Friday 26th of April 2024 11:53:26 AM GMT

LANGUAGE - TAMIL
தமிழர்களின் மனதை வெல்லும் வகையில் செயற்பட வேண்டும்!

தமிழர்களின் மனதை வெல்லும் வகையில் செயற்பட வேண்டும்!


"வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் மனதை வெல்லும் வகையில் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பட வேண்டும்."

- இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளரிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் தெரிவித்ததாவது:-

"தமிழ் மக்களின் அமோக வாக்குகளினால்தான் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றிவாகை சூடினேன். அவர்களுக்கு நான் எப்போதும் நன்றியுடையவனாகவே இருப்பேன்.

எனது ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள் உள்ளிட்ட மூவின மக்களுக்கும் என்னால் இயன்ற கடமைகளைச் செய்தேன். எனினும், அரசியல் குழப்பங்களினால் புதிய அரசமைப்பை நிறைவேற்ற முடியாமையால் போய்விட்டது. ஆளும் கட்சி - எதிர்க்கட்சிகளுக்கிடையில் மூண்ட அதிகாரப் போரும் இனத்துவேஷக் கருத்துக்களுமே இதற்குப் பிரதான காரணங்கள்.

எனினும், பலத்த சவால்களுக்கு மத்தியில் புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தோம். அதனை மேலும் முன்னகர்த்த முடியாமல் போய்விட்டது என மனம் வருந்துகின்றேன்.

எனது ஆட்சிக்காலத்தில் வெள்ளை வான் அச்சுறுத்தல் இருக்கவில்லை. எவரும் கடத்தப்படவும் இல்லை. அத்துடன், ஊடக சுதந்திரம் முழு அளவில் பேணப்பட்டு வந்தது. அதனால்தான் பல ஊடகங்கள் என்னைக் கண்டபடி விமர்சித்தன. சில ஊடகங்கள் என்னைப் பைத்தியக்காரனாக்கும் வகையில்கூட செய்திகளை வெளியிட்டிருந்தன. எனினும், நான் பொறுமையுடன் விமர்சனங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டேன்.

எனது ஆட்சிக்காலத்தில் எனது மனச்சாட்சியின்படி நான் நீதியின் வழியில் நடந்தேன். அதேவேளை, நீதித்துறையின் உத்தரவுகளுக்கும் நான் மதிப்பளித்துச் செயற்பட்டேன்.

எனது அரசியல் பயணம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இந்தப் பயணம் தொடரும். இறுதி மூச்சுவரை அநீதிகளுக்கு எதிராக நான் குரல் கொடுப்பேன்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச மாபெரும் வெற்றியடைந்தாலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவர் படுதோல்வியடைந்துள்ளார். அதற்கான காரணங்களை அவர் ஆராய வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களே பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றார்கள். எனவே, அங்கு வாழும் தமிழ் மக்களின் மனதை வெல்லும் வகையில் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பட வேண்டும். இந்த நாட்டில் நாம் நிலைநாட்டிய நல்லிணக்கத்தை அவர் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்" - என்றார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE