;

Sunday 31st of May 2020 07:00:20 PM GMT

LANGUAGE - TAMIL
இந்தியாவின் கிழக்கில் மீண்டும் இன எரிமலை!
இந்தியாவின் கிழக்கில் மீண்டும் இன எரிமலை!

இந்தியாவின் கிழக்கில் மீண்டும் இன எரிமலை!


இந்திய அரசு கடந்த வாரம் கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்திருத்தத்தால் அசாம், மேற்குவங்காளத்தில் பற்றிய போராட்டத் தீ, தலைநகர் டெல்லிக்கும் பரவி, சில பேருந்துகளை எரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது.

டெல்லி போலீசின் தேடுதல் முறை, தடியடித் தாக்குதல், சீருடையற்ற சமூகவிரோத கும்பலுக்கு சுற்றிலும்நின்று மாணவர்களை அவர்கள் தாக்கவிட்டு வேடிக்கைபார்ப்பது ஆகிய செயல்கள், ஒரு நாட்டின் தலைநகருக்கு உலக அளவில் பெரும் அவப்பெயரை உண்டாக்கியுள்ளது. டெல்லியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜமியா மிலியா இசுலாமியப் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் நேற்று மாலையில் நடத்திய போராட்டத்தில் திடீரென விசமிகள் கற்களை வீச, மாணவர்கள் மீதான தாக்குதல் தொடங்கியது. போராட்டக்காரர்களுக்கு எதிர்ப்பக்கமாகவும் போலீசுக்கு அண்மையாகவும் சிவிலியன் உடையில் இருக்கும் விசமிகள், பெரும் களேபரத்துக்கு இடையிலும் சர்வசாதாரணமாக தாக்குதல்கள், தீவைப்புகளில் ஈடுபடுகிறார்கள். பாதுகாப்பு குறித்த சிறு பதற்றமும் அவர்களிடம் காணப்படவில்லை.

உத்தரப்பிரதேசத்தின் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலும் நேற்று இதேபோல போலீசு தரப்பிலிருந்து கடுமையான தாக்குதல்கள், அத்துமீறல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. டெல்லியை நாட்டின் தலைநகர் எனும் அளவுக்காவது மதித்து சட்டம் ஒழுங்கைக் காக்கவேண்டிய போலீசே, பல்கலைக்கழக மாணவியர் மீது கைவைத்தும் துன்புறுத்தியிருப்பதுமான புகார்கள் ஆட்சியின் பாரதமாதா பண்பாட்டைக் காட்டுகிறதுபோலும்!

இரண்டு இடங்களிலும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீசுப்படையின் வன்னுழைவின் திசைவேகமும் முறையும் பல சேதிகளை உணர்த்துவதாக இருக்கின்றன.

நாடாளுமன்ற மக்களவையில் திங்களன்று இரவுவரையிலும், அடுத்து கடந்த புதனன்று மாநிலங்களவையில் 6 மணிநேரம் தொடர்ச்சியாகவும் விவாதம் நடத்தி நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டவரைவுக்கு, இந்திய அரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் மறுநாளே ஒப்புதல் அளித்தது புரிந்துகொள்ளக்கூடியதே! இதே சட்டத்திருத்த முயற்சி முன்னதாக 2016-ல் மேற்கொள்ளப்பட்டபோது, மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் தோற்கடிக்கப்பட்டது. இப்போதும் அவ்வவையில் பெரும்பான்மை இல்லாதபோதும், தமிழ்நாட்டின் அதிமுக ஆதரவுடன் சட்டவரைவின் தோல்வியிலிருந்து தப்பியது, பா.ச.க. மோடி அரசு.

உள்ளூர் அரசியல் அமைப்பு முதல் ஐ.நா. மனிதவுரிமை ஆணையம்வரை, இந்தப் புதிய சட்டத்திருத்தமானது முஸ்லிம்களை முதன்மையாக பாதிப்பு ஏற்படும்படியான பாகுபாடான ஒரு சட்டம் என்று அழுத்தம்திருத்தமாக கருத்துகளை வெளிப்படுத்திவிட்டனர். நாடுதழுவிய அளவில் மதச்சார்பின்மை, மதநல்லிணக்கத்துக்காகச் செயல்படும் அமைப்புகள், மாணவர்கள், சனநாயகசக்திகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றர். பாதிக்கப்படுவோர் என்பதால் இசுலாமியர் தரப்பிலும் தொடர்ச்சியாக கண்டனப் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இப்படி இந்திய அளவில் முஸ்லிம்விரோத அம்சத்தை பெரும்பாலான தரப்பினர் கடுமையாக எதிர்த்தும் கண்டித்தும்வருகின்றனர்.

இன்னொரு புறம், இந்த சட்டத்திருத்தத்தை இந்துத்துவ, வலதுசாரி அரசியல் சக்திகள் வரவேற்று ஆரவாரமாகக் கொண்டாடிவருகின்றனர். தமிழ்நாட்டின் வலதுசாரி-இந்துத்துவசாய்வுக் கருத்தாளரான எழுத்தாளர் மாலன் போன்றவர்கள் சிறுகூச்சமும் இல்லாமல் பொதுவெளியில் தங்களின் உண்மைமுகத்தைக் காட்டிவருகின்றனர்.

இந்து எதிர் முசுலிம் எனும் பகைமைச் சூழலை ஏற்படுத்தவே இந்துத்துவ அமைப்புகள் தொடக்கம்முதல் தீவிரமாக முயன்றுவருகின்றன. புதிய திருத்தம்கூட, இந்துத்துவ அமைப்புகளுக்கு அச்சாரமிட்ட சாவர்க்கர் கூறியபடி, இந்தியா என்றால் இந்து நாடு, இந்தியர் என்றால் இந்துக்கள் என்பதை அடிப்படையாகக்கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த எதிர்மை மட்டும்தானா அண்மைய சட்டத்திருத்தத்தின் கெடுபயன் என்றால், போராட்டத்தின் இன்னொரு பக்கமே அப்படி இல்லை என்பதை உணர்த்துகிறது.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் குறிப்பாக அசாமில் கடுமையான போராட்டங்கள் நடந்துவருகின்றன. பொதுமக்கள், அரசுப்பணியாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் என மாநிலத்தின் அனைத்து படிநிலையிலும் உள்ள மக்களும் புதிய சட்டத்துக்கு எதிராக தீவிரமாகப் போராடிவருகின்றனர். இந்தியாவின் பெரும்பகுதி இராணுவம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள காசுமீரத்திலிருந்து கணிசமான துணைஇராணுவப் படைகளை அசாமுக்கு அவசர அவசரமாக திருப்பிவிட்டது, மோடி அரசாங்கம். போராட்டத்தின் முன்னணியினர் 2 ஆயிரம் பேருக்கும் மேல் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் போராட்டத்தின் வீச்சு குறையவில்லை.

மேற்குவங்காளத்திலும் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. அம்மாநிலத்தின் முதலமைச்சர் மமதாவே, இன்று மதியம் கோல்கத்தாவில் பெரிய பேரணி ஒன்றை நடத்தப்போவதாகவும் அதில் அனைவரும் பங்கேற்கவேண்டும் என்றும் அழைப்புவிடுத்துள்ளார். இதையொட்டி மைய அரசின் முகவரான மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் மமதாவின் போராட்டம் அரசமைப்புவிரோதம் எனக் கூறியுள்ளதுடன், மேற்குவங்க தலைமைச்செயலரையும் போலீசுத் தலைமை அதிகாரியையும் நிலைமை குறித்து விளக்கமளிக்குமாறு அழைத்துள்ளார்.

திரிபுராவில் குறிப்பிடும்படியான வன்முறைகள் இல்லாதபோதும், அமைதிவழியிலான கண்டனப் போராட்டங்கள் நடந்துவருகின்றன. போராட்டக்குழுவினரை அழைத்து முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ், சமாதானப்படுத்தியுள்ளார். அதையடுத்து அங்கு போராட்டம் சற்று மட்டுப்பட்டுள்ளது. எனினும் பதற்றநிலை நீடிக்கிறது. பா.ச.க.வுடன் கூட்டணியில் இருந்தாலும், திரிபுரா பூர்வீக மக்கள் முன்னணி கட்சியின் தூத்துக்குழுவினர், உள்துறை அமைச்சர் அமித்சாவைச் சந்தித்து தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்.

மேகாலயா மக்கள் தரப்பிலும் அதிருப்தி வெளிப்பட்டுள்ளது. சட்டத்திருத்தம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னரே, அமித் சாவைச் சந்தித்த அம்மாநில பா.ச.க. கூட்டாளிக் கட்சியின் முதலமைச்சர் கான்ராட் சங்மா, அரசின் சார்பில் மட்டுமல்லாமல், அங்குள்ள அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளின் கூட்டுக்கோரிக்கைகளை நேரில் வலியுறுத்தினார்.

போலவே, மணிப்பூரில் பா.ச.க.வுடன் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற நாகா மக்கள் முன்னணியும் தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவரும் மணிப்பூர்-புறத் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான இலார்கோ போசு, சட்டவரைவாக இருந்த கட்டத்திலேயே அறிவித்தபடி சட்டத்திருத்தம் கொண்டுவந்தால் அதற்குரிய விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் என மத்திய அரசுக்கு எச்சரிக்கைவிடுத்திருந்தார். ”வடகிழக்கு மாநிலங்களை மைய அரசானது ஒரு பிரதேசமாகப் பார்க்கிறது. இதனால்தான் பெருநிலமான இந்தியாவுக்கு இது வளைந்துகொடுப்பதில்லை. இதனால்தான் புதிய சட்டத்திருத்தம் மூலம் எல்லா அந்நியர்களையும் இங்கு வந்து குவிக்கப்போகிறார்களோ எனக் கருதுகிறோம்.” என்று அவர் கூறியது, முக்கியமானது. சட்டவரைவுக்கு முந்தைய நிலைமை இப்படி இருக்க, புதிய சட்டத்திருத்தத்தில், வடகிழக்கு மாநிலங்களின் பெரும்பகுதிக்கு- அதாவது, அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, மிசோராம், மணிப்பூர், மேகாலாயாவின் பெரும்பாலான பகுதி, அசாம் மற்றும் திரிபுராவின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இங்கு தீவிரப் போராட்டங்கள் இல்லாதபோதும் புதிய சட்டத்திருத்தம் மூலம் தங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுவிடும் எனும் அச்சம் வலுவாகியுள்ளது. குறிப்பாக, அசாமில் 1985 அமைதி உடன்பாட்டின் 6ஆவது பிரிவு அசாமியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் என பிரதமர் மோடியும் அது ஒரு கேடயமாக இருக்கும் என்று அமித் சாவும் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டனர். அது என்ன ஆறாவது பிரிவு?

கிழக்கு வங்காளமானது இந்தியாவின் தலையீட்டாலும் துணையோடும் வங்காளதேசம் என தனி நாடாக ஆக்கப்பட்டதை அடுத்து, அங்கிருந்து இலட்சக்கணக்கான இந்து, முசுலிம் வங்காளிகள் வடகிழக்கு இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தனர். அவர்களின் வருகையால் தங்களின் உரிமைகள் பறிபோகின்றன என அசாம் அனைத்து மாணவர் இயக்கம் தலைமையில் அங்கு ஆறு ஆண்டுகளாகத் தொடர்போராட்டம் நடத்தப்பட்டது. 1985-ல் அதை முடிவுக்குக் கொண்டுவர போராட்டக்காரர்களுடன் அப்போதைய மைய அரசு செய்துகொண்ட உடன்பாடுதான், 1985 அசாம் உடன்பாடு. அதன் 6ஆவது பிரிவு,” அசாமியர்களின் பண்பாட்டு, சமூக, மொழியியல், மரபு அடையாளத்தை பாதுகாக்கவும் புடம்போட்டுவைக்கவும் மேம்படுத்தவும் அரசமைப்புச்சட்டரீதியாகவும் சட்ட, நிர்வாகரீதியாகவும்” செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இப்போதைய சட்டத்திருத்தத்தால் அசாமுக்குப் புலம்பெயர்ந்துவந்துள்ள வங்காளதேச இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்; அவர்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் அசாமியர்களின் நிலம், கட்டடம் ஆகியவை குடியேறிகளான வங்காளதேசத்தவரின் வசம் போய்க்கொண்டிருக்கின்றன; அதற்கு இதன் மூலம் சட்ட அரண் அமைத்துத் தருகிறது, மைய பா.ச.க. அரசாங்கம். இதேநிலை தொடர்ந்தால், தங்களின் மொழி, அரசியல், பண்பாட்டு கலை தனித்துவ உரிமைகளும் அற்றுப்போய்விடும் என்பதே அசாமியர்களின் கொதிப்புக்கான காரணம்.

நடப்பு நிலவரப்படி, அசாமின் பூர்வகுடி மக்கள்தொகை வளர்ச்சியைவிட வங்காளதேசத்தவரின் வளர்ச்சிவீதம் ஏறுமுகத்தில் இருக்கிறது. இந்திய அரசின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 1991-ல் 58 விழுக்காடாக இருந்த அசாமியர்களின் எண்ணிக்கை 2011-ல் 48ஆகக் குறைந்தும் இதே காலகட்டத்தில் வங்கமொழி பேசுவோரின் எண்ணிக்கை 22 விழுக்காட்டிலிருந்து 30ஆக அதிகரித்தும் உள்ளது.

சர்ச்சைக்குரிய இந்த சட்டத்திருத்தம் குறித்து, சென்னை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறையின் தலைவர் பேரா. இராமு மணிவண்ணனிடம் கேட்டதற்கு,“ஒரு நாட்டுக்குக் குடியுரிமைச் சட்டம் தேவையா என்றால் ஆம்தான். ஆனால் அதில் ஏற்போ மறுப்போ குறிப்பிட்ட தொகுதியினர் மட்டும் என்பதாக அமையக்கூடாது. மத்திய அரசானது அதன் கொள்கைத்திட்டத்துக்கு ஏற்ப எல்லாரையும் வளைக்கப்பார்க்கிறது. மதரீதியாகவே அனைத்தையும் அது பார்க்கிறது. மதம் எனும் வட்டத்துக்குள் அனைத்தையும் கொண்டுவரப்போகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களின் அரசியல், கலை, பண்பாட்டுப் பண்புகளை, உரிமைகளைப் பறிப்பதாக இது இருக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகளின் மூலம் நாட்டின் பன்முகத்தன்மையைச் சீரழிக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் வங்காள மொழிசார் இனப்பரம்பலும் கவனத்தில்கொள்ளவேண்டியதாக இருக்கிறது. அசாம் உடன்பாடானது முழுமையாகக் கைவிடப்படுவதைப்போலத்தான் தெரிகிறது. ஜனநாயக அமைப்பிற்கு இது அழகானது அல்ல. இது கண்டனத்துக்குரியது, எதிர்க்கப்படவேண்டியது” என்று கூறினார்.

மைய அரசை இயக்கும் பாரதிய சனதா கட்சியானது, இந்து எதிர் முசுலிம் எனும் எதிர்மை அரசியலை, பண்பாட்டு உளவியலைத் தக்கவைக்கும்படியாகவே செயல்படுகிறது. வங்கதேச முசுலிம்களின் ஊடுருவலைத் தடுக்கவேண்டும் எனும் வாதத்தை அழுத்தம்தந்தாலே அசாமியர்கள் உடன்பட்டு அமைதியாகிவிடுவார்கள் என அக்கட்சி எளிதாகக் கணக்குப்போடுகிறது. அதன்படியே, அசாம் உடன்பாட்டின் ஆறாவது பிரிவு வாக்குறுதியை அழுத்தமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஐ.நா.வரை நிலுவையில் உள்ள காசுமீர விவகாரத்தைப் பார்த்தபின்னர், அசாம் தேசிய இன மக்களுக்கு அந்த உறுதிமொழி மீது நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை!

மதவழிப்பட்ட சட்டத்திருத்தத்துக்கான காரணமென பா.ச.க. அரசாங்கம் சொல்வது, 'குறித்த அண்டை நாடுகளில் மதவழிப்பட்ட துன்புறுத்தலுக்கு ஆளாகுவோருக்கு அடைக்கலம் தரவேண்டும்' என்று! ஆனால் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுவரும் இலங்கையிலும் உரோகிங்கியா முசுலிம்கள் மத - இனப்படுகொலை செய்யப்படும் மியான்மரிலும் கசரா முசுலிம்கள் மதக்கொடுமைகளுக்கு ஆளாகும் ஆப்கானிசுத்தானத்திலும் நடத்தப்படுவது, அப்பட்டமான மதவழித் துன்புறுத்தல் அன்றி வேறு என்ன என்று எதிர்க்கேள்விகூடக் கேட்கமாட்டார்களா என்பதைப் பற்றி கொஞ்சமும் கூச்சமில்லாமல் இந்திய பா.ச.க. அரசாங்கம் தன்போக்கில் நடந்துகொள்வது, அதன் ’கொள்கைத்தனத்தை’ உணர்ந்துகொள்ள நாடுமுழுவதற்கும் இன்னுமொரு வாய்ப்பாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து இர.இரா. தமிழ்க்கனல்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE