Friday 26th of April 2024 10:04:13 AM GMT

LANGUAGE - TAMIL
“தமிழிசையின் தனித்துவம் பேணும் பறை மேள இசை”
“தமிழிசையின் தனித்துவம் பேணும் பறை மேள இசை”

“தமிழிசையின் தனித்துவம் பேணும் பறை மேள இசை”


பாரம்பரிய தமிழிசைக் கருவிகள் தோல் கருவிகள், துளைக்கருவிகள், நரம்புக்கருவிகள் என மூன்று வகைப்படுத்தபட்டன. இவற்றில் தோல் கருவிகளில் தவில், மத்தளம், மிருதங்கம், பறை என்பன அடங்கும் அதே போன்று துளைக்கருவிகளாக நாதஸ்வரம், புல்லாங்குழல் என்பன வகைப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ், வீணை, தம்புரா என்பன நரம்புக்கருவிகள் வகையில் அடங்கும். ஆனால் “பிபில்” என்றழைக்கப்படும் ஒரு மேற்கத்தைய இசைக்கருவி சில மாற்றங்களுடன் வயலினாக உருவெடுத்தது. அதுவும் இப்போது தமிழிசைக்கருவியாகிவிட்டது. அவ்வாறே ஆர்மோனியம், முகர்சிங் போன்ற பிறநாட்டு இசைக்கருவிகளும் எமது இசையுடன் இணைந்து தமிழ் இசைக்கருவிகளில் ஒன்றிணைந்துவிட்டன.

தோல்கருவிகளில் பறைமேளம் ஒரு முக்கியமான வாத்தியமாக கருதப்படுகிறது. எமது இனத்தின் அடையாளமாகிய பாரம்பரியச் சடங்குகள், கிராமியத் தெய்வ வழிபாடுகள் என்பவற்றில் பறை மேளம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

பறை என்றால் பேசு என்று பொருள்படும். உண்மையிலேயே பறை ஒரு தாள வாத்தியக்கருவியாக இருந்தபோதும் அது ஒலிக்கும் போது வெளிப்படும் ஓசையைக்கொண்டு அந்த மேள அடி எதைச் சொல்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடியும். தெய்வ பூசை, பொங்கல் வழுந்து ஏற்றல், படையல் செய்தல், கலையாடுதல், காவடியாட்டம் போன்ற வழிபாடு சம்மபந்தமான நிகழ்வுகளில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான தாள அடி உண்டு. அவ்வாறே ஒரு மரணச்சடங்கில் கூட உறவினர்கள் வரும்போது, பகைவர்கள் வரும்போது பிரேதம் குளிக்க வைக்கும் போது, பிரேதம் தூக்கும் போது, பிரேதம் வீடு வழியாக செல்லும் போது, மறித்து அடிக்கும் போது, கொள்ளி வைக்கும் போது என ஒவ்வவொரு நிகழ்வுகளுக்கும் ஒவ்வொரு விதமான அடி உண்டு. வடமோடி, தென்மோடி, வசந்தன், காமன் கூத்துக்களின் போதும் பறைமேளத்தின் இன்னொரு வடிவமான தம்பட்டம் பாவிக்கப்பட்டு வந்ததாக அறியமுடிகிறது. தற்சமயம் அந்த இடத்தை மத்தளம் என்றதொரு தோற்கருவி கைப்பற்றிவிட்டது.

ஆனாலும் காமன் கூத்தில் சில இடங்களில் இப்போதும் தம்பட்டம் பாவிக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் மட்டக்களப்பிலும் வடமோடிக்கூத்தில் பரீட்சார்த்தமாக பறை பாவிக்கப்பட்டு அது வெற்றியளித்ததாக தெரியவருகின்றது. அது வடிவத்தில் சிறிய ஒரு வித்தியாசமான பறை மேளம் என்றே கூறப்படுகின்றது.

சங்க காலத்திலும், அதையடுத்த மன்னராட்சி நிலவிய காலப்பகுதியிலும் அரச கட்டளைகளை “பறையடித்தல்” மூலமே மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அதைப் “பண்டார மேளம்” என அழைக்கப்பட்டதாக தெரியவருகின்றது. அதேவேளையில் மக்களுக்கு செய்திகளை அறிவிக்கும் பறை கோட்பறையாகும். செய்தி தெரிவிக்க முழங்கும் கட்பறையை தமுக்கு எனவும் அழைப்பர். போர்ப்பறையை முரசறைதல் என கூறுவர்.

பறையாட்டம் என்றோரு தமிழ்மக்களின் பாரம்பரியக் கலையொன்று சிறப்புற்று விளங்கியதென்றும் இது தற்சமயம் வழக்கொழிந்து போய்விட்டதாகவும் அறியவருகின்றது. அக்கலை சாதியின் பேரால் அழைக்கப்பட்டதால் அது கைவிடப்பட்டதாக கருத்துத் தெரிவிக்கின்றனர். அது உண்மையோ பொய்யோ ஆனால் காவடியாட்டத்திற்கு பல இடங்களில் பறைமேளம் கைவிடப்பட்டு தவில் பாவனைக்கு வந்துவிட்டதையும், நாதஸ்வரத்தில் சினிமா பாட்டுக்கள் இசைக்கப்படுவதையும் பார்க்கமுடிகின்றது. ஆனால் காவடியாட்டத்தின் போது இசைக்கப்படும் ஆறெறிப்பறையால் எழுப்பப்படும் பக்திப்பரவசம், வெறியூட்டு என்பன தவில் ஓசையில் ஏற்படுவதில்லை.

இதே போன்று மனித வாழ்வியல் சடங்குகளின்போதும் வெவ்வேறு வகையில் பறையிசை முழங்கப்படுவதுண்டு. திருமணங்களின் போது மணப்பறையடிக்கப்படுவதுண்டு. தற்காலத்தில் அத முற்றாக கைவிடப்பட்டு ஜயரின் வேதமந்திரமும், நாதஸ்வரம் தவிலுமே கோலோச்சும் நிலை உருவாகிவிட்டது. ஆனால் மரணச்சடங்குகளில் இப்போதும் பறைமேளமே பாவனையில் உள்ளது. சாவை அறிவிக்கும் பறையில் இழப்பறையென்று சாவீட்டில் அடிக்கும் பறையை சாப்பறையென்றும் அழைப்பார்கள். சாப்பறையில், சாவீட்டில் இடம்பெறும் ஒவ்வொரு சம்பவங்களிற்கும் அவற்றை விளக்கும் வகையில் ஒவ்வொருவிதமான அடி உண்டு.

ஆனால் தற்சமயம் ட்றம் போன்ற ஒரு வகை வாத்தியம் மரண வீடுகளில் பாவிக்கப்படுகிறது, இதில் பறைமேளத்திற்குரிய தனித்துவ அம்சங்களையும், மேள ஓசை மூலம் பேசும் லாவகத்தையும் காணமுடிவதில்லை. மாறாக இடிமுழக்கம் போன்ற ஒலியெழுப்பப்பட்டு காதுகளை அதிர்க்கின்றன. அந்த கர்ணகடூர ஓசையில் சாவீட்டின் உணர்வுகள் எங்கோ பறந்து போய்விடுகின்றன.

ஆகம விதிப்படி பூசைகள் இடம்பெறும் ஆலயங்களில் பறைமேளங்களை காணமுடிவதில்லை. ஆனால் வாய்கட்டி பூசைசெய்யும் ஆலயமான செல்வச்சந்நதியில் வெளிப்பிரகாரத்தில் நின்று பறைமேளம் பூசை நேரங்களில் இசைக்கப்படுகிறது.

ஆனால் பொங்கல் வழிபாடுகள் இடம்பெறும் கோவில்களில் பறைமேளம் முக்கிய பங்கை வகிக்கின்றது. பன்றித்தலைச்சி, புளியம்பொக்கனை, பொறிக்கடவை, புதூர், வற்றாப்பளை என்பன ஆகம வழிபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டபோதிலும் பொங்கல் படையல் போன்ற சடங்குகளை பறைமேளமே வழிநடத்துகிறது.

வற்றாப்பளை கண்ணகை அம்மனின் வைகாசி விசாகப்பொங்கலின்போது பறை ஒரு பிரதான கருவியாக திகழ்கிறது. பறைமேளத்துடனேயே பாக்குத்தெண்டல் என்ற கால்கோல் நிகழ்ச்சி ஆரம்பமாகின்றது. பின்பு முள்ளியவளை காடடுவிநாயகர் ஆலயத்திலிருந்து பக்தர்கள் புறப்பட்டு அளம்பிக்கடலிற்கு சென்று அங்கு கடல்நீரை ஒரு பானையில் எடுப்பார்கள். அந்தச்சடங்கு பறைமேளத்தின் துணையுடனே மேற்கொள்ளப்படும். பின் காடடுவிநாயகர் ஆலயத்தில் ஏழு நாட்கள் உப்பு நீரில் விளக்கெறிக்கப்பட்டு தினமும் பூசைகள் இடம்பெறும். பூசைகளின் போது ஒவ்வொரு வேளையும் அறறிப்பறை இசைக்கப்படும். ஏழாம் நாள் பறைமேளத்தலைமையில் வற்றாப்பளை அம்மன் கோவிலுக்கு காட்டுவிநாயகர் கோவிலிலிருந்து மடைப்பண்டம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும். அங்கு வழுந்தேற்றல் எனப்படும் பானையை அடுப்பிலேற்றுதல் அரிசி போடுதல் படையல் செய்தல் போன்ற ஒவ்வொரு வழிபாட்டு முறைமைகளையும் மேற்கொள்ளும் போது ஒவ்வொருவிதமான பறைமேள அடி உண்டு. ஜயனார் கோவில்கள் உட்பட பொங்கல் வழிபாடு இடம்பெறும் எல்லா ஆலயங்களிலும் இம்முறையே பின்பற்றப்பட்டுவருகின்றது.

கிராமிய வழிபாடுகள் இடம்பெறும் எமது பாரம்பரிய வழிபாட்டு ஸ்தலங்களில் எப்போதுமே பறைமேளத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதிலிருந்து பறைமேளம் எமது தமிழர்களின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக வெளிப்படுத்தப்படுகிறது. தமிழ் மக்கள் தமது வாழ்விடங்களை அங்கு மேற்கொள்ளப்படும் பிரதான தொழிலுக்கு ஏற்றவகையில் நால்வகை நிலங்களாக பிரித்துள்ளனர். வயலும் வயல்சார்ந்த விவசாயத்தொழில் மேற்கொள்ளப்படும் நிலத்தை மருதம் எனவும், கடலும் கடல்சார்ந்த நிலமும் கொண்ட மீன்பிடித்தொழில் நிலவும் நிலத்தை நீரல் எனவும், மலையும்; மலைசார்ந்த இடத்தை குறிஞ்சி எனவும், பாலைவனப்பகுதியை பாலை எனவும் வகுத்துள்ளனர். பறைமேளம்கூட ஒவ்வொரு வகை நிலங்களுக்கும் தனித்தனியான பறைகள் உண்டு. நெய்தல் நிலத்திற்குரிய பறையை நெய்தல் பறையென்றும், பம்பைப்பறையென்றும் அழைப்பார்கள். அதேபோன்று மருதநிலத்திற்குரிய பறையை மருதநிலப்பறையென்பர்.

பூசற்றுண்மை என்பது வீரர்களை போரிற்கு அழைக்கும் பறையாகும். இதை பாலை நிலத்தவர்கள் போர்க்குணம் காரணமாக பாலைநிலப்பறையென்றும் கூறுவதுண்டு. குறிஞ்சி நிலத்தெய்வம் முருகன் என்றே கூறப்படுவதால் முருகனுக்குரிய வெறியாட்டு வழிபாட்டில் அடிக்கப்படும் பறையை முருகியம் என அழைப்பார்கள்.

பறைமேளத்தில் பதினெட்டுத்தாளங்கள் காணப்படுவதாக இன்றைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தாளக்கட்டுகளை அடிப்படையாக கொண்டு வாசிப்பவர் தனது கற்பனைத்திறமை மூலம் வெவ்வேறுமெட்டுகளையும், வெவ்வேறு உணர்வுகளையும் வெளிப்படுத்துவதுண்டு.

அண்மைக்காலத்தில் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் மகாகவியின் மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்ற நாடகத்தில் பரத நாட்டிய அடவுகளிற்கான தாளமாக பறைமேளம் பரீட்சார்த்தமாக பாவிக்கப்பட்டது. அது பெரும் வெற்றிகரமான சாதனையென்றே கருதப்பட்டது. பரதநாட்டியத்தின் நுணுக்கமான அபிநயங்களோடு உணர்வுகளோடும் இணைந்து பறை மேளம் லயம் பிசகாமல் ஒலித்தமை ஒரு அற்புமான சாதனையாகவே பார்க்கப்பட்டது.

இக்கலை ஒரு சமூகத்தினரின் பெயரால் அழைக்கப்படுவதாலோ என்னவோ இக்கலை மெல்லமெல்ல வழக்கிழந்து போகும் நிலை தோன்றியுள்ளது. இது எமது இனத்தின் கலாச்சார அடையாளம் என்ற வகையில் அதை அழியவிடாது பாதுகாப்பது எம் அனைவரினதும் கடைமையாகும். அவ்வகையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முயற்சி ஒரு வரவேற்கத்தக்க திருப்புமுனையாகும்.

வடக்கில் பறைமேளத்தால் கதை பேசக்கூடிய பாரம்பரியக்கலைஞர்கள் நிறையவே உண்டு. காலமாற்றம் காரணமாக உன்னதமான அந்தக்கலையை கைவிட்டு தகரப்பறையடிப்பவர்களாக மாறும் அபாயத்திலிருந்து அவர்களும் இக்கலையும் காப்பாற்றப்படவேண்டும். பறையென்பது தமிழரின் பாரம்பரியக்கலையென்ற வகையில் அதைப்பாதுகாத்து மெருகுபடுத்தி வளர்த்தெடுக்கவேண்டியது எம் எல்லோரினதும் கடமையாகும்.

இதேவேளை தப்பட்டை அல்லது தப்பு என்கிற வாத்தியத்தை இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய பறை வாத்தியம் என்று அறிமுகப்படுத்துகின்ற முயற்சியும் நடைபெறுகின்றது. தப்பட்டை அல்லது தப்பு தமிழகத்தின் பாரம்பரிய இசை வாத்தியமாகும் அதனை அவர்கள் அங்கு கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு தேசிய இனக்குழுமங்களுக்கும் தனித்தனியான இசை மரபுகளும் பாரம்பரியங்களும் காணப்படுகின்றன.

எங்கள் பறை மேளம் என்பது எங்கள் பாரம்பரிய தமிழ் இசையில் பிரிக்கமுடியாத ஒன்று என்பதே காலம் எங்களுக்கு தந்து நிற்கும் கைமாறாகும்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE