;

Thursday 16th of July 2020 04:11:53 AM GMT

LANGUAGE - TAMIL
நாவலரும் தமிழ்த் தேசிய எழுச்சியும் - 01
நாவலரும் தமிழ்த் தேசிய எழுச்சியும் - 01

நாவலரும் தமிழ்த் தேசிய எழுச்சியும் - 01


வெள்ளையர்கள் ஆபிரிக்காவில் வந்து இறங்கியபோது கையில் பைபிள்களுடன் வந்தார்கள். அப்போது கறுப்பின மக்களிடமே நிலமிருந்தது. சில ஆண்டுகளின் பின்பு கறுப்பர்களின் கைகளில் பைபிள் இருந்தது. நிலங்கள் யாவும் வெள்ளையர் கைவசமாகியிருந்தது.

இது ஆபிரிக்க நாடான சிம்பாவேயின் விடுதலை போராட்ட அமைப்பான சிம்பெயின் இயக்கத்தின் வீரமிகு தலைவரும் சிம்பாவே விடுதலை பெற்ற காலம் தொட்டு அண்மைக்காலம் வரை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அந்த நாட்டின் ஜனாபதிபதியாக இருந்து வழிநடத்திய மக்களின் பேராபிமானத்தைப் பெற்ற “ரொபேட் முகாபே” அவர்கள் கூறிய வார்த்தைகள்.

ஆபிரிக்கா கண்டத்திலுள்ள நாடுகளை சுதேசிகளிடமிருந்து கைப்பற்ற ஜரோப்பியர்கள் மதத்தை ஒரு ஆயுதமாக பாவித்தமையே சுட்டிக்காட்டவே முகாபே அவர்கள் மேற்படி கருத்தை வெளியிட்டிருந்தார்.

இலங்கையிலும் போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய ஐரோப்பியர்கள் நாட்டை கைப்பற்றவும், கைப்பற்றிய பின்பு தமது அதிகாரத்தை நிலைநிறுத்தவும் மதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்தனர்.

இலங்கையில் முதலே கால் பதித்த அந்நியர்களான போர்த்துக்கேயர் கத்தோலிக்க மதத்தை ஒருபுறம் பலவந்தமாகவும் மறுபுறம் சலுகைகளூடான பரப்புரைகள் மூலமும் பரப்பியதுடன் பல நூற்றுக்கணக்கான இந்துக்கோவில்களை இடித்தழித்து அவ்விடங்களில் தேவாலயங்களைக் கட்டினர். இந்துக்கடவுள்களை வணங்குவது விரதங்களை அனுட்டிப்பது போன்ற எமது கலாச்சாரம் சார்ந்த பழக்கவழக்கங்கள் கூட அவர்களால் குற்றங்களாக கருதப்பட்டன.

அவர்களின் பின்பு இலங்கையை கைப்பற்றிய ஒல்லாந்தர் புரட்டஸ்தாந்து மதத்தை பரப்பினர். மிசனரிப்பாடசாலைகளை அமைத்து அவற்றை மதம் பரப்பும் மையங்களாக அந்நிய அடிவருடிகளை உருவாக்கும் உற்பத்திச்சாலைகளாகவும் கொண்டு நடத்தினர். ஆங்கிலேயர் நாட்டைக் கைப்பற்றிய பின்பு மதத்தை பரப்புவதில் விசேட கவனம் செலுத்தாவிட்டாலும் கிறீஸ்தவ மதங்களைச்சார்ந்தவர்களுக்கே சகல துறைகளிலும் முன்னுரிமை வழங்கினர். இக்காலப்பகுதியில் கத்தோலிக்க திருச்சபையும் மிசனரிகளும் ஆங்கிலப்பாடசாலைகளை நிறுவி அவற்றை மையமாக கொண்டு தங்கள் மதங்களைப் பரப்புவதிலும் மேற்கத்தைய பண்பாடுகளை எமது மக்கள் மீது திணிப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டனர். ஆங்கிலம் கற்ற கிறீஸ்தவர்களுக்கே சகல விடயங்களிலும் முன்னுரிமையும் அவர்கள் ஒரு புதிய மேற்தட்டு வர்க்கமாக உருவாகியமையும் சுதேசிய மொழி, மதம், பண்பாடு என்பவற்றிற்கு பேராபத்து விளைவிக்கும் நிலை வளர்ச்சியடையும் ஒரு சூழலை உருவாக்கினர்.

இந்த நிலை தமிழ் மக்கள் மத்தியிலுள்ள கல்விமான்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. எனவே அவர்கள் எமது மொழியையும் மதத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கினர்.

1828ம் ஆண்டு வண்ணார்பண்ணை ஆலயத்தில் சில பெரியார்கள் ஒன்றுகூடி எமது மொழியையும் மதத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்கும் வகையில் அமைப்பொன்றை உருவாக்கினார். அதில் சதாசிவம்பிள்ளை, சுவாமிநாத ஜயர், நடராஜா , விஸ்வநாத ஜயர், கந்தசாமிச்செட்டியார் ஆகிய கல்விமான்களும் வர்த்தக பிரமுகர்களும் முக்கிய பங்கு வகித்தனர். அங்கு இளைஞர்கள் மதம் மாறுவதை தடுக்க ஆன்மீக பாடசாலைகளை நிறுவுவது எனவும் ஒரே நாளில் மதம்மாறிய இருநூறுபேருக்கு எதிராக பகிரங்க கண்டனங்களை மேறடகொளடவதெனவும் அச்சுக்கூடமொன்றை நிறுவவும் இந்துமத பாடசாலைகளை உருவாக்கவும் நிதி திரட்டுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது. ஆக்கபூர்வமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோதிலும் அவற்றை நிறைவேற்றும் பணிகள் மிகவும் மந்தகதியிலே இடம்பெற்றது. ஏனெனில் இதில் அங்கம் வகித்தவர்கள் மேற்தட்டு வர்க்கத்தினராகவும் மக்களுடன் நேரடித் தொடர்பில்லாதவர்களாகவும் இருந்தனர். அதேநேரத்தில் அவர்கள் தங்கள் மேட்டுக்குடி நிலைப்பாட்டிலிருந்து கீழிறங்கி மக்களுடன் நேரடியாக இணைந்து செயற்பட தயாராக இருக்கவுமில்லை. இக்காலப்பகுதியில் ஆறுமுகநாவலர் தற்போதய மத்திய கல்லூரியான மிசனரிமாரினால் நடத்தப்பட்ட வெஸ்லி கல்லூரியில் தமிழ்துறை பேராசிரியராக பணியாற்றினார்.

தற்சமயம் இந்துக்கல்லூரியாக விளங்கும் அன்றைய யாழ்ப்பாணம் மெதடிஸ் கல்லூரியில் கல்விபயின்ற ஆறுமுகம் தமிழ் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பன்னிரண்டு வயதலேயே பாண்டித்தியம் பெற்றதுடன் பத்தொன்பதாவது வயதில் அங்கேயே ஆசிரியரானார்.

அப்போது இந்தியாவிற்கு கட்டுப்பாடற்ற நிலையில் சென்றுவர முடிந்த நிலையில் அங்கு சென்ற நாவலர் செய்யுள் வடிவிலிருந்த புராதன இந்து மத நூல்களையும் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களையும் ஆய்வு செய்து உரையெழுதும் பணியில் ஈடுபட்டர். இவர் இந்தியா வந்தும் ஆற்றிய சைவசமய சொற்பொழிவுகளை பாராட்டி திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு நாவலர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

1823 – 1855 காலப்பகுதியில் வெஸ்லி மிசன் திருச்சபை மிசன் மிசனரிகள் சங்கம் என்பன இணைந்து ஆங்கிலம் கற்ற கிறீஸ்தவ புத்திஜீவிகளை உருவாக்கியதுடன் அரச நிர்வாகங்களில் அவர்களின் ஆதிக்கமே மேலோங்கும் வகையிலான ஒரு நிலைமையயை உருவாக்கினர்.

ஏற்கனவே 1828 இல் சைவத்தையும் தமிழையும் பாதுகாக்க உருவான அமைப்பினால் தொடக்கப்பட்ட நூற்றியாறு சைவப்பாடசாலைகள் அரச உதவின்மையாலும், கிறீஸ்தவப்பாடசரலைகளின் ஆதிக்கத்தாலும் நிதிப்பற்றாக்குறையாலும் இடைக்கால கல்விக்கு மேல் முன்செல்லமுடியவில்லை. அப்போது வெஸ்லி கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்த நாவலர் மதத்தையும் மொழியையும் பாதுகாக்க தீவிரமாக களத்தில் இறங்கவேண்டிய அவசியத்தை உணர்ந்துகொண்டார். அதனால் அவரின் ஒரே வாழ்வாதாரமாக இருந்த ஆசிரியப்பணியைக் கைவிட்டு சமூகத்தொண்டில் இறங்கினார்.

1847 இல் நாவலர் வண்ணார்பண்ணை சிவன் கோவிலில் ஆற்றிய சமய சொற்பொழிவு மதம் என்ற வட்டத்திற்குள் குறுகிவிடாது எமது மொழி கலாச்சாரம் என்பவற்றையும் பாதுகாத்து வளர்த்தெடுக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. இந்த முதலுரையே தமிழ் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சிக்கான கால்கோலாக அமைந்தது. அதன்பின்பு அவர் ஒவ்வொரு வெள்ளியும் அங்கு ஆற்றிய உரைகள் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தி இளைஞர்களை மதத்தையும் மொழியையும் காக்கும் பணியில் களமிறக்கின. 1850 ம் ஆண்டு காலப்பகுதியில் ஆறுமுகநாவலர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட மொழி மத இலக்கிய பணிகள் தமிழ் தேசிய வாதத்திற்கான முளைகளை ஊன்றின எனக்கூறும் அளவுக்கு ஒரு ஆரோக்கியமான நகர்வகளாக அமைந்திருந்தன. ஒருபெரும் மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. நாவலர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொண்ட சமய இலக்கிய சொற்பொழிவுகள் புயலாக பொங்கி ஒரு கலாச்சார விழிப்புணர்வை எங்கும் முடுக்கிவிட்டன. அவரின் சொற்பொழிவுகள் கிறீஸ்தவ மத எதிர்ப்பு உணர்வுகொண்டவை எனச்சித்தரிக்கப்பட்டபோதிலும் அவை அந்த எல்லையைக்கடந்து சைவத்தையும் தமிழையும் மீண்டும் புத்துயிர் பெறும் வகையில் இலக்கிய உணர்வை இளைஞர்களிடையே தோற்றுவிப்பனவாகவும் தமிழ் மக்கள் தமது மேலான இன அடையாளத்தை இழந்துவிடாது காப்பாற்றும் ஆற்றல் கொண்டவையாகவும் விளங்கின. ஆங்கில அரசியல் ஆதிக்கம் காரணமாகவும் கிறிஸ்தவ மதபரம்பல் காரணமாகவும் தமது இனமத அடையாளங்களை பலவீனமடைய விட்டுக்கொண்டிருந்த தமிழர் தரப்பிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி தமிழர் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும் உந்துசக்தியாக நாவலரின் பணிகள் அமைநடதிருந்தன. அதேவேளையில் இந்து மதத்தின்பேரால் நிலவி வந்த மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிந்து மத ஆசாரங்களுக்கும் விதிமுறைகளுக்கும் அறிவுபூர்வமான விளக்கங்களை வழங்கினார்.

வேகமடைந்துவந்த நாவலரின் பணிகள் காரணமாக எச்சரிக்கை அடைந்த கிறீஸ்தவ நிறுவனங்கள் நாவலரிற்கு எதிரான கண்டனகனைகளை தொடுக்க ஆரம்பித்தனர். மிசனரிமார் கத்தோலிக்க திருச்சபையினர் ஆகியோர் நாவலர் முற்போhக்கான மாற்றங்களிற்கு எதிரானவர் எனவும், மூடநம்பிக்கைகளை பரப்புபவர் எனவும் பிரசாரங்களை தீவிரமாக மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

இலங்கையின் முதல் அச்சுஊடகம் எனக்கூறப்படும் மிசனரிமாரால் நடத்தப்பட்ட மோர்ணிங் ஸ்டார் என்ற பத்திரிகை நாவலருக்கு எதிரான பெரும் கண்டனப்போரை கட்டவிழ்த்துவிட்டது. அது இலக்கியம் வாழ்வியல் ஆன்மீகம் என பல முனைகளிலும் தடம்பதித்து வெளிவந்தமையால் புத்திஜீவிகள் மத்தியில் பெரும் செல்வாக்கு செலுத்தியது. எனவே அதற்கெதிரான பணியை நாவலர் முன்னெடுத்துச்செல்லவேண்டியிருந்தது. இன்னொருபுறம் மத அடிப்படைகளிலான மூடநம்பிக்கைகளுக்கு எதிரான நாவலரின் பிரசாரங்களும் அறிவுபூர்வமான அணுகுமுறைகளும் மென்மைப்படுத்தப்பட்ட மதப்பிரசாரங்களும் கந்தசாமிகோவில் அதிகாரபீடத்தையும் சினங்கொள்ளவைத்தன. எனவே அவர்கள் நாவலர் சைவசமயத்தின் வைதீக மேன்மையையும் புனிதத்தையும் களங்கப்படுத்துகிறார் என குற்றம் சுமத்தினர்.

குறிப்பாக பிராமணர்கள் அல்லாதவர்கள் வேதாகமங்களை உரியமுறையில் கற்று உரிய விதிமுறைகளையும் பின்பற்றி பூசகராக பணியாற்றும் சைவக்குருக்கள் முறைக்கு ஆதரவு வழங்கியமையும் வைதீகவாதிகள் மத்தியில் நாவலருக்கு எதிர்ப்பு ஏற்படுத்தின.

எனவே கிறீஸ்தவ மத பிடங்கள் நல்லூர் அதிகாரபீடங்கள் உற்பட இந்துப்பிராமணிய பேராதிக்க சக்திகள் ஆகிய இருதரப்பினருக்கு முகம் கொடுத்து நாவலர் முன் செல்லவேண்டியிருந்தது. 1849 இல் கல்விக்கூடங்கள் அமைக்கும் அவரது பணியில் முக்கிய மைல் கல்லாக சைவப்பிரகாச வித்தியாசாலை அமைக்கப்பட்டு அங்கு வேதாகம கல்வி கற்பிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பெரியார்களால் உருவாக்கப்பட்டு போதிய ஆதரவு இன்மையாலும் பொருளாதார பற்றாக்குறையாலும் நலிவடைந்து போயிருந்த 106 சைவப்பாடசாலைகளுக்கும் புத்துயிர் அளிக்கப்பட்டு அவை கிறீஸ்தவ பாடசாலைகளுடன் போட்டி போடும் அளவிற்கு முன்னேற்றப்பட்டன. அத்தகைய முயற்சிகளின் பலனாக மெதடிஸ்ற் கல்லூரி யாழ் இந்துக்கலலூரியாக மாற்றம் பெற்றது. அத்துடன் வடபகுதியெங்கும் ஆங்கிலம் கற்பிக்கும் இந்துக்கல்லூரிகள் உருவாக்கப்பட்டன.

அதேவேளை மோர்ணிங் ஸ்டார் மேற்கொண்ட நாவலர் எதிர்ப்பு பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்க ஒரு பத்திரிகை தொடங்கவேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. இதன்காரணமாக நாவலர் இந்தியா சென்று ஒரு அச்சு இயந்திரத்தை வாங்கிவந்து 1849 இல் ஒரு அச்சுக்கூடத்தை நிறுவினார்.

அதையடுத்து தமிழ் இலக்கிய நூல்கள் சைவமத நூல்கள், கிறீஸ்தவ மத பரம்பலுக்கு எதிரான பிரசுரங்கள் என நாவலரின் பணியில் இன்னொரு கட்டம் முன்னெடுக்கப்பட்டது. செய்யுள் வடிவிலமைந்திருந்த பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், சூடாமணி நிகண்டு , சேதுபுராணம் கந்தபுராணம் திருக்குறள், பரிமேழலகர் உரை போன்ற நூல்களும் உரையெழுதி பதிப்பிக்கப்பட்டன. மேலும் அவரால் எழுதிவெளியிடப்பட்ட பாலபாடம், 1ம் 2ம் 3ம் 4ம் வகுப்புகளிற்குரிய பாடநூல்கள் சைவசமய வினாவிடை சிவாலயதரிசன விதி சிதம்பரமானியம், இலக்கண வினாவிடை என்பன உருவாக்கப்பட்டன. அவர் தமிழுக்கும் சைவத்திற்கும் புத்துயிர் அளிக்கவும் பேணிப்பாதுகாத்து வளர்க்கவும் அச்சுக்கலை முன்னேறாத அந்த காலத்திலேயே அவர் முழுமையாக பயன்படுத்தினார். இன்னொருபுரம் மிசனரிமாருடன் விவாதங்களை மேற்கொண்டு சைவசமயத்தின் மேன்மையையும் நிலைநிறுத்தி எமது கலாச்சார அடித்தளத்தை உறுதிப்படுத்தும் வகையிலான பிரசாரங்களை மேற்கொள்ளவும் இப்பதிப்பகம் பயன்படுத்தப்பட்டது. எனினும் நாவலர் ஒரு மதவெறியராகவோ ஏனைய மதங்களை பின்பற்றுபவர்களை கீழ்மைப்படுத்துபவராகவோ தன் பணிகளை முன்னெடுக்கவில்லை. அவர் பிற மதங்களை எதிர்க்கவோ வெறுக்கவோ இல்லை என்பதற்கு அவர் பைபிளை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பதற்கு பவுல் பாதிரியாருடன் இணைந்து செயலாற்றினார் என்பதிலிருந்து தெளிவாக புரிந்துகொள்ளமுடியும். ஆனால் மதஆக்கிரமிப்பையும் எம்மை அடிமைப்படுத்த மதம் ஒரு ஆயுதமாக பாவிக்கப்படுவதையும் பிற மதங்களை பரப்புவதன் மூலம் எமது இன மத கலாச்சார தனித்துவங்கள் அழிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்துப்போராடினார். ஆதில் அவர் கனிசமான அளவு வெற்றியும் பெற்றார். எனவே தமிழ் தேசிய எழுச்சியை வடக்கில் முதன்முதலாக சகல மேலாதிக்கங்களையும் உடைத்து முன்னெடுத்த ஒப்பற்ற தமிழ் உணர்வாளராக நாவலர் போற்றப்படவேண்டியவர் ஆகும். பிரித்தானிய அரசின் அதிகார நிழலில் மதத்தையும் மதமாற்றத்தையும், மதமாற்றம் மூலம் வழங்கும் சலுகைகளையும் அடிப்படையாகவும் கொண்டு எழுச்சிபெற்ற எதிர்ப்புணர்வு இனமததனிதத்துவ அடையாளங்களை அழிக்க எடுக்கப்பட்ட மறைமுக நடவடிக்கைகள் தொடர்பான வெறுப்புணர்வு என்பன தமிழர் என்ற உணர்வை அதிகரிக்கவும் தம்மை ஒரு சமூகமாக புரிந்துகொள்ளும் நிலையையும் உருவாக்கின. இதில் நாவலர் வகித்த தலைமைப்பாத்திரம் இன்றைய தமிழின தேசிய எழுச்சிக்கு கதவுகளைத்திறந்த அற்புத முன்னெடுப்பு என்பதை எமது வரலாறு என்றும் பதிந்து வைத்திருக்கும்.

எனவே தமிழ் இன எழுச்சிக்கு முதலில் வித்திட்டவர் நாவலரேயாகும்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE