Friday 26th of April 2024 04:22:18 PM GMT

LANGUAGE - TAMIL
பிரபல வானொலி ஒலிபரப்பாளரின் பெயரால் யாழ்.தீவகத்தில் மோசடி முயற்சி!

பிரபல வானொலி ஒலிபரப்பாளரின் பெயரால் யாழ்.தீவகத்தில் மோசடி முயற்சி!


கொழும்பின் பிரபல தனியார் பண்பலை ஒலிபரப்பாளரின் பெயரில் நபர் ஒருவர் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் தகவல் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றமை தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை தீவகத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றுக்கு தொடர்பு கொண்ட குறித்த நபர் கிராமத்தில் போரால் பாதிக்கப்பட்டவர்கள் விபரம் யாரிடம் பெறமுடியும் என்றும் மிதிவண்டி உட்பட்ட பொருட்களை வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார். அதனை நம்பிய அந்த விற்பனை நிலையத்தைச் சேர்ந்தவர் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பிறிதொரு கிராமத்தில் பணியாற்றுகின்ற கிராம அலுவலர் ஒருவரின் தொடர்பிலக்கத்தை வழங்கியிருக்கின்றார்.

கிராம அலுவலரைத் தொடர்புகொண்ட குறித்த நபர், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்து விபரம் கோரியிருக்கின்றார். அதற்கு பதிலளித்த கிராம அலுவலர் நடைமுறைகளுக்கு அமைய பிரதேச செலயகத்தின் ஊடாகவே விபரங்களை பெற்றுக்கொள்ளமுடியும் என்று தெரிவித்திருக்கின்றார்.

இதனை அடுத்து, என்னை யார் என்று தெரியுமா? என்று கேட்டதுடன் கொழும்பின் பிரபல தனியார் பண்பலை ஒலிபரப்பாளர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவரே தான் என்றும் குறித்த தனியார் வானொலியில் இருந்து தற்போது விலகி பிரபல அரச பண்பலை ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு பணியாற்றுவதாகவும் தெரிவித்ததுடன் தற்போது வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெறும் விழா ஒன்றிற்கு தமது தற்போதைய வானொலி ஊடக அனுசரணை வழங்குவதாகவும் அதற்காக வந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் சந்தேகம் அடைந்த கிராம அலுவலர் ஊடகத்துறை சார்ந்த சிலரின் கவனத்திற்கு விடயத்தினைத் தெரியப்படுத்தியிருந்த நிலையில், ஊடகத்துறை சார்ந்தவர்கள் வவுனியா மாவட்டச் செயலகத்தினைத் தொடர்புகொண்டு கேட்டபோது அங்கு பொங்கல் நிகழ்வு மட்டும் நடைபெறுவதாகவும் அனுசரணை வழங்கும் அளவிற்கு பெரிய நிகழ்வு ஒன்றும் நடைபெறவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

அவர் தன்னை அடையாளப்படுத்தக் குறிப்பிட்ட பிரபல ஒலிபரப்பாளரிடம் சமூக வலைத்தளம் ஊடாக, உரையாடிய தொலைபேசி இலக்கத்தைக் குறிப்பிட்டு இந்த விடயம் தொடர்பில் கேட்டபோது குறித்த இலக்கம் தன்னுடையது இல்லை என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவியுங்கள் என்று அவர் பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை மீண்டும் கிராம அலுவலரைத் தொடர்புகொண்ட அந்த நபர் மீண்டும் விபரம் கோரியபோது காலையில் வழங்கிய தகவல்களை மாலையில் முரணான வகையில் கதைத்ததாக கிராம அலுவலர் தெரிவித்தார்.

கிராம அலுவலர் தகவலை வழங்கியிருந்தால் அவருடைய பெயரை வைத்துக்கொண்டு அவர் தான் உதவி செய்ய விபரம் வழங்கினார் என்று சொல்லியோ அல்லது கிடைக்கின்ற விபரத்தை வைத்துக்கொண்டோ மோசடி நடவடிக்கையில் குறித்த நபர் ஈடுபட்டிருக்கும் அபாயம் தவிர்க்கப்பட்டிருப்பதாக கிராம அலுவலர் அருவி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

அதேவேளை இவ்வாறான நபர்கள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE