;

Friday 5th of June 2020 02:13:05 AM GMT

LANGUAGE - TAMIL
தழல் ஈகி முத்துக்குமாரின் கடைசி இரண்டு அழைப்புக்கள்!
தழல் ஈகி முத்துக்குமாரின் கடைசி இரண்டு அழைப்புக்கள்!

தழல் ஈகி முத்துக்குமாரின் கடைசி இரண்டு அழைப்புக்கள்!


அப்போதெல்லாம் முகநூல் போன்ற சமூக ஊடகங்களின் புழக்கம் பரவியிருக்கவில்லை. மின்னஞ்சல் தவிர்த்து உடனடி இணையத் தொடர்பு என்றால் யாகூ மெசஞ்சர், ஜிமெயில் சாட்டிங்க்தான். அன்றைய நாள் காலையிலும் வழக்கம்போல இணையத்தில் செய்திகளைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதாக, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அன்றாடம் சிலபல பத்து பேர் கொடூரமாகக் கொன்றழிக்கப்பட்டது மாறி, நாள்தோறும் நூற்றுக்கணக்கில் தமிழீழ மக்கள் இனப்படுகொலைக்கு பலியாக்கப்பட்டதன் ஆரம்பகாலம், அது.

கையறுநிலை என்றாலும்கூட வன்னியில் காட்டிமிராண்டித்தனமாக நிகழ்த்தப்பட்ட கொத்துக்கொத்தான கொலைகளை எப்படியாவது யார் மூலமாகவாவது உடனடியாகத் தடுத்துவிடமுடியாதா? அதற்கான ஏதோ ஒரு நம்பிக்கைக் கீற்றாக ஒரு செய்தியைக் கண்டுவிடமாட்டோமா என துலாவிக்கொண்டிருந்த காலப்பகுதி..!

செய்திக்களத்துக்குப் போவதற்கு முன்னைய இணையத்துலாவலில் இருக்கையில், சிறிய கைப்பேசியில் தினத்தந்தியில் அப்போது பணியாற்றிய, மறைந்த செய்தியாளர் தம்பி ஒருவர் அனுப்பிய குறுந்தகவல் வந்திருந்தது. அதை எடுத்துப் பார்க்க மனம் இல்லை. அடுத்தடுத்து அவரே மேலும் இரண்டு குறுந்தகவல்களை அனுப்பியிருந்தார். செய்திக்காரனின் உள்ளுணர்வு என்னை எச்சரிக்கை விடுக்கவும், தகவலகத்தைத் திறந்தேன். முதலாவதாக, மொட்டையான செய்தித்தகவல்... (இந்திய அரசின் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் அடங்கிய சென்னையின் ஒரு வளாகமான) ’நுங்கம்பாக்கம் சாத்திரி பவனில் ஒருவர் தீக்குளிப்பு’ என்பதன் சுருக்கமாக இருந்தது. ஈழத்தில் நாளும் நூற்றுக்கணக்கில் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள்; இதில் இங்கு தீக்குளித்து வேதனையைக் கூட்டுகிறார்களே.. பாவம், யாரோ எவரோ.. என்ன காரணமோ எனக் கடந்துபோகமுடியாமல் அடுத்த தகவலைப் பார்த்ததும் இனம்புரியாத அதிர்ச்சி! முழுதாகப் படிக்கவில்லையோ என மீண்டும் படித்துப்பார்க்கிறேன்.. 'தீக்குளித்தவர் நெல்லையைச் சேர்ந்த இளைஞர்’ என்பதே அத்தகவல். கடைசியாக வந்த தகவலைத் திறந்தால், தெள்ளத் தெளிவாக இருந்தது, ’27 வயது கொண்ட முத்துக்குமரன் என்பவரே தீக்குளித்தார்.. கவலைக்கிடமான நிலைமைதான்’ என! செல்பேசியில் அழைக்கிறேன்.. யாரும் எடுக்கவில்லை; நானும் அப்படியே இருந்திருக்கக்கூடும். எல்லா செய்தியாளர்களுமே அவரவர் செய்திக்களத்துக்கும் அலுவலகத்துக்கும் விரைந்துகொண்டிருக்கும் இயல்பில்.. யாருக்கும் அடுத்த அழைப்பை விடுக்க யோசிக்கவில்லை.

... அந்த கண நேர உணர்வை எவருக்கும் சொல்லிப் புரியவைத்துவிட முடியாது. குறிப்பிட்ட இணையதள மையத்தின் உரிமையாளர் ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் அறிவிப்பு செய்வது, வழக்கம். பெரும்பாலும் நான் மட்டுமே சில பல அரை மணி நேரங்கள் தொடர்ச்சியாக அங்கிருப்பேன். குறைந்தது ஒரு மணி நேரமாவது இணையத் துலாவலில் இருப்பவன், அரை மணிக்கு உள்ளேயே எழுந்ததால் அவர் மேலும்கீழுமாகப் பார்த்துவிட்டு என்ன என்பதுபோலக் கேட்டார். திக்கித்திணறி தகவலைச் சொல்லிவிட்டு அங்கிருந்து வண்டியை எடுக்கக் கிளம்பினேன். அப்போதுதான் முன்னைய நாள் இரவும் அன்று காலையிலும்கூட தோழர் முத்துக்குமார் கூறிய, அனுப்பிய நினைவூட்டல்கள், சட்டென நினைவுக்கு வந்தன.

அவர் கடைசியாகப் பணியாற்றிய 'பெண்ணே நீ’ மாத இதழில், நானும் அயல்பணியாக மெய்ப்பு பார்த்துத் தந்துகொண்டிருந்தேன். அங்கும் இங்குமாக பல வேலைகளில் இருந்த அவருக்கு, திரைப்படப் படைப்பாக்கத்தில் மிகுந்த ஈடுபாடு. அதையொட்டிய பலவகையிலான பணிகளிலும் தேர்ச்சிக்காக தீவிரமாக உழைத்துக்கொண்டிருந்தார். அப்படி அவர் பெற்றிருந்த இதழ் வடிவமைப்புப் பயிற்சிக்கு, என் பணி முன்னவரும் விகடன், குமுதம், குங்குமம் இதழ்களின் முன்னைய ஆசிரியருமான மூத்தவர் கௌதம் அவர்களின் ஊடாக, முத்துக்குமாருக்கான பணிவாய்ப்பைப் பெற்றோம். எப்போதும் இளவல்களை உந்தித்தள்ளிவிடும் கௌதம் அவர்களின் நற்பண்பு, முத்துக்குமாரின் பணி உறுதிக்கும் ஏற்றத்துக்கும் உதவியது. 'பெண்ணே நீ’ அலுவலகத்தையும் தன் பட்டறையாக ஆக்கிகொண்டார், தோழர் முத்துக்குமார். அவரின் வடிவமைப்பில் வந்த பெண்ணே நீ சிறப்பிதழால் மனம்குளிர்ந்த அதன் ஆசிரியர் கவிதா அவர்கள், முத்துக்குமாருக்குப் பரிசளிக்க உடைகளை வாங்கிவைத்திருந்தார். இதழ்த் தயாரிப்பு முடிவடைந்ததும் இரவுப் பணிக்குப் பிந்தைய ஓய்வை முடித்துவிட்டு, வழமைக்குத் திரும்புவதற்கு சிறிது முன்பின் ஆகும். ஊழியர்களென அதிகமானவர்கள் இல்லாத அங்கு, முத்துக்குமார் அப்படியான இயல்புகளையும் கடந்தவராகவே இருந்தார். தன்னுடைய மாதாந்திரக் கடமையை முடித்தவர், எப்போதும்போல கணினியைக் கொண்டு எதையோ கற்றுக்கொள்வதில் ஈடுபட்டிருந்தார். எல்லாம் இயல்பாகவே இருந்தது, அன்றைய காலையில் அவருக்காக வாங்கிவைக்கப்பட்ட சட்டையை வாங்கிக்கொள்வதற்கு அவர் வரவேமாட்டார் என்பதை அறியும்வரை..! ஆம், அவ்வளவையும் கனகச்சிதமாக, சிறு பிசிறுமில்லாமல் செய்துமுடித்திருந்தார், அந்தத் தழல் ஈகி!

பொதுவில், யாரிடமும் உரத்த குரலில் வெட்டி வெட்டிப் பேசும் இயல்பு கொண்டவர், முத்துக்குமார். அதற்காக அவரை சண்டைக்காரராகவோ எள்ளும்கொள்ளுமான முசுடாகவோ பழகியவர்கள் கருதிவிடவும் முடியாது. அவரின் பேச்சினில் எழுத்தினில் உரையாடலில் வெளிப்படும் தீவிரத்தின் அளவு எப்படியோ அவ்வளவுக்கு புன்னகையையும் அவர் முகம் தேக்கிவைத்திருக்கும். உரையாடல்களில் நூறு விழுக்காடும் கறாராகவும் அரசியலற்ற தன்மை நீங்கியதாகவும் இருக்கும் என்பதை நினைவூட்டியாக வேண்டும். இளைஞர்கள் என்றாலே உதிரிகள், அந்தந்தக் காலகட்டத்து இரசினி - கமல், அசித் - விசய் பிம்பங்களில் தோய்ந்து திரையே பேச்சுலகு எனக் கிடப்பவர்கள் என உறுதியாக நம்பப்பட்டு வந்த காலத்தில், நேர்மாறாக, அதே திரைத்துறை ஈடுபாடுகொண்ட ஓர் இளைஞர், குறிப்பான பேச்சுகளில் தவிர, நாட்டின் அரசியல், தேசிய இன உரிமைகள், உலக ஏகாதிபத்தியங்கள், போர்கள், அவற்றின் பாதிப்புகள், உழைக்கும் வர்க்க அரசியல், உழைக்கும் வர்க்கக் கருத்தியல், உழைக்கும்வர்க்கப் பண்பாடு என வேறு திக்குகளை, தன்னுடைய பேசுபொருளாக, சிந்தனை மையமாக வைத்திருந்தார்.

மையமாக, படைப்பாக்கத்தையே தன் வாழ்வுப்பணியாகவும் மற்ற பல வேலைகளை அதற்கான துணையாகவும் இணையாகவும் வைத்திருந்தார், தோழர் முத்துக்குமார். அதனியல்பில் கற்பனை வளத்தோடும் கடும்பசி நாளோடும் உறுமீன் வருமளவு கோடம்பாக்க உலகில் காத்துக்கொண்டிருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களில் ஒருவராகவே அவரும் இருந்தார். சக தோழர்கள், இலெனினின் ‘அரசும் புரட்சியும்’ நூலைப் படித்துக்கொண்டிருக்க, இவரோ, கலை - இலக்கியம் குறித்த இலெனினது, மா-ஓ-சேதுங்கினது கண்ணோட்டங்ககளிலும் மாக்சிம் கார்க்கியினதும் இன்ன பிறரின் சோசலிச இலக்கியப் படைப்புகளிலும் விருப்பார்வம் கொண்டிருப்பார். அதைத் தள்ளிவிடவும் மாட்டார்; ’இதைத் தவிர்ப்பதை’யும் விட்டுவிட மாட்டார். அரசியலுக்கு இணையாக கலை - இலக்கியப் படைப்புகளின் பங்கை வாதத்தில் வைப்பார். கடைசிவரை அந்த வாதத்தில் அவரும் வெல்லவில்லை; உடன் பயணித்தவர்களும் வென்றிருக்கவில்லை. அந்த உரையாடலுக்கான உயிர்ப்பும் தேவையும் இன்னும் இருக்கிறது!

வெட்டிப்பேசுவதாகவும் வெட்டு ஒன்று; துண்டிரண்டாகப் பேசுவதாகவும் அமைந்த அவரின் அந்தக் கடைசிநேரத்து உரையாடல் மட்டும் ஆண்டுகள் பதினொன்று ஆனபோதும் மறந்துவிடவில்லை. இடையில் நடந்த எத்தனையோ துயரங்கள், அதிர்ச்சிகள் கலங்கலான நினைவுகள் ஆகிவிட்டபோதும், அது மட்டும் இன்னும் நினைவின் அடுக்குகளில் தங்கியிருக்கிறது.

இனப்படுகொலை ஊழிக் காலத்தின் இதேபோன்ற பனிப்பருவம் முடிவடையாத காலத்தில், தமிழீழ மக்களின் உயிர் காக்கும் வெதும்பலில் பித்துப் பிடித்தவர்களைப் போல சென்னையில் இரவுகளில் உலாவிக்கொண்டிருந்தவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள். ஒரு செய்திக்காரனாக, அண்ணா சாலையிலும் தியாகராயர் நகரிலும் ஆங்காங்கே நகரின் இரவு உணவுக்கடைகளின் வாசல்களில் கண்டதைத் தின்றுகொண்டும், நண்பர்களின் அலுவலகங்களில், அறைகளில், வீடுகளில் புதிதாகக் குடியைக் கைக்கொண்டும் மன உளைச்சலை ஈடுசெய்யப் போராடிக்கொண்டிருந்தார்கள், மாநகரத்தில் பணியாற்றிய இளம் தமிழின உணர்வாளர்கள். கற்பனை உலகமான கோடம்பாக்கத்தின் மெய்நிகர் நட்சத்திரங்களைப் பற்றி கேட்கவும் வேண்டுமா? கையறுநிலைப் புலம்பலாக, வெதும்பலாக, வேதனைக் கொந்தளிப்பாக ஒருவகைப் பதற்றநிலையில் இருந்தவர்கள், இன்றைக்கும் அதை நினைவுமீட்டக்கூடியதாகவே இருக்கும்.

அப்படியான ஒரு பொழுதில், தியாகராயர் நகரின் கோபதி நாராயணசாமி சாலையோரம் இப்போதும் இருக்கும் உணவகம் ஒன்றின் முற்றத்தில் இருந்த அண்ணன் அறிவுமதியை தற்செயலாகப் பார்த்துவிட்டு, இருசக்கர வண்டியில் வள்ளுவர்கோட்டம் வழியாகப் போய்க்கொண்டிருந்தேன். நேரம்கடந்த நேரத்தில் அரிதான அழைப்பு, தோழர் முத்துக்குமாரிடமிருந்துதான்.. ’உடையார்கட்டுக்குளம் உடைக்கப்பட்டுவிட்டதாமே.. இது நமக்குச் சாதகமா, பாதகமா? என சட்டெனக் கேட்டுவிட்டு, என் பதிலுக்காகக் காத்திருந்தார். இடையில் ஒரு நாள் பேச்சினூடாக, புதிய தகவல் ஏதும் கிடைத்தால் பரிமாறிக்கொள்வோம் என்று சொல்லியிருந்தது, நினைவில் வந்தது. எப்போதும் சொற்களை கவனமாகக் கொட்டுவதில் மட்டுமல்ல, எதிர்முனையில் இருப்பவரிடம் சொல்லவேண்டியதிலும் அவருக்கு மிகுந்த கவனம் இருக்கும்; இது, தேர்ந்த செய்திக்காரர்க்கு இருக்கவேண்டிய தன்மையும்கூட!

அப்போதைய நடப்பைப் பற்றிப் பேசிமுடிப்பதற்குள் நெடுநேரம் ஆகிவிட்டது. அதைப் பற்றி அவர் கிஞ்சிற்றும் பொருட்படுத்தவில்லை. குறித்த தகவல் பற்றிய ஒரு சித்திரம் கிடைத்தபின்னரே அவர் தரப்பிலிருந்து உரையாடலை முடிக்கும் தயார்நிலை வெளிப்பட்டது. இதுதான் அவர்! அதற்கு முன்னும் பின்னும் இனப்படுகொலைப் போரைப் பற்றிய உரையாடல்கள் பெரும்பாலும் இப்படியாகத்தான் நிகழ்ந்திருக்கின்றன. இறுதிவரையும் அப்படியாகவே அமைந்துவிட்டது.

2009 சனவரி 28-ம் நாள் இரவு, பணியை முடித்துவிட்டு, தினகரன் நாளேட்டு அலுவலகத்திலிருந்து என் ஊர்தியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, தோழர் முத்துக்குமாரிடமிருந்து அழைப்பு. முதலில் எடுக்கவில்லை. திரும்பத் திரும்ப அழைத்தார்; அதுவும் அவரின் இயல்பு. ஏதோ அவசரம்போல என எடுத்தால், சுருக்கமாகவும் நறுக்காகவும் அவர் சொன்ன தகவல்: ”முதன்மையான ஒரு செய்தியை மின்னஞ்சல் செய்திருக்கிறேன்; காலையில் திறந்துபாருங்கள். அது செய்தியளவில்கூட ஊடகங்களுக்கும் முதன்மையாக இருக்கும்” என கணீர்க் குரலில் சொல்லிவிட்டு, பேசியை வைத்தார்.

அரைத் தூக்கத்தில் இருந்தவனுக்கு, இந்தத் தகவல் பெரிதாகத் தோன்றவில்லை. அந்தக் காலகட்டத்தில் புலத்திலிருந்து இனப்படுகொலைப் போரை பற்றி கண்டமேனிக்கான தகவல்கள் வந்துகுவிந்து, துயருற்ற தமிழின உணர்வாளர்களை மேலும் சஞ்சலப்படுத்தியபடி இருந்தன. செய்திக்காரனாக நம்பகமற்ற தகவல்களைத் தள்ளிவிடும் எனக்கு, அவரின் தகவல் மீது அவசரகவனம் செலுத்தத் தோன்றவில்லை. அடுத்த நாள் காலையிலும் அவரிடமிருந்து அழைப்பு.. ”மின்னஞ்சல் பார்த்துவிட்டீர்களா”... “ இல்லை, இனிதான் பார்க்கவேண்டும்”...”சரி, கட்டாயம் பாருங்கள்; பார்க்காமல் இருந்துவிடவேண்டாம். முதன்மையான தகவலை ஊடக உலகத்துக்கு நீங்கள் சேர்ப்பிக்க வேண்டும்”... என்பதாக முடிந்தது, அந்த உரையாடல்..!

கிளம்பிய அவசரத்தில் என் இணையருக்கு மட்டும் தகவலைச் சொல்லிவிட்டு, என்னுடைய வழமையான கணினியில் உட்கார்ந்து அஞ்சலைத் திறக்கிறேன்.. அஞ்சலின் தலைப்பு... ‘என்னுடைய மரண வாக்குமூலமும் நிழற்படமும்’.

இதயம் கன்னாபின்னாவெனத் துடிக்கிறது. தலை முதல் கால்வரை இரத்த ஓட்டம் தெறிக்கிறது. கைகால் முழுக்க குப்பென வியர்வை... என்னை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏதோ செய்கிறது.. தொடர்ந்து உட்கார முடியவில்லை; எழுந்து நிற்கவும் முடியவில்லை.. இணைய மைய உரிமையாளர் ஏதோ கேட்பது மட்டும் தெரிகிறது; என்ன சொன்னார் என்பது விளங்கவில்லை... வெளியில் வந்து பக்கத்துக் கடைகளுக்கு முன்னால் அங்குமிங்காக விரைவுநடை போடுகிறேன்.. அசாதாரணமாக இருக்கிறோம் என்பது மனதில் பட, அருகிலிருந்த கடையில் தண்ணீர் வாங்கிக் குடிக்கிறேன்.. அதன் பிறகுதான் மனம் நிலைகொண்டது. இரவிலும் காலையிலும் தோழர் முத்துக்குமார் அழுத்தமாகச் சொன்ன சொற்கள் மீண்டும் மீண்டும் காதுகளில் ஒலித்தபடி இருந்தன. அவர் என்னிடம் கூறிய பணியை, ஆம், அது எனக்கான அவர் கொடுத்த பணியாகத்தான் இன்றைக்கும் கருதிக்கொள்கிறேன்; அப்போது இலண்டனில் செயல்பட்டுவந்த பிபிசி தமிழோசை நண்பருக்கும் இன்னுமொரு உலகளாவிய அன்றைய முதன்மையான தமிழர் ஊடகத்துக்கும் அந்த அஞ்சலை தொடரனுப்புகை செய்தேன். இப்போதைப்போல அப்போது உடனடிக் கைப்பேசித் தொடர்புக்கு வாய்ப்பில்லை. இந்தியாவின் தமிழ்நாட்டின் பிற்பொழுதில் நண்பர் அழைத்து, அந்த அஞ்சல் மெய்யானதுதானா? மேலதிக விவரங்கள் என்னென்ன எனக் கேட்டார். நடந்தவற்றை அவருக்குச் சொன்னேன். இதற்கிடையில், அந்த நண்பரே இன்னொரு தகவலையும் சொன்னார். தீக்குளித்த இடத்தில் தோழர் முத்துக்குமார், அங்கிருந்தவர்களிடம் அந்தக் கடைசி மணித் துளிகளின்போதும், தன்னை தீக்குத் தின்னக் கொடுத்துக்கொண்டே, உரையாற்றியபடி தன்னுடைய மரண வாக்குமூலத்தின் அச்சு வடிவத்தையும் வழங்கியிருக்கிறார் என்பதே அது. இதை பின்னர் நிகழ்விடத்துக்கும் இது பற்றிய தொடர் செய்திச்சேகரிப்பிலும் ஈடுபட்டிருந்த நண்பர் வெற்றிவேல் சந்திரசேகரும் உறுதிப்படுத்தினார்.

அதாவது, தன்னுடைய உயிர் ஈகமானது அற்பமான ஒன்றாக, சடல அரசியலில் பத்தோடு பதினொன்றாகப் போய்விடக்கூடாது என்பதில் மிகுந்த கவன உணர்வோடு இருந்திருக்கிறார், தோழர் முத்துக்குமார். மின்னணு வடிவிலும் காகிதமாகவும் தன் மரண வாக்குமூலத்தை தானே தயாரித்தது மட்டுமல்ல, அது வெளியுலகத்துக்குப் போய்ச்சேரவேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு, ஏறத்தாழ அவரே அதை உறுதிப்படுத்தவும்செய்துள்ளார்.

ஆனால், தற்கொடை ஈகம் செய்வதற்கான தூண்டுகோல் குறிப்பிட்ட சிலர்தான் என்பதாகவும் காசுவாங்கிக்கொண்டு செய்தி போடும் அற்பங்களிடம் கடைசிநேரத்தில் அவர் சொன்னதாகவும் பலவகையான அப்பட்டமான பொய்கள் பரப்புரை செய்யப்பட்டுவந்தன. பகடை அரசியலில் தோழர் முத்துக்குமாரின் உயிர் ஈகமும் பத்தோடு பதினொன்றாக சடங்காகிவிட்ட நிலைதான் என்றாலும், போலிச்செய்திகள் பரவலாகிவரும் அவலமான இந்தக் காலகட்டத்தில், தமிழிழ இனப்படுகொலையைத் தடுப்பதற்கான ஒரு கருவியாக, போருலகுக்கு எதிரான உலக சமூகத்தின் உணர்வைத் தட்டியெழுப்ப தழல் ஈகியர் ஆன அவரைப் பற்றிய வரலாற்று உண்மை மடிந்துவிடக்கூடாது!

தோழர் முத்துக்குமாருக்கென ஓர் அரசியல் இருந்தது; அது உழைக்கும் வர்க்கத்துக்கான தேசிய இன உரிமை அரசியல். தமிழ்நாட்டின் எந்த தேர்தல் கட்சியின் மீதும் எக்காலத்திலும் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை; தோழமையும் முரண்பாடும் இருந்தது. போலவே, அவரைப் பொறுத்தவரை, தமிழீழத் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமும் தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளுக்கான போராட்டமும் தனித்தனியானவை. சீனத்தலைவரே எம் தலைவர் எனும் தீவிர செங்கொடி இயக்கத்தின் முழக்கத்தைப் போல, ஈழத்தின் தேசியத் தலைவரே எம் தலைவர் என என்றும் அவர் கூறிக்கொண்டதே இல்லை. உலகளாவிய தேசிய இனங்களின் உரிமைப் போராட்டங்களை ஒப்பிட, தம் சகோதர தேசிய இனத்தின் மீதான பாசமும் நேசமும் எவரையும்போல அவருக்கும் மிகுதியாக இருந்தது என்பதையும் மறுப்பதிற்கில்லை.

தன் இறுதி உயிர்ப்பின் இடம் பற்றிய அவரின் தெரிவும்கூட சமூக- அரசியல் ஆய்வுப்பார்வையில் முதன்மையாகப் படுகிறது. இந்தத் திக்கிலான ஆய்வுக்கு, உற்றசுற்றத்துடன் அவரின் இறுதிக்கால உரையாடல்கள் உரைகல்லாக இருக்கக்கூடும்.

- தமிழகத்திலிருந்து இர.இரா.தமிழ்க்கனல் -


Category: கட்டுரைகள், வரலாறு
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE