL
இந்தியப் பெண்கள் பாதுகாப்பு
ஐதராபாத் சூட்டுக்கொலை ’நீதி’யும் - அவலமாய் நிற்கும் உன்னாவ், கத்துவாகளும்!

ஐதராபாத் சூட்டுக்கொலை ’நீதி’யும் - அவலமாய் நிற்கும் உன்னாவ், கத்துவாகளும்!


ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் டிச.6 அன்று நிலவும் பரபரப்பு, இந்த ஆண்டு சுத்தமாகக் காணமுடியவில்லை. பொதுமகர் முதல் அதிகார உச்சத்தில் இருப்பவர்வரை எல்லார் மட்டத்திலும் ஐதராபாத் போலீசின் சூட்டுக்கொலை குறித்துதான் ஒரே பேச்சு! அரசமைப்புச் சட்டத்தை வடித்துத்தந்த அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளில், கொடுங்குற்ற சந்தேக நபர்கள் நால்வரை சுட்டுக்கொன்று, ‘பெருமை’தேடிக்கொண்டிருக்கிறது, தெலுங்கானா மாநில போலீசு.

உக்கிரமான இந்த சூட்டுக்கொலையின் பின்னணியான கொடுங்குற்றம் - பெண் மருத்துவர் ஒருவர், பாலின வன்கொடுமை இழைக்கப்பட்டதுடன் எரித்துக்கொல்லப்பட்டதுமான நினைத்துப்பார்க்கவே நெஞ்சம் பதறக்கூடிய ஒன்றாகும். தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தின் புறநகர்ப் பகுதியில் கடந்த மாதம் 27-ம் நாள் இரவு 9 மணிவாக்கில், வாகனம் பழுதாகி வழியில் நின்றவரே, இப்படியான கொடுமைக்கு ஆளாகிப்போனார். இந்தக் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்ட ஒரு லாரி ஓட்டுநரும் மூன்று உதவியாளர்களும் அந்த நேரம் அப்பகுதியில் இருந்தனர்; கண்காணிப்பு கேமிரா மூலம் இது உறுதிசெய்யப்பட்டது என தெலுங்கானா போலீசு கூறுகிறது.

நாடாளுமன்றம்வரை எதிரொலித்த இந்தத் துயரநிகழ்வு, நாடு முழுவதும் பெருமளவில் அதிர்வை உண்டாக்கியது. பெரும்பாலான மாநிலங்களில் பெண்கள் அமைப்புகள் சார்பிலும் தன்னெழுச்சியாகவும் கண்டனப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஒரு வாரம் கடந்த நிலையில், நால்வரையும் சூட்டுக்கொலை செய்த தகவலுடன், நேற்றைய நாளில் இந்தியாவை எழுப்பிவிட்டது, தெலுங்கானா போலீசு. இந்தியாவில் ஊடகங்களுக்கா பஞ்சம், திரும்பத் திரும்ப ‘தெறிப்புச் செய்தி’யாக காட்சி விவரணையுடன் இதை (Breaking News) ஒளிபரப்பி கடமையாற்றின.

சூட்டுக்கொலை நடத்தப்பட்ட இடத்தில் தெலுங்கானா போலீசு மீது மக்கள் ’மலர்சொறிந்த’ காட்சியும் அதில் அடக்கம். தேசிய இன மொழி ஊடகங்களில் அதிக அளவில் உள்ள தமிழ்நாட்டில், ஊடகங்களும் ’தரமான சம்பவம்’ என்கிறபடியெல்லாம் செய்திகள் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக, சூட்டுக்கொலயை ஆதரித்தும் எதிர்த்தும் பல தரப்பிலிருந்தும் கருத்துகள் வெளியாகத் தொடங்கின.

முன்னாள் நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயா(அமிதாப்)பச்சன், இதை வரவேற்றுக் கருத்துத்தெரிவித்துள்ளார். மிக அண்மையில் மாநிலங்களவையில் பேசிய அவர், பாலின வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு பொதுவெளியில் கும்பல் தாக்குதல் தண்டனை அளிக்கவேண்டும் எனக்கூறியது, அதிக அளவில் கவனம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் துறை முன்னாள் அமைச்சர் மேனகா காந்தியோ, சூட்டுக்கொலையை அபாயம் என்றும் பயங்கரமான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னணி இடதுசாரி கட்சிகளின் பெண்கள் அமைப்புகள், ‘பெண்களின் பெயரால் இந்த சூட்டுக்கொலையை நியாயப்படுத்தமுடியாது’ என்று விளக்க அறிக்கை வெளியிட்டன.

பொதுவெளியில் இது குறித்து மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றை, மூன்று வகைகளாக தொகுத்துப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. ஒன்று, பாலினவன்கொடுமை/ அப்படி பாதிக்கப்பட்டவரை படுகொலையும் செய்யும் கொடூரன்களுக்கு, உடனடியாக (மோதல் எனும் பெயரில் துப்பாக்கிச்சூடு போன்ற) கொலைத்தண்டனையை வழங்கவேண்டும் என்பது; இரண்டாவது, கடும் தண்டனை வழங்கலாம்; ஆனால், எல்லாம் சட்டரீதியாகவே இருக்கவேண்டும்; போலீசே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வது மோசமானது என்பது; மூன்றாவது, தக்க தண்டனை வேண்டும்தான்; ஆனால், கடுமையான சட்டங்களால் இப்படியான கொடுங்குற்றங்களைக் கட்டுப்படுத்தவோ தடுக்கவோ முடியாது; சிக்கலின் வேரைக் கண்டறிந்து சரிசெய்யவேண்டும் என்பது.

இம்மூன்று வகைக் கருத்தினருமே இப்படியான கொடுங்குற்றங்களுக்கு ஏதோ ஒருவகையில் தண்டனை அளிக்கப்படவேண்டும் என்பதில் ஒருசேர நிற்கிறார்கள். தண்டனை முறை, அளவு தொடர்பாக மாறுபடுகிறார்கள்.

உடனடித் தண்டனை வகையறாவின் குரல் ஓங்காரமாக ஒலிக்கிறது. அரசாங்கம் குறிப்பாக போலீசு துறையால் ஊக்குவிக்கப்பட்டு, அதன் மூலம் ஊடகப் பீடங்களுக்கு ஊட்டிவிடப்பட்டு சில மணி நேரங்களில் பெருமளவிலான மக்களின் கருத்தாகவும் இது மாற்றப்படுகிறது. மிக எளிதாக இந்தச் செயல் நடந்துவிடுகிறது. இதற்கான முகாந்திரத்தை அலசாமல் ஆய்வுசெய்யாமல் கடந்துசெல்வது சமூக அக்கறையுள்ளவர்களின் கடப்பாடாக இருக்கமுடியாது. உலகமயம் அதிகரித்துவரும் இந்தியாவில் அண்மைய ஆண்டுகளில் பெண்கள் மீதான வன்முறையின் அளவு அதிகரித்தபடியே செல்கிறது. 2017-ல் மட்டும் இந்தியாவில் 33,658 பெண்கள் வல்லாங்கு செய்யப்பட்டுள்ளனர்; அதாவது, இந்நாட்டில் நாள்தோறும் 98 வல்லாங்குக்கொடுமை என இந்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. சமூகத்தின் எந்தப் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்திய நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு மிக மோசமான நிலையில் இருப்பதைத்தான் நடப்புகள் காட்டுகின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில், தனியாகப் பயணம்செய்யக்கூடிய, வழிதவறவிட்ட பெண்கள் வன்முறைக்கொடூரன்களின் எளிய இலக்குகளாக ஆக்கப்படுகின்றனர். சிறுகுழந்தைகள் முதல் முதிய பெண்கள்வரை எந்த வயதினரும் பாதிப்புக்குள்ளாகும் நிலையே இங்கு நிலவுகிறது. பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் இம்மாதிரியான நிகழ்வுகளை அறியும்போதெல்லாம் பதற்றமடைவது இயல்பாக மாறிவிட்டது. இந்தச் சூழலில் ’குற்றவாளி’களை உடனடியாக (சுட்டோ எப்படியோ) ஒழித்துக்கட்டுவது, பாதிக்கப்படும் மனநிலைக்கு ஆறுதலாக அமைகிறது. அதே நாகரிக காலத்துக்கு முந்தைய ’கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ பாணிதான்! சமூகத்தில் பரவலாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மனப்பாங்கானது, சட்டத்தைக் காக்கவேண்டிய போலீசின் சட்டமீறலான சூட்டுக்கொலையை இலகுவாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்துகிறது. பிறகென்ன, போலீசின் வேலை எளிதாக முடிந்துவிடுகிறது, அவர்களுக்கான புகழாரம், மலர்ச்சொறிதலுடனும்கூட! பணி உயர்வுகள், பதக்கங்கள் தனி!

இது சரியானதா? சட்டத்தின்படி நாடு செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் அப்படி நடக்காதபோது தீர்ப்பளிக்கவும் இருக்கின்ற நீதித்துறையின் வேலைதான் இதில் என்ன என கேள்விகளை அடுக்குகிறார்கள், இரண்டாவது கருத்தினர். இது, அத்துமீறும் சட்டவிரோத போலீசுக்கு கசப்பாக ஆகிவிடுகிறது. ’மோதல் கொலை’ என போலீசால் விவரிக்கப்படுகின்ற இம்மாதிரியான நிகழ்வுகள் பெரும்பாலும் சந்தேகத்துக்கு உரியவையாகவே இருக்கின்றன. இது குறித்து ஆட்சியாளர்களுக்கும் அதிகார வகுப்பினருக்கும் எந்த உறுத்தலும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே ‘சம்பவங்களும்’ தன்னியல்பாக தொடர்ந்து நடக்கின்றன. இப்போது ஐதராபத்திலும் நிகழ்ந்திருக்கிறது. ஆங்காங்கே அவ்வப்போது நீதித்துறையில் எழும் சில குரல்கள் மட்டுமே, இந்த சனநாயகக் கட்டமைப்பின் மீதான நம்பிக்கையைத் தக்கவைப்பதாக இருக்கின்றன.

”ஐதராபாத் நிகழ்வைப் பொறுத்தவரை, இது மோதல்கொலை- என்கவுண்டர் அல்ல, அப்படிக் கூறுவது மோசடியானது. போலீசின் பிடியில் இருந்த நால்வரும் நிராயுதபாணியாக இருக்கையில், இது எப்படி உண்மையான ’மோதல் கொலை’ யாக இருக்கமுடியும்?”எனக் கூறியுள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்சு,

“ சாட்சியமளிக்க மக்கள் தயங்கும்படியான பயங்கரமான குற்றவாளிகளைக் கையாள்வதற்கு ’மோதல்கொலை மோசடி’யைப் பயன்படுத்துவதாக போலீசார் அடிக்கடி நியாயப்படுத்துகின்றனர். எப்படியாக இருந்தாலும் இது அபாயமான கொள்கை என்பதுடன் தவறாகப் பயன்படுத்தப்படவும்முடியும். தொழிலில் போட்டியாக உள்ள சக வர்த்தகரை காலிசெய்ய, சில போலீசாருக்கு ஒருவர் இலஞ்சம் தந்து, அவரை பயங்கரவாதி எனச் சித்திரித்து ’மோசடியான மோதல்கொலை’யில் அவரை காலிசெய்துவிடலாம்.” என்று எடுத்துக்காட்டோடு எச்சரிக்கிறார்.

வழக்கமாக, மனிதவுரிமை ஆர்வலர்கள், அமைப்புகள் இந்தக் கருத்தை முன்வைத்தால், அதை கவனமாகப் புறக்கணித்துவிட்டோ கண்டும்காணாமலோ சென்றுவிடுபவர்கள், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் வாதத்துக்கு என்ன பதில் சொல்வார்களோ தெரியவில்லை.

’மோதல் கொலை’யின் மர்மங்கள் இப்படி ஒரு பக்கம் இருக்க, வெளிப்படையாகவே, வலுவற்ற பின்னணியில் உள்ளவர்களே, ‘மோசடி மோதல்கொலை’ செய்யப்படுகின்றனர்; அரசியல் அதிகாரம், சாதி, மதப் பின்னணி, வாழ்க்கைத்தர நிலை போன்ற அம்சங்கள் தெளிவாகத் தெரியும்படி பாகுபாடு காட்டப்படுகிறது எனும் குரலை, மாற்று அரசியல் அமைப்புகள், கருத்தாளர்களிடம் கேட்கமுடிகிறது.

ஒன்றுபட்ட காசுமீரத்தில், கத்துவா எனும் பகுதியில் 9 வயது சிறுமி ஒருவர் கோயிலில் வைத்து வல்லாங்குசெய்யப்பட்டு கொல்லப்பட்ட கொடூரத்தில், குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக அம்மாநில பா.ச.க. அமைச்சர் ஒருவரே போராட்டத்தில் கலந்துகொண்டார்; சாட்டுக்குரிய நபர் கோயில் பூசகர்; அந்தக் கோயிலே கொடூரம் நிகழ்ந்த இடம்; பாதிக்கப்பட்ட சிறுமி, காசுமீரத்துப் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதும்,

உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில், கடந்த ஆண்டு வல்லாங்குசெய்யப்பட்ட 23 வயதுப் பெண், நேற்றைக்கு முந்தையநாள் நீதிமன்றத்துக்குச் செல்லும்வழியில், மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டார்; வல்லாங்கு வழக்கில் பத்து நாள்களுக்கு முன்னர் பிணையில் வந்த சுபம் திரிவேதி என்பவன் உள்பட 5 பேர் கடத்திச்சென்று எரித்தபோதும், 90 சதவீத காயங்களுடன் ஒரு கி.மீ. நடந்துசென்று போலீசிடம் அந்தப் பெண் புகாரளித்துள்ளார்; முதலில் இலக்னோவில் உள்ள மருத்துவமனையிலும் பின்னர் வானூர்தி மூலம் டெல்லி சப்தர்சங் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்ட அவர், வெள்ளி இரவு பரிதாபமாக உயிரிழந்தார் என்பதும்,

முன்னதாக, இதே உன்னாவ் மாவட்டத்தில் 2017 சூன் மாதத்தில் 17 வயதுப் பெண் ஒருவர், உன்னாவ் சட்டப்பேரவைத் தொகுதியின் பா.ச.க. உறுப்பினர் குல்தீப் சிங் செங்கர் என்பவரால் வல்லாங்கு கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்; இதில் மெத்தனமாக போலீசு செயல்பட்டதற்கு நீதி கேட்டு, முதலமைச்சர் ஆதித்யநாத்தின் வீட்டின் முன்பு பாதிக்கப்பட்டவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்; அவருடன் போராட்டம் நடத்திய அவரின் தந்தை அந்த செங்கரின் குண்டர்களால் தாக்கப்பட்டு, நீதித்துறை காவலில் மரணமடைந்தார்; கடந்த ஏப்ரலில் இந்நிகழ்வுகளால் நாடளவில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது; அதையடுத்தும் கடந்த சூலை 28 அன்று வழக்குரைஞருடன் அந்தப் பெண் காரில் சென்றுகொண்டிருந்தபோது, லாரி மோதியதில் உடன்சென்ற அவரின் உறவினர்கள் கொல்லப்பட்டனர்; சிறுமியும் வழக்குரைஞரும் படுகாயம் அடைந்தனர்; அதைக் கண்டு உச்சநீதிமன்ற தலைமைநீதிபதிகள் அமர்வே தலையிட்டு வழக்கை உத்தரப்பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு மாற்றியது என்பதும்,

பெண்கள் மீதான வன்கொடுமைகள் அனைத்திலும் ஒரே அணுகுமுறை கடைப்பிடிக்கப்படவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. இந்த வரிசையில் இன்னும் பல வழக்குகளைச் சேர்க்கக்கூடிய அளவுக்கு விவரங்கள் இருக்கின்றன என்பது உண்மையோ உண்மை.

சட்டப்படியாகவோ சட்டத்தைக் காலில்போட்டு மிதித்தோ தரப்படும் இத்தகைய தண்டனை முறை மட்டுமே, குற்ற சிந்தனையை மாற்றிவிடாது; குற்றங்களைத் தடுத்துவிடாது என்கிறார்கள், மூன்றாம் வகையினர். இவர்களில் ஒரு சாரார், தண்டனை இல்லாத சில ஐரோப்பிய நாடுகளில் பாலின வன்கொடுமைகள் குறைவு எனும் வாதத்தை முன்வைக்கிறார்கள். அங்கும் இந்தியா போன்ற நாடுகளிலும் சமூகத்தில் பெண்களின் வகிபாகமும் பண்பாட்டில் பெண்களுக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் உள்ள இடமும் சமநிலையில் இருக்கிறதா என்பதை இவர்கள் கருதுகிறார்களா என்பது ஐயமாக இருக்கிறது. குற்றங்களின் வேர்க்காரணங்களை, சமூக, பண்பாட்டு, பொருளாதார முகாந்திரத்தின் அடிப்படையில் கண்டறிவது, தீர்வுக்கு அவசியமானதாகும். பெண்களை சக மனிதராக உணரும்படியாக, கல்வித் திட்டத்தை மாற்றியமைப்பதும் புதிதாக உருவாக்குவதும் உடனடித்தேவையாக முன்னிற்கின்றன. எத்தனையோ நோக்கங்களுக்காக பரப்புரை இயக்கங்கள் மேற்கொள்ளப்படும் இந்நாட்டில், தனி பரப்புரை இயக்கம் செயல்படுத்தப்படவேண்டும்.

இதைப் படிக்கும்போதே, பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட நிர்பயா நிதிக்காக, ஆயிரக்கணக்கான கோடிரூபாய் ஒதுக்கப்பட்டதே என கேள்வி எழக்கூடும். 2012 டெல்லியில் நிர்பயா கும்பல்வல்லாங்குக் கொடுமையைத் தொடர்ந்து, 2013-ல் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தால் 10 ஆயிரம் கோடி ரூபாயில் நிர்பயா நிதி உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் மைய மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ரூ.1,656 கோடி ஒதுக்கியுள்ளது. அதிலும் 20 சதவீதமே மாநில அரசுகளால் செலவழிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் அறிக்கைவிட்டதுடன் தன் கடப்பாட்டை ஆற்றிக்கொண்டார், துறை அமைச்சரான இசுமிருதி ராணி. கடந்த மாதம் 29 அன்று நாடாளுமன்றத்தில் அவர் வைத்த அறிக்கையில், இந்த நிதியில் ஒரு பைசாவைக்கூட பயன்படுத்தாத மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்கள் பட்டியலில், மகாராஷ்டிரம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா, டாமன் டையூ ஆகியவை இடம்பிடித்துள்ளன.

இந்த யதார்த்தத்திலிருந்துதான் பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்கவேண்டிய இலக்கைநோக்கிப் பயணிக்கவேண்டியுள்ளது என்பது பாரதமாதாவுக்கு எவ்வளவு பெரிய அவலம்!

தமிழ்நாட்டிலிருந்து இர.இரா.தமிழ்க்கனல்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியாபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE