Friday 26th of April 2024 04:03:57 PM GMT

LANGUAGE - TAMIL
மனிதவுயிர்கள்... பலிகொள்ளும் சல்லிக்கட்டு!
மனிதவுயிர்கள்... பலிகொள்ளும் சல்லிக்கட்டு!

மனிதவுயிர்கள்... பலிகொள்ளும் சல்லிக்கட்டு!


தமிழர்களின் மரபான விளையாட்டுகளில் ஒன்றான சல்லிக்கட்டு, சுற்றுலாப் பொருளாக மாற்றப்பட்டுள்ளநிலையில் உரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்படாமலும் தனிநபர்களின் அலட்சியத்தாலும் இந்த ஆண்டு நேற்றுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

பொங்கலையொட்டி தமிழ்நாடு முழுவதும் சல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதாட்டம், மாட்டுவண்டிப் போட்டி ஆகியவை நிகழ்த்தப்பெறுவது வழக்கம். அண்மைக்காலமாக, அலங்காநல்லூர் போன்ற சில இடங்களில் நடைபெறும் சல்லிக்கட்டுப் போட்டி, சுற்றுலா முக்கியத்துவம் பெற்றவையாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் பத்தாயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடும் பெருந்திரள் கொண்டாட்டமாக மாறிவிட்டது.

சட்டமன்றம், நீதிமன்றங்கள்வரை கடந்த ஆண்டுகளில் சிக்கியிருந்த சல்லிக்கட்டு, தடைகளைக் கடந்து சில ஆண்டுகளாக மீண்டும் நடந்துவருகிறது. மதுரை பகுதியில் நீதிமன்றம் அமைத்த குழுவே போட்டியை நடத்தியது. உடனடி மருத்துவக் குழுக்கள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தாலும் காயமடைந்தவர்கள் உயிரிழக்கும் சோகத்தைத் தடுத்துநிறுத்தமுடியவில்லை. மாடுபிடி வீரர் ஒருவரும் மாட்டு உரிமையாளர், உடன்வந்தவர், வேடிக்கைபார்த்தவர் என ஐவரும் இந்த ஆண்டில் நேற்றுவரை உயிரை இழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.

* வெள்ளியன்று, அலங்காநல்லூரில் நடைபெற்ற சல்லிக்கட்டின்போது, மாட்டு உரிமையாளர் ஒருவர் வாடிவாசலில் தன் மாட்டுக்காகக் காத்திருந்தபோது இன்னொரு காளை முட்டியதில் உயிரிழந்தார். அதேநாளில் நிகழ்வைப் பார்க்கவந்த ஒருவர் மயக்கமடைந்து பின்னர் உயிரிழந்தார்.

* அதே நாளில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காளை உரிமையாளர் ஒருவர், மாடு முட்டியதில் இறந்துபோனார்.

* அதே நாளில், சேஅல்ம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் வேம்பனேரியில் நடைபெற்ற எருதாட்டத்தின்போது, அதே மாவட்டத்தைச் சேர்ந்த மோட்டாங்காடு கிராமத்தைச் சேர்ந்த 25 வயது உத்தரகுமார் என்பவர் மாடு முட்டியதில் உயிரிழந்தார்.

* சனியன்று புதுக்கோட்டை மாவட்டம் வடமலப்பூரில் மாடுமுட்டியதில் வடிவேல் (32 வயது)என்பவர் உயிரிழந்தார்.

* ஞாயிறன்று, சிவகங்கை மாவட்டம், நாட்டசன்கோட்டை அருகில் உள்ள கண்டுபட்டியில், அந்தோணியார் கோயில் முன்பு அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் முறைப்படி பதிவுசெய்யப்பட்டது. தகுதிநீக்கம் செய்யப்பட்டவை போக, 107 காளைகள் சல்லிக்கட்டில் பங்கேற்றன. நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுசெய்த வீரர்கள் காளைகளை அடக்கினர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இத்துடன், மஞ்சுவிரட்டுத் திடலிலிருந்து 800க்கும் மேற்பட்ட விரட்டுமாடுகளும் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை அடக்குவதிலும் மாடுபிடி வீரர்கள் இறங்கினர். இதில் வேடிக்கை பார்க்கவந்தவர்கள், மாடுபிடி வீரர்களென 67 பேர் காயமடைந்தனர். இதில், தன் உறவினர் வீட்டுக்கு வந்திருந்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது விசயராகவன் மாடுமுட்டியதில் படுகாயமடைந்தார். உடனடி அவசரச் சிகிச்சைக்குப் பிறகு, சிவகங்கை மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்குக் கூட்டிச்செல்லப்பட்ட அவர், அங்கு இறந்துபோனார்.

* நேற்றைய நாளில், அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகிலுள்ள கோக்குடி சல்லிக்கட்டிலும் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். நெடுங்காலமாக இங்கு நடத்தப்படும் அந்தோணியார் பொங்கல் சல்லிக்கட்டில், 250 மாடுபிடி வீரர்களுக்கும் 642 காளைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. வென்றவர்களுக்கும் சிறந்த காளைகளுக்கும் பரிசுகல் வழங்கப்பட்டன. மாடு முட்டியதில் 37 பேர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் படுகாயமடைந்ததால் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லால்குடியைச் சேர்ந்த போசிரான் என்பவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர், சல்லிக்கட்டுக் காளையைக் கொண்டுவந்த தன் நண்பருடன் சல்லிக்கட்டுக்கு வந்திருந்தார்.

இந்த ஆண்டில் உயிரிழந்தோரில், ஒருவர் மாடுபிடி வீரர். மற்றவர்களில் இருவர் மாட்டு உரிமையாளர்கள், மற்றவர்கள் பார்க்கவந்தவர்களே ஆவர். இம்மாதிரியான உயிராபத்தும் உள்ள நிகழ்வுகளுக்கு வருவோர் தற்பாதுகாப்பில் அலட்சியமாக இருப்பதும் அரசாங்க நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு முறைகள் ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்படாமையும் உயிர்காப்பு சிகிச்சை அருகில் இல்லாமையும் காரணங்கள் என்பது தெளிவாகிறது.

அரசாங்கத் தரப்பில் பாதுகாப்பு குறித்த விழிப்பூட்டல் பரப்புரை சரிவர செய்யப்படுவதில்லை என்பதே வருத்தமளிக்ககூடிய நிதர்சனமாக இருக்கிறது.

ஒப்பீட்டளவில், மதுரையின் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் சல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெருமளவிலான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இரு நிகழ்வுகளுக்கு நீதிமன்றமேவேறு ஆணையிட்டுவிட்டதால் எதையும் ஆவணப்பூர்வமாக நிரூபித்தாகவேண்டிய கட்டாயமும் மாவட்ட நிர்வாகத்துக்கு உண்டு. நீதிமன்றத்தின் பார்வையாளரான ஓய்வுபெற்ற நீதிபதி நிகழ்விடத்திலேயே தேவையான தலையீடுகளைச் செய்யமுடியும்; நேரடியாகக் களத்தில் இருப்பதால் கேள்விகளை எழுப்பவும் நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிடவும் வாய்ப்பு உண்டு.

அப்படியும் அங்கு வீரர் ஒருவரையும் பார்க்கவந்தவரையும் இழக்க நேரிட்டது. வீரர்களோ காளை உரிமையாளரோ பார்க்கவருவோரோ தனி நபர்களின் அலட்சியத்தையும் இதில் புறக்கணித்துவிடமுடியாது. ஏனெனில் அதுவும் கணநேரத்தில் உயிராபத்தைக் கொண்டிருப்பதுதான்! ஒருவர் மயக்கமடைந்து விழுந்ததைத் தவிர பிற இடங்களில் மாடுமுட்டியே மற்றவர்கள் இறந்துள்ளனர். அரசாங்கமே சுற்றுலா துறையின் சார்பில் இதைப் பார்ப்பதற்காக தனியான ஏற்பாடுகளைச் செய்துவருவதால், பத்தாண்டுகளுக்கும் மேல் சல்லிக்கட்டைப் பார்ப்பதற்காகவே இந்த காலகட்டத்தில் மதுரைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளே இருக்கிறார்கள். தை எழுச்சிப் போராட்டத்திற்குப் பிறகு, இளம் தலைமுறையினரும் அதிகமாக இப்போட்டியைக் காண்பதிலும் பங்கேற்பதிலும் ஈடுபாடு காட்டுகின்றனர். எனவே, தற்பாதுகாப்பு குறித்த விழிப்பூட்டல் பரப்புரையை தனி இயக்கமாக எடுத்துச்செல்லவேண்டிய புதிய தேவை உருவாகியுள்ளது.

மருத்துவ வசதிகளைப் பொறுத்தவரை, இன்னும் அரசாங்கத்தின் தரப்பில் கூடுதல் கவனம்செலுத்தப்படவேண்டும் என்பதையே நடப்புநிலவரம் உணர்த்துகிறது. அமைச்சர்கள் முன்னிலையில் நடக்கும் இந்த நிகழ்வுகளில் அரசாங்கத்தின் மருத்துவக் குழுவினர் அர்ப்பணிப்போடு பணியாற்றத்தான் செய்கிறார்கள். இருப்பினும் எதற்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா? போதுமான எண்ணிக்கையில் மருத்துவக் குழுவினரையும் மருத்துவ சிகிச்சை வசதியையும் சல்லிக்கட்டு நிகழ்விடத்திலேயே அமைப்பதுதான், உயிர்காக்கும் தருணத்தில் பயனுள்ளது. சல்லிக்கட்டு ஓரிடத்தில் நடக்க, உரிய சிகிச்சை அளிக்கக்கூடிய மாவட்ட பொது மருத்துவமனையோ அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையோ தொலைவிலிருக்கையில் அதனால் மனித உயிர்களைக் காப்பதற்கு என்ன பயன் என்பதை குறிப்பாக சிந்திக்கவேண்டும்.

மேலும், பார்க்கவருவோருக்கு ஏற்கெனவே இருக்கக்கூடிய உடல், மனக் கோளாறுகள் பெருந்திரள் கூட்டத்தில் என்ன பாதகத்தை உண்டாக்கும்? எப்படி அதைத் தவிர்க்கவேண்டும் என்பது குறித்த விழிப்பூட்டலும் குறைவாகவும் அரிதாகவும்தான் காணப்படுகிறது. தகவல்நுட்ப காலகட்டத்தில் அரசாங்கத்துக்கு இது பெரிய மலையான வேலையாக இருக்கமுடியாது.

இனியாவது சல்லிக்கட்டில் மனித உயிரிழப்புகளைத் தடுத்துநிறுத்தவேண்டும் என்றால், அதற்கு பேச்சளவில் இல்லாமல் செயலளவிலான புதிய நடவடிக்கைகள் கறாராக மேற்கொள்ளப்படவேண்டும்.

- தமிழ்நாட்டிலிருந்து இர.இரா.தமிழ்க்கனல் -


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE